search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசனம்"

    • பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 221 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,000 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.61 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.42 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது.

    • பாசன நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 65.62 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையின்நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந்தேதி 70.51 அடியை எட்டியது. இதனையடுத்து நவம்பர் 10-ந்தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக கால்வாய் வழியாக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நவம்பர் 23-ந்தேதி முதல் மதுரை , சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் டிசம்பர் 8-ந்தேதி நிறுத்தப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 62.86 அடியாக குறைந்தது. அதன்பிறகு நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாகவும், முல்லைபெரியாற்று அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் கடந்த 11-ந்தேதி அணையின் நீர்மட்டம் 65.18 அடியாக உயர்ந்தது.

    இதனால் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஆற்றின் வழியாக விநாடிக்கு 1200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு நேற்று காலை 10 மணியுடன் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அணையிலிருந்து 669 கனஅடிமட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வருகிற 21-ந்தேதி வரை வெளியேற்றப்படும். அதன்பிறகு வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மதுரை மாவட்டத்தின் வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு ஆற்றின் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்பாசனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 65.62 அடியாக உள்ளது. நீர்வரத்து 1728 கனஅடி, திறப்பு 3669 கனஅடி, இருப்பு 4767 மி.கனஅடி.

    முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 135.25 அடியாக உள்ளது. வரத்து 644 கனஅடி, திறப்பு 1500 கனஅடி, மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.10 அடி, அணைக்கு வரும் 80 கனஅடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126 .41 அடி, நீர்வரத்து மற்றும் திறப்பு 70.44 கனஅடி.

    • 5 மாவட்டங்களில் கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
    • வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 65.16 அடியாக உள்ளது. நீர்வரத்து 1697 கனஅடி, திறப்பு 1869 கனஅடி, இருப்பு 4666 மி.கனஅடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் கடந்த மாதம் 9-ந்தேதி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியது.

    இதனையடுத்து கடந்த மாதம் 29-ந்தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை ராமநாதபுரம், சிவகங்கை , மதுரை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு வைகையாற்றில் இருந்து 15 நாட்களுக்கு மொத்தம் 2466 மி.கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து மீண்டும் டிசம்பர் 11-ந்தேதிசிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனபகுதி 2-க்கு வைகையாற்றில் இருந்து விநாடிக்கு 1200 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    வருகிற 4-ந்தேதி வரை 4 நாட்களுக்கு மொத்தம் 413 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். இதனையடுத்து டிசம்பர் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 5 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி 3-க்கு 1304 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். டிசம்பர் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மதுரை மாவட்ட பூர்வீக பாசனபகுதி 1-க்கு மொத்தம் 229 மி.கனஅடி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு அணையிலிருந்து வைகையாற்றில் நேற்றுமுதல் வருகிற 13-ந்தேதி வரை விநாடிக்கு 2000 கனஅடியும், 14-ந்தேதி விநாடிக்கு 1180 கனஅடிவீதமும் தண்ணீர் திறந்துவிடப்படும். ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு வருகிற 16-ந்தேதி விநாடிக்கு 3000 கனஅடியும், 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை விநாடிக்கு 2300 கனஅடிவீதமும், டிசம்பர் 20-ந்தேதி விநாடிக்கு 1120 கனஅடிவீதமும், தண்ணீர் திறக்கப்படும்.

    மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக 22-ந்தேதி விநாடிக்கு 600 கனஅடியும், 23-ந்தேதி விநாடிக்கு 565 கனஅடியும், 24 மற்றும் 25-ந்தேதிகளில் விநாடிக்கு 500 கனஅடியும், 26-ந்தேதி விநாடிக்கு 400 கனஅடிவீதமும் தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 65.16 அடியாக உள்ளது. நீர்வரத்து 1697 கனஅடி, திறப்பு 1869 கனஅடி, இருப்பு 4666 மி.கனஅடி.

    முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 136.15 அடியாக உள்ளது. வரத்து 1248 கனஅடி, திறப்பு 1500 கனஅடி, இருப்பு 6156 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியதால் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் சோத்துப்பாறை அணையின்நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் மழையளவு குறைந்தபோதிலும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 40-வது நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

    • அமராவதி அணைக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான நீர்வரத்து பெரும்பாலான ஆண்டுகளில் கிடைத்து வந்துள்ளது.
    • அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்கென கடந்த காலங்களில் கூடுதலான தண்ணீர் திறப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உடுமலை அடுத்த மடத்துக்குளம் தாலுக்கா, அமராவதி ஆற்றில் அமைந்துள்ள அமராவதி அணை மூலம் மடத்துக்குளம் தாலுக்கா, தாராபுரம் தாலுக்கா மற்றும் கரூர் மாவட்டத்திலும்சேர்த்து பழையவாய்க்கால் பாசனம் மூலம் 25 ஆயிரம் ஏக்கரும், புதிய கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதியும் சேர்த்து 55 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கிடைத்து வருகிறது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டம் உட்பட நிலத்தடி நீரும் பெருகி ஓரளவுக்கு பயன்பெற்று வருகிறது. ஆனால் அமராவதி அணைக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிகமான நீர்வரத்து பெரும்பாலான ஆண்டுகளில் கிடைத்து வந்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவு கிடைக்கப் பெறாத நிலையில் தேவையான நீரை விட மிகக் குறைந்த நீரே கிடைத்துள்ளது. இந்நிலையில் பாசனப்பகுதியில் தென்னை மரங்கள், நீண்ட கால பயிர்களும் இந்த ஆண்டு பயிரான கரும்பு உட்பட பயிர்கள், நீர் பற்றாக்குறையால் காயும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையும் துவங்க வேண்டிய காலத்தில் துவங்காத நிலை உள்ளதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக பிரதான கால்வாய் பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து கொண்டு வருகிறது. நீர் பற்றாக்குறையால் காய்ப்பு இழந்து கருகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் தண்ணீரை டிராக்டர்களிலும் லாரிகளிலும் விலை கொடுத்து வாங்கி ஊற்றி வருகின்றனர். அமராவதி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பு பயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேற்காணும் பயிர்களுக்கு உடனடியாக நீர் பாசனம் செய்ய வேண்டி உள்ளது. அமராவதி அணையில் 65 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் உள்ள நீரை பயன்படுத்தி வறட்சியான நேரத்தில் வடகிழக்கு பருவமழை கிடைப்பதற்கு முன்னால் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பை தடுத்திடவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் பழைய பாசன பகுதிகளுக்கும் இருக்கிற நீரை பகிர்ந்து அளிக்க வேண்டும். அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்கென கடந்த காலங்களில் கூடுதலான தண்ணீர் திறப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இதன் மூலம் ஆற்றில் உள்ள சட்டவிரோதமான 1500 -க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகள் இந்நீரை பயன்படுத்தும் நிலைமையே இருந்து வந்துள்ளது. இதனால் பாசனம் பெற வேண்டிய பகுதிகள் பாதிப்புக்குள்ளாகிறது.

    ஆகவே, இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவும் காலத்தில் ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக நீரை எடுக்கின்ற பம்பு செட்டுகளின் மின் இணைப்புகளை துண்டித்து அதன் மூலம் அபரிமிதமாக தண்ணீரை எடுப்பதை தடுத்து நிறுத்திட முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் , புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும், பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் சமமான அளவில் நீர் திறக்கவும் செய்ய வேண்டும். தலா 800 கன அடி வீதம் குடிநீர் தேவை உட்பட திறக்க வேண்டுமெனவும், காலதாமதம் செய்யாமல் காய்ந்து வரும் நீண்ட கால பயிர்களான தென்னை, கரும்பு மற்ற பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். வறட்சியான நேரத்தில் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பிலும், அப்பகுதி விவசாயிகளின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த ஜூன் முதல் நீர் வழங்கப்படுகிறது.
    • நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்து நீர்வரத்து பெருமளவு குறைந்துள்ளது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இதில் பழைய ஆயக்கட்டு பாசனம் கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த ஜூன் முதல் நீர் வழங்கப்படுகிறது.

