search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nuclear weapons"

    • ஐ.நா. சபையால் 1957ல் உருவாக்கப்பட்டது சர்வதேச அணுசக்தி அமைப்பு
    • 202.8 கிலோகிராம் மட்டுமே அதிகபட்சமாக வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டது

    அணு சக்தியை அமைதி நடவடிக்கைகளுக்கு மட்டுமே உலக நாடுகள் பயன்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் 1957ல் உருவாக்கப்பட்டது சர்வதேச அணுசக்தி அமைப்பு.

    மேற்காசிய நாடான ஈரான், அணு சக்தியை அமைதி வழிக்கே பயன்படுத்துவதாக தெரிவித்து வந்தது. ஆனால், சர்வதேச அணு சக்தி அமைப்பு இதனை ஏற்க மறுத்தது. தேவைப்பபட்டால் உடனடியாக அணு ஆயுதங்களை உருவாக்கி கொள்ளும் வகையில் போதுமான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் சேமித்து வைத்துள்ளதாக இந்த அமைப்பு கூறி வந்தது.

    2015-இல் உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அதிகபட்சமாக 202.8 கிலோகிராம் அளவு யுரேனியம் மட்டுமே அந்நாடு சேகரித்து வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது. உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறும் விதமாக சில வருடங்களாக அந்நாடு செயல்பட்டு வந்தது.

    இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதட்டம் நிலவி வந்தது. சமீபத்தில் இதை தணிக்கும் விதமாக இரு நாடுகளும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதன்படி, இரு நாட்டின் சிறைகளிலும் உள்ள தங்கள் நாட்டு கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும், தென் கொரிய வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்ட ஈரானுக்கு சொந்தமான பல நூறு கோடிகளை விடுவிக்கவும் அமெரிக்கா ஒப்பு கொண்டால், ஈரான் தனது அணு ஆயுத முயற்சிகளை மட்டுப்படுத்தி கொள்வதாக கூறி இருந்தது.

    இந்நிலையில், ஈரானின் அணு சக்தி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் சர்வதேச அணு சக்தி அமைப்பு ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, கடந்த பிப்ரவரியில் 87.5 கிலோகிராம் எனும் அளவிலும், பிறகு மே மாதம் 114 கிலோகிராம் எனும் அளவிலும் இருந்த 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனிய சேகரிப்பு, தற்போது 121.6 கிலோகிராம் எனும் அளவிலேயே உள்ளது. ஆக யுரேனிய சேகரிப்பை ஈரான் குறைத்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

    ஒரு அணு ஆயுதத்தை பரிசோதனை செய்ய தேவைப்படும் எந்தவிதமான அணு ஆயுத நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடவில்லை என அமெரிக்க உளவு அமைப்புகள் கடந்த மார்ச் மாதம் கூறி வந்தன.

    ஆயுத மட்ட அளவிலான யுரேனியம் என்பது 90 சதவீதம் செறிவூட்டப்பட்டதாகும். 60 சதவீதம் செறிவுட்டப்பட்ட யுரேனியம், இதிலிருந்து சற்றே குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

    தைவான் விஷயத்தில் சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    வாஷிங்டன்:

    சீனாவின் ராணுவ பலம் மற்றும் அந்த நாட்டின் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டசன ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை பென்டகன் நேற்று வெளியிட்டது.

    அதில்,  ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்க அதிகாரிகள் கணித்ததை விட சீனா தனது அணுசக்தியை மிக வேகமாக அதிகரித்து வருகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    ‘எதிர்பார்த்ததைவிட சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களைப் பெருக்கி வருகிறது. சீனா கடந்த ஆண்டு 200 அணு ஆயுதங்களை வைத்திருந்ததாக மதிப்பிடப்பட்டது. ஆனால் தொடர்ந்து அணு ஆயுதங்களை பெருக்கி வருவதால்,  அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளுக்குள் 700 ஆக அதிகரிக்கலாம். 2030க்குள் 1,000 ஆக உயரலாம்’ என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

