search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஏ.பி."

    • பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.
    • முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம், 6மாதம் நீடிக்கப்பட்டு 2014 டிசம்பர் 31ல் நிறைவடைந்தது. அதற்கு பின் தேர்தல் நடத்தவில்லை.

    உடுமலை:

    பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின் கீழ் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளை வாக்காளர்களாகக்கொண்டு கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் தேர்தல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர் பகிர்மானக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யவும், அதன்பின் பகிர்மான குழு தலைவர்களில் ஒருவர் திட்டக்குழு தலைவராகவும், மற்றவர்களை திட்டக்குழு உறுப்பினர்களாகவும் தேர்தல் வாயிலாக தேர்வு செய்ய வேண்டும்.பி.ஏ.பி., திட்டத்தில் 134 பாசன சங்கங்கள் உள்ளன. 9 பகிர்மான குழு தலைவர்கள், 45 பகிர்மான குழு உறுப்பினர் மற்றும் திட்ட குழு தலைவர் ஆகிய பதவிகள் உள்ளன. இப்பதவிகளுக்கான தேர்தல் கடந்த 2009ம் ஆண்டு நடத்தப்பட்டது.முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம், 6மாதம் நீடிக்கப்பட்டு 2014 டிசம்பர் 31ல் நிறைவடைந்தது. அதற்கு பின் தேர்தல் நடத்தவில்லை.

    8 ஆண்டு இழுபறிக்குப்பின் கடந்த 2022 மார்ச் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தலைவர், உறுப்பினர்களுக்கான தேர்தல் ஏப்ரல் 17-ந்தேதி நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற முதல் கூட்டம் ஏப்ரல் 19-ந்தேதி நடந்தது.

    அடுத்த கட்ட தேர்தல்கள் 11 மாதங்களுக்கு பின் கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட 2 பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 18-ந்தேதி பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, தாராபுரம், திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகங்களில், மார்ச் 10ந் தேதி நடந்தது.திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள 9 பகிர்மான குழு தலைவர்கள் இணைந்து திட்ட குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய்த்துறை, நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், வாக்காளர் பட்டியல், வேட்பு மனு படிவம், ஓட்டுப்பெட்டி என தேர்தல் நடத்துவதற்கு தயாராக இருந்தனர். ஆனால் பகிர்மான குழு தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • கோடைமழை பரவலாக பெய்கிறது.
    • அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது

    உடுமலை :

    வால்பாறையில் ஆண்டு தோறும் பெய்யும் மழை நீரை சேமித்து, குடிநீர் மற்றும் பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, காடம்பாறை, மேல்ஆழியாறு ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்பாக கடந்த சில நாட்களாக கோடைமழை பரவலாக பெய்கிறது. இதனால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகளும், சுற்றுலாபயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சோலையாறு அணைக்கு வினாடிக்கு 80 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.அணையில் நீர்மட்டம் சரிந்து இருந்த போது, பரம்பிக்குளம் அணைக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தற்போது நீர்வரத்து ஏற்பட்டதும், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    • வாகனங்கள் ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ரோட்டில் அதிக அளவு செல்கின்றன.
    • பாலத்தின் மீதுள்ள ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே தளியில் இருந்து எரிசனம்பட்டி வழியாக தேவனூர்புதூர் வரை செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது.திருமூர்த்திமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் வாகனங்கள், ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ரோட்டில் அதிக அளவு செல்கின்றன.

    இந்த ரோட்டில் தீபாலபட்டி அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது. இந்த கால்வாய் மீது கட்டப்பட்ட பாலம் ,தொடர் பயன்பாடு, நீண்ட காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாதது உள்ளிட்ட காரணங்களால் வலுவிழந்து வருகிறது.

    பாலத்தின் மீதுள்ள ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அருகிலுள்ள குடிநீர் குழாய் உடைப்பில் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி அப்பகுதியில் தேங்குவது பாலத்தின் உறுதித்தன்மையை பாதிக்கிறது.இவ்வாறு படிப்படியாக வலுவிழந்து வரும் பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டுனர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் கூறுகையில், தளி- எரிசனம்பட்டி ரோட்டில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே பி.ஏ.பி., பாலத்தை புதுப்பிக்க வேண்டும். உடனடி நடவடிக்கையாக ஓடுதளத்தை சீரமைக்காவது நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்தாண்டு டிசம்பர் 28ல் நீர் திறக்கப்பட்டது.
    • நீர் கசிவை தடுக்க ரூ. 72 கோடி செலவில் நடப்பாண்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    உடுமலை :

