என் மலர்
நீங்கள் தேடியது "சிவி சண்முகம்"
- என் மீது 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொய்யாக கூறினார்.
- குற்றவாளிகள் தற்போதைய எம்.பி.யை குறிவைக்கும் அளவுக்கு துணிச்சலானவர்களாக மாறி இருக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் சி.வி.சண்முகம். இவர் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், மேல்சபை எம்.பி.யாகவும் உளளார். இவர் தன்னை பயங்கரவாதி என கூறி கைது செய்ய முயற்சிப்பதாக டெல்லி பாராளுமன்ற தெரு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
காலையில் பாராளுமன்றத்துக்கு செல்லும் போது ஒரு போன் அழைப்பு வந்தது. அழைப்பாளர் ஆங்கிலத்தில் பேசி, தன்னை மும்பையை சேர்ந்த காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
அவர் என்னை ஒரு பயங்கரவாதி என்றார். பின்னர் உடனடியாக என்னை கைது செய்யப்போவதாக மிரட்டினார். பின்னர் அந்த அழைப்பு மூத்த போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டது. இந்த 2-வது அழைப்பாளர் மிரட்டல்களைத் தொடர்ந்தார். என் மீது 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொய்யாக கூறினார்.
இந்த குற்றவாளிகள் தற்போதைய எம்.பி.யை குறிவைக்கும் அளவுக்கு துணிச்சலானவர்களாக மாறி இருக்கின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் விடுப்பது அதிகரித்து இருப்பதற்கு இது ஒரு சான்றாகும். இது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றார்.
- SIR குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம்.
- தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 300க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள்.
இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு திமுகவிற்கு என்ன அச்சம். முதல்வர் ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார் என அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
SIR குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் கொடுத்த பிறகு சிவி சண்முகம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் மேலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
SIR விண்ணப்ப படிவங்களை BLO களிடம் பறித்து திமுகவினரே நிரப்பி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
தமிழக வாக்காளர் பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெற வேண்டும் யார் யார் பெயர் நீக்கப்பட வேண்டும் என்பதை திமுகவினரை முடிவு செய்கிறார்கள் தேர்தல் ஆணையத்தின் அத்தனை அதிகாரங்களையும் அவர்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சட்டவிரோதமாக செயல்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 300க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ராகுல் காந்தி இதே போன்ற ஆதாரங்களை தான் வெளியிட்டு வாக்கு திருட்டு புகார்களை கூறியிருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம்.
- ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா?
சென்னை:
அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், "தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்" என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்.
அ.தி.மு.க.வுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது.
ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அ.தி.மு.க.வுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் 'பொண்டாட்டி இலவசம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால் தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் உயர்ந்துள்ளது, கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு.
பெண்களை இழிவுபடுத்தி வரும் அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.
- பா.ம.க. எங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
- தற்போதைய அரசியல் குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.
பா.ம.க. எங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுத்த ராமதாஸ் பா.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என் பக்கம் தான் உள்ளனர். நான் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வேன் என கூறி இருந்தார்.
கடந்த சில நாட்களாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை சென்று இருந்தார்.
இந்த நிலையில் அவர் திண்டிவனம் திரும்பினார். இன்று தைலாபுரம் தோட்டத்தில் அவர் இருந்தார். அவரை விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் எம்.பி. திடீரென சந்தித்து பேசினார். சி.வி.சண்முகத்தின் சகோதரர் மகன் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் பங்கேற்குமாறு ராமதாசுக்கு அவர் அழைப்பிதழ் வழங்கினார்.
மேலும் அவர்கள் தற்போதைய அரசியல் குறித்து பேசியதாக தெரிகிறது.
- தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
- பா.ஜ.க. கூட்டணியில் இருப்பது எங்க விருப்பம். உங்களுக்கு ஏன் வலிக்கிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போகின்ற இடமெல்லாம் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சியில் ஒரே குடும்பமான கோபாலபுரத்து குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழகத்தில் விலைவாசியை உயர்த்தி உள்ளனர். ஆனால் கூலியும், சம்பளமும் உயரவில்லை. ஊழல் மட்டும் உயர்ந்துள்ளது. தி.மு.க.வில் குடும்பத்தினரை தவிர வேறு யாரு முதலமைச்சராக அந்த இயக்கத்தில் வர முடியாது. சாதாரண தொண்டனாக இருந்த எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளராக வந்துள்ளார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டதில் இருந்து ஸ்டாலினுக்கு தூக்கம் போச்சு. இந்தியாவை 11 ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருக்கிற ஒரு பிரதமராக மோடி இருக்கிறார். பா.ஜ.க.-அ.தி.மு.க. குறித்து பேச ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத இடமே இல்லை. இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வேலை நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம் நடத்திய போது முதலமைச்சர் ஸ்டாலின் ரஜினி படம் பார்த்து கொண்டிருந்தார். பா.ஜ.க. கூட்டணியில் இருப்பது எங்க விருப்பம். உங்களுக்கு ஏன் வலிக்கிறது. அ.தி.மு.க. எத்தனை பிரிவாக இருந்தால் உங்களுக்கு என்ன, அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு சாத்தியம் இல்லை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவரை கட்சியில் ஏன் சேர்க்க வேண்டும். பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.விற்கும் நல்ல பெயர் வந்துவிட கூடாது என ஸ்டாலின் நினைக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து மனுவை போட்டதை நாங்கள் ஏற்கவில்லை.
- அரசியல் சண்டைகள் என்பது நீதிமன்றங்களில் இருக்கக்கூடாது.
புதுடெல்லி:
உங்களுடன் ஸ்டாலின் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற திட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் தமிழக அரசின் திட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மூத்த வக்கீல் வில்சன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது "அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நீங்கள் கொண்டு வந்த எத்தனை திட்டங்களுக்கு ஒரே நபரின் பெயரை வைத்திருக்கிறீர்கள்" என தலைமை நீதிபதி கவாய் அ.தி.மு.க. தரப்பு வக்கீலிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது ஒன்று கூட இல்லை என்று அ.தி.மு.க. தரப்பு வக்கீல் பதில் அளித்தார். அவர் பொய் சொல்வதாக தி.மு.க. தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி என அ.தி.மு.க. கட்சித் தலைவர்களை அழைக்கும் பெயரில் திட்டம் உள்ளது. இதெல்லாம் அவர்கள் தங்களின் தலைவர்களை அழைக்கும் பெயர்தான் என்று தெரிவித்தார்.
பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்தனர். மேலும் வழக்கு தொடுத்த அ.தி.மு.க. எம்.பி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்துக்கு தடை இல்லை. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஸ்டாலின் பெயரை நீக்க கோரிய அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கிறோம்.
ரூ.10 லட்சம் அபராத தொகையை ஒரு வாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் செலுத்த வேண்டும். அபராத தொகையை செலுத்த தவறினால் உயர்நீதிமன்றம் சி.வி.சண்முகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம்.
அரசியல் சண்டைகள் என்பது தேர்தல் களத்தில் தான் இருக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது. மனுதாரர் குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய்ததை நாங்கள் ஏற்கவில்லை.
இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம். பொதுமக்களின் வரிப் பணத்தில் குறிப்பிட்ட கட்சி தலைவரின் பெயர் வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அப்படி உள்ள அனைத்து திட்டங்களையும் மனுதாரர் எதிர்த்து இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட திட்டத்தை மட்டும் அவர் எதிர்ப்பது என்பதுதான் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இதற்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட தலைவரின் பெயர் வைக்கப்பட்ட திட்டங்கள் குறித்த பட்டியலை எங்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார்கள். ஆனால் நாகரீகம் கருதி அந்த பெயர்களை நாங்கள் படிக்கவில்லை.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
- வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
- சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேச வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.
