search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு தினம்"

    • நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை 26-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை 26-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு ஐஜி லலிதா லட்சுமி, கமென்டண்ட் ராஜசேகரன், துணை காவல் ஆய்வாளர் ராயப்பன் ஆகிய 3 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • உழைப்பாளர் சிலை அருகில் நாளை குடியரசு தின விழா நடைபெறுகிறது.
    • ராணுவப்படைப் பிரிவு, கடற்படைப்பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்துவார்கள்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் அந்தப் பகுதியில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன. எனவே கடந்த ஆண்டு குடியரசு தினவிழா, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆண்டும் உழைப்பாளர் சிலை அருகில் நாளை (வெள்ளிக்கிழமை) குடியரசு தின விழா நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்டமான அளவில் பந்தல்கள் போடப்படுகின்றன. அங்கு சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அமர்வார்கள். காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார்.

    காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அவர் அழைத்து வரப்படுவார். பொதுமக்களுக்கும், விழா பந்தலில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கும் அவர் கையசைத்து வாழ்த்து தெரிவிப்பார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதலமைச்சரை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார்.

    காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகை தருவார். அவர், விமானப்படையினர் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்படுவார். அவரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவிப்பார். அதைத்தொடர்ந்து, 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்பார்.

    பின்னர், தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார்.

    அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக்கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைப்பார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும். அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்.

    பின்னர் ராணுவப்படைப் பிரிவு, கடற்படைப்பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணி வகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதை அவர் ஏற்றுக் கொள்வார். அப்போது, கடற்படை ஊர்தியில் போர்க்கப்பலின் சிறிய வடிவம், வான்படை ஊர்தியில் சிறிய வடிவிலான விமானம், கடலோர காவல்படை ஊர்தியில் சிறிய வடிவிலான படகுகள் ஆகியவை அணிவகுத்து கொண்டு வரப்படும்.

    அதைத்தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக்குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணிவகுத்துச் செல்வார்கள்.

    அதன்பின்னர் அணிவகுப்பு மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்குவார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு முதலமைச்சர் வழங்குவார். பின்னர், பதக்கம் பெற்றோர் குழுவாக முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.

    அதைத்தொடர்ந்து விழா மேடையில் கவர்னர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசில் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வரும். அதற்கு முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 

    • குடியரசு தின விழாவன்று டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும்.
    • காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் என அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.

    இந்நிலையில், குடியரசு தின விழாவன்று டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என காலை 6 மணி வரை ரெயில்கள் இயங்கும். காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

    • புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார்.
    • புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார். தொடர்ந்து மாலையில் ராஜ் நிவாசில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு, கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளிக்கிறார்.

    இதற்கான அழைப்பிதழ் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் கவர்னர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேநீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேநீர் விருந்துகளில் நானும் எங்கள் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று உள்ளோம்.

    ஆனால் சமீப காலமாக புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.

    இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.

    ஆகவே, கவர்னர் தமிழிசை விடுத்துள்ள குடியரசு தின விழா தேநீர் விருந்து அழைப்பை தி.மு.க. புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
    • கவர்னர் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

    இந்நிலையில் குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.

    கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கவர்னரின் நடவடிக்கைகளை புறக்கணிக்கிறோம். தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, கலை, இலக்கியங்களுக்கு எதிராக கவர்னர் பேசுகிறார். வரலாற்றை சிதைக்கும் வகையில் கவர்னர் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    ஆர்.எஸ்.எஸ். தொண்டனை போல் செயல்படுகிறார் கவர்னர் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தைப்பூச விழா (நாளை), குடியரசு தினம் (நாளை மறுதினம்), 27-ந் தேதி (சனிக்கிழமை), 28 (ஞாயிற்றுக்கிழமை) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதையொட்டி சென்னையில் படிப்பு, பணி நிமித்தமாக தங்கி உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே தென்மாவட்ட ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது.

    காத்திருப்போர் பட்டியல் நீண்டுள்ளது. 'தட்கல்', பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளை பயணிகள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தைப்பூசம், குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், இன்றும், நாளையும் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் கூடுதலாக 405 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 580 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இன்று 5 ஆயிரத்து 722 பயணிகளும், நாளை 7 ஆயிரத்து 222 பயணிகளும் சென்னையில் இருந்து பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அன்று 15 ஆயிரத்து 669 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இந்த சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். 

    இந்நிலையில் காமராஜர் சாலையில் குடியரசு தின விழாவுக்கான இறுதிகட்ட ஒத்திகை இன்று நடைபெற்றது. குறிப்பாக முப்படை, தேசிய மாணவர் படை, காவல் துறை, தீயணைப்பு துறையும் அணிவகுப்பில் பங்கேற்றனர். 

    கவர்னர், முதலமைச்சர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடைபெற்றது. பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகையும் நடைபெற்றது.

    குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.
    • ராமர் சிலை கொண்ட அலங்கார ஊர்தி இடம்பெற இருப்பதாக தகவல்.

