search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்"

    டி.டி.வி. தினகரனை நம்பி சென்ற 18 பேரும் தெருவில் நிற்கிறார்கள் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். #ADMK #MRVijayabaskar #ThambiDurai
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் வேலாயுதம்பாளையத்தில் அ.தி.மு.க. 47 ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர். காளியப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக ஆட்சியை ஊழல் ஆட்சி என ஸ்டாலின் கூறுகிறார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது தி.மு.க. என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த முறைகேட்டில் கருணாநிதி முதல்வராக இருக்கும்போதே அவரது மகள் கனிமொழியும் ராசாவும் திகார் ஜெயிலில் இருந்தார்கள்.

    இன்றைக்கு டி.டி.வி. தினகரனை நம்பி சென்ற 18 பேரும் (தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்) தெருவில் நிற்கிறார்கள். செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது ஜெயலலிதாவிடம் பொய் கூறி 35 ஆயிரம் ஊழியர்களை போக்குவரத்து கழகத்தில் நியமித்தார். இப்போது அவர்கள் நீதிமன்றத்துக்கு அலைகிறார்கள். இன்றைய போக்குவரத்து கழக நிலைமைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் காரணம். இன்னும் இரண்டரை ஆண்டு காலம் அ.தி.மு.க. அரசை யாராலும் அசைக்க முடியாது. அதன் பிறகும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது:- இந்தியா முழுவதும் 4 வழிச்சாலையைக் கொண்டு வந்தது வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த நான்தான். அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒவ்வொரு தொண்டனும் எம்.எல்.ஏ., எம்.பி.தான். மக்கள் பிரச்சனைகளை மக்களவையில் பேசுவதற்குதான் எம்.பி., உள்ளாட்சி தேர்தல் நடத்தவிடாமல் வழக்கு தொடர்ந்தது தி.மு.க.. திராவிட இயக்கம் உருவானது சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவே. ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற ராஜபட்சேவுக்கு மரியாதை செய்தது தி.மு.க.வும் காங்கிரசும்தான். எந்த தேர்தல் வந்தாலும் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், பேரூர் செயலாளர்கள் வக்கீல் சதாசிவம், சரவணன் மற்றும் பலர் உள்ளனர். #ADMK #MRVijayabaskar #ThambiDurai
    அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகத்தயார் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார். #ADMK #MRVijayabaskar #SenthilBalaji
    கரூர்:

    கரூர் க.பரமத்தியில் அ.தி.மு.க. ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்று பேசியதாவது:-

    1½கோடி பேரை உறுப்பினர்களாக கொண்ட அ.தி.மு.க. பல சோதனைகளை தாண்டி வந்துள்ளது. இந்த ஆட்சி எப்போது எத்தனை நாள் நீடிக்கும் என ஏங்கியவர்கள் நிலைமை இன்று தலைகீழாக மாறிவிட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் கொடுத்த 85 வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து ஒரு உண்ணாவிரத போராட்டத்தை செந்தில்பாலாஜி நடத்தியுள்ளார்.

    கடந்த 4½ ஆண்டுகள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதிக்கு என்ன செய்தார்? மாறாக இதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க செய்தது யார்?. கட்சியை அழிக்க நினைத்தவர்களுக்கு ஜெயலலிதா ஆன்மா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.



    அவர் பொறுப்பில் இருக்கும் போது அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல் தற்போது அரசியல் செய்வதற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். கடந்த 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 249 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வெளியிடப்பட்ட புத்தக வடிவிலான ஓட்டு சீட்டில் இரட்டை இலையினை தேடிப்பிடித்து மக்கள் ஓட்டு போட்டதால் அ.தி.மு.க. வேட்பாளர் மரியம் உல் ஆசியா வென்றார்.

    அப்படிப்பட்ட இந்த தொகுதியில் மீண்டும் செந்தில்பாலாஜி நின்று வெற்றிபெற்றால் நான் அரசியலை விட்டே விலகத் தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஜெயலலிதா ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்த துரோகிகளுக்கு சரியான பாடம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #ADMK #MRVijayaBaskar
    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதியரசர் வழங்கிய தீர்ப்பு அ.தி.மு.க. ஆட்சிக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. ஜெயலலிதா தனது உயிரை கொடுத்து உருவாக்கி தந்த இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்த துரோகிகளுக்கு இது சரியான பாடம்.