    அமராவதி அணை 4 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டதாகவும், தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழைகள் என ஆண்டுக்கு 10 டி.எம்.சி., நீர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.நடப்பாண்டு அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை தீவிரமடையவில்லை. பருவ மழை ஏமாற்றி வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து இல்லை.கடந்த ஆண்டு ஜூலை 15ல் அணை நிரம்பி 8 மாதம் வரை ததும்பிய நிலையில் காணப்பட்டது. நடப்பாண்டு கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.இதனால் அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு பாசனத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு இரு முறை உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டது. கடந்த 8ந் தேதி திறக்கப்பட்டு 10 நாட்கள் நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.

    அதே போல் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களும் பயன்பெற்று வருகின்றன. நடப்பாண்டு 10 நாட்கள் மட்டும் உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலங்களுக்கு வழக்கமாக ஆகஸ்டு - செப்டம்பர் மாதங்களில் பாசனம் துவக்கப்பட்டு ஜனவரி வரை நீர் வழங்கப்படும்.நடப்பாண்டு அணை நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளதால் கரூர் வரை உள்ள வலது கரை கால்வாய் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நடப்பாண்டு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மேலும் 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு, இரண்டாம் போகம் சம்பா சாகுபடிக்கும் நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்து நீர்வரத்து பெருமளவு குறைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே பாசனத்திற்கு நீர் திறக்க முடியும் என்றனர்.

    அமராவதி அணையில் தற்போதையை நிலவரப்படி, மொத்தமுள்ள 90 அடியில் 56.66 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில், 1,528.66 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து 740 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு இதே நாளில், அமராவதி அணை நீர்மட்டம் 87.9 அடியாகவும், நீர்இருப்பு 3,857 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. நடப்பாண்டு நீர்இருப்பு பெருமளவு குறைந்து காணப்படுகிறது.

    • கால்வாயை புதுப்பிக்க கோரி விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது
    • ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் கால்வாய் பணியை முடித்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உடுமலை,ஆக.2-

    உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையின் மூலமாக பிஏபி பாசனத் திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற ஆறுகள்,ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது.அதைத் தவிர பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

    பிஏபி திட்டம் இன்றளவும் நடைமுறையில் இருப்பதற்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ள காண்டூர் கால்வாயின் பங்கு முக்கியமானதாகும். ஆண்டுக்கு 10 மாதங்கள் நீர்வரத்து இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கால்வாயானது மழைக்கா லங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தின் போது மண் மற்றும் பாறைகளால் சேதமடைந்து வந்தது.இதனால் நீர் இழப்பு ஏற்பட்டு வந்ததால் அணை நிரம்புவதிலும் தாமதம் நிலவி வந்தது.

    இதன் காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதிலும் தடங்கல் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து கால்வாயை புதுப்பிக்க கோரி விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காண்டூர் கால்வாயை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சூழலில் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தடையில்லாமல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கல்குவாரிகள் வேலை நிறுத்தம் மழை ப்பொழிவு உள்ளிட்ட காரணங்கள் கால்வாய் சீரமைப்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் இருப்பில் உள்ள மூலப் பொருட்களைக் கொண்டு பணிகள் மெதுவாக நடைபெற்று வந்தது.இந்த நிலையில் மழைப்பொழிவு நின்று விட்டதுடன் கல்குவாரி வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் பணிகள் மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது.வருகின்ற ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் கால்வாய் பணியை முடித்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    இந்த ஆண்டு பாசனப்பரப்புகளில் தென்மேற்கு பருவமழை தீவிர அடையாததால் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் நாளை எதிர்நோக்கி உள்ளனர்.

    • பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் நீர் வழங்கப்படுகிறது
    • நீர்வரத்து இல்லாததால் மொத்தமுள்ள 60 அடியில் நிலவரப்படி 20.58 அடியாக குறைந்து காணப்பட்டது.

