search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பணை"

    • முதல்- அமைச்சருக்கு எனது சார்பிலும் விக்கிரவாண்டி தொகுதி மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • புதிய துணை மின் நிலையம் அமைத்து தருமாறு மின்சாரத்து றை அமைச்சரை கேட்டுக்கொ ள்கிறேன்.

    விழுப்புரம் :

    தமிழக சட்டசபையில் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி பேசியதாவது:-

    எனது கோரிக்கையை ஏற்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்னியூர் பகுதியில் தீயணைப்பு மீட்பு நிலையம் வழங்கி கடந்த திங்கட்கிழமை அன்று காணொலி கட்சி மூலம் திறந்த முதல்- அமைச்சருக்கு எனது சார்பிலும் விக்கிரவாண்டி தொகுதி மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராமங்களில் குறைந்த மின் பற்றாக்குறை உள்ளதால் காணை ஊராட்சி பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைத்து தருமாறு மின்சாரத்து றை அமைச்சரை கேட்டுக்கொ ள்கிறேன்.

    கல்பட்டு ஊராட்சியில் இருந்து நத்தமேடு. ஆரியூர் ஊராட்சியில் இருந்து சாணிமேடு, மாம்பழப்பட்டு ஊராட்சியில் இருந்து ஒட்டங்காடுவெட்டி,கெடார் ஊராட்சியில் இருந்து செல்லங்குப்பம், கருவாச்சியிலிருந்து இருந்து புதுகருவாச்சி, பனமலை ஊராட்சியில் இருந்து பனமலைபேட்டை, பனமலை ஊராட்சியில் இருந்து உமையாள்புரம் மற்றும் அய்யூர் அகரம் ஊராட்சியில் இருந்து சிந்தாமணி ஆகிய ஊராட்சிகளை பிரித்து தருமாறு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். விக்கிர வாண்டி தொகுதியில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்ப ணித்துறை கட்டுப்பா ட்டில் உள்ள பனமலை ஈசா ஏரியை நீர் தேக்கமாக மேம்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

    வாக்கூர் ஊராட்சி மேல்பாதியில் பம்பை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து தருமாறு நீர்வளத்துறை அமைச்சரை கேட்டு க்கொள்கிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் கல்பட்டு மற்றும் பனம லைபேட்டை ஊராட்சிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரவும், வேம்பி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகதார நிலையமாக தரம் உயர்த்தி தரவும். முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதி (100 மாணவியர்கள்) கட்டிடம் வி.சாலையில் கட்டும் பணிக்கு ரூ.4.10 கோடியும் நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பபட்டுள்ளது. இந்த 4 பணிகள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2 அடி அளவு தண்ணீர் மட்டுமே இருப்பதாக விவசாயிகள் வேதனை
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து அவ்வப்போது மர்ம நபர்கள் தண்ணீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கலசபாக்கம் அருகே உள்ள ஜவ்வாதுமலை அடிவாரத்தில் இருந்து உற்பத்தியாகி வரும் நீர் செய்யாற்றில் செங்கம், காஞ்சி, கடலாடி, மாதிமங்கலம், எலத்தூர், பழங்கோவில், பூண்டி கலசபாக்கம், போளூர், ஆரணி வழியாக செல்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து விடுவதை தடுப்பதற்காக ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதன்படி முதல் கட்டமாக கலசபாக்கம் அருகே ஆணைவாடி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டன. இதன் மூலம் சுமார் 7 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகின்றன. இதனால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கின்றன.

    இதனால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியை அடைந்து வருகின்றனர்.தற்போது மழை நின்ற காரணத்தால் தடுப்பனையில் சுமார் 7 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தன.

    இந்த தண்ணீரை மர்ம நபர்கள் மணல் கொள்ளை அடிப்பதற்காகவும் மற்றும் மீன்பிடிப்பதற்காகவும் இரவில் தடுப்பணையில் உள்ள ஷட்டரை திறந்து விடுகின்றனர். இதனால் தண்ணீர் குறைந்து தற்போது 2 அடி அளவு தண்ணீர் மட்டுமே இருப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது சம்பந்தமாக விவசாயிகள் கலசபாக்கம் தாசில்தார் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

    • தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.
    • ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக கூவம் ஆறு உருவாகிறது. இது பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல் வழியாக 72 கி.மீ. தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் கேசவபுரம், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் உள்ளன.