    ஜெயலலிதா வழியில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும். இந்த தீர்ப்பில் எங்களுக்கு பின்னடைவு இல்லை. இது ஒரு அனுபவம் என டி.டி.வி. தினகரன் சொன்னதாக சொல்கிறீர்கள். இதுவா? அனுபவம், அப்படியென்றால் நிறைய அனுபவம் அவருக்கு காத்திருக்கிறது.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தாங்களாகவே தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தால் இதுதொடர்பாக முதல்வர், துணை முதல்வர் முடிவெடுப்பார்கள்.

    நீதிமன்றம் 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று கூறியுள்ளது. மீண்டும் தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதியிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். ஜெயலலிதா சொன்னது போல் இன்னும் 100 ஆண்டுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்.

    கரூரில் ஒரு நபர் (முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி) இரண்டு அமாவாசைக்கு தான் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும் என அவ்வப்போது கூறி வருகிறார். மாதா மாதம் அமாவாசைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இன்னும் பல அமாவாசைகளை அவர் பார்க்க தான் போகிறார். எங்கள் இல்லத்திருமண விழாவில் தனியார் பள்ளி பேருந்துகளும் அரசு பஸ்சும் இயக்கப்பட்டதாக கூறுகின்றனர். அரசு விதியின்படி ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MRVijayaBaskar #18MLAsCaseVerdict
    தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்ச எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ministermrvijayabaskar #omnibus #diwalifestival

    கரூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனின் குற்றசாட்டு குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நலன் கருதி 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய மாநகராட்சி பகுதிகளில் காலதாமதம் இல்லாமல் பஸ்கள் கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    குறிப்பாக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் வகையில் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற் சங்கத்தினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பஸ் நிலையங்களில் இரு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை கால பயணத்தை மக்கள் சிரமமின்றி மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ்களில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிப்பது குறித்த அந்த சங்கத்தினருக்கு தெரிவித்து உள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தாண்டி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பஸ்களில் இதுபோன்ற செயல்கள் நடக்க வாய்ப்பில்லை. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #omnibus #diwalifestival 

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்புபவர்களுக்காக 22 ஆயிரம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNMinister #MRVijayabaskar
    சென்னை:

    ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை கே.கே.நகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் தொழில் துறையில் முன்னணியில் இருப்பதால் இந்திய அளவில் வாகன எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதனால் விபத்துக்களை குறைப்பதற்கு போக்குவரத்து துறை முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

    தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் நடத்த இன்னும் நேரம் உள்ளது. ஏற்கனவே தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி பொது மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம். அது வழக்கமான வேலைதான்.

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்புபவர்களுக்காக 22 ஆயிரம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


    சாலை விபத்தில் வருடத்துக்கு 17 ஆயிரம் பேர் இறப்பதாக புள்ளி விவரம் இருக்கின்றது. சாலை விதிகளை அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும். காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்கும், மின்சார வாகனங்களை கொண்டு வருவதற்காகவும் நான் அமெரிக்கா மற்றும் லண்டனுக்கு சென்றிருந்தேன். அங்கு சாலை விதிகளை ஒவ்வொருவரும் கடைபிடிப்பதை பார்த்தால் நமது நாட்டில் மிக மிக குறைவு.

    அந்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு வர வேண்டும். எனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாடத்திட்டத்தில் அது சேர்க்கப்பட்டுள்ளது.

    சாலைகள் நல்ல சாலைகளாக இருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்துகள் நடக்கின்றன. விபத்துக்களை குறைக்க இனிவரும் காலங்களில் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும்.

    அடுத்த வாரம் 475 புதிய பேருந்துகளை முதல்- அமைச்சர் தொடங்கி வைக்கிறார். 100 மின்சார பஸ்களை வாங்க நாங்கள் லண்டன் சென்றிருந்தோம். அதில் 80 பஸ்களை சென்னையிலும், 20 பஸ்களை கோவையிலும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மின்சார பஸ்கள் சென்னையில் இயக்கப்படும்.

    பஸ் கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்த அரசு தயாராக இல்லை. டீசல் விலை உயர்வு அரசு போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்ட பிறகு சென்னையில் கூடுதலாக 300 பஸ்களை விட்டுள்ளோம்.