    பரம்பிக்குளம் - ஆழியாறு 3ம் மண்டல பாசனத்திற்கு ட்பட்ட 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்தா ண்டு டிசம்பர் 28ல் நீர் திறக்கப்பட்டது. 4 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு வருகிற 22ல் நிறைவு செய்ய ப்படுகிறது. திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாயில் நீர் கசிவை தடுக்க ரூ. 72 கோடி செலவில் நடப்பாண்டு பணி மேற்கொள்ள ப்படுகிறது.பாசனம் நிறைவு பெற்றதும் உடனடியாக பணியை துவக்கவும், வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் நிறைவு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பயன்பெறும் 5 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. தினமும் 21 மில்லியன் கன அடி நீர் தேவை உள்ளது.

    தற்போதைய நிலவரப்படி அணையில் மொத்தமுள்ள, 60 அடியில் 28.69 அடி நீரும், மொத்த கொள்ளளவான 1,337 மில்லியன் கனஅடியில் 802.86 மில்லியன் கன அடிநீர் மட்டுமே இருப்பு உள்ளது.நடப்பாண்டு கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பராமரிப்பு பணி முடிய 4 மாதமாகும். குடிநீர் மற்றும் அணை உயிரினங்கள், வன விலங்குகளுக்கு தேவையான அளவு நீர் இருப்பு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து பி.ஏ.பி., தலைமை பொறியாளர் முத்துசாமி கூறுகையில், தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக ஏப்ரல் 30ந் தேதி வரை தண்ணீர் பெறப்படும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை. விவசாயி கள் கோரிக்கை அடிப்ப டையில், பாசன காலம் இரு நாட்கள் நீட்டிக்கப்ப ட்டுள்ளது என்றார்.

    • திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது
    • மக்கள் கால்வாயில் குளித்து துணிகளை துவைத்து வந்தனர்.

    உடுமலை :

    உடுமலை பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் உடுமலை கால்வாய் ஜீவா நகர், வெஞ்சமடை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளின் வழியே செல்கிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கால்வாயில் குளித்து துணிகளை துவைத்து வந்தனர். தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் கால்வாயில் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    இந்நிலையில் கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

    • .ஏ.பி., வாய்க்காலை பல ஊராட்சிகள் குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகின்றன.
    • இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசி தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையில் இருந்து வெள்ளகோவில் வரை 126 கி.மீ., நீளமுள்ள பி.ஏ.பி., வாய்க்காலை பல ஊரா ட்சிகள் குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகின்றன. சுல்தான்பேட்டை, பொங்கலூர் பகுதிகளில் செயல்படும் கோழிப்ப ண்ணையாளர்கள் பலர் இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசி தண்ணீரை அசுத்தப்படு த்துகின்றனர். தண்ணீர் குடிக்க தகுதியற்றதாக மாறிவி ட்டதால் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு ஏராளமான நோய்கள் வருகின்றன.

    கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முறையிட்டதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரமேஷ் பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    • சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 15.42 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
    • வினாடிக்கு 51.15 கனஅடி நீர்வரத்து உள்ளது.

    உடுமலை : 

    பி.ஏ.பி., திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு உள்ளிட்ட 8 தொகுப்பு அணைகளில் இருந்து பாசனம், குடிநீர் மற்றும் கேரள மாநிலத்துக்கு நீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 15.42 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 51.15 கனஅடி நீர்வரத்து உள்ளது. 72 அடி உயரம் உள்ள பரம்பிக்குளம் அணையில் 18.67 அடி நீர் இருப்பு உள்ளது. வரத்து 35 கனஅடியாக உள்ளது.மொத்தம் 120 அடி உயரம் உள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 58.20 அடியாக சரிந்துள்ளது. வினாடிக்கு 136 கனஅடி நீர் வரத்து உள்ளது.நீர்மட்டம் வேகமாக சரிவதால் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்குமா என பொதுமக்களிடம் அச்சம் நிலவுகிறது.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., அணைகளில் உள்ள நீர் இருப்பை கொண்டு, கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க முடியும். திருமூர்த்தி பாசனத்துக்கு நீர் இருப்பு வைத்து வினியோகிக்கப்படுகிறது. காடம்பாறையில் இருந்து ஆழியாறு அணைக்கு நீர் எடுக்கப்பட உள்ளது என்றனர்.

    • பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.
    • குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசடைந்து விட்டது.

    குடிமங்கலம் : 

    பி.ஏ.பி., வாய்க்கால் ஓரங்களில் திருட்டுத்தனமாக மது, போதை வஸ்து விற்பது, மரங்களை தீ வைத்து எரிப்பது, வெட்டி கடத்து வது, வெள்ளை வேளாண் மரத்தில் பட்டை உரிப்பது, தண்ணீர் திருட்டு, கொலை செய்துவாய்க்காலில் வீசுவது, தற்கொலை செய்து கொள்வது என பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.வாய்க்காலில்இருந்து மீட்கப்படும்உடல்கள் அழுகி விடுவதால்இறப்பு க்கானமுழுமையான காரணத்தையும் கண்டறிய முடிவதில்லை. போலீசாரும் கண்டு கொள்வதில்லை. வாய்க்கால் முழுக்க உடைந்த மதுபாட்டில்கள், குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர்மாசடைந்து விட்டது. கால்நடைகள் கூட குடிக்க தகுதியற்றதாக மாறி வருகிறது.பல இடங்களில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கழிவுநீர் நேரடியாக வாய்க்காலில் கலக்கப்படுகிறது. சிலர் வீடு, காம்பவுண்ட் சுவர் கட்டி குடியிருந்து வருகின்றனர். செப்டிக் டேங்க் கூட வாய்க்காலில் கட்டப்பட்டு ள்ளது. சில இட ங்களில் வாய்க்காலையே காணவில்லை.பாசனத்தை முறைப்படுத்தவும், வா ய்க்காலை கண்காணிக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், 134 பாசன சபை தலைவர்கள், 876 ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பாசன சபை தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பது பகிர்மான குழு தலைவர்கள், ஒரு திட்ட குழு தலைவர் உள்ளனர். ஆனாலும் வாய்க்காலை கண்காணிக்கவும் சட்டவிரோத செயல்களை தடுக்கவோ யாரும் குரல் கொடுப்பதில்லை என்ற மனக்குறை விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி நொச்சிப்பாளையம் பிரிவு திருவள்ளுவர் நகர் சாலையில் வசிக்கும் செல்வகுமார் என்பவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்,திருவள்ளுவர் நகரில் உள்ள சத்துணவு அங்கன்வாடி மையத்தின் பின் நீண்ட நெடுங்காலமாக பி.ஏ.பி., வாய்க்கால் பயன்பாட்டில் இருந்து வருகிறது.இக்கால்வாய் மேற்புறமுள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர், கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட 2, 3 முறை முயற்சி மேற்கொண்டனர். மக்களின் ஆட்சேபனையை தொடர்ந்து அவர்களது முயற்சி கைவிடப்பட்டது.தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி செய்கின்றனர். இது குறித்து கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கேரள - தமிழக அரசுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தி 1967ல் திட்டம் தொடங்கப்பட்டது.
    • கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    உடுமலை :

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து வறட்சிப்பகுதிகளை பசுமையாக்கும் வகையிலும், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (பி.ஏ.பி.,) செயல்படுத்தப்பட்டது.

    கேரள - தமிழக அரசுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தி 1967ல் திட்டம் தொடங்கப்பட்டது. திட்ட தொகுப்பு அணைகளான சோலையாறு, தூணக்கடவு, பெருவாரிபள்ளம், பரம்பிக்குளம், மேல்ஆழியாறு, ஆழியாறு அணைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணைகள் வழியாகவும் மின் உற்பத்தி செய்து மலைப்பகுதியில் 49 கி.மீ.,தூரம் சுரங்கத்துடன் கூடிய சமமட்ட கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பிரதான கால்வாய், கிளைக்கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஆசிய அளவில் சிறந்த பொறியியல் தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இப்பாசன திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுழற்சி முறையில் இரு ஆண்டுக்கு ஒரு முறை ஆறு மாதம் நீர் வினியோகிக்கப்படுகிறது.கேரள அரசு, இடைமலையாறு அணை கட்டியதும் தமிழக அரசு ஆனைமலையாறு மற்றும் நல்லாறு அணைகளை கட்டும் வகையில் ஒப்பந்தம் உள்ளது. ஆனால் கேரள அரசு 1997ல் இடைமலையாறு அணை கட்டிய நிலையில் ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்டப்படாமல் இழுபறியாகி வருகிறது. நல்லாறு அணை கட்டினால் தற்போது மலைப்பகுதிகளில் 100 கி.மீ., தூரம் பயணம் செய்து, திருமூர்த்தி அணைக்கு வரும் நீர் 20 கி.மீ., தூர பயணத்தில் எளிதில் வந்தடையும். கூடுதலாக 7.5 டி.எம்.சி., நீரும் கிடைக்கும். அதே போல் ஆனைமலையாறு அணை கட்டினால் மழை காலத்தில் வீணாகி கடலை நோக்கி செல்லும் 2.5 டி.எம்.சி., நீர் சேமிக்கப்படும். மின் உற்பத்தி திட்டங்களும் செயல்படுத்த முடியும்.

