search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடம்பத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை- தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை
    X

    கடம்பத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை- தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை

    • தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.
    • ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக கூவம் ஆறு உருவாகிறது. இது பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல் வழியாக 72 கி.மீ. தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் கேசவபுரம், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் உள்ளன.

    மேலும் மழை காலங்களில் அதிக அளவில் வீணாகும் தண்ணீரை தடுக்கும் வகையில், கூவம் ஆற்றில் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பணித் துறை சார்பில் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.

    இந்த தடுப்பணை மூலம் அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் மற்றும் கடம்பத்தூர் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயரும். மேலும் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அப்பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய இந்த புதிய தடுப்பணை உதவும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×