    இது மக்களின் பயணத்துக்கு போதுமாக இருக்கும் என்று கருதகிறோம். தேவைப்பட்டால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

    விரைவில் போக்குவரத் துறையையும், மெட்ரோ ரெயில் சேவையையும் இணைத்து கார்டு சிஸ்டம் கொண்டு வர உள்ளோம். அது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள பஸ்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பஸ் எப்போது வரும் என்பதை ‘ஆப்’ மூலம் தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம். போக்குவரத்து துறையில் உள்ள காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #MRVijayabaskar
    சென்னையில் பேட்டரி பேருந்து சேவை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக லண்டனில் உள்ள பேட்டரி பேருந்து பணிமனையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #ChennaiElectricBus #MRVijayabaskar #London
    சென்னை:

    சென்னையில் விரைவில் பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துகள் (மின்சார பேருந்து) இயக்கப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக 100 பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    பேட்டரி பேருந்து சேவைகள் தொடர்பாக, லண்டனில் பேட்டரி பேருந்துகளை இயக்கும் சி-40 நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். அப்போது சென்னையில் எந்தெந்த வழித்தடங்களில் பேட்டரி பேருந்துகளை இயக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், லண்டன் சென்ற போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பேட்டரி பேருந்துகளை இயக்கும் பணிமனைக்கு சென்று பார்வையிட்டார். பேட்டரி பேருந்து போக்குவரத்து எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதுபற்றி அறிந்துகொண்டார். போக்குவரத்து துறையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து சார்ந்த தொழிலதிபர்களையும் சந்தித்து பேசினார். #ChennaiElectricBus #MRVijayabaskar #London
    ஓட்டை உடைசலான பேருந்துகளுக்கு பதிலாக சென்னையில் 500 புதிய பஸ்கள் விரைவில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNBus #MRVijayabaskar
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 40 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு மாநகர பஸ்களில் கூட்டம் குறைந்தது.

    ஓட்டை உடைசலான மிகவும் மோசமான நிலையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் ஏற தயங்குகிறார்கள். பெரும்பாலான பஸ்களில் படிக்கட்டு கதவுகள் இல்லாமலும், இருக்கைகள் உடைந்தும் காணப்படுகின்றன.

    ஒரு பஸ்சின் ஆயுட்காலம் 5 வருடங்கள் மட்டும்தான். ஆனால் பயன்படுத்த தகுதியற்ற பஸ்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி “பிரேக் டவுன்” ஆகி ஆங்காங்கே வழியில் நின்று விடுகின்றன. பஸ்களில் கூட்டம் குறைந்து வருவதால் புதிய பஸ்கள் விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்திற்குள் புதிய பஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டிய டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு முதன்முதலாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசளித்து ஊக்கப்படுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் விரைவில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. முற்றிலும் மாசு ஏற்படாத சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த பஸ் இயக்கப்படுகிறது.


    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 80 மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

    அரசு போக்குவரத்து கழகத்திற்கு இன்னும் ஒரு வாரத்தில் புதிதாக 500 பஸ்கள் வர இருக்கின்றன. சென்னை மாநகரத்திற்கும் புதிய பஸ்கள் விடப்பட உள்ளது.

    8 வருடங்களுக்கு மேலாக ஓடும் பழைய பஸ்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு பதிலாக புதிய பஸ்கள் விடப்படும்.

    செங்கல்பட்டு-திருச்சி நெடுஞ்சாலையில் ரூ.25 கோடியில் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்படுகின்றன. அதிவேகமாக பயணம், சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்கள் என கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கும் முறை வெளிநாடுகளில் உள்ளது போல செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNBus #MRVijayabaskar
    முக்கொம்பு கொள்ளிடத்தில் இன்று இரவுக்குள் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #MukkombuDam #MRVijayabaskar
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் உடைந்ததையடுத்து அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மணல் மூட்டைகள், பாறாங்கற்களை கொண்டு உடைந்த பகுதியில் அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அணையில் 1 முதல் 5-வது மதகுகள் வரை மணல் மூட்டைகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    மணல் மூட்டைகளை தாங்கும் அளவிற்கு பக்கவாட்டில் சவுக்கு கம்புகள் நடப்பட்டுள்ளன. இதேபோல வடகரை பகுதியில் 13-வது மதகில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் மணல் மூட்டைகளை ஆற்றில் ஓடும் தண்ணீருக்குள் அடுக்கி நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு, சவாலாகவும் அமைந்துள்ளது. மேலும் 6 முதல் 13-வது மதகு வரை உடைந்த பகுதியில் ஆற்றில் ஆழம் அதிகமாக இருப்பதால் அங்கு சவுக்கு கம்புகள் நடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    முக்கொம்பில் மதகுகள் உடைந்த பகுதியில் ஆற்றில் சவுக்கு கட்டைகளை ஊன்றி, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும் காட்சி.