    பி.ஏ.பி., திட்டம் தொடங்கப்பட்ட போது ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவாக இருந்த பாசன பரப்பு 3.77 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்பட்ட நிலையில் பாசன நீர் அளவை அதிகரிக்க நிலுவையிலுள்ள இரு அணைகளுடன் கட்டப்படாமல் உள்ளது. இதனால் பாசன நிலங்களில் முறையான பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியாமல் சிறப்பான இத்திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலின் போது இத்திட்டம் குறித்து வாக்குறுதி மட்டுமே இடம் பெறுகிறது. இரு அணைகளையும் கட்ட வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை, அணைகள் கட்ட விரிவான ஆய்வறிக்கை தயாரிக்க தொழில் நுட்ப கமிட்டி என கடந்த 35 ஆண்டுகளாக திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கடந்த தேர்தலிலும் இரு அணைகளும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ள நிலையில் நடப்பாண்டு பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் பேச்சு வார்த்தை என்று இல்லாமல் இரு மாநில முதல்வர்கள் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இத்திட்டத்தில் நிலுவையி லுள்ள அணைகளை கட்டி முழுமையான பாசனம் மற்றும் பயிர் சாகுபடி திட்டமாக பி.ஏ.பி., திட்டத்தை புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கேரளா அரசு இடைமலையாறு அணை கட்டியதும், ஆனைமலை யாறு, நல்லாறு அணைகள் தமிழகம் கட்டிக்கொள்ள ஒப்பந்தம் உள்ளது. கேரள அரசு, அணை கட்டி 30 ஆண்டுக்கு மேலாக பயன்படுத்தி வரும் நிலையில், ஆவணங்கள் வெளிப்படையாக உள்ளது. ஆனால் திட்ட ஒப்பந்தம் அடிப்படையில் தமிழக பகுதியில் கட்ட வேண்டிய இரு அணைகளும் கட்டவில்லை.விவசாயிகள் போராட்டம் நடத்தினால், தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை, தொழில் நுட்ப கமிட்டி ஆய்வு என இழுத்தடித்து வருகின்றனர்.

    இரு மாவட்டத்திலுள்ள பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு மாநில முதல்வர்களும் நேரடியாக பேசி தீர்வு காண்பதோடு நடப்பாண்டு பட்ஜெட்டில் இரு அணைகளும் கட்டுவதற்கான ஆய்வு மற்றும் திட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
    • 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    பி.ஏ.பி., 4வது சுற்று பாசன பகுதியில் தண்ணீர் விரைவில் திறக்கப்பட உள்ளதால் கிளை பகிர்மான வாய்க்கால்களில் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை மூலம் பிஏபி. பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மொத்தம் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    தற்போது மூன்றாவது மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 4 சுற்றுகள் தண்ணீர் விடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மூன்றாவது சுற்று இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளது. இதை தொடர்ந்து நான்காவது சுற்றுக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி நான்காவது சுற்று பாசனப்பகுதி உள்ள கிளை வாய்க்கால்கள் பகிர்மான கால்வாய்களில் படர்ந்து கிடக்கும் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் வாய்க்கால் ஷட்டர்களில் கிரீஸ் தடவும் பணியும் நடக்கிறது. இதன் மூலம் கடைமடை பகுதி வரை தண்ணீர் விரைவாக சென்றடையும் என அதிகாரிகள்- விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் 41. 76 அடியாக உள்ளது. தற்போது 813 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 119 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.
    • தண்ணீர் திருட்டு அபரிமிதமாக நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.

