என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt buses"

    • 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.
    • பொது வேலை நிறுத்தத்திற்கு 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    சென்னை:

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.

    இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர், நடத்துநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் இன்று பேருந்து சேவை பாதிக்கப்படாது என்றும் மாநகர் போக்குவரத்துக் கழக ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர்கள் முழு அளவில் இன்று பணியில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • 13 தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
    • பேருந்து சேவை பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சென்னை:

    17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த பொது வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது.

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால் பேருந்து சேவை பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் இன்று பேருந்து சேவை பாதிக்கப்படாது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, அரசு பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தொழிற்சங்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அதற்குரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று முழுமையாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். 

    • பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
    • பஸ்களை திருப்புவதற்கும், பஸ் நிலையம் அமைப்பதற்கும் போதுமான இடவசதி சிக்கல் உள்ளன.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் விமான நிலைய வளாகத்துக்குள் மாநகர பஸ்கள் வருவதில்லை. இதனால் பஸ்களில் செல்ல விரும்பும் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரம் நடந்து ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது பொருட்கள், பெரிய பைகளுடன் வரும் பயணிகளுக்கு சிரமமாக இருப்பதால் பலரும் கால்டாக்ஸியை நாடுகின்றனர்.

    எனவே விமான நிலையத்திற்குள் பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் மாநகர பஸ்களை அனுமதித்து இதற்காக தனியாக பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர பஸ்கள் விரைவில் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாநகர பஸ் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, பயணிகளின் இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். விமான அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் கிளாம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

    விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, மாநகர பஸ்கள் விமான நிலையத்திற்குள் சென்று வர அனுமதிக்கு தயாராக உள்ளோம். ஆனால் பஸ்களை திருப்புவதற்கும், பஸ்நிலையம் அமைப்பதற்கும் போதுமான இடவசதி சிக்கல் உள்ளன. இது சரிசெய்த பின்னர் மாநகர பஸ்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் என்றனர்.

    • ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது.
    • இதுவரையில் மிக குறைந்த அளவில் இருந்த முன்பதிவு ஒரு சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்துவிட்டதால் மாணவர்கள் விடுமுறையை கழிக்க வெளியூர் செல்கிறார்கள். உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு 24-ந் தேதியுடன் தேர்வு முடிகிறது.

    கோடை விடுமுறை விடப்பட்டதால் வெளியூர் பயணம் இன்று அதிகரித்துள்ளது. நாளை புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறையாகும். அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு பொதுவான விடுமுறை வருவதால் சொந்த ஊர்களுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர்.

    ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது. இதுவரையில் மிக குறைந்த அளவில் இருந்த முன்பதிவு ஒரு சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் மே மாதம் வரையில் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் பிற மாவட்டங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். இன்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோடை விடுமுறையில் வெளியூர் பயணம் அதிகரிக்கும். இந்த வருடம் கடந்த ஆண்டை விட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தற்போது 1000 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அடுத்த மாதம் முதல் கூடுதலாக 100 பஸ்கள் இயக்கப்படும். புதிதாக 50 ஏ.சி.பஸ்கள் மே மாதம் விடப்படுகிறது.

    இந்த மாதத்தின் இறுதியில் இருந்து வெளியூர் பயணம் மேலும் அதிகரிக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து பயணத்தை தொடரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையில் மீண்டும் சென்னை திரும்புவார்கள்.
    • அனைத்து போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் சென்னைக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாளையுடன் முடிகிறது. 2-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

    பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் இன்று இரவு புத்தாண்டை கொண்டாடி விட்டு நாளை (1-ந்தேதி) வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புகிறார்கள். 9 நாட்கள் விடுமுறை முடிந்து பெரும்பாலானவர்கள் நாளை சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு பயணம் செய்வார்கள்.

    இதனால் பஸ், ரெயில்களில் இடங்கள் நிரம்பி விட்டன. குறிப்பாக தென் மாவட்டப் பகுதியில் இருந்து வரும் ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன.