    இதையடுத்து அங்கு இரும்பு குழாய்களை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரும்பு குழாய்கள் அணையின் மேற்கு பகுதியில் நிறுவப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் உடைந்த மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரை கட்டுப்படுத்த பாறாங்கற்களை அதிகளவில் கொட்டி, அடைப்புகள் ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அணையின் கிழக்கு பகுதியில் லாரிகள் இறங்கி செல்வதற்கு வசதியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    முக்கொம்பு அணையில் நடை பெற்று வரும் சீரமைப்பு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முக்கொம்பு பாலம் உடைந்த பகுதியில் 24 மணி நேரமும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாக கொள்ளிடத்துக்கு தண்ணீர் செல்லாத வகையில் மணல் திட்டு அமைக்கப்படுகிறது.

    மேலணை உடைந்த இடத்தில் மணல் மூட்டைகள் மற்றும் பெரிய பாறாங்கற்களை கொண்டும் தடுப்பு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென 160 லாரிகள் மூலம் கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பாறாங்கற்கள் கொண்டு வரப்படுகின்றன.

    உடைப்பு ஏற்பட்ட பகுதியில் 15 அடிக்கு மேல் ஆழம் உள்ளது. தண்ணீரின் வேகமும் அதிகமாக உள்ளது. இன்று இரவுக்குள் கொள்ளிடத்தில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என்றார். #MukkombuDam #MRVijayabaskar
    மருத்துவமனைகள்-கல்லூரிகள் முன்பு நின்று செல்லும் வகையில் கரூர்-கோவை இடையே புதிய பஸ்சை கரூரில் இன்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். #TNMinister #MRVijayabaskar
    கரூர்:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் கரூரில் இருந்து கோவைக்கு இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன பஸ் இன்று (திங்கட் கிழமை) முதல் இயக்கப்படுகிறது.

    அந்த பஸ்சினை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை கரூர் பஸ் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். தினமும் காலை 6 மணிக்கு கரூரில் இருந்து கோவைக்கும், பின்னர் கோவையில் இருந்து மாலை 5.30 மணிக்கு கரூருக்கும் இயக்கப்பட உள்ளது.

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தற்போது இயக்கப்படும் பஸ், கரூர்- கோவை இடையே உள்ள ஆஸ்பத்திரிகள், கல்லூரிகள் முன்பு நின்று செல்லும்.

    அதன்படி சூலூர், ராயர்கேர் மருத்துவமனை, கே. எம்.சி.எச்., ஜி.ஆர்.டி. கலைக் கல்லூரி, சி.ஐ.டி. கல்லூரி, ஹோப்ஸ் கல்லூரி, சிங்காநல்லூர் பஸ் நிலையம், கிருஷ்ணம்மாள் கலைக்கல்லூரி, பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரி, குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கே.சி. ஆஸ்பத்திரி, காந்திபுரம் பஸ் நிலையம், அவினாசி லிங்கம் கல்லூரி, கங்கா மருத்துவமனை ஆகிய இடங்களில் இந்த பஸ் நின்று செல்லும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    கரூர்-கோவை புதிய பேருந்தானது தினமும் சென்னையில் இருந்து கரூருக்கும் இயக்கப்படுகிறது. எனவே சென்னையில் இருந்து கரூருக்கு காலை வந்ததும், பின்னர் கோவைக்கு இயக்கப்பட உள்ளது. 45 பயணிகள் செல்லக்கூடிய வகையிலான அந்த பஸ்சில், 30 இருக்கைகள் மற்றும் 15 படுக்கை வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதிய பஸ் தொடக்க விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், உதவி கலெக்டர் சரவண மூர்த்தி, அவைத்தலைவர் காளியப்பன், வை.நெடுஞ்செழியன், போக்குவரத்து கழக அதிகாரிகள் கேசவராஜ், ஜூலியஸ் அற்புதராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  #TNMinister #MRVijayabaskar

    ஊட்டிக்கு புதியதாக 35 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    ஊட்டியில் இருந்து கடந்த 14-ந்தேதி குன்னூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் ஊட்டி அருகே உள்ள மந்தாடா பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஊட்டி வந்தார். ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 35 லட்சம் நிதியுதவியை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். 6 பேருக்கு தலா ரூ.5 லட்சமும் 2 பேருக்கு தலா ரூ.2½ லட்சம் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டிக்கு புதியதாக 35 பஸ்கள் இயக்கப்படும். மேலும் இங்குள்ள 4 டெப்போக்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் உடனடியாக வழங்கப்படும்.