    தைவான் விஷயத்தில் சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தைவானை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சீனாவின் நோக்கங்கள் பற்றிய புதிய எச்சரிக்கைகள் மற்றும் அணுசக்தி திறன் கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சோதனை என தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அமெரிக்கா இந்த புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானியுடன் எவ்வித முன்நிபந்தனைகளும் இல்லாமல் அமைதி பேச்சுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #TrumpmeetRouhani #TrumpRouhani
    வாஷிங்டன்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    சமீபத்தில் ஈரான் நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஹஸன் ரவுகானி, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் அந்நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுக்காக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானியுடன் எவ்வித முன்நிபந்தனைகளும் இல்லாமல் அமைதி பேச்சுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா வந்துள்ள இத்தாலி பிரதமர் கியுசெப்பு கோன்ட்டே-வை வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர் அவருடன் டொனால்ட் டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    ஈரான் அதிபர் ரவுகானியை சந்திக்கும் எண்ணம் உள்ளதா? என்னும் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் சந்திப்புகளில் நம்பிக்கை கொண்டவன். ஈரான் அதிபர் என்னை சந்திக்க விரும்பினால் நான் நிச்சயமாக சந்திப்பேன்.

    இதற்கு ஈரான் தயாரா? என்பது எனக்கு தெரியவில்லை. அணு ஒப்பந்தத்தில் இருந்து நான் விலகியதும் அவர்கள் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளனர். எனவே, அவர்கள் சந்திப்புக்கு முன்வருவார்கள் என நான் நம்புகிறேன். அவர்கள் எப்போது விரும்பினாலும் நான் சந்தித்துப் பேச தயாராகவே இருக்கிறேன்.

    எனது பலத்தை வைத்தோ, பலவீனத்தாலோ நான் இந்த முடிவுக்கு வரவில்லை. பேச்சுவார்த்தைதான் சரியானது என்பதால் நாம் இணைந்து பணியாற்றினால் நல்லது என்பதால் நாட்டின் நலன் கருதி எவ்வித முன்நிபந்தனைகளும் இன்றி அவர்கள் விரும்பும் நேரத்தில் ஈரானுடன் பேச நான் தயாராக இருக்கிறேன்.

    முறைகேடான நடவடிக்கைகளை கைவிடுமாறு ஈரானுக்கு அழுத்தம் தந்துவரும் அனைத்து நாடுகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த முயற்சியில் அமெரிக்காவுடன் துணையாக இருக்கும் இத்தாலியை நாங்கள் வரவேற்கிறோம். #TrumpmeetRouhani  #TrumpRouhani
    அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு நிர்பந்திக்க வந்திருந்த அமெரிக்க மந்திரியின் அணுகுமுறை வருத்தமளிப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. #PompeoinNKorea #USKoreahighleveltalks '#extremelyregrettable
    சியோல்:

    டொனால்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி நேற்று பியாங்யாங் வந்திருந்தார்.

    சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது.

    வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையில், டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்தது.

    வடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

    இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்ப்பியோ நேற்று பியாங்யாங் வந்தார்.

    வடகொரியா அதிபரின் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ ஆகியோர் அவரை வரவேற்றனர்.

    முன்னதாக, அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட மைக் பாம்ப்பியோ, வரும் வழியில் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    வடகொரியாவில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழித்துவிட வேண்டும் என சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர். உலகத்துக்கு அவர்கள் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடகொரியா அதிபரை இந்த பயணத்தின்போது நான் வலியுறுத்துவேன்.

    இதற்கு வடகொரியாவும் தயாராக இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதிகமாக சந்திப்பதன் மூலம் நட்புறவும், நம்பிக்கையும் பலப்படும் என்பதால் வடகொரியா தரப்பில் இருந்து உரிய எதிர்வினையை எதிர்பார்க்கிறேன் என பேட்டியின்போது மைக் பாம்ப்பியோ குறிப்பிட்டிருந்தார்.