    உடுமலை

    பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் நீர் வழங்கப்படுகிறது.வழக்கமாக, கோடை மற்றும் தென்மேற்கு பருவ மழையால் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளான, சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்தது, தென்மேற்கு பருவ மழை ஒரு மாதம் தாமதமாக துவங்கியது ஆகிய காரணங்களினால் திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை.

    அதே போல் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் மண்டல பாசனம் நிறைவு செய்ததும், திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாயில், விடுபட்ட பகுதிகளில், கான்கிரீட் கால்வாயாக மாற்றும் பணி 3 இடங்களில் நடந்து வருகிறது.பிரதான கால்வாயில் 5 இடங்களில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளும் தாமதமாகி வருகிறது.

    வழக்கமாக மண்டல பாசனத்திற்கு ஆகஸ்டு முதல் வாரத்தில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். நடப்பாண்டு பருவ மழை தாமதம், பணிகள் காரணமாக 4ம் மண்டல பாசனம் துவங்குவதும் ஒரு மாதம் வரை தாமதமாகும் நிலை உள்ளது.

    திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து இல்லாததால் மொத்தமுள்ள 60 அடியில் நிலவரப்படி 20.58 அடியாக குறைந்து காணப்பட்டது. இதனால் விவசாயம் மட்டுமின்றி, குடிநீர் திட்டங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது, அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை துவங்கி நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதே போல் பராமரிப்பு பணிகளும் தாமதமாகி வருகிறது. ஆகஸ்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் வாய்ப்புள்ளது.

    பருவ மழைகளும் ஒத்துழைத்தால், செப்டம்பர் முதல் வாரத்தில் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்பட்டு அம்மாத இறுதிக்குள் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளது என்றனர். 

    • அலங்கியம் முதல் கரூர் வரை 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

    உடுமலை  :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு வரும் ஜூன் 1 முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அதிகாரிகள் கூறுகையில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டதும் நீர் திறக்கப்படும் என்றனர்.

    மேலும் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.

    பாசன பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கரும்பு அறுவடை முடிந்ததும் கட்டை கரும்பு மற்றும் நடவு மேற்கொள்ள அமராவதி அணையில் இருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.ஜூனில் தென்மேற்கு பருவ மழை துவக்கியதும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று முதல் உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை பழைய பாசனத்திற்கு உட்பட்ட முதல் 8 பழைய ராஜ வாய்க்கால்களின் (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப்பகுதிகளுக்கு ஜூன் 1-ந் தேதி (இன்று) முதல் அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம்.
    • நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம். நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது. களைகளை கட்டுப்படுத்தபடுகிறது. எனவே களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுவதற்கான செலவு குறைவதுடன் அதிக மகசூலும் கிடைக்கிறது.

    பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீர் பாசன கருவி, தெளிப்பு நீர் பாசனக்கருவி, மழைதூவான் அமைத்து தரப்படுகிறது.

    நாமக்கல் வட்டாரத்தில் இந்த ஆண்டு 100 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், நில வரைப்படம், சிறு,குறு விவசாயிகள் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2 எண்கள் ஆகிய ஆவணங்களுடன் நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது உழவன் செயலியின் வாயிலாக தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அமராவதி அணையில் தற்போது 54.5 அடிக்குத் தண்ணீா் இருப்பு உள்ளது.
    • மே 10 ஆம் தேதிக்குள் தண்ணீா் திறக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் ஏ.காளிமுத்து அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தாராபுரம் வட்டம், அமராவதி பாசனப் பகுதிகளான அலங்கியம், தாராபுரம், தளவாய்பட்டிணம், கொழிஞ்சிவாடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா். தண்ணீா் பற்றாக்குறையால் மக்காச்சோளப் பயிா்கள் தற்போது காயும் தருவாயில் உள்ளது. அமராவதி அணையில் தற்போது 54.5 அடிக்குத் தண்ணீா் இருப்பு உள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யும். ஆகவே, அமராவதி அணையில் இருந்து மே 10 ஆம் தேதிக்குள் தண்ணீா் திறக்க பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளா் எஸ்.கே.கொளந்தசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- ஊத்துக்குளி வட்டம் தளவாய்பாளையம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்பாக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தாா் சாலைகள் தோண்டப்பட்டது. இதன் பின்னா் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சேதமான தாா் சாலைகள் சீரமைக்கப்படாததால் விபத்துகள் ஏற்பட்டு பலா் காயமடைந்து வருகின்றனா். ஆகவே, தாா் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்..

