search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் விடுமுறை"

    • சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.

    சென்னை:

    புனித வெள்ளியையொட்டி நாளை அரசு விடுமுறை ஆகும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைவரது கவனமும் தேர்தல் பிரசாரத்தை நோக்கி திரும்பியுள்ளதால், தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்பவர்களிடம், தனியார் ஆம்னி பஸ்கள் ஓசையில்லாமல் கட்டணத்தை உயர்த்திவிட்டன.

    சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று தனியார் ஆம்னி பஸ்களில் செல்வதற்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கோவைக்கு செல்வதற்கும் ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.1000 வரை ஆகும்.

    இதேபோல் சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு முதல் 5 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

    மற்ற பண்டிகை காலத்தில் வரும் வார இறுதி நாட்களை போலவே, தற்போதும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் தட்கல் முறையிலும் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி பொதுமக்கள் ஆம்னி பஸ்களை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் பஸ் கட்டணம் கிட்டத்தட்ட விமானக் கட்டணத்துக்கு இணையாக உள்ளது. எனவே, குடும்பத்துடன் ஊருக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் கூடுதல் கட்டணத்தால் தவிக்கிறார்கள்.

    அதே நேரத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. இந்த வார இறுதியில் மேலும் 650 பஸ்கள் புதிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்திற்கு வரும் ஒவ்வொரு பஸ்சிலும் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. இதனால் முன்பதிவு செய்யாத பயணிளுக்கு இருக்கை கிடைப்பதில்லை. இதனால் முன்பதிவு செய்யாத பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

    ஒவ்வொரு வார இறுதியிலும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பிறகுதான் கூடுதல் பஸ்கள் இயக்கபடுவதாகவும் பயணிகள் தெரிவிக்கி ன்றனர். எனவே வார இறுதி நாட்களில் முன்பதிவு செய்யாத பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.
    • சிறு தொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் போன்ற பணிகள் பாதிக்கும்.

    சென்னை:

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியை முன்னிட்டு 29-ந்தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். மறுநாள் (சனிக் கிழமை) மாதத்தின் 4-வது வாரம் என்பதால் வங்கிக்கு விடுமுறையாகும்.

    31-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை நடப்பு நிதியாண்டு கணக்குகள் முடிக்கப்படுகிறது. இந்த வருடம் விடுமுறை நாளில் ஆண்டு கணக்கு முடிக்கக்கூடிய சூழல் வந்துள்ளதால் அன்று பெரும்பாலான வங்கிகள் மூடப்படும். அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிகள் மட்டும் செயல்படும்.

    ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக பொதுமக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் திறந்து இருக்கும். வங்கிகள் 4 நாட்கள் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது.

    ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் நாள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் நாள் ஆகியவை அடுத்தடுத்து வருவதால் வங்கிகள் செயல்படாது. நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.

    இதுகுறித்து அகில இந்திய வங்கிஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

    புனித வெள்ளி விடுமுறை நாட்களோடு சனி, ஞாயிறு விடுமுறையும் சேர்ந்து வருவதால் தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்கிற்காக பொது மக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் செயல்படும்.

    எனவே வரும் நாட்கள் தொடர் விடுமுறையால் வங்கி சேவை பாதிக்ககூடும். பணம்மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கும். சிறு தொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் போன்ற பணிகள் பாதிக்கும். ஏ.டி.எம். மையங்கள் முழு கொள்ளளவோடு செயல்படும். பணம் தீர்ந்தாலும் உடனே வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
    • திருப்பதியில் நேற்று 71,664 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை முதல் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து உள்ளதால் தரிசன நேரம் கூடுதலாகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 71,664 பேர் தரிசனம் செய்தனர். 33, 330 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தைப்பூச விழா (நாளை), குடியரசு தினம் (நாளை மறுதினம்), 27-ந் தேதி (சனிக்கிழமை), 28 (ஞாயிற்றுக்கிழமை) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதையொட்டி சென்னையில் படிப்பு, பணி நிமித்தமாக தங்கி உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே தென்மாவட்ட ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது.

    காத்திருப்போர் பட்டியல் நீண்டுள்ளது. 'தட்கல்', பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளை பயணிகள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தைப்பூசம், குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், இன்றும், நாளையும் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் கூடுதலாக 405 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 580 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இன்று 5 ஆயிரத்து 722 பயணிகளும், நாளை 7 ஆயிரத்து 222 பயணிகளும் சென்னையில் இருந்து பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அன்று 15 ஆயிரத்து 669 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இந்த சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரிசல் சவாரி,ஆயில் மசாஜ் செய்து மகிழ்ந்தனர்
    • ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்திருந்தனர்.

    தருமபுரி.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் அமைந்துள்ளது ஒகேனக்கல் சுற்றுலா தலம். காவிரி ஆறு அருவியாக ஆர்ப்பரித்துக் கொட்டும் பிரதான நீர்வீழ்ச்சி மற்றும் ஐந்தருவி பகுதிகள் பார்ப்பவர்களை தன்வசப்படுத்தும் இயற்கை கொடையாகும்.

    தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகம், ஆந்திரா, கேரளம் மற்றும் புதுவை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இன்று ஒகேனக்கலில் குவிந்தி ருந்தனர்.

    குடும்பத்தோடு குதூக லமாய் விடுமுறையை கழிக்க ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் முதலில் ஆயில் மசாஜ் செய்து பிரதான அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.ஒகேனக்கலில் நேற்று இயல்பான சீதோசன நிலை நிலவியதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.

    சுற்றுலாப் பயணிகள் பலரும் குடும்பத்தோடு காவிரி ஆற்றின் பாதுகாப்பான பகுதிகளில் நீராடினர். ஐந்தருவி பகுதியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சியின் சாரலில் நனைந்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், இனிமையான பரிசில் பயணம் குடும்பத்தோடு மேற்கொண்டு அதே சாரல் மலையில் பரிசலில் சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    • பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்
    • வெறிச்சோடிய நெடுஞ்சாலை

    விழுப்புரம்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை கொண்டாட கடந்த 10-ந் தேதி முதல் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.சாலைகளில் தொடர்ந்து சென்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி பண்டி கையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாகனங்களில் பொது மக்கள் சென்றனர்.

    தீபாவளியை முன்னிட்டு பெரும்பாலான அலுவல கங்கள், தனியார் நிறுவனங்க ளில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது, இதனால் எப்போதும் பரபரப்ாக காணப்படும் விக்கிர வாண்டி டோல்கேட் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

    • தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளது.
    • திண்டுக்கல் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு, தனியார் நிறுவனங்க ளிலும் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமானோர் முடிவு செய்துள்ளனர்.

    சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஏராள மானோர் திரும்பி வருகின்ற னர். இவர்களுக்காக சிறப்பு ரெயில் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்பவர்கள் கிடைக்கும் பஸ்களில் ஏறி சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் திண்டுக்கல் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் நேற்று முதலே பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக திண்டுக்கல் இருப்பதால் பலஊர்களில் இருந்து இங்கு வந்து பின்னர் தங்கள் பகுதிகளுக்கு செல்கின்றனர்.

    குறிப்பாக தேனி, பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவர்கள் திண்டுக்கல் வந்து பின்னர் இங்கிருந்து பஸ் மூலம் தங்கள் ஊருக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் திண்டுக்கல்லில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்பவர்களும் டவுன் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    இன்னும் 3நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. இதனிடையே திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களிலும், வெளியூர்களில் இருந்து திண்டுக்கல், தேனி உள்ளிட்ட நகரங்களுக்கு வரும் ஆம்னி பஸ்களிலும் குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ராமேசுவரத்தில் தனியார் பேருந்து இல்லாத நிலையில் அனைத்து பயணிகளும் அரசு பேருந்தில் மட்டுமே திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
    • பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    இதில் பெரும்பாலான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அரசு பேருந்தில் வந்திருந்தார்கள். ராமேசுவரத்தில் தனியார் பேருந்து இல்லாத நிலையில் அனைத்து பயணிகளும் அரசு பேருந்தில் மட்டுமே திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், இரவு நேரத்தில் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்ல போதிய பேருந்து இயக்கப்படாத நிலையில் கடும் அவதிக்குள்ளாகினர்.

    இதில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தனர். ராமேசுவரத்திற்கு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் அரசு பேருந்தில் மட்டுமே பயணம் மேற்கொள்ளும் நிலையில் பயணிகள் வருகைக்கு ஏற்றவாறு பேருந்துக்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில், போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள் புறப்பட்டு சென்றனர்.

    • சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
    • முன்தினம் இரவு முதல் பக்தர்கள் குவிந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கி ழமை தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்நிலையில், சனிக்கி ழமை, காலாண்டு பள்ளி விடுமுறை, ஞாயிறு, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணி முதல் திரளான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    • 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் ராமேசுவரத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.
    • பஸ், கார், வேன் என ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் ராமேசுவரம் வாகன நிறுத்தங்களில் நெரிசல் காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றாகவும், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில் அறியப்படுகிறது.

    பரிகாரம் செய்வதற்காகவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காகவும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ராமநாத சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர். இதனால் ராமேசுவரத்திற்கு பக்தர்களின் வருகை எப்போதும் இருக்கும்.

    இந்த நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் ராமேசுவரத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் இன்று அதிகாலையிலேயே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் நீராடி ராமநாதசுவாமி கோவிலில் உள்ள தீர்த்தங்களிலும் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் சன்னதிகளில் நீண்ட வரிசைகளில் நின்று தரிசனம் செய்தனர்.

    பஸ், கார், வேன் என ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் ராமேசுவரம் வாகன நிறுத்தங்களில் நெரிசல் காணப்பட்டது. மேலும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, பேய்க்கரும்பு, அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம், அரியமான் கடற்கரை, ராமர்பாதம், கோதண்டராமர் கோவில் ஆகிய பகுதிளிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நகராட்சி நிர்வாகம் சார்பில் 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தொடர்ச்சியாக தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    ராமேசுவரத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டமும், போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

    • சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் சொந்த ஊருக்கு படையெடுத்தனர்.
    • சென்னையில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் வெளியூர் புறப்பட்டு சென்றனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதை முன்னிட்டு இன்று, நாளை சேர்த்து மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் சொந்த ஊருக்கு படையெடுத்தனர்.

    பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    முக்கிய ரெயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்தது. ஆம்னி பஸ்களில் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அரசு பஸ்களில் பயணம் செய்யவே தற்போது அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    நேற்று இரவு முதலே கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்த பயணிகளை தவிர்த்து கடைசி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிட்டவர்கள் என ஏராளமானோர் ஒரே நேரத்தில் தங்களது குடும்பத்துடன் குவிந்ததால் பஸ் நிலையத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் வசதிக்காக வழக்கமாக தினசரி இயக்கப்படும் 2200 பஸ்களுடன் நேற்று கூடுதலாக 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதன்மூலம் சென்னையில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் வெளியூர் புறப்பட்டு சென்றனர். இன்று வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக மேலும் 850 சிறப்பு பஸ்கள் வரை இயக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    எழும்பூர், தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எழும்பூர் ரெயில் நிலையம் வழக்கத்தை விட பயணிகள் கூட்டத்தால் திணறியது. தாம்பரம், பெருங்களத்தூரில் அரசு பஸ்களில் செல்லவும் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    • சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நகரின் பல்வேறு சாலைகள் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் தினறி வருகிறது.
    • அதிக பணி சுமையால் தற்போது கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து போலீசார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நகரின் பல்வேறு சாலைகள் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் தினறி வருகிறது.

    வெள்ளி நீர் வீழ்ச்சி முதல் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ஏரி சாலை பகுதி வரை உள்ள நெடு ஞ்சாலையில் சாலையின் இரு புறங்களிலும் கடை களை அமைத்து போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பெருமாள் மலை முதல் கொடைக்கானல் சுங்கச்சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    இதேபோல் பெருமாள் மலை பகுதியிலிருந்து பழனிக்கு திரும்பும் சாலை யின் இரு பகுதிகளிலும் பிரதான சாலைகளிலேயே கடைகள் அமைத்துள்ளதால் அரசு பஸ்களும், சுற்றுலா வாகனங்களும், பொதுமக்களும் பெருமாள் மலைப் பகுதியை கடப்பதில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கொடைக்கானலில் பரபரப்பாகவும், நகரின் மையப்பகுதியாகவும் அமைந்துள்ளது மூஞ்சிக்கல் பகுதியாகும். இதே பகுதியில் தான் கொடைக்கானல் நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளது. மூஞ்சிக்கல் பஸ் நிறுத்த பகுதியிலிருந்து கல்லறை மேடு பகுதி பஸ் நிறுத்தம் வரை தங்கள் இஷ்டம் போல் நெடுஞ்சாலைகளில் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர்.

    இதனால் அதே சாலை பகுதியில் அமைக்கப்பட்டு ள்ள நிரந்தரக் கடைகளில் பொருட்களை வாங்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்படு வதால் கொடைக்கானல் நகருக்குள் நுழையும் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் நெடு ஞ்சாலைகளிலேயே நீண்ட நேரம் நிற்கும் அவலம் உள்ளது.

    பெருமாள் மலையில் இருந்து கொடைக்கானல் நகர் பகுதிக்குள் நுழையும் 12 கி.மீ. சாலையை கடப்ப தற்குள் கொடைக்கானலுக்கு ஏன் சுற்றுலா வந்தோம் என்ற நிலைமையை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

    போலீசார் பற்றாக்குறை

    கொடைக்கானலில் மக்கள் தொகை 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் பல ஆயிர க்கணக்கில் உயர்ந்துள்ளது. மக்கள் தொகையும், வாகன ங்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது போல் குற்றச் சம்பவங்களும், போக்கு வரத்து விதிமீறல்களும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் குற்ற பிரிவு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் பல ஆண்டு களாக மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

    மலைக்கிரமங்களில் நிகழும் குற்ற சம்பவங்களை தடுக்க மேல்மலை பகுதியில் போலீஸ் நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக கொடை க்கானல் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் குறைவான எண்ணிக்கை யில் உள்ள போலீசார் மேல்மலை கிராம பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க சென்று விட்டால் போலீஸ் நிலையத்தில் புகாரை பெறுவதற்கு கூட ஆளில்லாத நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலில் பல இடங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

    நெடுஞ்சாலை போக்கு வரத்து நெரிசல்களை சீரமைக்க பைக் ரோந்து என்ற போலீஸ் அமைப்பை ஏற்படுத்தி 5 புல்லட்டுகளும் வழங்கப்பட்டது . குறைவான எண்ணிக்கையில் உள்ள போக்குவரத்து போலீசார் படும் அவலம் மிகவும் கொடுமையானதாக உள்ளது. அதிக பணி சுமையால் தற்போது கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து போலீசார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    கடைக்கானலாக மாறிய கொடைக்கானலையும், போக்குவரத்தை சீர் செய்ய போலீசாரையும் நியமிக்கா மல் உள்ள காவல்துறையும், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் பாதுகாக்க எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என்பதை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் முடிவு செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×