    பியாங்யாங் நகரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்-னின் வலதுகரமாக விளங்கிவரும் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் அந்நாடின் உயரதிகாரிகளுடன் நேற்றும் இன்றும் பேச்சுவார்த்தை நடத்திய மைக் பாம்ப்பியோ, அங்கிருந்து இன்று ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.



    அவர் புறப்பட்டு சென்ற பின்னர் வடகொரியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இன்று மாலை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ’இருநாட்களாக நடைபெற்ற இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் சார்பில் முன்வைக்கப்பட்ட நிர்பந்தங்களும், நிபந்தனைகளும், கடைபிடித்த பாணியும் மிகவும் வருத்தம் அளிக்கும் மனப்போக்குடன் அமைந்திருந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'கொரியா தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பகுதியாக மாற்ற வேண்டுமானால் அதற்கான திட்டமிட்ட அணுகுமுறைகளை இருதரப்பினரும் ஒரே நேரத்தில் கையாள்வதுதான் வேகமான வழியாக அமையும்’ என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். #PompeoinNKorea  #USKoreahighleveltalks '#extremelyregrettable 
    இந்தியாவை விட பாகிஸ்தானிடம் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் இருப்பதாக சர்வதேச அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    ஸ்டாக்கோல்ம்:

    ஸ்டாக்கோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு மைய நிறுவனம் உலக நாடுகளில் உள்ள அணுஆயுதங்கள் குறித்த பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்தியாவை விட பாகிஸ்தானிடம் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளது என தெரிவித்துள்ளது.

    அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து தங்கள் அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றன. தரைவழி, கடல்வழி மற்றும் விண்வெளியில் தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் வைத்துள்ளன.

    பாகிஸ்தானில் இந்த ஆண்டு 140 முதல் 150 அணு ஆயுதங்கள் உள்ளன. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில் இந்தியாவில் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட பாகிஸ்தானில் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    2018-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியாவில் மொத்தம் 14,465 அணு ஆயுதங்கள் இருந்தன. 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் 14,935 ஏவுகணைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    2010-ம் ஆண்டில் அமெரிக்கா, ரஷியாவில் அணு ஆயுத குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனால் தான் அணு ஆயுதம் உற்பத்தி குறைந்தது என்றும் ஸ்டாக்கோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
    அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டு விட்டதை உறுதிசெய்த பின்னர் தான் வட கொரியா மீதான பொருளாதார தடையை நீக்குவது குறித்து முடிவு செய்ய முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார். #Denuclearisation #NKorea #US
    வாஷிங்டன்:

    வடகொரியாவும், தென்கொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக இருந்து வந்தன. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்தது.

    இதனால் அமெரிக்காவையும் வடகொரியா பகை நாடாக கருதியது. அணு ஆயுதங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை உருவாக்கிய வடகொரியா அமெரிக்கா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டியது.

    வடகொரியா மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் மத்தியில் சமரசம் ஏற்படுத்த சீனா முயற்சித்தது. தென்கொரியாவும் இறங்கி வந்து அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    இதற்கு வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அமெரிக்கா-வடகொரியா அதிபர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருநாட்டு அதிபர்களும் சந்தித்து பேசினார்கள். அப்போது டிரம்ப்-கிம்ஜாங்உன் இடையே சமரச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    அதில், வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம்ஜாங்உன் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.

    ஏற்கனவே வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து இருந்தது.

    இருநாடுகளுக்கும் இடையே சமரச ஒப்பந்தம் இப்போது ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த பொருளாதார தடைகள் உடனடியாக நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் வடகொரியா அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் வரை பொருளாதார தடை நீடிக்கும் என்று அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

    தென்கொரியா தலைநகரம் சியோலில் அவர் தென்கொரியா வெளியுறவு மந்திரி, ஜப்பான் வெளியுறவு மந்திரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை முடிவுக்கு பிறகு நிருபர்களிடம் கூறிய மைக்பாம்பியோ இந்த கருத்தை தெரிவித்தார்.

    ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதங்களை முற்றிலும் வடகொரியா அழிக்க வேண்டும். அவை அழிக்கப்பட்டு விட்டதை உறுதிசெய்த பின்னர் தான் நாங்கள் எங்களது பொருளாதார தடையை நீக்குவது குறித்து முடிவு செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

    சமரசம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்கா திடீரென இப்படி கூறியிருப்பது சமரச உடன்பாட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Denuclearisation #NKorea #US
    அமெரிக்காவும் வடகொரியாவும் இணைந்து புதிய வரலாறு படைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #singaporesummit #Trumpkimsummit #Trumpspeech
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று கையொப்பமிட்டனர்.

    பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், இன்றைய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதுபோல், அதில் உள்ள அம்சங்களின்படி கிம் ஜாங் அன் வாழ்ந்து காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

    பின்னர் டிரம்ப் பேசியதாவது:-

    இன்றைய நாள் உலக வரலாற்றில் மிக முக்கியமான உயர்வான நாளாகும். புதிய வரலாறு படைக்கவும், புதிய அத்தியாயத்தை எழுதவும் நாங்கள் தயாராகி விட்டோம். எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதை கடந்தகாலம் வரையறுக்க முடியாது. யார் வேண்டுமானாலும் போரை ஏற்படுத்தலாம். ஆனால், விவேகமானவர்களால் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும்.

    போரின் பயங்கரங்களை அமைதிக்கான வரங்களால் நாம் மாற்றி அமைக்க முடியும். அணு ஆயுதங்களை ஒழிக்கும் வடகொரியாவின் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கும். இன்றைய ஒப்பந்தத்துக்கு பின்னர் வடகொரியாவுடன் உறவுகளை ஏற்படுத்தி கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டும்.



    தனது நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த பாடுபடும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மிகவும் திறமைசாலி. எங்கள் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேர்மையாகவும், நேரடியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது.

    முந்தைய அமெரிக்க அதிபர்கள் மூலம் இந்த ஒப்பந்தம் உருவாகி இருக்க முடியாது என நம்பியதாக கிம் ஜாங் அன் என்னிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு வடகொரியா மக்களுக்கு மட்டுமின்றி, அமெரிக்க மக்களுக்கும் நன்மையாக அமையும் என எண்ணுகிறேன்.

    அணு ஏவுகணைகள் ஒரு பொருட்டல்ல என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படும்போது, முன்னர் (வடகொரியா மீது) விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் நீக்கப்படும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன். அணு ஆயுதங்களை கைவிடுவதால் வடகொரியா பெறும் நன்மைகள் ஏராளம். உரிய நேரம் வரும்போது அமெரிக்காவுக்கு வருமாறு கிம் ஜாங் அன்-ஐ அழைக்கப் போவதாக நான் தெரிவித்தேன். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.

    கிம் ஜாங் அன் வடகொரியாவுக்கு போய் சேர்ந்ததும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள பணிகளை தொடங்குவார் என நான் நினைக்கிறேன். கொரிய தீபகற்பத்தில் இனி அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #singaporesummit #Trumpkimsummit #Trumpspeech
    வடகொரியா நாடு அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வந்தால் அந்த நாட்டுக்கு தேவையான நிதியுதவி செய்ய்ப்படும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் தெரிவித்துள்ளார். #MikePompeo #NorthKorea #NuclearWeapons
    வாஷிங்டன்:

    தொடர் ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத பரிசோதனை என சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது தனது சேட்டைகளை மூட்டை கட்டி வைத்து மற்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறார்.

    கடந்த மாதம் தென்கொரியா அதிபர் மூன் ஜேஇன் உடன் கிம் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



    இதற்கிடையே, ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடக்கவுள்ளது

    இந்நிலையில், வடகொரியா அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வந்தால் அந்த நாட்டுக்கு தேவையான நிதியுதவி செய்ய்ப்படும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்ப்யோ தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மைக் பாம்ப்யோ கூறுகையில், வடகொரியா தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வரவேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் அந்த நாட்டுக்கு தேவையான பொருளாதார உதவிகளை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார். #MikePompeo #NorthKorea #NuclearWeapons
    ×