search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பரவல்: பொதுமக்கள் அச்சம்
    X

    புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பரவல்: பொதுமக்கள் அச்சம்

    • புதுச்சேரியில் கடந்த மே மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
    • புதுவை அரசு மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து வந்தனர். தற்போது புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

    இதற்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரியில் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். இதில் சிகிச்சைக்காக வந்த புதுச்சேரியை சேர்ந்த 43 நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் ஜிப்மர் உள்பட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவதாக புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரியில் கடந்த மே மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. 7 மாதத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் கொரோனா மீண்டும் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    புதுவையில் கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆயிரத்து 673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 2 ஆயிரத்து 436 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுவை அரசு மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர் காய்ச்சலால் அவதிக்குள்ளாவோர் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் புதுவை சுகாதாரதுறை அறிவுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    புதுவை அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டையும், சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    டெங்கு கொசுக்களை ஒழிக்க தஞ்சாவூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கம்போசியா மீன்களை குட்டைகளில் விடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் புதுவையிலேயே கம்போசியா மீன்களை வளர்க்க திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×