search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய வகை கொரோனா"

    • கேரளாவில், மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனை மூலம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
    • இணைநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    பத்தனம்திட்டா:

    கேரளாவில், புதிதாக உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், பத்தனம்திட்டாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதியவகை கொரோனா குறித்து கேரள மக்கள் கவலைப்பட தேவையில்லை. இது இப்போதுதான் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.

    ஆனால் சில மாதங்களுக்கு முன்பே சிங்கப்பூர் விமான நிலையத்தில் சில இந்தியர்களிடம் காணப்பட்டது.

    கேரளாவில், மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனை மூலம் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

    நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த புதியவகை கொரோனா இருக்கிறது. இதுபற்றி கவலைப்பட வேண்டாம். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நமது சுகாதார கட்டமைப்பு பலமாக உள்ளது.அதே சமயத்தில், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். குறிப்பாக, இணைநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது இடங்களில் மீண்டும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்குவது போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஒமைக்ரானின் துணை வைரசான பிஎப்.7 துணை வைரஸ்களின் பரவலால் சீனா, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

    அந்நாடுகளில் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    நாடு முழுவதும் இதுவரை 220 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் புதிய வகை தொற்று இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொற்று பாதித்த 2 பேரின் மாதிரிகளை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்ததில் அவர்களுக்கு பிஎப்.7 வகை திரிபு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதே போல மேலும் குஜராத்தில் மேலும் ஒருவருக்கும், ஒடிசாவில் ஒரு பெண்ணுக்கும் என இதுவரை நாடு முழுவதும் 4 பேருக்கு பிஎப்.7 வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தொற்று பாதிக்கப்பட்ட 4 பேருக்குமே பெரிய அளவில் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மேலும் நோயாளிகள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றதையடுத்து குணம் அடைந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று சுகாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் பேசிய அவர், கொரோனா பரவல் ஓய்ந்து விடவில்லை. நாம் அனைவரும் விழி்ப்புணர்வுடன் இருக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையையும் நாம் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்றார்.

    இதற்கிடையே புதிய வகை தொற்று பரவல் கண்காணிப்பை அனைத்து மாநில அரசுகளும் தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    தற்போது வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் தொற்று பரிசோதனை செய்யப்படுவது இல்லை. இந்நிலையில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா திரிபுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பொது இடங்களில் மீண்டும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்குவது போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுதவிர பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துமாறும் அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுவரை 28 சதவீதம் பேருக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே தகுதி உடையவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக மூத்த குடிமக்கள் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் கேட்டுக்கொண்டுள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில், பொது மக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

    நோயாளிகள் அல்லது வயதில் மூத்தவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. புதிய வகை தொற்று குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் என கூறி உள்ளார்.

    இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா புதிய வகை கொரோனா பற்றி பீதியடைய தேவையில்லை என்று தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

    சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு பற்றிய செய்தி கவலை அளிக்கிறது. நமது சிறந்த தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் சாதனை பதிவை கருத்தில் கொண்டு நாம் புதிய வகை கொரோனா பரவல் பற்றி பீதியடைய தேவையில்லை.

    இந்திய அரசு நிர்ணயித்த வழிகாட்டுதல்களை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

    ×