search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CVe Shanmugam"

    • முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் டி.எஸ்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார்.
    • வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர், தமிழக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் டி.எஸ்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணை அடுத்த மாதம் நடைபெறும் என்றும், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட சி.வி.சண்முகம் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.

    இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நாட்டார்மங்கலம் மற்றும் வானூர் அடுத்த கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாக சி.வி.சண்முகம் மீது ஏற்கனவே 3 அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 528 பேருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    • சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    நாட்டிலேயே அதிக அளவாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது இரண்டு ஆயிரத்தை தாண்டிவிட்டது. தமிழ்நாட்டில் நேற்று 528 பேருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக பல்வேறு புகார்கள் வந்தன.
    • வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் இன்று நேரில் ஆஜரானார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச், மே மாதங்களில அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி. சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக பல்வேறு புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பிரமணியன் சி.வி. சண்முகம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் இன்று நேரில் ஆஜரானார்.

    • ஊழலை பற்றி பேச தமிழக பாரதிய ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை.
    • இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாரதிய ஜனதா தலைவர்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இந்த பொறுப்புக்கு வந்த பிறகு இதுவரை எந்த அரசியல்கட்சித் தலைவர்கள் மீதும் இல்லாத அளவுக்கு அவரது கட்சி நிர்வாகிகளே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் மீது கூறிவருகிறார்கள்.

    சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், கற்பழிப்பு, ஏமாற்றி பணம் மோசடி செய்தவர்களுக்கு எல்லாம் பணம் பெற்றுக்கொண்டு இவர்களுக்கு பதவி கொடுக்கும் அண்ணாமலை எங்களது ஆளுமை மிக்க புரட்சித் தலைவியை பற்றி விமர்சிக்கிறார். இதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை.

    ஊழலை பற்றி பேச தமிழக பாரதிய ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை. இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாரதிய ஜனதா தலைவர். இதை அண்ணாமலைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

    அப்போது இவர் கட்சியில் இல்லை. இன்றைக்கு ஊழலை பற்றி பேசுகிறார். உலகத்திலேயே 40 சதவீதம் கமிஷன் பெற்ற ஒரு கட்சியின் முதலமைச்சர் ஆட்சி எது என்றால் இவர் கர்நாடகாவுக்கு பிரசாரம் செய்ய சென்றாரே அங்கு தான். தமிழகத்தில் பி.ஜே.பி. வளர்ந்து விட்டது என்கிறார். சொல்லிவிட்டு போங்கள் எங்களுக்கு கவலை இல்லை.

    அ.தி.மு.க.தான் தமிழகத்தில் மிகப்பெரிய இயக்கம். அதன் தலைமையிலான கூட்டணி தொடரும். இது பிரதமரின் விருப்பம் என்று டெல்லியில் அண்ணாமலையை வைத்துக்கொண்டு அமித்ஷா கூறியிருந்தார்.

    உங்களுக்கு வீரம் இருந்திருந்தால் அன்றைக்கு அமித்ஷாவும், நட்டாவும் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி தொடரும் என்று கூறியபோது நீங்கள் மவுனமாக இருந்தது ஏன்? அந்த இடத்திலேயே கூட்டணி வைக்க மாட்டோம் என்று அண்ணாமலை கூறாதது ஏன்?

    இன்றைக்கு எதற்காக அண்ணாமலை பேசுகிறார் என்றால் தமிழக பாரதிய ஜனதா தி.மு.க.வோடு கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அண்ணாமலைக்கு பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஆசை இல்லை. அவர் தி.மு.க.வின் பி. 'டீம்' ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    அதற்கு பல்வேறு உதாரணங்களை சொல்ல முடியும். அ.தி.மு.க. பிடிக்கவில்லை என்றால் போய் விடுங்கள். எங்களை ஏன் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

    ஜெயலலிதா குறித்து மீண்டும் விமர்சனம் செய்தால் கடுமையான பதிலடி கொடுப்போம். பலரும் தெரிவிக்கும் விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. பா.ஜனதா கூட்டணியை மறுபரிசீலனை செய்ய நேரிடும்.

    தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடுகள் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரட்டை இலை சின்னத்தை சட்ட ரீதியாக பெற அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
    • சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தை நாடுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையூட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதற்கு பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை என்று பதில் அளித்து இருந்தது.

    பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்காத நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் இன்று டெல்லி சென்றார்.

    இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட ஏதுவாக இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று நேரில் முறையிடுகிறார்.

    இரட்டை இலை சின்னத்தை சட்ட ரீதியாக பெற அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

    சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தை நாடுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழக மேலாளரான மகாலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரிடமும் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றனர்.
    • தற்போது சி.வி.சண்முகத்திடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த ஜூலை 11-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மோதல் வெடித்தது.

    இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் சரமாரியாக கற்களை வீசி தாக்கி கொண்டனர். அ.தி.மு.க. அலுவலகத்துக்கு அன்றைய தினம் ஆதரவாளர்களோடு ஓ.பி.எஸ். சென்றபோதுதான் பெரிய கலவரம் ஏற்பட்டது.

    அ.தி.மு.க. அலுவலகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அறைகளில் இருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை தூக்கிச் சென்றனர்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 2 முறை நேரில் சென்று விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கிருந்த பல்வேறு தடயங்களை சேகரித்தனர். மோதல் சம்பவம் நடைபெற்ற போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையும் கைப்பற்றினர். இதனை வைத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரை அடையாளமும் கண்டுள்ளனர்.

    இது தொடர்பாக புகார்தாரரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பல்வேறு தகவல்களை திரட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்றனர்.

    அங்கு வைத்து மோதல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய போலீசார் அது தொடர்பான தகவல்களை முழுமையாக சேகரித்துள்ளனர். குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது குறித்தும், அப்போது ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பாகவும் சி.வி.சண்முகம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

    ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அறைகளில் இருந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றதாகவும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தனர்.

    சி.வி.சண்முகம் அளித்த புகாரில் இதனை முழுமையாக தெரிவித்து இருந்தார். அதில் யார்-யார் சதி திட்டத்துடன் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் புகுந்தனர் என்பது பற்றிய விவரங்களும் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாகவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.வி.சண்முகத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சி.வி.சண்முகம் விரிவான பதிலை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

    இந்த வாக்குமூலத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தில் மோதலில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது குறித்தும், மோதலில் யார்-யாருக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது பற்றியும் சி.வி. சண்முகம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். இந்த வழக்கில் புகார்தாரர்களிடம் மட்டுமே இதுவரை விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழக மேலாளரான மகாலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரிடமும் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றனர். தற்போது சி.வி.சண்முகத்திடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அலுவலக மோதல் சம்பவத்தில் சென்னையை சேர்ந்த ஓ.பி.எஸ் ஆதரவு முக்கிய பிரமுகர் ஒருவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக எடப்பாடி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இவரை போன்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பலருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் குறி வைத்துள்ளனர்.

    இந்த வழக்கு இன்னும் சில தினங்களில் ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை வேகப்படுத்தி உள்ளனர். விரைவில் விசாரணை அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

    • விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் இன்று காலை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டு கொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.

    முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.

    விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் இன்று காலை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் டெல்லி சென்று பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் இன்று நேரில் சமர்பித்தார்.
    • 2428 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரமாண பத்திரங்களையும் சி.வி.சண்முகம் வழங்கி உள்ளார்.

    சென்னை:

    சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    அத்துடன் 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு இருந்த அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பொதுக்குழுவில் பங்கேற்ற பொதுக்குழு உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர்.

    இந்த நகல்களையும், பொதுக்குழு தீர்மானங்களையும் உடனடியாக எடப்பாடி பழனிசாமி இ-மெயில் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் டெல்லி சென்று பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் இன்று நேரில் சமர்பித்தார்.

    2428 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரமாண பத்திரங்களையும் சி.வி.சண்முகம் வழங்கி உள்ளார்.

    வக்கீல்கள் பாலமுருகன், பிரேம்குமார், வினோத் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    பின்னர் பேட்டி அளித்த அவரிடம் உங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் உடனடியாக ஏற்றுக்கொள்ளுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் அதுபற்றி தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

    பொன்னையன் தொடர்பான ஆடியோ பற்றி கேட்டதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

    நெஞ்சுவலி காரணமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #CVeShanmugam
    சென்னை:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் (45) நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி. சண்முகம் தமிழக அமைச்சரையில் சட்டத்துறை அமைச்சராக உள்ளார். இன்று அதிகாலையில் சி.வி. சண்முகத்துக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.



    மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #CVeShanmugam #ApolloHospital

    ×