என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Geetha Jeevan"

    • எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்டமாட்டார்கள்.
    • சமூக நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம். எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் பெண்கள் நடமாட முடியாமல் உள்ளனர் என பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். உண்மை அது அல்ல. இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை, கோவை தான் என மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. பாலியல் குற்றத்திற்கு உள்ளாக கூடிய பெண்கள் தி.மு.க. ஆட்சியில் தைரியமாக புகார் அளிக்க முன் வருகிறார்கள்.

    எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்டமாட்டார்கள். ஆளுங்கட்சியை குறை கூற வாய்ப்பு கிடைக்காதா? என்ற நோக்கில் குற்றம் சொல்கின்றனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மீது புகார் கூறும் பழைய நிலைமை மாறி இருக்கிறது. பெண்களின் நிலை இன்று உயர்ந்திருக்கிறது.

    திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டை மட்டும்தான் கூற முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும். சமூக நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

    • அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம்.
    • ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா?

    சென்னை:

    அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், "தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்" என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்.

    அ.தி.மு.க.வுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது.

    ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அ.தி.மு.க.வுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் 'பொண்டாட்டி இலவசம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால் தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் உயர்ந்துள்ளது, கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு.

    பெண்களை இழிவுபடுத்தி வரும் அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். 

    • பாதுகாப்பு பணியில் இருந்த காவலராலேயே அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளதை ஏற்க முடியவில்லை.
    • தைரியமாக மாணவி குற்றஞ்சாட்டியதால் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை தாம்பரம் அருகே அரசு விடுதியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசு விடுதி காவலராலேயே நடந்த இந்த சம்பவத்தை ஏற்கவே முடியாது.

    * இதுவரை காவலர் மேத்யூ மீது எந்த குற்றச்சாட்டும் பதிவாகவில்லை. இதுவே முதல்முறை.

    * வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் குற்றச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    * பாதுகாப்பு பணியில் இருந்த காவலராலேயே அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளதை ஏற்க முடியவில்லை.

    * விடுதி வார்டன் விடுப்பில் சென்றநிலையில் காவலாளி அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

    * தைரியமாக மாணவி குற்றஞ்சாட்டியதால் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

    * பெண்கள், பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஆண்கள் ஈடுபடுவதை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * அன்னை சத்யா இல்லம் உள்ளிட்ட பெண்கள், பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் அனைத்து இல்லங்களிலும் பாதுகாப்பிற்கு பெண் காவலர்கள் நியமிக்கப்படுவர்.

    * தாம்பரம் அருகே அரசு விடுதியில் மாணவியிடம் காவலாளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரையடுத்து அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது.
    • போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மைய பணியாளர்கள், உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை.

    போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர், " போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவர்" என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பாக மே 2, 2025 முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏழை, எளிய குழந்தைகளுக்கு மதிய உணவு, முட்டை, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து வழங்காமல் வேலையை புறக்கணிக்கும் செயல் குழந்தைகள் மைய பயனாளிகளை பாதிக்கக்கூடியதாக உள்ளதென்பது மிகவும் வருந்தத்தக்கது.

    மே 2 ம்தேதி எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளது, மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது.

    அரசு ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மைய பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அரசாணை எண்.117, சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை நாள்: 30.04.2025-ன்படி குழந்தைகள் மையங்களுக்கு (அங்கன்வாடி மையங்கள்) மே மாதத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் முதல் 25-ம் நாள் முடிய 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும். உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி 300 நாட்களுக்கு குறையாமல் குழந்தைகள் மையப் பயனாளிகளுக்கு உணவு வழங்கப்படவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

    தேசிய விடுமுறை, பண்டிகை நாட்களுக்கான விடுமுறை , உள்ளுர் விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகளையும் கணக்கிட்டு, 300 நாட்கள் கண்டிப்பாக மைய செயல்பாடுகளும் அதன் மூலம் முன் பருவ பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதும் உறுதி செய்யப்பட்டு வந்தது.

    ஆனால், அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் கோரிக்கையினை ஏற்ற இவ்வரசு 2022ஆம் ஆண்டு முதல் மே மாதம் சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை அறிவித்து, கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

    மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின் சரத்துகளை உறுதி செய்திடும் பொருட்டு மேற்கண்ட விடுமுறை நாட்களுக்கான சத்து மாவினை முன்கூட்டியே முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மே மாதத்தின் ஆரம்பத்திலேயே வழங்கவும் ஆணை வழங்கியுள்ளது.

