என் மலர்
உள்ளூர் செய்திகள்

2½ வயது குழந்தைக்கு சூடு வைத்த அங்கன்வாடி ஊழியர்
- ஆயம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறினாள்.
- குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன் என்று தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய் பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகா. இவர்களது மகள் தர்ஷிகா ஸ்ரீ (வயது2½). அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் தர்ஷிகாஸ்ரீ படித்து வருகிறார். இங்கு அதே பகுதியைச் சேர்ந்த 13 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
தர்மத்துப்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி பணியாளராக உள்ளார். அவருக்கு உதவியாளராக சுரக்காய்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் இருந்து வருகிறார். தினந்தோறும் சினேகா, தனது மகள் தர்ஷிகா ஸ்ரீயை காலையில் அங்கன்வாடிக்கு அழைத்து சென்றும் மாலை 3 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று அங்கன்வாடியில் இருந்து வீட்டிற்கு வந்த தர்ஷிகா ஸ்ரீ சோர்வடைந்து காணப்பட்டாள். இரவு வீட்டிற்கு வந்த தந்தை ராஜபாண்டியிடம், அழுது கொண்டே ஆயம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறினாள்.
இதயைடுத்து காயத்திற்கு மருந்து தடவி தூங்க வைத்தனர். இதனையடுத்து செல்லாம்மாள் வீட்டிற்கு சென்று குழந்தையின் பெற்றோர் இது குறித்து கேட்டபோது, ஆமாம், உனது குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து ராஜபாண்டி, கன்னிவாடி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குழந்தைக்கு சூடு வைத்த சம்பவம் மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கும் தெரிந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






