search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கேரளாவில் இருந்து கோவை, நீலகிரிக்கு வருபவர்கள் தீவிர கண்காணிப்பு- மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதி
    X

    கேரளாவில் இருந்து கோவை, நீலகிரிக்கு வருபவர்கள் தீவிர கண்காணிப்பு- மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதி

    • யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    • பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 12 மணி நேரத்தில் கேரளாவில் 280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர்.

    தொடர்ந்து கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, கேரள மாநில எல்லையொட்டி இருக்கும் தமிழக பகுதிகளான கோவை, நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    கேரள மாநிலத்தையொட்டி உள்ள தமிழக எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டம்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு தினந்தோறும் வேலை, தொழில், கல்லூரி சம்பந்தமாக ஏராளமானோர் கோவைக்கு வருவதும், இங்கிருந்து பலர் கேரளாவுக்கும் சென்று வருகிறார்கள்.

    தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவை மாவட்ட எல்லைகளான வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைகட்டி உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அங்கு மருத்துவ குழுவினர், போலீசார் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அந்த வழியாக கேரளாவில் இருந்து கோவைக்குள் வரக்கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதில் இருக்கும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    அதில் யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் அவர்களின் சளி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்த பின்னரே அவர்களை கோவைக்குள் அனுமதித்து வருகின்றனர்.

    கோவையில் பொது மக்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளுக்கு காய்ச்சலுடன் வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இருமல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளான நாடுகாணி, கக்கநல்லா உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது.

    அந்த வழியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகள் அனைவரும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

    பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நீலகிரி கலெக்டர் அருணா கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வருவோரின் உடல் வெப்ப நிலை, சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

    இதுவரை 30 பேரின் சளி மாதிரிகள் சேகரி க்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. எனவே பொது மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×