    குழந்தைகள் மைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு வீட்டுக்கு எடுத்து சென்று உண்ணும் வகையில் THR – (TAKE HOME RATION) – ஆக வழங்கப்பட்டு வருகிறது. பதவி உயர்வு, பணி மாறுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பணியாளர் நலன் தொடர்பாக பணியாளர் சங்கங்களால் அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் நடிகர் அஜித்தை திமுகவினர் தொடர்ச்சியாக பாராட்டி வருகின்றனர்.
    • அஜித் கார் ரேசிங்கில் கலந்துகொண்டதை உதயநிதி பாராட்டி பதிவிட்டிருந்தார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

    இந்நிலையில் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் பார்க்க தூத்துக்குடி கிளியோபட்ரா திரையரங்கம் சென்ற அமைச்சர் கீதா ஜீவனுக்கு அஜித் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திரையரங்கில் அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்து இருந்த பிரமாண்டமான கேக்கை அமைச்சர் கீதா ஜீவன் வெட்டினார். இதையடுத்து அஜித் ரசிகர்களுடன் இணைந்து 'குட் பேட் அக்லி' படத்தை அமைச்சர் கீதா ஜீவன் கண்டு ரசித்தார்.

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கி திமுக மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் சினிமாவில் அவருக்கு போட்டியாக இருந்த நடிகர் அஜித்தை திமுகவினர் தொடர்ச்சியாக பாராட்டி வருகின்றனர்.

    அஜித் கார் ரேசிங்கில் கலந்துகொண்ட சமயத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி உட்பட பல திமுக அமைச்சர்கள் அஜித்தை பாராட்டி பதிவிட்டனர்.

    திமுகவிற்கு எதிரான அரசியலை விஜய் முன்னெடுத்து வருவதால், அஜித் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக தான் அஜித்தை திமுகவினர் தற்போது பாராட்டுகின்றனர் என்று விமர்சனம் எழுந்துள்ள நிலையில், தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தை அஜித் ரசிகர்களுடன் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று பார்த்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

    இணையத்தில் நடக்கும் விஜய் ரசிகர்கள் - அஜித் ரசிகர்கள் மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    2026 சட்டமன்ற தேர்தலில் ஒருவேளை திமுகவிற்கு போட்டியாக விஜய் உருவெடுத்தால், அவருக்கு எதிராக அஜித் ரசிகர்களை பயன்படுத்துவதற்காக தான் திமுகவினர் நடிகர் அஜித்தை பாராட்டி வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

    • ரசிகர்கள் அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
    • திரையரங்கில் அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்து இருந்த பிரமாண்டமான கேக்கை அமைச்சர் கீதா ஜீவன் வெட்டினார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

    படம் வெளியாவதையொட்டி நேற்று இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    இந்த நிலையில் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் பார்க்க தூத்துக்குடி கிளியோபட்ரா திரையரங்கம் சென்ற அமைச்சர் கீதா ஜீவனுக்கு அஜித் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திரையரங்கில் அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்து இருந்த பிரமாண்டமான கேக்கை அமைச்சர் கீதா ஜீவன் வெட்டினார்.

    இதையடுத்து அஜித் ரசிகர்களுடன் இணைந்து 'குட் பேட் அக்லி' படத்தை அமைச்சர் கீதா ஜீவன் கண்டு ரசித்தார்.

    • சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது
    • பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார்.

    தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார்.

    சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:

    * அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும்

    * அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

    * 8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

    என்று தெரிவித்துள்ளார்.

    • இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்க சுருக்கமுறை திருத்தத்தை அறிவித்து உள்ளது
    • புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கு படிவம்-6, பூர்த்தி செய்து வாக்குச்சாவடிகளில் நேரில் அளிக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்க சுருக்கமுறை திருத்தத்தை அறிவித்து உள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் 8.12.2022 வரை நடக்கிறது. வருகிற 12, 13, 26, 27 ஆகிய நாட்களில் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது.

    ஆகையால் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெறம் முகாம்களில் சம்பந்தப்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை மற்றும் வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள் அனைவரும் வாக்காளர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

    18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கு படிவம்-6, ஆதார் விவரம் சேர்க்க படிவம் 6ஏ, நீக்கம் செய்ய 7, பெயர், முகவரி மாற்றம், திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் நேரில் அளிக்க வேண்டும். இந்த பணிகளில் தி.மு.க.வினர் மெத்தன போக்கு காட்டாமல் விரைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.
    • 27-ந் தேதி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் பி அண்ட் டி முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.

