என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

3 நாட்கள் தொடர் விடுமுறை... பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகள்
- ஆயிரக்கணக்கானவர்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
- போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வும் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 24-ந்தேதி பள்ளியின் கடைசி வேலை நாளாகும். அதன் பின்னர் கோடை விடுமுறை விடப்படுகிறது. கோடை விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கிறது. சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கானவர்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
ரெயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பியதால் சிறப்பு ரெயில்கள் அறிவிக் கப்பட்டு வருகிறது. தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயில்கள் நிரம்பி வருகின்றன.
சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிகள் மற்றும் கோவை, திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டன. இந்த வாரம் முதல் மே, ஜூன் மாதம் வரை பெரும்பாலான ரெயில்களில் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருச்செந்தூர், திருச்சி, ராமேஸ்வரம், பெங்களூர், மைசூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழ் புத்தாண்டு தினம் அரசு விடுமுறையாகும். 12, 13-ந் தேதி (சனி, ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து தமிழ் புத்தாண்டு தினம் வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குகிறது. அரசு விரைவு போக் குவரத்துக் கழகம் 1000 பஸ்களை முழு அளவில் இயக்க திட்டமிட்டுள்ளன.
இதே போல வருகிற 18-ந்தேதி புனிதவெள்ளி அரசு விடுமுறையாகும். அதனோடு சேர்ந்து 19, 20 ஆகிய நாட்களும் தொடர் விடுமுறையாக இருப்பதால் முன்பதிவு அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டன. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளதால் கூட்ட நெரிசலை குறைக்க கோடைகால சிறப்பு ரெயில் இன்னும் கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆம்னி பஸ்களிலும் முன் பதிவு விறுவிறுப்பாக உள்ளது. கோடை காலத்தில் குளிர்சாதன வசதியுள்ள பஸ், ரெயில்களில் மக்கள் செல்ல விரும்புவதால் துரந்தோ, வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் ஜூன் மாதம் வரை நிரம்பி உள்ளன.






