என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்
- அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம்.
- ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா?
சென்னை:
அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், "தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்" என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்.
அ.தி.மு.க.வுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது.
ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அ.தி.மு.க.வுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் 'பொண்டாட்டி இலவசம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால் தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் உயர்ந்துள்ளது, கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு.
பெண்களை இழிவுபடுத்தி வரும் அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.