    நாளை மறுநாள் (26-ந் தேதி) தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து மாநகர தி.மு.க. சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கிலும், கோவில்பட்டி நகரம் சார்பில் வேலாயுதபுரத்திலும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    27-ந் தேதி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் பி அண்ட் டி முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 27-ந் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. பின்னர் எட்டையபுரம் மனநல காப்பகம், நாகலா–புரம் முதியோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

    28-ந் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம், பாண்டவர்மங்கலம், நாலாட்டின்புதூர் ஆகிய பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விளாத்திகுளத்தில் மரக்கன்றுகள் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    29-ந் தேதி கயத்தாறு, செட்டிக்குறிச்சி, கழுகுமலை ஆகிய இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    30-ந் தேதி புதூர், குறுக்குசாலை ஆகிய பகுதிகளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    தொடர்ந்து 28,29 மற்றும் 3-ந் தேதிகளில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

    தி.மு.க. வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 45 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளை முன்னிட்டு 14-வது வார்டுக்குட்பட்ட சின்னகன்னுபுரம் பாரதி நகரில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர தி.மு.க. துணை செயயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதா முருகேசன் தலைமை தாங்கினார்.

    உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் அப்பகுதியில் 45 மரக்கன்று களை நடும் திட்டத்தை தொடங்கி வைத்து, 300 பேருக்கு சேலை, நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட வழக்க றிஞர் அணி அமைப்பாளர் மோகன் தாஸ் சாமுவேல், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், வார்டு அவைத்தலைவர் அந்தோணிமுத்து, வட்ட பிரதிநிதிகள் முருகேசன், குமார், தங்கமாரியப்பன், முனியசாமி, ஆல்கன் டிரஸ்ட் நிர்வாகிகள் செந்தில், அய்யப்பன், கேசவன், வேல்பாண்டி, தினேஷ் குமார், ரகுபதி, நாராயணன், கமல் தனசேகரன், மகேஸ்வரசிங், ஊனமுற்றோர் நலச்சங்க தலைவர் மருதபெருமாள், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, கருணா, பிரபாகர், பாஸ்கர், ரமேஷ், மகளிர் அணி சீதாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது.
    • சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சென்னை:

    சமூகநலம்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆய்வு செய்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் குறித்து அனைத்து புள்ளி விவரங்களும், கோரப்பட்டுள்ளன.

    28 ஆயிரம் சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது. பள்ளி, சத்துணவு மையங்களில் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் மாணவர்களின் நலனுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், அவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்காகவுமே காலை உணவுத் திட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.

    அத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்திட்டம் முதலமைச்சரின் அலுவலகத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது மட்டுமில்லாமல் "வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்" என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

    அப்படியிருக்க சத்துணவுத் திட்டத்துறையில் உள்ள சத்துணவு மையங்களை எப்படி அரசு மூட முயற்சி எடுக்கும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், சத்தான உணவை முறையாக மாணவர்களுக்கு வழங்கிடவும், தொடர் கண்காணிப்பை வலுப்படுத்திடவுமே அரசு திட்டமிட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக என்.பெரியசாமி உயிரிழந்தார்.
    • எனினும் என்.பெரியசாமி குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் 1996-2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போதைய மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி இருந்தார்.

    அதன்பின்னர் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், 2002-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் சொத்து சேர்த்ததாக என்.பெரியசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் என்.பெரியசாமி, அவரது மனைவி எபனேசர் அம்மாள், இவர்களது மகளும் அப்போதைய மாவட்ட ஊராட்சி தலைவரும், தற்போதைய அமைச்சருமான கீதாஜீவன், அவரது கணவர் ஜீவன்ஜேக்கப், கீதாஜீவனின் அண்ணன் ராஜா, தம்பியும் தற்போதைய மாநகராட்சி மேயருமான ஜெகன்பெரியசாமி ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக என்.பெரியசாமி உயிரிழந்தார். எனினும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. அந்த வகையில் கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குருமூர்த்தி தீர்ப்பை வாசித்தார். இதற்காக அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் உள்ளிட்ட 4 பேரும் வந்திருந்தனர். அப்போது சொத்து குவிப்பு வழக்கில போதிய முகாந்திரம் இல்லாததால் கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

    இதுதொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. ஆட்சியில் எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு போடப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பின்னர் நீதி கிடைத்துள்ளது. இது நீதிக்கும், நியாயத்திற்கும் கிடைத்த வெற்றி என்றார்.

    ×