search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா வைரஸ்"

    • 528 பேருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    • சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    நாட்டிலேயே அதிக அளவாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது இரண்டு ஆயிரத்தை தாண்டிவிட்டது. தமிழ்நாட்டில் நேற்று 528 பேருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • குளிர்காலம், திருவிழா காலங்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

    இந்தியாவில் மீண்டும் மெல்லமெல்ல கொரோனா தொற்று தலைதூக்கி வருகிறது. குளிர்காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்கனவே மாநிலங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

    ஒரு சில மாநிலங்களில் முதியோர் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை வலியுறுத்தியுள்ளார்.

    மன்சுக் மாண்டவியா இதுகுறித்து கூறுகையில் "குளிர்காலத்தின் கடுங்குளிர் மற்றும் வரவிருக்கும் திருவிழாக்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மாநிலங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தற்போது இணைந்து பணியாற்றும் நேரம் இது. நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அச்சம் அடையத் தேவையில்லை. மருத்துவமனைகளை தயார்படுத்தல், கண்காணிப்பு பணியை அதிகரித்தல், மக்களுடன் பயனுள்ள தொடர்பு குறித்து ஒத்திகை நடத்தி தயாராக இருப்பது அவசியம்.

    ஒவ்வொரு மாதத்திற்கும் இடையில் அனைத்து மருத்துவமனையிலும் ஒத்திகை நடத்தப்பட வேண்டும். மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளும் கிடைக்கும் என மாநிலங்களுக்கு உறுதி அளிக்கிறேன். சுகாதாரம் அரசியலுக்கான இடம் அல்ல.

    இவ்வாறு மன்சுக் மாண்டியா தெரிவித்துள்ளார்.

    • புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன்.
    • 2, 3 நாட்களில் கொரோனாவின் தீவிரம் என்ன? என்பது தெரியவரும்.

    பெங்களூரு:

    இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் உருமாறிய ஜே.என்-1 வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அந்த மாநில அரசு புதிய வைரஸ் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளதால் கர்நாடகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி கர்நாடக சுகாதாரத்துறைக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கொரோனா பரவலை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் எல்லை மாவட்டங்களான குடகு, மங்களூரு, சாம்ராஜ்நகர் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன். இதில் கொரோனாவை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். சில ஆலோசனைகளை அந்த குழு வழங்கியுள்ளது.

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர்கள், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வலியுறுத்தப்பட்டது. இன்னும் 2, 3 நாட்களில் கொரோனாவின் தீவிரம் என்ன? என்பது தெரியவரும். தற்போதைக்கு கர்நாடகம் சகஜ நிலையில் உள்ளது. பாதிப்பு அதிகரித்தால் மட்டும் பல்வேறு தடைகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது அத்தகைய சூழ்நிலை எழவில்லை. அதனால் யாரும் கவலைப்பட தேவை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளாவில், மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனை மூலம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
    • இணைநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    பத்தனம்திட்டா:

    கேரளாவில், புதிதாக உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், பத்தனம்திட்டாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதியவகை கொரோனா குறித்து கேரள மக்கள் கவலைப்பட தேவையில்லை. இது இப்போதுதான் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.

    ஆனால் சில மாதங்களுக்கு முன்பே சிங்கப்பூர் விமான நிலையத்தில் சில இந்தியர்களிடம் காணப்பட்டது.

    கேரளாவில், மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனை மூலம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

    நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த புதியவகை கொரோனா இருக்கிறது. இதுபற்றி கவலைப்பட வேண்டாம். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நமது சுகாதார கட்டமைப்பு பலமாக உள்ளது.அதே சமயத்தில், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக, இணைநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா பாதிப்பில் இருந்து 6 பேர் குணமடைந்துள்ளனர்.
    • காய்ச்சல் பாதிப்புள்ள நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.

    சென்னை:

    கொரோனா வைரஸ் புதிது புதிதாக உருமாறிய கொரோனாவாக பொது மக்களை பாதித்து வருகிறது. இப்போது புதிய வகை கொரோனா கேரளாவில் திடீரென அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 309 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் சென்னை மாவட்டத்தில் 4 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், சேலம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், செங்கல்பட்டு, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து 6 பேர் குணமடைந்துள்ளனர்.

    புதிய வகை கொரோனா குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கேரளாவில் புதிய வகை கொரோனா பரவி வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இப்போதைக்கு அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயமில்லை.

    காய்ச்சல் பாதிப்புள்ள நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். தற்போது புதுவகை கொரோனா எந்த மாதிரி உருமாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் முடிவு நாளை தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
    • காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ மனைக்கு சென்று அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    நாட்டிலேயே அதிக அளவாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது. கொரோனா பரிசோதனை மாநிலத்தில் அதிக அளவில் செய்வதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் மக்களும் காய்ச்சலுக்காக தங்களை தாங்களே சுயமாக பரிசோதனை செய்வதால் கொரோனா பாதித்தவர்கள் பற்றிய விவரம் தெரியவருகிறது. மாநிலத்தில் இதுவரை 1324 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனாவிற்கு கோழிக்கோட்டை சேர்ந்த குமரன் (வயது 77) மற்றும் கண்ணூர் பானூரை சேர்ந்த அப்துல்லா (82) ஆகியோர் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

    இதனைத்தொடர்ந்து வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ மனைக்கு சென்று அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    • யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    • பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 12 மணி நேரத்தில் கேரளாவில் 280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர்.

    தொடர்ந்து கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, கேரள மாநில எல்லையொட்டி இருக்கும் தமிழக பகுதிகளான கோவை, நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    கேரள மாநிலத்தையொட்டி உள்ள தமிழக எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டம்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு தினந்தோறும் வேலை, தொழில், கல்லூரி சம்பந்தமாக ஏராளமானோர் கோவைக்கு வருவதும், இங்கிருந்து பலர் கேரளாவுக்கும் சென்று வருகிறார்கள்.

    தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவை மாவட்ட எல்லைகளான வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைகட்டி உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அங்கு மருத்துவ குழுவினர், போலீசார் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அந்த வழியாக கேரளாவில் இருந்து கோவைக்குள் வரக்கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதில் இருக்கும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    அதில் யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் அவர்களின் சளி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்த பின்னரே அவர்களை கோவைக்குள் அனுமதித்து வருகின்றனர்.

    கோவையில் பொது மக்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளுக்கு காய்ச்சலுடன் வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இருமல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளான நாடுகாணி, கக்கநல்லா உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது.

    அந்த வழியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகள் அனைவரும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

    பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நீலகிரி கலெக்டர் அருணா கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வருவோரின் உடல் வெப்ப நிலை, சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

    இதுவரை 30 பேரின் சளி மாதிரிகள் சேகரி க்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. எனவே பொது மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எட்டு நாட்களில் மட்டும் 825 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.
    • கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரிப்பு.

    கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் அம்மாநிலத்தில் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும் 825 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  

    கடந்த நவம்பர் மாதம் கொரோனா மூலம் ஒருவர் உயிரிழந்த நிலையில், டிசம்பரில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்டவர்கள் உயிரிழப்பது மிகவும் அரிதாகி இருக்கும் நிலையில், பாதிப்பின் தீவிரம் மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது.

     


    "தற்போது கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருகிறது என்ற போதிலும், அதன் தீவிரம் குறைவாக இருப்பதால், நிலைமை கட்டுக்குள்ளாகவே இருக்கிறது. எனினும், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நல பாதிப்பு கொண்டவர்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது," என மருத்துவர் முகமது நியாஸ் தெரிவித்து உள்ளார். 

    • புதுச்சேரியில் கடந்த மே மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
    • புதுவை அரசு மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து வந்தனர். தற்போது புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

    இதற்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரியில் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். இதில் சிகிச்சைக்காக வந்த புதுச்சேரியை சேர்ந்த 43 நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் ஜிப்மர் உள்பட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவதாக புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரியில் கடந்த மே மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. 7 மாதத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் கொரோனா மீண்டும் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    புதுவையில் கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆயிரத்து 673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 2 ஆயிரத்து 436 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுவை அரசு மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர் காய்ச்சலால் அவதிக்குள்ளாவோர் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் புதுவை சுகாதாரதுறை அறிவுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    புதுவை அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டையும், சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    டெங்கு கொசுக்களை ஒழிக்க தஞ்சாவூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கம்போசியா மீன்களை குட்டைகளில் விடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் புதுவையிலேயே கம்போசியா மீன்களை வளர்க்க திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிங்கப்பூர்:

    சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன. தற்போது பல நாடுகளில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 10 ஆயிரம் அதிகம் ஆகும். இதனையடுத்து பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்கும்படி அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.
    • இந்த ஆண்டு உலகம் முழுவதுமே டெங்கு பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதேபோல் இந்தியா முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையே டெங்கு காய்ச்சல் அதிகமாக தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் டெங்கு பாதிப்பு யாருக்கு அதிகம் ஏற்படுகிறது என்று சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன.

    இந்த ஆய்வு முடிவுகளின்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களிடம் டெங்கு பாதிப்பு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதேபோல் அமெரிக்கன் சொசைட்டி ஆப் டிராபிக்கல் மெடிசின் மற்றும் ஹைஜின் வெளியிட்ட ஆய்வின்படி 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று முதல் அலையின்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனா பாதிக்காதவர்களை விட டெங்கு தாக்குவதற்கான வாய்ப்பு 2 மடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெங்கு அதிக விகிதத்தில் தாக்கி இருப்பதை கண்டறிந்தனர். மேலும் ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள் முன்னிலையில், ஆய்வக செல்களை டெங்கு வைரஸ் எளிதில் தாக்கியதும் தெரிய வந்தது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்காலத்தில் டெங்கு பரவல் வாய்ப்பு அதிகம் என்று முதல்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு உலகம் முழுவதுமே டெங்கு பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இது 2017-ம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய பாதிப்பு என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
    • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கொரோனா தொற்றுக்கு பிறகு இளம் வயதில் மாரடைப்பில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என்று பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இதை மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது மறுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை.

    இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களின் திடீர் மரணத்துக்கான காரணிகள் என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில் இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது குடும்ப சூழல்கள், வேலை தொடர்பான மன அழுத்தம், உணவு பழக்க வழக்கம், போதிய உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, புகை பிடிப்பது, போதை வஸ்து பழக்க வழக்கங்கள் போன்ற பல காரணங்கள் உள்ளன.

    நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென்று மாரடைப்பால் இறந்த 45 வயதுக்கு உட்பட்ட 729 பேரின் மரணம் தொடர்பாக ஆய்வு செய்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் 1.10.21 முதல் 31.3.2023-க்குள் மரணம் அடைந்தவர்கள்.

    மருத்துவ குழுவினர் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டது மற்றும் மருத்துவ ரீதியாக நடத்திய ஆய்வில் கொரோனா தடுப்பூசி அவர்களின் மரணத்துக்கு காரணமல்ல என்பதும் பல்வேறு மருத்துவ காரணங்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் தான் மரணத்துக்கு காரணமாக அமைந்திருந்தது என்றும் தெரிய வந்தது.

    எனவே இவற்றை எப்படி சரி செய்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். மிதமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதேபோல் கெட்ட கொழுப்பு பரிசோதனையை அடிக்கடி செய்து கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

    ×