    நாட்டில் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.

    அந்த வகையில், 2024 குடியரசு தின அணிவகுப்பில் உத்தர பிரதேச மாநிலம் சார்பில் குழந்தை ராமர் சிலை கொண்ட அலங்கார ஊர்தி இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே அலங்கார ஊர்தியுடன் அம்மாநிலத்தில் நடைபெறும் மெட்ரோ பணிகளை எடுத்துரைக்கும் வகையில், மெட்ரோ ரெயில் பெட்டி ஒன்றும் இடம்பெற்று இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

     


    இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில்- ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், அரியாணா, ஜார்க்கண்ட், லடாக், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகலயா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என தெரிகிறது. 

    • ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.
    • மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 2 வாரங்களுக்கு முன்பு இருந்தே போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

    குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள். சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 2 வாரங்களுக்கு முன்பு இருந்தே போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பஸ் நிலையம் பகுதிகளிலும் போலீசார் சோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தங்கும் விடுதிகள், லாட்ஜுகளில் இரவு நேரங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    • 5 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஐ.நா பொதுச்சபை தலைவர்
    • மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், 5 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இன்று முதல் ஜன.26 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    இந்த பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்ட ஐ.நா தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், "இந்தியா இரண்டாவது தீபாவளியை கொண்டாடும் இந்த நன்நாளில் டெல்லி-க்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இனிவரும் நாட்களில் அமைதி, முன்னேற்றம், செழிப்பு மற்றும் நிலைத்தன்மை பற்றிய பயனுள்ள விவாதங்களை எதிர்பார்க்கிறோம்" என பதிவிட்டிருந்தார்.

    5 நாள் பயணமாக இந்தியா வந்த ஐ.நா தலைவர், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு மும்பை செல்கிறார். அங்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். மேலும் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, பலதரப்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

    ஐ.நா–இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக, பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸின் சுற்றுப்பயணம் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜன.26 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    • மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.
    • வருகிற 30-ந் தேதி வரை முக்கிய பிரமுகர்களுக்கான பாஸ் வழங்க தடை செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க சதித்திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.

    அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு புறப்பாடு, வருகை பகுதி வளாகங்கள் அருகே நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்களை அடுக்குமாடி நிறுத்துமிடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க விமான பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    விமான நிலைய காா் பாா்க்கிங் பகுதியில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால் அதை மேலும் தீவிரமாக செயல்படுத்துகின்றனா். பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

    வருகிற 30-ந் தேதி வரை முக்கிய பிரமுகர்களுக்கான பாஸ் வழங்க தடை செய்யப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும்.

    தற்போது 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் குடியரசு தின விழா நெருங்கும்போது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தென்மண்டலத்துக்கான சி.ஆர்.பி.எப். கமாண்டோ படையில் பணியாற்றுகிறேன்.
    • நாங்கள் ஒவ்வொரு குழுவாக சேர்ந்து குடியரசு அணிவகுப்பில் சாகசம் செய்ய உள்ளோம்.

    சென்னை:

    மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.-ல்.) உள்ள பெண் கமாண்டோ படையினர் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை 'பெண்கள், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்' என்ற பெயரில் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பேரணி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31-ந்தேதி குஜராத் மாநிலத்தை சென்றடைந்தது.

    பேரணியில் சென்ற பெண் கமாண்டோ படையினர் பல்வேறு சாகசங்களை குஜராத்தில் செய்து காட்டினர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பெண் கமாண்டோக்கள் சிறப்பாகவும், திறமையாகவும் சாகசங்களை செய்தனர்.

    இதையடுத்து வருகிற 26-ந்தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பு பேரணியில் பங்கேற்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்துள்ளது. தேர்வான 9 பேரில் தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி ஜான்சி மனோகரன் என்பவரும் ஒருவர்.

    இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தென்மண்டலத்துக்கான சி.ஆர்.பி.எப். கமாண்டோ படையில் பணியாற்றுகிறேன். பெண் கமாண்டோக்கள் மோட்டார் சைக்கிள் பேரணியில் திறமையாக சாகசங்களை செய்து காட்டியதால், குடியரசு தின அணிவகுப்பு பேரணியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளோம்.

    மொத்தம் 60 பெண் கமாண்டோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். அதில், நான் உள்பட 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நாங்கள் ஒவ்வொரு குழுவாக சேர்ந்து குடியரசு அணிவகுப்பில் சாகசம் செய்ய உள்ளோம். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜிலா, கலைவாணி ஆகியோருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் சாகசங்களை செய்துக்காட்ட உள்ளேன்.

    இதற்காக நாங்கள் 3 பேரும் தினமும் கடுமையான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளோம். வருகிற 26-ந்தேதி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சர்வதேச தலைவர்கள் முன்பு எங்களது சாகசங்களை செய்து காட்டி பாராட்டுகளை பெற உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் நம்பிக்கையுடன் பதில் அளித்தார்.

    ×