விசாரணையின்போது சி.வி. சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்க உரிமை உள்ளதாகவும் அதனடிப்படையிலேயே பேசியதாகவும் அரசியல் பழிவாங்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், விமர்சனம் என்ற பெயரில் மோசமான வார்த்தைகளை சி.வி.சண்முகம் பயன்படுத்துவதாகவும் நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் அதுபோன்ற கருத்துகளை பேசுவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேச வேண்டுமென நீதிபதி கூறினார்.
எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என்றாலும் உருவக்கேலி உள்ளிட்டவை கூடாது என நீதிபதி அறிவுறுத்தினார்.
- இரட்டை இலை சின்னத்தை சட்ட ரீதியாக பெற அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தை நாடுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையூட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை என்று பதில் அளித்து இருந்தது.
பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்காத நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் இன்று டெல்லி சென்றார்.
இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட ஏதுவாக இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று நேரில் முறையிடுகிறார்.
இரட்டை இலை சின்னத்தை சட்ட ரீதியாக பெற அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தை நாடுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சட்டமன்ற உறுப்பினர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளதாக சிவி சண்முகம் தகவல்
புதுடெல்லி:
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில், நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை.
தொகுதியில் உள்ள 238 பூத்களுக்கும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம். குறிப்பாக 6 பூத்களில் உள்ள முறைகேடுகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.
சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பின் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தலாம் என கால அவகாசம் இருந்தும் அவர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை முறையாக பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
- திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது.
டெல்லியில் அதிமுக எம்.பி சிவி சண்முகம் கூறியதாவது:
ஈரோடு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் குறித்து கடந்த 3ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,26,876 வாக்களர்கள் உள்ளதாக பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. இறந்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் அந்த வாக்காளர்கள் அங்கு குடியிருக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் சரிபார்க்கும் போது அவர் இறந்திருக்கிறார், பெயர் நீக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் ஒரு இடத்தில் இருக்கும் வாக்காளர் மற்றொரு இடத்திலும் இருக்கிறார். இப்படி குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் 5 வாக்குகள் இருந்தால் அந்த 5 வாக்குகளும் ஒரே விலாசத்தில் இல்லை. இந்த வாக்காளர் பட்டியல் முழுமையாக திருத்தப்படவில்லை. ஒரு மோசடியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பூத் வாரியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அந்த வாக்காளர் பட்டியலை நீக்கி முழுமையான தகுதியுள்ள வாக்காளர் பட்டியலை வெளியிடவேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம்.
திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது. காவல் துறை திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் ஆணையம் இங்கே முழுக்க முழுக்க தி.மு.க.வின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றனர் என தெரியவில்லை.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு தேர்தலில் மிகப்பெரும் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படாமல் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.
தேர்தல் ஆணையம் இங்கே முழுக்க முழுக்க தி.மு.க.வின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கின்றனர் என தெரியவில்லை.
தொகுதி முழுவதும் தி.மு.க.வினர் கட்டுப்பாட்டில் தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் செயல்படுகின்றனர். அனைத்து கட்சிக்கும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் உரிமை உண்டு. அந்த ஜனநாயக உரிமை இந்த தொகுதியில் பறிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி வேட்பாளர் மட்டும் சுதந்திரமாக வாக்கு கேட்க அனுமதிக்கப்படுகிறார். எதிர்க்கட்சியான எங்களை வாக்காளர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
தி.மு.க. சார்பாக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய தேர்தல் முறைகேடுகளை செய்து வருகிறார். வாக்காளர்களை ஒவ்வொரு பூத்துக்கு அழைத்து சென்று 3 வேலை உணவு கொடுத்து ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கொடுத்து இரவில் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்.