    மேலும் மழை காலங்களில் அதிக அளவில் வீணாகும் தண்ணீரை தடுக்கும் வகையில், கூவம் ஆற்றில் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பணித் துறை சார்பில் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.

    இந்த தடுப்பணை மூலம் அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் மற்றும் கடம்பத்தூர் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயரும். மேலும் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அப்பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய இந்த புதிய தடுப்பணை உதவும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பணியை தொடங்கி வைத்தார்
    • 1,345 மீட்டர் நீளத்திற்கு கட்டப்படுகிறது

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் மற்றும் அத்திப் பட்டு ஆகிய 2 ஊராட்சிகள் உள்ளது. இப்பகுதிகளி லிருந்து காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, காவேரிப் பாக்கம், சுமைதாங்கி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருப்பாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.48 கோடி மதிப்பீட்டில், 1,345மீட்டர் நீளத்திற்கு கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.

    இந்த திட்டத்தின் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயர்ந்து கூடுதலாக தண்ணீர் கிடைக்க பெறும்.

    மேலும் விவசாய கிணறுகள், மற்றும் குடிநீர் ஆழ்துளை கிணறுகளுக்கும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற் பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் மெய்யழகன் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி, பேரூராட்சி செயலாளர் நரசிம்மன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • நந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    • குறைதீர் கூட்டம்

    அரியலூர்:அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள நத்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மா.ச.கலைவாணி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள்:அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசும்போது, அதிக விலைக்கு உரம் விற்கப்பட்டு வரும் தனியார் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியில் மாமூல் பெறும் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூரா.விசுவநாதன் பேசும் போது, தூத்தூர் - வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கை கதவணையுடன் கூடிய தடுப்பணை, பாலம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதையாற்றின் குறுக்கே பொய்யூர் பகுதியில் தடுப்பனைக் கட்டுவதை கால தாமதம் இல்லாமல் கட்டி முடிக்க வேண்டும்.ராயம்பரம், நக்கம்பாடி ஆகிய ஏரிகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுக்கிரன் ஏரியில் காவிரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதையாற்றின் குறுக்கே சுண்டக்குடிக்கு கிழக்கேவைப்பூருக்கு வரை அடந்துள்ள வேலிகருவ முள்செடிகளை அகற்றி மருதையாற்றின் கரையை பலப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு மானியத்தில முந்திரி கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.செந்துறை தாலுக்கா விவசாயிகளுக்கு உளுந்துக்கான காப்பீடு தொகை மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையினை பெற்று தரவேண்டும் என்றார்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி,அவைகைளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அடுத்துள்ள திரளி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது40), கட்டித் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஹம்சவர்தணி என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று தனது மகளை கல்லூரிக்கு பஸ் ஏற்றி விட்டு சென்ற குமரேசன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் திரளி கவுண்டமா நதி தடுப்பணை அருகே ஆண் பிணம் மிதந்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    இதுதொடர்பாக போலீ சார் விசாரணை நடத்திய போது தடுப்பணை யில் இறந்து கிடந்தது குமரேசன் என தெரியவந்தது. அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா?என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் தடுப்பணை உடைந்தது.
    • தடுப்பணையை சீரமைத்துதர விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஏழுசுளி பள்ளம் அமைந்துள்ளது. இப்பள்ளத்திற்கு காரமடை, பெள்ளாதி, தேரம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீர் இப்பள்ளத்தில் வந்து தேங்குகிறது.

    இதனால் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தடையின்றி கிடைத்து வருகிறது. மேலும் இப்பள்ளத்தில் இருக்கும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

    இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையினால் இப்பள்ளத்தில் உள்ள தடுப்பணை உடைந்தது. இதனால் தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் பக்கத்து ஊர் குட்டை வழியாக பவானி ஆற்றை சென்றடைகிறது. இதனால் இப்பகுதியில் தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்றும் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் விவசாயம் கேள்வி குறியாகும் நிலையில் உள்ளது.

    நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை இந்த தடுப்பணை சீரமைக்காமல் இருக்கிறது என ஊர் பொதுமக்கள் கூறினர். எனவே பவானி ஆற்றில் வீணாக செல்லும் குடிநீரை தடுத்து நிறுத்த ஏழுசுளி பள்ளத்தில் புதிய தடுப்பணை கட்ட வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தொடர்ந்து கடல் உள்வாங்காமல் இருந்தால் மேலும் பல கிராமங்கள் பாதிக்கப்படும்
    • குடியிருப்புகளில் தண்ணீர் புகுவதை தடுக்க பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை கட்ட வேண்டும்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஆற்றில் ஐந்தாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் படுகை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடி உபரி வெள்ள நீர் சீற்றம் காரணமாக கடலில் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வரும் நீர் பக்கிங்காம் கால்வாய் வழியே வந்து பழையாறு சுனாமி குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து வருகிறது.

    பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்ததால் 500க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    தொடர்ந்து கடல் உள்வாங்காமல் இருந்தால் மேலும் பல கிராமங்கள் பாதிக்கப்படும் ஆபத்து எழுந்துள்ளது. கடல் உள்வாங்காத காரணத்தால் வெள்ள நீர்மட்டம் மேலும் உயர்ந்து பக்கிங்காம் கால்வாயில் புகும்போது, பக்கிம்காம் கால்வாய்  கரை மூழ்கி பழையாறு சுனாமி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் வேதனையில் இருந்து வருகின்றனர்.

    எனவே சுனாமி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இன்னிலையில் வெள்ளம் சூழ்ந்த பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதிகளை கலெக்டர் லலிதா நேரில் சென்று பார்வையிட்டார்.

    தொடர்ந்து அவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சுற்றி தண்ணீர் சூழ்ந்த பகுதியையும், மக்களுக்கு உணவு சமைக்கப்படும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், கீழ் காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பி டி ஓ அருள்மொழி, விஏஓ பவளச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கிராம மக்கள் உடன் இருந்தனர்.

    • காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.
    • தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்.

    கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சரியான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் 240 டிஎம்சி காவிரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

    காவிரி நீர் வீணாவதைத் தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மதுரவாயல் பகுதியில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டது வேதனை அறிக்கிறது.

    மாணவர்களின் தற்கொலைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம். பெற்றோர்களின் அழுத்தத்தால்தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    பெற்றோர் தங்களது விருப்பத்தை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். மத்திய அரசு உடனடியாக நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    அதேசமயம் தமிழகத்தில்தான் நீட் தேர்வால் அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

    தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அரசு உடனடியாக அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றார்.

    அப்போது, பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன் மற்றும் விமல், காமராஜ், லண்டன் அன்பழகன் உட்பட மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க இதுவரை எந்த திட்டமும் இல்லை.
    • உலகிலேயே சிறந்த சமவெளி பகுதியான நமது டெல்டா பகுதியை நாம் முறையாக பாதுகாக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் தலைமை தாங்கினார்.

    உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, பேரூராட்சித் தலைவர்ம.க.ஸ்டாலின், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜசேகர், சமூகநீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட தலைவர் அமிர்த.கண்ணன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. மாநில தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- அரை நூற்றாண்டுகளுக்கு மேல் தி.மு.,க அ.தி.மு.க மாறிமாறி ஆட்சி செய்துள்ளது.

    திராவிட மாடல் என்று தற்போது புதியதாக ஒரு வார்த்தை உருவாகி வருகிறது. அந்த திராவிட வார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

    நம்முடைய மாடல் பாட்டாளி மாடல் மட்டுமே. பா.ம.க 2.0 என்பது அனைவருக்குமான வளர்ச்சி. திராவிட மாடல் ஆட்சி என்பது அ.தி.மு.க, தி.மு.க.விற்கு உள்ளடக்கியதா என்பதை விளக்க வேண்டும்.

    கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க எனது தலைமையில் போராட்டம் நடைபெறும்.

    அதற்கு முன்னரே கும்பகோணத்தை மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

    உணவு பற்றாக்குறையை போக்க உணவு பாதுகாப்பு சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்த வேண்டும், தாயை பாதுகாப்பது போல் காவிரியாற்றையும் நாம் பாதுகாக்க வேண்டும், உலகிலேயே சிறந்த சமவெளி பகுதியான நமது டெல்டா பகுதியை நாம் முறையாக பாதுகாக்க வேண்டும்.

    கடந்த இரண்டு மாதங்களில் 240 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது.

    கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க இதுவரை எந்த திட்டமும் இல்லை. தடுப்பணைகள் அதிகளவில் கட்ட வேண்டும்.