    ஊட்டி நகரில் சொகுசு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, அர்ச்சுணன் எம்.பி., குன்னூர் எம்.எல்.ஏ., சாந்திராமு ஆகியோர் கலந்து கொண்டனர். #TNMinister #MRVijayabaskar
    தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய குளு,குளு ஏ.சி. பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழு மூச்சாக நடந்து வருகின்றன. #DeluxeBus
    கரூர்:

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரவை விட செலவு கூடுதலாக உள்ளதால் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. சேவை நோக்குடன் இயக்கப்படுவதால் நஷ்டம் தவிர்க்க முடியாததாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே தனியாருக்கு இணையாக நவீனங்கள் புகுத்தப்படாமல் இருப்பதும் போக்குவரத்து கழக நஷ்டத்துக்கு காரணியாக உள்ளது. தனியார் மூலம் படுக்கை வசதியுடன் குளு, குளு ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசு போக்குவரத்து கழகம் மூலம் படுக்கை வசதியுடன் கூடிய பஸ் இயக்கப்பட்டு பின்னர் அது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மீண்டும் தற்போது படுக்கை வசதியுடன் கூடிய குளு,குளு ஏ.சி. பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழு மூச்சாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் 2,000 புதிய பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.

    அதில் 100 பஸ்கள் படுக்கை வசதியுடன் 3 வகையாக தயாராகின்றன. முழுக்க முழுக்க ஏ.சி. மற்றும் படுக்கை வசதியுடன் ஒரு வகையும், கீழே சாய்வாக உட்காரும் சீட்டுகள், மேலே படுக்கை வசதியுடன் இன்னொரு வகையும், படுக்கை வசதி மற்றும் கழிப்பறை வசதியுடன் மற்றொரு வகையும் என 100 பஸ்கள் விதவிதமாக தயாராகின்றன. இவை அனைத்தும் நவீன முறையில் வடிவமைக்கப்படுகிறது.

    பெங்களூரில் உள்ள தனியார் பஸ் பாடிகட்டும் நிறுவனம் மூலம் படுக்கை வசதியுடன் கூடிய குளு,குளு ஏ.சி. பஸ்கள் பாடி கட்டப்பட்டு வருகின்றன. புதிதாக பாடி கட்டப்பட்ட இந்த வகை பஸ் ஒன்று சமீபத்தில் கரூர் மண்மங்கலம் போக்குவரத் துக்கழக பணிமனைக்கு வரவழைக்கப்பட்டது. அந்த பஸ்சினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பஸ்கள் எப்போது இயக்கப்படும் என அமைச்சரிடம் மாலை மலர் நிருபர் கேட்டபோது கூறியதாவது:-


    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணப்படி அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நவீனமாகிறது. ஜெயலலிதா அறிவித்த 2,000 பஸ்களும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தயாராகின்றன. சாதாரண பஸ்களும் மழை பெய்தால் ஒழுகாது. ரூப் ஒரே மோல்டிங்கில் வடிவமைக்கப்படுகிறது. அதேபோன்று தீ விபத்து ஏற்பட்டால் பயணிகள் இருக்கையில் தீப்பிடிக்காமல் இருக்கும் வகையில் சீட்டுகள் அமைக்கப்படுகிறது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் இருக்கும் சீட்டுகளின் சாய்வு முன்பைவிட அதிகப்படுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் இன்னும் சொகுசாக தூங்கியபடி பயணிக்கலாம்.

    படுக்கை வசதி, ஏ.சி. வசதியுடன் தயாராகும் பஸ்கள், சாதாரண பஸ்கள் அனைத்தும் இன்னும் 3 மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதுவும் நிச்சயம் நிறைவேறும். தனியாருக்கு இணையாக இல்லாமல் அதையும் மிஞ்சும் வகையில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #MRVijayabaskar #DeluxeBus
    ×