    மக்களின் தேவை அதிகரித்ததால் ஆம்னி பஸ்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆம்னி பஸ்கள் நிரம்பி விட்டன. இதையடுத்து அரசு சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

    திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு நாளை 500 சிறப்பு பஸ்களும், திங்கட்கிழமை 300 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    வெளியூர்களில் இருந்து வழக்கமாக சென்னைக்கு 2,100 பஸ்கள் இயக்கப்படும். பொதுமக்கள் தேவையைக் கருதி கூடுதலாக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையில் மீண்டும் சென்னை திரும்புவார்கள். அதன் அடிப்படையில் அனைத்து போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் சென்னைக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பி விட்டதால் இன்று முதல் திங்கட்கிழமை வரை பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இன்று பயணம் செய்ய 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப மட்டும் 12 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.

    நாளைய பயணத்திற்கு 22 ஆயிரம் பேரும், 2-ந்தேதிக்கு 10 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவது போல இங்கிருந்தும் பலர் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர். அதனால் இன்று முதல் 3 நாட்கள் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? அல்லது ஸ்டிரைக் அறிவிக்கப்படுமா? என்பது இன்று மாலை தெரியவரும்.

    சென்னை:

    போக்குவரத்து கழகங்களில் அவுட்சோர் சிங் மூலம் (காண்டிராக்ட்) டிரைவர், கண்டக்டர்களை வேலைக்கு பணியமர்த்துவதை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

    மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ.22 ஆயிரம் சம்பளத்துக்கும், விரைவு போக்குவரத்து கழகத்தில் தினசரி 813 ரூபாய்க்கு பதில் 553 ரூபாய் சம்பளத்தில் பணியாற்ற டிரைவர்களை வேலைக்கு எடுப்பதை எதிர்த்தும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் ஏப்ரல் 18 அன்று ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

    இதன் மீது தற்போது 2 கட்ட பேச்சுவார்த்தையை நடத்திவிட்டது. இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் துறை இணை கமிஷனர், போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் அனந்தராஜன், மாநகர போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் தயானந்தம், தலைவர் துரை, பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, சம்மேளன இணைச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? அல்லது ஸ்டிரைக் அறிவிக்கப்படுமா? என்பது இன்று மாலை தெரியவரும்.

    • வரும் 11-ந்தேதி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
    • ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும்.

    கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக இருந்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரசின் வாக்குறுதி.

    அதன்படி, வரும் 11-ந்தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

    மேலும், ஜூலை 1-ந்தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும். ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.

    • கட்டண உயர்வு இன்றி, முதலீடுகள் இன்றி, வருவாய் பெறும் வகையில், அரசு பஸ்களில் தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதி.
    • சென்னை மாநகர பஸ்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்கள் வாயிலாக, மாதம் 1 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.

    சென்னை:

    அரசு விரைவு பஸ்களில், தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கப்படுவதால், மாதந்தோறும் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும்' என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- கட்டண உயர்வு இன்றி, முதலீடுகள் இன்றி, வருவாய் பெறும் வகையில், அரசு பஸ்களில் தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்க உள்ளோம்.

    தற்போது, சென்னை மாநகர பஸ்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்கள் வாயிலாக, மாதம் 1 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.

    அடுத்த கட்டமாக, 250 விரைவு பஸ்களில், பக்கவாட்டு கண்ணாடி உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரம் செய்ய, தனியார் நிறுவனங்களை தேர்வு செய்துள்ளோம். விரைவில், இதற்கான ஒப்பந்தம் செய்ய உள்ளோம்.

    இதன் வாயிலாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, மாதந்தோறும், 30 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புகழ்பெற்ற பஸ் பாடி கட்டும் நிறுவனங்களும் பாடி கட்டுவதற்கு டெண்டரில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்கும் பணி விரைந்து செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன.

    மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக அரசின் போக்குவரத்து துறை பழைய பஸ்களுக்கு பதில் புதிய பஸ்களை வாங்குவதற்கு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    சட்டசபையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் 1000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து இப்போது முதல் கட்டமாக 600 பஸ்களை கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

    இதில் 150 பஸ்கள் முழுமையான தாழ்தள பஸ்களாக வாங்கப்படுகிறது. புகழ்பெற்ற பஸ் பாடி கட்டும் நிறுவனங்களும் பாடி கட்டுவதற்கு டெண்டரில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்கும் பணி விரைந்து செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • காலை மற்றும் மாலை நேரங்களில் பயணியர் அதிகமாக செல்லும், ‘பீக் ஹவர்களில்’ கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    பொது பயணியரோடு, மாணவர்களும் பயணிப்பதால், அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும். எனவே, தேவைக்கு ஏற்றார் போல், கூடுதல் பஸ்களை இயக்க, கிளை மேலாளர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வழக்கமாக இயக்கப்படும், 2,700 மாநகர பஸ்களோடு, மேலும், 150 பஸ்கள் நேற்று முதல் கூடுதலாக இயக்க, கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, காலை மற்றும் மாலை நேரங்களில் பயணியர் அதிகமாக செல்லும், 'பீக் ஹவர்களில்' கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தொடர் பயணம் மேற்கொள்வோருக்கான 50 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை 487 பேர் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.
    • சலுகையானது விழா, விடுமுறை நாட்களுக்கு பொருந்தாது.

    சென்னை:

    அரசு விரைவு பஸ்களில் தொடர் பயணம் மேற்கொள்வோருக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை திட்டங்களின் கீழ் சுமார் 10 ஆயிரம் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சொகுசு, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 1,078 பஸ்கள் உள்ளன.

    இந்த பஸ்கள் 300 கி.மீட்டருக்கு மேற்பட்ட நீண்ட தூரப் பயணத்துக்காக 251 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. விரைவு பஸ்களில் பயணிப்பதை ஊக்குவிக்க பல்வேறு பயணச் சலுகை திட்டங்கள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி ஊருக்குச் சென்று திரும்புவதற்கான பயணச்சீட்டுகளை ஒரே நேரத்தில் இணைய வழியில் முன்பதிவு செய்தால், திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. ஒரு மாதத்தில் 5 முறை பயணம் செய்வோருக்கு அடுத்த ஒவ்வொரு பயணத்துக்கும் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகையாக வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 10 சதவீத கட்டணச் சலுகையும், கடந்த மே 1-ந்தேதி முதல் 50 சதவீத கட்டணச் சலுகையும் அமலில் உள்ளது.

    தொடர் பயணம் மேற்கொள்வோருக்கான 50 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை 487 பேர் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பயணிகள் ரூ.1 லட்சத்து 8,586 சேமித்துள்ளனர். இதேபோல் 10 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை 9,353 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இதன்மூலம் பயணிகள் ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 632 சேமித்துள்ளனர். இவ்வாறு 2 சலுகை திட்டங்களின் மூலமாகவும் மொத்தமாக பயணிகளுக்கு ரூ.5.55 லட்சம் மிச்சமாகி உள்ளது.

    இந்த சலுகையானது விழா, விடுமுறை நாட்களுக்கு பொருந்தாது. இவ்வாறான திட்டங்கள் மற்றும் சேவைகள் காரணமாக விரைவு பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சேவையை மேம்படுத்துவது மற்றும் நவீனவசதி கொண்ட பஸ்களை இயக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காகவும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை முறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களில் எப்போதும் பஸ்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    சனி, ஞாயிறு என தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் பஸ்களில் பலர் வெளியூர் சென்று வருகின்றனர். மேலும் உறவினர் வீடுகளுக்கு செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது போன்றவை வார இறுதி நாட்களில் தான்.

    இதனால் அந்த நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது.

    அதன் அடிப்படையிலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காகவும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்தார்.

    இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் வார விடுமுறை நாட்களையொட்டி பொதுமக்களின் வசதிக்காக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 10-ந்தேதி (திங்கட்கிழமை) வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதைப்போல திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 300 சிறப்பு பஸ்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) இயக்கப்படுகின்றன.

    இதேபோன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், மற்ற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    இதனை முன்னிட்டு முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை முறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×