    நீர் மேலாண்மை முதலீடு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன்.

    பா.மக ஆட்சியில் தற்போது இருந்தால் நிச்சயமாக

    ரூ. 1 லட்சம் கோடிக்கு நீர் மேலாண்மைக்காக முதலீடு செய்து இருப்போம். வாக்கை விலை கொடுத்து வாங்குவதுதான் திராவிட மாடல். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது பா.ம.க தான்.

    இந்தியாவிலேயே நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் தான் அதிகம். இதனை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்

    தமிழக இளைஞர்களை மது, சூது போன்றவற்றால் சீரழிந்து வருகின்றனர்.

    ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை தமிழகத்தில் 28 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

    வாக்காளர்களே ஐந்தாண்டு ஆட்சியை எங்களிடம் கொடுங்கள். அடுத்த 50 ஆண்டு வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம், சமூக நீதிப் பேரவை, இளைஞர் அணியினர், மாணவரணியினர், உழவர் பேரியக்கத்தினர், மகளிர் அணியினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாநகர செயலாளர் குமார் நன்றி கூறினார்.

    முன்னதாக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அணைக்கரையில் மாவட்ட தலைவர் அமிர்த.கண்ணன், மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் ஆகியோர் தலைமையில் வெடி வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    • நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த 15ந் தேதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
    • கணியூர், காரத்தொழுவு உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டினால் நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மேலும் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் அமைந்துள்ள அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த 15ந்தேதி காலை அணை நிரம்பியதையடுத்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. உச்ச அளவாகஆற்றில் வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மீண்டும் கன மழை துவங்கியதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்தது.உடனடியாக, அணைக்குள் வரும் நீர் அனைத்தும் உபரியாக ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.

    அணை நீர்மட்டம் 88.65 அடியாகவும், நீர் இருப்பு, 3,924.72 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த, 15ந் தேதி, அணை நிரம்பிய நிலையில், பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் அனைத்தும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்படுவதால், ஆயக்கட்டு நிலங்களில், சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது.இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. வரும் நீர் அனைத்தும், வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றனர்.

    அமராவதி அணையிலிருந்து மழைக்காலத்தில், வெளியேற்றப்படும் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்த, ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக கணியூர், காரத்தொழுவு உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டினால், முப்போக நெல் சாகுபடிக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

    கோடை காலத்திலும் பற்றாக்குறை தவிர்க்கப்படும்.இது குறித்து பொதுப்பணித்துறை சார்பில் கருத்துரு தயாரித்து அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு மழை சீசனிலும், அணையிலிருந்து பல டி.எம்.சி., தண்ணீர் ஆற்றில் உபரியாக திறக்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.இதே போல் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு மண் கால்வாய் வழியாகவே பாசன நீர் செல்கிறது.

    இந்த கால்வாய்களை தூர்வாரி கரைகளை உயரப்படுத்தினால், அனைத்து பகுதிக்கும் தண்ணீர் சீராக செல்லும்.அனைத்து வகை சாகுபடியும் செழிக்கும். இது குறித்தும் அப்பகுதி விவசாயிகள் சார்பில் தொடர் கோரிக்கை மனுக்கள் அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.

    • ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சென்று வருகின்றனர்.
    • வட்டமலைக்கரை ஓடை அணைக்கு கால்வாய் வெட்டி கொண்டு வர வேண்டும்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கம் பி.ஏ.பி. பாசனத்தின் கடைமடை பகுதியான இறுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மானாவாரி விவசாயம் மற்றும் ஆடு வளர்ப்பை விவசாயிகள் பிரதானமாக செய்து வருகின்றனர். மேலும் கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி முருங்கை சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இதனை தவிர்த்து வேறு வேலை வாய்ப்பு இல்லாததால், இப்பகுதி கிராமப்புற மக்கள் அருகில் உள்ள திருப்பூர், கரூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    மயில்ரங்கம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் பயன் பெறும் வகையில் அமராவதி ஆற்றில் மழைக்காலங்களில் உபரியாக செல்லும் நீரை தேக்கும் வகையில் கஸ்தூரிபாளையம்-மயில்ரங்கம் இடையே தடுப்பணை ஒன்றைக் கட்டினால், தேங்கும் தண்ணீர் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் பெருகும் என கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால் ஜுன்,ஜூலை மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவ மழையால் அமராவதி அணை முழுமையாக நிறைந்து விடுகிறது. மேலும் ஒரே ஆண்டில் 2 முறைக்கு மேல் உபரியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அமராவதி அணையில் உபரியாக வெள்ள நீர் திறக்கும் காலங்களில் ஏறக்குறைய 2 டிஎம்சி. அளவுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டு காவிரியில் கலந்து வருகிறது.

    இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்று வரும் நிலையில், இந்த மாத துவக்கத்தில் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, கடந்த 14 ந் தேதி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. மேலும் அன்றைய தினம் அணைக்கு நீர் வரத்து 12500 கன அடி வரை இருந்ததால்,9 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் அன்று மாலை வரை அமராவதி ஆற்றில் 12 ஆயிரம் கன அடி வரை திறந்து விடப்பட்டது‌‌. மேலும் அமராவதி ஆற்றின் துணை ஆறுகளான குதிரையாறு, சண்முகா நதி, நல்லதங்காள் ஓடை மூலமும் நீர் வரத்து பெற்று உபரியாக நீர் காவிரியில் கலந்து வருகிறது.

    அமராவதி அணையின் முழு கொள்ளளவான 4 டிஎம்சி.யில், ஏறக்குறைய அதே அளவுக்கு உபரி நீரும் வெளியேற்றப்படுகிறது. நிலை இவ்வாறு இருக்க கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மயில் ரங்கம் பகுதியில் தடுப்பணை கட்ட ஆய்வுகள் நடந்ததாகவும், ஆனால் திடீரென தடுப்பணை அமைக்க அளவீட்டு பணிகள் மயில்ரங்கம் பகுதியில் இருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி மேற்கு பகுதியில் அதிகாரிகள் நடத்தியதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    சில முக்கிய பிரமுகர்களின் தென்னந் தோப்புகள் அங்கு உள்ளதால், அவர்கள் பயன்பெறும் வகையில் அமராவதி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் இடம் மாறியுள்ளதாக மயில் ரங்கம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    வெள்ள காலங்களில் உபரியாக செல்லும் அமராவதி ஆற்று நீரை தடுத்து பாசனத்துக்கு திருப்பும் வகையில் தாராபுரம், காங்கயம் பகுதிகளில் உள்ள நில அமைப்பு ஆற்றை விட உயரமாக உள்ளதால், சிறு அளவிலான தடுப்பணைகள் பல கட்டினால் தேங்கும் நீர் மூலம் அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரும், விவசாயமும் பெருகும். ஆனால் தடுப்பணை கட்ட வாய்ப்புள்ள நில அமைப்பும், தேவையும் உள்ள இடங்களில் கட்டப்படாமல், அரசியல்வாதிகள் தலையீடு காரணமாக தேவையற்ற இடங்களுக்கு தடுப்பணை திட்டங்களை இடம் மாற்றுவதால் அது விவசாயிகளுக்கும் பயனில்லாமல், அந்த திட்டத்திற்கான நிதியும் வீணடிக்கப்படும் நிலை நிலவுகிறது.

    எனவே அமராவதி ஆற்றில் வெள்ள காலங்களில் உபரியாக செல்லும் நீரை மயில்ரங்கம் பகுதி பயன்பெறும் வகையில், அந்த பகுதியில் தடுப்பணை கட்டி தேக்குவதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வாய்ப்பாக அமையும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்படும் சமயங்களில், தற்போது உபரி நீரை மேடான பகுதியில் உள்ள குளங்களுக்கு நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது போல், அமராவதி ஆற்றில் செல்லும் உபரி நீரில் ஒரு பகுதியை மிகவும் வறண்ட பகுதியாக உள்ள வெள்ளகோவில் பகுதியில் அமைந்துள்ள வட்டமலைக்கரை ஓடை அணைக்கு கால்வாய் வெட்டி கொண்டு வர வேண்டும் எனும் கோரிக்கையும் பல ஆண்டாக கிடப்பில் உள்ளது‌. ஆனால் அமராவதி ஆற்றில் இருந்து வட்டமலைக் கரை ஓடை அணைக்கு கால்வாய் வெட்டும் திட்டத்துக்கு ஆண்டுதோறும் பொதுப்பணித்துறை சார்பில் திட்ட செலவுகள் குறித்த கருத்துரு மட்டும் அரசுக்கு அனுப்பப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ×