என் மலர்
நீங்கள் தேடியது "united nations"
- உலகில் 20 பெரிய நிலத்தடி நீர் நிலைகளில் 13 நீர்நிலைகள் மரண நிலையில் இருக்கின்றன.
- உலகளவில் உள்ள 70 சதவீத முக்கியமான நிலத்தடிநீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருகின்றன.
சென்னை:
ஒரு நபர் தன்னுடைய வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்யும்போது, அவர் பொருளாதாரச் சிக்கலில் வீழ்வது இயற்கை. இதனை அவர் திவாலாகிவிட்டார் என்றும் சொல்வார்கள். அதுவே நீர்வளத்திற்கு நடந்தால்? சற்று யோசித்து பாருங்கள்.
கடந்த சில 10 ஆண்டுகளாக இயற்கை வழங்கும் நீரைவிட, நாம் சுரண்டிய நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 'உலகளாவிய தண்ணீர் திவால்' அறிக்கை, நிலத்தடி நீர் வற்றி வருவது மற்றும் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் சமூக, பொருளாதாரப் பாதிப்புகளை விரிவாகப் பட்டியலிட்டு இருக்கிறது.
இந்த அறிக்கை வெறும் தண்ணீர் தட்டுப்பாடு என்பதைத் தாண்டி, நாம் மீளமுடியாத ஒரு பேராபத்தில் சிக்கியுள்ளோம் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. மேலும் இதனை வெறும் எச்சரிக்கையாக மட்டுமில்லாமல், மனிதகுலத்தின் வாழ்வாதாரத்திற்கான அபாய சங்காகவும் ஊதியுள்ளது.
அப்படி என்னதான் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
• உலகில் 20 பெரிய நிலத்தடி நீர் நிலைகளில் 13 நீர்நிலைகள் மரண நிலையில் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் நிலத்தடிநீர் மீண்டும் ஊற்று எடுக்க வாய்ப்பே இல்லாத ஆழத்துக்கு சென்றுவிட்டது.
• மழை மற்றும் பனி உருகுவதன் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் நன்னீரின் அளவைவிட, நாம் பயன்படுத்தும் நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. நாம் இயற்கையின் 'சேமிப்பான' நிலத்தடி நீரையும், பனிப்பாறைகளையும் வேகமாகச் செலவழித்து வருகிறோம்.
• நன்னீர் பயன்பாட்டில் சுமார் 70 சதவீதத்தை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம்.
• உலகளவில் உள்ள 70 சதவீத முக்கியமான நிலத்தடிநீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருகின்றன. இயற்கையாக நிலத்தடி நீர் மீண்டும் ஊற்றெடுக்க எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட நாம் அதனை உறிஞ்சு எடுக்கக் கூடிய வேகம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நிலப்பரப்பு உள்வாங்கும் அபாயம் உள்ளது.
3-ம் உலகப் போர்
• காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு சீரற்றுப் போய் இருக்கிறது. நதிகளின் ஆதாரமான பனிப்பாறைகள் 1970-க்கு பிறகு 30 சதவீதம் உருகிவிட்டன.
• நிலத்தடி நீரை சேமிக்கும் வங்கிகளாக செயல்பட்டு வந்த ஏரிகள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் அழிந்து நீர் சுழற்சி பாதிக்கப்பட்டிருக்கிறது.
• நகரமயமாக்கல் மற்றும் மாசுபாடு காரணமாகவும் தண்ணீர் திவால் நிலைக்கு தள்ளப்படுகிறோம். அதாவது நகரங்களில் நிலப்பரப்பு முழுவதும் கான்கிரீட் பூசப்பட்டு, மழைநீர் பூமிக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. மேலும் 80 சதவீத கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், நீர் நிலைகளில் கலந்து நன்னீரை மாசுப்படுத்துகின்றன.
மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்ற பேச்சுகள் வெறும் யூகமாக சொல்லக்கூடிய வார்த்தையோ, கற்பனைக் கதையோ அல்ல. அது நிதர்சனமான உண்மை என்பதை ஐ.நா.வின் 'தண்ணீர் திவால்' அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இது பல கோடி மக்களின் தாகத்தை மட்டுமல்ல, உலகளாவிய உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் நிலை
ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கையில், இந்தியா உலகளாவிய தண்ணீர் திவால் நிலையின் மையப்புள்ளியாக இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், தெற்கு ஆசியாவிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பகுதிகளில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சென்னை நகரம் உலகளவில் தண்ணீர் திவால் நிலையை நோக்கி வேகமாக நகரக்கூடிய 25 நகரங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னை 2019-ல் சந்தித்தது போன்ற தண்ணீர் இல்லாத நிலை (டே ஜீரோ) மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் பேராபத்து நமக்குதான்.
தீர்வுகள் என்ன?
ஐக்கிய நாடுகள் சபை தண்ணீர் திவால் நிலை குறித்து எச்சரிக்கை கொடுத்து இருந்தாலும், அதற்கான அதிரடி தீர்வுகள் என்ன? என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. தண்ணீர் நெருக்கடி மேலாண்மையை இனி செய்ய முடியாது. மாறாக திவால் நிலையை மேலாண்மை செய்ய தொடங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
• தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை உற்பத்தி செய்வதை குறைக்க வேண்டும்.
•விவசாயத்தில் சொட்டு நீர் பாசனத்தை கட்டாயமாக்க வேண்டும்.
•நகரங்களில் கழிவுநீர் மறுசுழற்சியை ஒரு போர்க்கால நடவடிக்கையாக முன்னெடுக்கவேண்டும்.
•எஞ்சியிருக்கும் நிலத்தடி நீரை சேமிக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.
•பொருளாதார திட்டமிடல்களில் தண்ணீரை முதன்மை காரணியாக மாற்றவேண்டும். நதிநீர் பகிர்வு தொடர்பான சர்வதேச சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்வுகளையும் வழங்கியுள்ளது.
- எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு
- 7 நாடுகள் எதிர்ப்பும் 43 நாடுகள் புறக்கணிப்பும் செய்தது.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு நாடுகளுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. அப்போது ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேம், சிரியாவிலிருந்து கோலன் ஹைட்ஸ் மற்றும் எகிப்திடமிருந்து காசா பகுதி மற்றும் சினாய் தீபகற்பம் உள்ளிட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் கைப்பற்றியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தில் , "சிரியாவின் கோலன் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து இருப்பதை சட்டவிரோதம் என்றும், அப்பகுதியை விட்டு அந்நாடு வெளியேற வேண்டும்" என்று எகிப்து கோரியிருந்தது.
எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் 7 நாடுகள் எதிர்ப்பும் 43 நாடுகள் புறக்கணிப்பும் செய்தது. இதன் முடிவில் இந்த தீர்மானம் ஐநா சபையில் நிறைவேறியது.
இதனையடுத்து தங்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு சிரியா நன்றி தெரிவித்தது.
- சிந்து நதிநீர் ஒப்பந்தம் 1960-ம் ஆண்டு நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் செய்யப்பட்டது.
- ஐ. நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் எழுப்பி இருந்தது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் இவ்விவகாரத்தை அடிக்கடி ஐ.நா.சபையில் பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கிறது.
இந்த நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து விவகாரத்தை ஜெனீவாவில் உள்ள ஐ. நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் எழுப்பி இருந்தது.
இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து இருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்திய தூதர் அனுபமா சிங் பேசியதாவது:-
மனித உரிமைகள் கவுன்சிலின் நடவடிக்கைகளை அரசியலாக்க ஒரு குறிப்பிட்ட நாடு தொடர்ச்சியாகவும் வேண்டுமென்றே முயற்சிப்பதில் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
இதுபோன்ற நடவடிக்கைகள் இந்த கவுன்சிலின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதாகவும் உள்ளது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் 1960-ம் ஆண்டு நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் முக்கிய கொள்கைகளை வேண்டுமென்றே மீறுகிறது. பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் கூடிய எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாகவே சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
நீடித்த ஒத்துழைப்பு என்பதுபயங்கரவாதத்தில் இல்லை. அது நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. எனவே இந்த கவுன்சில் தன்னை திசைதிருப்பல் மற்றும் திரிபுபடுத்தலுக்கான தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. சிந்து நதி நீர் ஒப்பந்த பிரச்சினையை எழுப்புவதன் மூலம் இந்த மன்றத்தை பாகிஸ்தான் அரசியலாக்க முயற்சிக்கிறது. ஐ.நா.சபையை தவறாக பயன்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாட்டின் 68% மக்கள் (15-64 வயது) உழைக்கும் வயதில் உள்ளனர்.
- ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகளும், பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகளும் இருக்கும்.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 1.46 பில்லியனாக (146 கோடியாக) அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மக்கள்தொகை அறிக்கை (UNFPA's 2025 State of World Population Report) தெரிவித்துள்ளது.
UNFPA அறிக்கையின்படி, 2025 இல் 1.46 பில்லியன் மக்கள்தொகையுடன் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும். இது சுமார் 40 ஆண்டுகளில் 1.7 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) தற்போது ஒரு பெண்ணுக்கு 1.9 பிறப்புகளாகக் குறைந்துள்ளது, இது மக்கள்தொகையைப் பராமரிக்கத் தேவையான 2.1 என்ற மாற்றீட்டு விகிதத்திற்கும் (Replacement Rate) கீழே உள்ளது.
இந்தியாவின் 24% மக்கள் 0-14 வயதுக்குட்பட்டவர்கள், 17% பேர் 10-19 வயதுக்குட்பட்டவர்கள், 26% பேர் 10-24 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
நாட்டின் 68% மக்கள் (15-64 வயது) உழைக்கும் வயதில் உள்ளனர். 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை தற்போது 7% ஆக உள்ளது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகளும், பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகளும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
1960 இல் ஒரு பெண்ணுக்கு கிட்டத்தட்ட 6 குழந்தைகள் இருந்த நிலையில், இன்று சராசரியாக 2 குழந்தைகள் என்ற நிலைக்கு குறைந்துள்ளதற்கு கல்வி மற்றும் இனப்பெருக்க சுகாதார அணுகல் மேம்பட்டதே காரணம் என UNFPA தெரிவித்துள்ளது.
இனப்பெருக்க நோக்கங்களை பூர்த்தி செய்ய இயலாமையே உண்மையான கருவுறுதல் நெருக்கடி என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பாலினம், கருத்தடை மற்றும் குடும்பம் தொடங்குவது பற்றிய சுதந்திரமான மற்றும் தகவலறிந்த இனப்பெருக்க தேர்வுக்கான மக்களின் திறனை மேம்படுத்துவதே இதற்கு மாற்று வழி என்று அறிக்கை கூறுகிறது. அனைவருக்கும்
UNFPA இந்தியா பிரதிநிதி ஆண்ட்ரியா எம் வோஜ்னார் கூறுகையில், கருவுறுதல் விகிதங்களை குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தாலும், மாநிலங்கள், சாதிகள் மற்றும் வருமானக் குழுக்கள் இடையே ஆழமான சமத்துவமின்மை நீடிப்பதாக தெரிவித்தார்.
- பயங்கரவாத அமைப்புகள் மீது தடைகளை விதிக்கும் UNSCR 1267 என்ற குழுவிடம் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
- UNSCR 1267 என்ற குழு அடுத்த வாரம் கூட உள்ளதால், இந்தியா தனது குழுவை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவிடம் பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்து இந்தியா முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பாகிஸ்தானின் பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆதாரத்தை அளித்து முறையிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகள் மீது தடைகளை விதிக்கும் UNSCR 1267 என்ற குழுவிடம் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
UNSCR 1267 என்ற குழு அடுத்த வாரம் கூட உள்ளதால், இந்தியா தனது குழுவை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கும் UNSCR 1267 குழு தீர்மானம், 1999ல் ஏற்கப்பட்டது.
- பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கோரிக்கை விடுத்தார்
இது தொடர்பாக பேசிய ஐநா சபை பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர், "எல்லை கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐநா சபை பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் அதிகபட்ச இராணுவ நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கிறார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது" என்று தெரிவித்ததாக கூறினார்.
- கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
- தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது.
நியூயார்க்:
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் போர் காரணமாக தடைப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் கருங்கடல் தானிய ஒப்பந்தம் செய்தது. அதன்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்ய ரஷியா சம்மதித்தது.
இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
இந்நிலையில், தானிய ஒப்பந்ததில் இருந்து ரஷியா விலகியதால் தானியங்களின் விலை உயர்வு, கோடிக்கணக்கான மக்களுக்கு பசி மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வின் அவசர கால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறும்போது, "தற்போது 69 நாடுகளில் சுமார் 36 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. பசி-பட்டினியால் வாடுவார்கள். இதன் காரணமாக பலர் இறக்கக் கூடும் என்றார்.
போதுமான உக்ரேனிய தானியங்கள் ஏழை நாடுகளை சென்றடையவில்லை என்று ரஷியா புகார் தெரிவித்து, ஒப்பந்தத்தில் இருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்கு செல்லும் எந்த கப்பலையும் ராணுவ பொருட்கள் ஏற்றி செல்லும் கப்பலாக கருதப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.
- ஐ.நா. சபையால் 1957ல் உருவாக்கப்பட்டது சர்வதேச அணுசக்தி அமைப்பு
- 202.8 கிலோகிராம் மட்டுமே அதிகபட்சமாக வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டது
அணு சக்தியை அமைதி நடவடிக்கைகளுக்கு மட்டுமே உலக நாடுகள் பயன்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் 1957ல் உருவாக்கப்பட்டது சர்வதேச அணுசக்தி அமைப்பு.
மேற்காசிய நாடான ஈரான், அணு சக்தியை அமைதி வழிக்கே பயன்படுத்துவதாக தெரிவித்து வந்தது. ஆனால், சர்வதேச அணு சக்தி அமைப்பு இதனை ஏற்க மறுத்தது. தேவைப்பபட்டால் உடனடியாக அணு ஆயுதங்களை உருவாக்கி கொள்ளும் வகையில் போதுமான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் சேமித்து வைத்துள்ளதாக இந்த அமைப்பு கூறி வந்தது.
2015-இல் உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அதிகபட்சமாக 202.8 கிலோகிராம் அளவு யுரேனியம் மட்டுமே அந்நாடு சேகரித்து வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது. உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறும் விதமாக சில வருடங்களாக அந்நாடு செயல்பட்டு வந்தது.
இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதட்டம் நிலவி வந்தது. சமீபத்தில் இதை தணிக்கும் விதமாக இரு நாடுகளும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதன்படி, இரு நாட்டின் சிறைகளிலும் உள்ள தங்கள் நாட்டு கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும், தென் கொரிய வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்ட ஈரானுக்கு சொந்தமான பல நூறு கோடிகளை விடுவிக்கவும் அமெரிக்கா ஒப்பு கொண்டால், ஈரான் தனது அணு ஆயுத முயற்சிகளை மட்டுப்படுத்தி கொள்வதாக கூறி இருந்தது.
இந்நிலையில், ஈரானின் அணு சக்தி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் சர்வதேச அணு சக்தி அமைப்பு ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த பிப்ரவரியில் 87.5 கிலோகிராம் எனும் அளவிலும், பிறகு மே மாதம் 114 கிலோகிராம் எனும் அளவிலும் இருந்த 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனிய சேகரிப்பு, தற்போது 121.6 கிலோகிராம் எனும் அளவிலேயே உள்ளது. ஆக யுரேனிய சேகரிப்பை ஈரான் குறைத்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஒரு அணு ஆயுதத்தை பரிசோதனை செய்ய தேவைப்படும் எந்தவிதமான அணு ஆயுத நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடவில்லை என அமெரிக்க உளவு அமைப்புகள் கடந்த மார்ச் மாதம் கூறி வந்தன.
ஆயுத மட்ட அளவிலான யுரேனியம் என்பது 90 சதவீதம் செறிவூட்டப்பட்டதாகும். 60 சதவீதம் செறிவுட்டப்பட்ட யுரேனியம், இதிலிருந்து சற்றே குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
- கத்தார் நாடு சர்வதேச ஜனநாயக தினத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டியது.
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஜனநாயகம் என்பது "democracy" என்ற கிரேக்க வார்த்தையின் தமிழாக்கம் ஆகும். கிரேக்க மொழியில் டெமோஸ் மற்றும் கிராடோஸ் என்ற இரு வார்த்தைகளை சேர்த்தது ஆகும். இந்த இரு வார்த்தைகளுக்கு குடிமகன் மற்றும் சக்தி என்று பொருள்படும். மனித உரிமைகளுக்கான மரியாதை அளித்தல், அடிப்படை சுதந்திரம் வழங்குவது மற்றும் சரியான கால இடைவெளியில் தேர்தல்களை நடத்துவது உள்ளிட்டவை ஜனநாயகத்தின் அடிப்படை கூறு என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
எந்த ஒரு நாட்டில் மக்கள் தங்களுக்கான தலைவர்களை வாக்களித்து தேர்வு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறதோ, அதனை ஜனநாயக நாடு என்று அழைக்கிறோம். மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என்ற கருத்தை மக்களாட்சி என ஆபிரகாம் லிங்கன் தெரிவித்து இருக்கிறார். 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் சர்வதேச ஜனநாயக தினம் உலகம் முழுக்க கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தீர்மானம் 2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2008-ம் ஆண்டுல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தேசிய பாராளுமன்றங்கள் ஒருங்கிணைந்த சர்வதேச அமைப்பு தான் பாராளுமன்ற யூனியன். இந்த அமைப்பு தான் முதன் முதலாக 1997 செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் கத்தார் நாடு சர்வதேச ஜனநாயக தினத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வந்தது.
இதன் பலனாகவே 2007, நவம்பர் 8-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற யூனியன் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினமாக கொண்டாட வேண்டும் என்ற பரிந்துரை வழங்கி இருந்தது. இதன் காரணமாக 2008-ம் ஆண்டு முதல்-முறையாக இது தொடர்பான முதல் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.
அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அமைப்புகளும் சர்வதேச ஜனநாயக தினத்தை பிரத்யேக "கரு" ஒன்றை அறிவித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஜனநாயக உரிமைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தவும், ஜனநாயக உரிமையின் அவசியம் பற்றியும் பல்வேறு அமைப்புகளும் உலகம் முழுக்க நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
- காசாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
- இரு தரப்பினரும் போரை கைவிட வேண்டும் என்றார் டெட்ரோஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 40 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீன காசாவின் பெரும் பகுதி இஸ்ரேல் வசம் வந்து விட்டது. பாலஸ்தீன பொதுமக்களுக்கு மருந்து, உணவு, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலர் குண்டு வீச்சில் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.
இந்நிலையில், காசாவில் நிலவும் சூழ்நிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் ஒன்றை உறுதியாக கூற விரும்புகிறேன். ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையும், அதில் 1200 பேர் இறந்ததையும், 200 பேருக்கு மேற்பட்டவர்களை பணய கைதிகளாக கொண்டு சென்றதையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
ஆனால், இஸ்ரேலின் பதில் தாக்குதலினால் பல லட்சம் பொதுமக்கள் காசாவில் இருந்து குடிபெயர்ந்துள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலைக்கு வந்து விட்டன. சுத்தமான குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட தேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. குடும்பங்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளுக்கு கீழேயே புதைக்கப்படுகின்றன. இஸ்ரேலின் இந்த செயலையும் நியாயப்படுத்த முடியாது.
இனி வெறும் பேச்சு வார்த்தைகளோ, தீர்மானங்கள் போடுவதோ போதாது. காசா மக்களுக்கு எந்த தடையும் இல்லாமல் மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேலும் பொதுமக்களுக்கு உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் இரு தரப்புமே தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.
ஐ.நா. அமைப்பு உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த போர் ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு பெரும் சவாலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 5 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஐ.நா பொதுச்சபை தலைவர்
- மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், 5 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இன்று முதல் ஜன.26 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்ட ஐ.நா தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், "இந்தியா இரண்டாவது தீபாவளியை கொண்டாடும் இந்த நன்நாளில் டெல்லி-க்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இனிவரும் நாட்களில் அமைதி, முன்னேற்றம், செழிப்பு மற்றும் நிலைத்தன்மை பற்றிய பயனுள்ள விவாதங்களை எதிர்பார்க்கிறோம்" என பதிவிட்டிருந்தார்.
5 நாள் பயணமாக இந்தியா வந்த ஐ.நா தலைவர், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு மும்பை செல்கிறார். அங்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். மேலும் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, பலதரப்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.
ஐ.நா–இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக, பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸின் சுற்றுப்பயணம் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜன.26 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
- இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஐ.நா. தலைவர், இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார்.
- ஜன.26 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 வது கூட்டத்தொடரின் தலைவராக பதவி வகிப்பவர் டென்னிஸ் பிரான்சிஸ். இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இவர், டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இன்று சந்தித்தார்.
ஐ.நா பொதுச்சபையின் தலைவரை இந்தியாவிற்கு வரவேற்ற முர்மு, காலநிலை மாற்றம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஐ.நா–இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக, பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸின் சுற்றுப்பயணம் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜன.26 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.