    திருமூர்த்தி அணையிலி ருந்து பாசனத்திற்கு நீர் செல்லும், 132 கி.மீ., நீளம் உள்ள பிரதான கால்வாய், ஆயிரம் கி.மீ., நீளம் உடைய கிளைக்கால்வாய்கள் மற்றும் பகிர்மான கால்வாய்களில், நேரடியாகவும், ஓஸ் அமைத்தும், கரையோரம் கிணறு அமைத்து, சைடு போர் முறை என, தண்ணீர் திருட்டு அபரிமிதமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை கட்டுப்படுத்தவும், பாசன விவசாயிகளுக்கு முறையாக பயிர் சாகுபடிக்கு உரிய நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

    உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், திருப்பூர், கோவை மாவட்டங்களில், பி.ஏ.பி., கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கை குழுவினர், கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கடந்த பிப்., 27ம் தேதி நிலவரப்படி, கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பி.ஏ.பி., பாசனம் உள்ள வருவாய் கிராமங்களில், மொத்தம், 2,069 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், பாசன கால்வாய்களுக்கு அருகில், 2,895 கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. விதி மீறி மின் இணைப்பு பெற்றதாக, 1,004 கிணற்றின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், 884 கிணறுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், 780 கிணறுகளில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டது. அதோடு, 288 கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்க நோட்டீஸ் வினியோகிக்க ப்பட்டுள்ளது. தற்போது வரை,21 கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்ப ட்டுள்ளது. விதிமீறல் தொடர்பாக, 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பி.ஏ.பி., திட்டம், பாலாறு படுகை பாசன அமைப்பு முறையின் கீழ் 134 பாசன சங்கங்கள் உள்ளன.
    • முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம் 6 மாதம் நீடிக்கப்பட்டது.

    உடுமலை:

    பி.ஏ.பி., பாசன திட்டத்தில் விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின் கீழ் நீரினைப்பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களை அத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் ஓட்டுப்பதிவு முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.

    பி.ஏ.பி., திட்டம், பாலாறு படுகை பாசன அமைப்பு முறையின் கீழ் 134 பாசன சங்கங்கள் உள்ளன. 9 பகிர்மான குழு தலைவர்கள், 45 பகிர்மான குழு உறுப்பினர் மற்றும் திட்டக்குழு தலைவர் ஆகிய பதவிகள் உள்ளன. இம்முறையில் முதல் கட்டமாக கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர் பகிர்மானக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பகிர்மான குழு தலைவர்களில் ஒருவர் திட்டக்குழு தலைவராகவும், மற்றவர்களை திட்டக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் நிர்வாக முறை இருந்தால் மட்டுமே பாசன திட்டங்கள் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும்.

    மேலும் தேர்வு செய்யப்படும் பாசன சபை நிர்வாகிகள், தண்ணீர் வழங்குவது, விவசாயிகளுக்கு நீர் பிரித்து கொடுப்பது, வாய்க்கால் பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவர். இந்த பதவிகளுக்கான தேர்தல் கடந்த 2009-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

    முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம் 6 மாதம் நீடிக்கப்பட்டது. பதவியில் இருந்தவர்களின் பதவிக்காலம் கடந்த 2014 டிசம்பர் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பின் 8 ஆண்டாக தேர்தல் நடத்துவது இழுபறியாகி வந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 17-ந் தேதி தேர்தல் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற முதல் கூட்டம் ஏப்ரல் 19-ந்தேதி நடந்தது.

    பி.ஏ.பி., திட்டத்தில் முதற்கட்ட தேர்தல் நடந்த நிலையில் தொடர்ந்து நடத்த வேண்டிய பகிர்மான குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு தலைவர் தேர்தல் 10 மாதமாக நடத்தப்படவில்லை.தொடர்ந்து நடத்த வேண்டிய தேர்தல்களையும் உடனடியாக நடத்த வேண்டும் என பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட, எண் 2 மற்றும் 3க்கான பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 18ந் தேதி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பகிர்மான குழு தலைவர் மற்றும் 10 பகிர்மான குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 112 பாசன சங்க தலைவர்கள் ஓட்டளித்து 7 பகிர்மான குழு தலைவர் மற்றும் ஒரு பகிர்மான குழுவிற்கு 5 உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் 35 பேர் தேர்வு செய்ய வேண்டும்.

    கோவை மாவட்ட பகுதியில் தேர்தல் நடந்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக பதவிகள் உள்ளதால் திருப்பூர் மாவட்ட பகுதியிலும் உடனடியாக நடத்த வேண்டும். திட்ட குழு தலைவர் தேர்தலையும் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற மார்ச் 10-ந்தேதி நடக்கிறது.உடுமலை, தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகங்கள், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×