என் மலர்
இந்தியா

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்- சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்
- குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து மனுவை போட்டதை நாங்கள் ஏற்கவில்லை.
- அரசியல் சண்டைகள் என்பது நீதிமன்றங்களில் இருக்கக்கூடாது.
புதுடெல்லி:
உங்களுடன் ஸ்டாலின் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற திட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் தமிழக அரசின் திட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மூத்த வக்கீல் வில்சன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது "அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நீங்கள் கொண்டு வந்த எத்தனை திட்டங்களுக்கு ஒரே நபரின் பெயரை வைத்திருக்கிறீர்கள்" என தலைமை நீதிபதி கவாய் அ.தி.மு.க. தரப்பு வக்கீலிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது ஒன்று கூட இல்லை என்று அ.தி.மு.க. தரப்பு வக்கீல் பதில் அளித்தார். அவர் பொய் சொல்வதாக தி.மு.க. தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி என அ.தி.மு.க. கட்சித் தலைவர்களை அழைக்கும் பெயரில் திட்டம் உள்ளது. இதெல்லாம் அவர்கள் தங்களின் தலைவர்களை அழைக்கும் பெயர்தான் என்று தெரிவித்தார்.
பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்தனர். மேலும் வழக்கு தொடுத்த அ.தி.மு.க. எம்.பி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்துக்கு தடை இல்லை. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஸ்டாலின் பெயரை நீக்க கோரிய அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கிறோம்.
ரூ.10 லட்சம் அபராத தொகையை ஒரு வாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் செலுத்த வேண்டும். அபராத தொகையை செலுத்த தவறினால் உயர்நீதிமன்றம் சி.வி.சண்முகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம்.
அரசியல் சண்டைகள் என்பது தேர்தல் களத்தில் தான் இருக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது. மனுதாரர் குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய்ததை நாங்கள் ஏற்கவில்லை.
இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம். பொதுமக்களின் வரிப் பணத்தில் குறிப்பிட்ட கட்சி தலைவரின் பெயர் வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அப்படி உள்ள அனைத்து திட்டங்களையும் மனுதாரர் எதிர்த்து இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட திட்டத்தை மட்டும் அவர் எதிர்ப்பது என்பதுதான் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இதற்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட தலைவரின் பெயர் வைக்கப்பட்ட திட்டங்கள் குறித்த பட்டியலை எங்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார்கள். ஆனால் நாகரீகம் கருதி அந்த பெயர்களை நாங்கள் படிக்கவில்லை.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.