இதன் மூலம் எங்களுக்கு வாக்காளர்களை சந்திக்கும் வாக்கு கேட்கும் உரிமை மறுக்கப்படுகிறது. தி.மு.க.வினர், காவல் துறையினர் சேர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வாகனங்களை மறிக்கின்றனர். சோதனை என்ற பெயரில் காவல்துறை மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
அந்த கூட்டத்தை கூட்ட விடாமல் தடுக்க காவல்துறை அத்துமீறி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு முறையிட்டும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்தப்படும்.
எனவே மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாக இதில் தலையிட்டு ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் தி.மு.க.வினர் அழைத்து சென்று அடைத்து வைத்துள்ள வாக்காளர்களை விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் வாக்கு சேகரிக்கும் உரிமையை செய்து தர வேண்டும். இல்லையெனில் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊழலை பற்றி பேச தமிழக பாரதிய ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை.
- இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாரதிய ஜனதா தலைவர்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இந்த பொறுப்புக்கு வந்த பிறகு இதுவரை எந்த அரசியல்கட்சித் தலைவர்கள் மீதும் இல்லாத அளவுக்கு அவரது கட்சி நிர்வாகிகளே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் மீது கூறிவருகிறார்கள்.
சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், கற்பழிப்பு, ஏமாற்றி பணம் மோசடி செய்தவர்களுக்கு எல்லாம் பணம் பெற்றுக்கொண்டு இவர்களுக்கு பதவி கொடுக்கும் அண்ணாமலை எங்களது ஆளுமை மிக்க புரட்சித் தலைவியை பற்றி விமர்சிக்கிறார். இதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை.
ஊழலை பற்றி பேச தமிழக பாரதிய ஜனதாவுக்கு எந்த தகுதியும் இல்லை. இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாரதிய ஜனதா தலைவர். இதை அண்ணாமலைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
அப்போது இவர் கட்சியில் இல்லை. இன்றைக்கு ஊழலை பற்றி பேசுகிறார். உலகத்திலேயே 40 சதவீதம் கமிஷன் பெற்ற ஒரு கட்சியின் முதலமைச்சர் ஆட்சி எது என்றால் இவர் கர்நாடகாவுக்கு பிரசாரம் செய்ய சென்றாரே அங்கு தான். தமிழகத்தில் பி.ஜே.பி. வளர்ந்து விட்டது என்கிறார். சொல்லிவிட்டு போங்கள் எங்களுக்கு கவலை இல்லை.
அ.தி.மு.க.தான் தமிழகத்தில் மிகப்பெரிய இயக்கம். அதன் தலைமையிலான கூட்டணி தொடரும். இது பிரதமரின் விருப்பம் என்று டெல்லியில் அண்ணாமலையை வைத்துக்கொண்டு அமித்ஷா கூறியிருந்தார்.
உங்களுக்கு வீரம் இருந்திருந்தால் அன்றைக்கு அமித்ஷாவும், நட்டாவும் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி தொடரும் என்று கூறியபோது நீங்கள் மவுனமாக இருந்தது ஏன்? அந்த இடத்திலேயே கூட்டணி வைக்க மாட்டோம் என்று அண்ணாமலை கூறாதது ஏன்?
இன்றைக்கு எதற்காக அண்ணாமலை பேசுகிறார் என்றால் தமிழக பாரதிய ஜனதா தி.மு.க.வோடு கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அண்ணாமலைக்கு பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஆசை இல்லை. அவர் தி.மு.க.வின் பி. 'டீம்' ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அதற்கு பல்வேறு உதாரணங்களை சொல்ல முடியும். அ.தி.மு.க. பிடிக்கவில்லை என்றால் போய் விடுங்கள். எங்களை ஏன் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
ஜெயலலிதா குறித்து மீண்டும் விமர்சனம் செய்தால் கடுமையான பதிலடி கொடுப்போம். பலரும் தெரிவிக்கும் விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. பா.ஜனதா கூட்டணியை மறுபரிசீலனை செய்ய நேரிடும்.
தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடுகள் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