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இணை இயக்குநா் (வேளாண்மை) மா.மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    திருப்பூர்:

    கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் கடைமடை பகுதியான மங்கலப்பட்டிக்கும்மங்களப்பட்டியை அடுத்துள்ள மொஞ்சனூர், அஞ்சூர் கிராமங்களுக்கு முற்றாக வராமல் நின்றுபோனது.மங்களப்பட்டி பகுதிக்கு மிகமிகக் குறைவான அளவில் தண்ணீர் வந்துவயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    நெல் நாற்றங்கால் தயாரிக்கநாற்றங்கால்களுக்கு தண்ணீர் விட முடியாமலும் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாகியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கீழ் பவானிக் கால்வாயில் திருப்பூர்மாவட்டத்தில் உள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதிய தண்ணீரைப் பெற்று கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • சுற்றுப்பகுதி விளைநிலங்கள் கரும்பு, நெல் என பசுமை பரப்பாக காட்சியளித்தன.
    • நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கரையில் அமைந்துள்ள ரோடு வழியாக செல்கின்றன.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் தாலுகா, கொழுமம் அருகே திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையில், கோதையம்மன் குளம், 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் அமைந்துள்ளது. என்.ஜி.,புதூர், மடத்தூர், மயிலாபுரம் மற்றும் குளத்துப்பாளையம் உள்ளிட்ட 20க்கும் அதிகமான கிராமங்களின் நிலத்தடி நீராதாரமாக இக்குளம் உள்ளது.குளம் வாயிலாக நேரடியாக, 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பு பாசன வசதி பெறுகிறது. முன்பு, பருவமழை காலத்திலும், திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் பெறப்பட்டு கோதையம்மன் குளம் நிரப்பப்படும்.

    இதனால்சுற்றுப்பகுதி விளைநிலங்கள் கரும்பு, நெல் என பசுமை பரப்பாக காட்சியளித்தன. இந்நிலையில், வரத்து ஓடைகள் முறையாக தூர்வாரப்படாதது, நீர்த்தேக்க பரப்பில் அதிகரித்த மண் மேடு உள்ளிட்ட காரணங்களால், குளத்தின் முழு கொள்ளளவில், தண்ணீர் தேக்குவது பாதித்தது. மேலும், குதிரையாறு அணையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில், தண்ணீர் திறப்பதும் தடைபட்டது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கோதையம்மன் குளத்தில் போதிய தண்ணீர் தேங்காமல், சுற்றுப்பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் பாதித்தது. சாகுபடி கைவிடப்பட்டு, விளைநிலங்கள் வெறுமையாக காட்சியளித்தன.கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, குளத்துக்கு அதிக நீர் வரத்து கிடைத்தது. தற்போதைய கோடை காலத்திலும், ஓரளவு நீர்மட்டம் உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: -

    கோதையம்மன் குளத்துக்கு, குறிப்பிட்ட இடைவெளியில், குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும். இதனால் நேரடியாகவும், மறைமுகமாவும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.வரத்து வாய்க்கால் சீரமைப்பு, கரைகளை வலுப்படுத்துதல், ஷட்டர்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தால், இக்குளத்து பாசன பகுதி பயன்பெறும். விவசாயமும் அப்பகுதியில் செழிக்கும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    கோதையம்மன் குளத்து கரையில் அமைந்துள்ள ரோடே, என்.ஜி.,புதூர் உட்பட பல கிராமங்களுக்கு பிரதான வழித்தடமாக உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கரையில் அமைந்துள்ள ரோடு வழியாக செல்கின்றன.இந்நிலையில் குளத்தை ஒட்டி தடுப்புகள் இல்லாததால், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, தேவையான இடங்களில் தடுப்பு அமைக்க வேண்டும் என்றனர். 

    ×