என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடி ஊழியர்"

    • முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது.
    • போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மைய பணியாளர்கள், உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை.

    போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர், " போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவர்" என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பாக மே 2, 2025 முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏழை, எளிய குழந்தைகளுக்கு மதிய உணவு, முட்டை, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து வழங்காமல் வேலையை புறக்கணிக்கும் செயல் குழந்தைகள் மைய பயனாளிகளை பாதிக்கக்கூடியதாக உள்ளதென்பது மிகவும் வருந்தத்தக்கது.

    மே 2 ம்தேதி எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளது, மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது.

    அரசு ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மைய பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அரசாணை எண்.117, சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை நாள்: 30.04.2025-ன்படி குழந்தைகள் மையங்களுக்கு (அங்கன்வாடி மையங்கள்) மே மாதத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் முதல் 25-ம் நாள் முடிய 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும். உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி 300 நாட்களுக்கு குறையாமல் குழந்தைகள் மையப் பயனாளிகளுக்கு உணவு வழங்கப்படவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

    தேசிய விடுமுறை, பண்டிகை நாட்களுக்கான விடுமுறை , உள்ளுர் விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகளையும் கணக்கிட்டு, 300 நாட்கள் கண்டிப்பாக மைய செயல்பாடுகளும் அதன் மூலம் முன் பருவ பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதும் உறுதி செய்யப்பட்டு வந்தது.

    ஆனால், அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் கோரிக்கையினை ஏற்ற இவ்வரசு 2022ஆம் ஆண்டு முதல் மே மாதம் சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை அறிவித்து, கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

    மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின் சரத்துகளை உறுதி செய்திடும் பொருட்டு மேற்கண்ட விடுமுறை நாட்களுக்கான சத்து மாவினை முன்கூட்டியே முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மே மாதத்தின் ஆரம்பத்திலேயே வழங்கவும் ஆணை வழங்கியுள்ளது.

    குழந்தைகள் மைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு வீட்டுக்கு எடுத்து சென்று உண்ணும் வகையில் THR – (TAKE HOME RATION) – ஆக வழங்கப்பட்டு வருகிறது. பதவி உயர்வு, பணி மாறுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பணியாளர் நலன் தொடர்பாக பணியாளர் சங்கங்களால் அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆயம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறினாள்.
    • குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன் என்று தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய் பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகா. இவர்களது மகள் தர்ஷிகா ஸ்ரீ (வயது2½). அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் தர்ஷிகாஸ்ரீ படித்து வருகிறார். இங்கு அதே பகுதியைச் சேர்ந்த 13 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    தர்மத்துப்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி பணியாளராக உள்ளார். அவருக்கு உதவியாளராக சுரக்காய்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் இருந்து வருகிறார். தினந்தோறும் சினேகா, தனது மகள் தர்ஷிகா ஸ்ரீயை காலையில் அங்கன்வாடிக்கு அழைத்து சென்றும் மாலை 3 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று அங்கன்வாடியில் இருந்து வீட்டிற்கு வந்த தர்ஷிகா ஸ்ரீ சோர்வடைந்து காணப்பட்டாள். இரவு வீட்டிற்கு வந்த தந்தை ராஜபாண்டியிடம், அழுது கொண்டே ஆயம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறினாள்.

    இதயைடுத்து காயத்திற்கு மருந்து தடவி தூங்க வைத்தனர். இதனையடுத்து செல்லாம்மாள் வீட்டிற்கு சென்று குழந்தையின் பெற்றோர் இது குறித்து கேட்டபோது, ஆமாம், உனது குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து ராஜபாண்டி, கன்னிவாடி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குழந்தைக்கு சூடு வைத்த சம்பவம் மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கும் தெரிந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக ஸ்கூட்டரை எடுக்கச்சென்றார்.
    • சென்ற மாதத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையைச் சேர்ந்த அங்கன்வாடி பெண் ஊழியர் அவருக்குச் சொந்தமான ஸ்கூட்டர் வாகனத்தில் மேற்குப் பல்லடம் பகுதியில் உள்ள வட்டார ஊட்டச்சத்து மைய அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தார். ஸ்கூட்டர் வாகனத்தை அலுவலகத்திற்கு முன் எதிரே உள்ள இடத்தில் நிறுத்தி விட்டு சுமார் 2 மணி நேரம் அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக ஸ்கூட்டரை எடுக்கச்சென்றார்.

    அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கும் இங்கும் தேடிப் பார்த்தும் ஸ்கூட்டர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பல்லடம் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போவதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். சென்ற மாதத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசார் இருசக்கர வாகன திருடர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு பணி மாறுதல் செய்துள்ளனர்.
    • பணி மாறுதல் ஆணையை பெற மறுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு கதறி கதறி அழுதார்.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்திர அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பூவன் காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 50). இவர் பூவன் காடு அங்கன்வாடி மையத்தில் தலைமை சமையலராக, 2007 முதல் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் தனபால் இறந்து 7 ஆண்டுகள் ஆகிறது.

    இந்நிலையில் தற்போது சித்ராவை அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு பணி மாறுதல் வழங்கியுள்ளனர். பணி மாறுதல் ஆணையை பெற வந்த சித்ரா, பணி மாறுதல் ஆணையை பெற மறுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு கதறி கதறி அழுதார்.

    இது குறித்து சித்ரா கூறியதாவது :-

    பத்திர அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பூவண்காடு பகுதியில் தலைமை சமையலராக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில் எவ்வித காரணமும் இன்றி, பூவன் காடு பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு பணி மாறுதல் செய்துள்ளனர்.

    ருந்து வசதி இல்லாத குக்கிராம பகுதியில் இருந்து, எவ்வித காரணமும் இன்றி, என்னை 25 கிலோமீட்டர் தொலைவிற்கு பணி மாறுதல் செய்து இருப்பது என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, உரிய நேரத்திற்கு, புதிய இடத்திற்கு சென்று என்னால் பணி செய்ய இயலாது. இது குறித்து சரியான விளக்கத்தையும் அதிகாரிகள் தர மறுக்கின்றனர். என கூறினார். 

    • சாந்தி பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி சாந்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது
    • மேச்சேரி போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (60). இவரது மனைவி சாந்தி (54).

    இவர் மேச்சேரி வீரப்பனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சாந்தி பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி சாந்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தடுமாறி விழுந்த சாந்தி டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேச்சேரி போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் டிப்பர் லாரி ஓட்டுநரான பிரபாகரன் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலை விபத்தில் அங்கன்வாடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் இந்திராகாந்தி, ஷீலாராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலா, கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரேமா தொடக்க உரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கான முழுத் தொகையை வழங்க வேண்டும், இல்லையெனில் வருடத்திற்கு 4 சிலிண்டரை அரசே வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பணி இடமாறுதலை வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் கொடுத்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும். 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றோடு ஒன்று இணைக்கும் திட்டத்தை கைவிட்டு உணவு செலவுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து இந்திய தொழிற்சங்க சங்க மைய மாவட்டத் தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் வீராசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

    ×