search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister mr vijayabaskar"

    தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #ministermrvijayabaskar #admk #TNElections2019

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் வடிவேல்நகர் அரசு உயர் நிலைபள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 130-வது வாக்குச்சாவடியில் எனது வாக்கை பதிவு செய்துள்ளேன். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இருக்கிறது. எங்கள் வேட்பாளர் தம்பிதுரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று உறுதியாகியுள்ளது.

    கரூர் பாராளுமன்ற தொகுதி பதற்றமான தொகுதி கிடையாது. அமைதியான தொகுதிதான். தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் பொது விடுமுறையையடுத்து சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று ஒரே நாளில் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பயணிகளுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. தீபாவளி, பொங்கல் பண்டிகை நேரங்களில் 3, 4 நாட்களுக்கு முன்னதாகவே புறப்பட்டு செல்வார்கள். ஆனால் நேற்று பணி நாள் என்பதால் தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு ஒரே நேரத்தில் புறப்பட்டனர். இதனால் சற்று பாதிப்பு ஏற்பட்டது. இது தவிர்க்க முடியாதது. சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் திரும்புவதற்கு சிரமம் இருக்காது. அதற்கேற்றாற் போல் . பயணிகளின் கூட்டத்தை பொறுத்து பஸ்கள் இயக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #admk #TNElections2019 

    ஏழை மக்கள் செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ACBus #MRVijayabaskar
    கரூர்:

    கரூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    தமிழகத்தில் 2000 மின்சார பஸ்களும்,12,000 காற்று மாசுபடாத அதி நவீன புதிய பஸ்களும் இயக்கப்பட உள்ளது. 3 வருட காலத்திற்குள் இந்த பஸ்கள் இயக்கப்படும். முதல் கட்டமாக 500 மின்சார பஸ்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சியில் விரைவில் இயக்க முதல்வர் சி.40 அமைப்புடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

    குறைந்த தூரத்தில் ஏழை மக்கள் செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பொதுவாக குளிர் சாதன பஸ்கள் 2-2 சீட்டுகள் அமைப்பில் உள்ளன. ஆனால் இந்த புதிய குளிர் சாதன பஸ்கள் 3-2 என்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவை குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட உள்ளது.



    முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் 50 குளிர் சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ACBus #MRVijayabaskar
    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministermrvijayabaskar #Thiruvarurelection #admk

    கரூர்:

    கரூர் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். பினனர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்க ரூ.2ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். வருகிற 8,9-ந்தேதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற் சங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிக்காமல் வேலைக்கு வருவார்கள். அவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படும்.

    பொங்கல்பண்டிகையையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மொபைல் டாய்லெட், தண்ணீர் வசதி, மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ்-பாஸ் இன்னும் 2, 3 நாட்களில் வழங்கப்பட்டு விடும். அப்படி வழங்கப்படாத பட்சத்தில் மாணவர்கள் சீருடை அணிந்து பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.


    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஆர்.கே.நகர் தேர்தல் போன்று 20ரூபாய் நோட்டு இத்தேர்தலில் எடுபடாது. நாளை ரெட் பஸ் மற்றும் 550 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது கீதா எம்.எல்.ஏ., மற்றும் பலர் உடனிருந்தனர். #ministermrvijayabaskar #Thiruvarurelection #admk

    மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #MinisterMRVijayabaskar
    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஈசநத்தம் பகுதியில் வேளாண்மைத்துறையின் சார்பில் அரசு மானிய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்பிழியும் எந்திர மையம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்திரனராக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, எண்ணெய்பிழியும் எந்திர மையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

    வேளாண்மைத்துறையின் நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் அரவக்குறிச்சி உழவர் உற்பத்தியாளர் குழுவின் மூலம் ரூ.3.91 லட்சம் வழங்கப்பட்டு அதனோடு அரசு மானியமாக ரூ.10 லட்சம் பெறப்பட்டு மொத்தம் ரூ.13 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் இந்த மையம் அமைக்கப் பட்டுள்ளது.


    இதில் எண்ணெய் பிழியும் எந்திரம், எண்ணெய் வடிகட்டும் எந்திரம் மற்றும் எண்ணெய் நிரப்பும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. சுத்தமான, சுகாதாரமான முறையில் இங்கு கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான எண்ணெய் பிழிந்து தரப்பட உள்ளது. எனவே, விவசாயிகளும், பொதுமக்களும் இந்த மையத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கரூர் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கானகத்துக்குள் கரூர் என்ற அடிப்படையில் அதிக அளவில் ஆலம், அரசு, பனை மற்றும் நாட்டு மரங்களை நடவு செய்ய இந்தத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. அத்துடன் பொதுமக்களும் அதிக அளவில் மரக்கன்றுகளை வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி, வேளாண்மை பொறியியல்துறை செயல்பொறியாளர் ராஜ்குமார், உதவி இயக்குனர் கந்தசாமி அரவக்குறிச்சி வேளாண் உற்பத்தியாளர் குழு தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் காளியப்பன், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #MinisterMRVijayabaskar
    கரூர் மாவட்டத்தில் பழைய காலனி வீடுகளை பழுது பார்க்க ரூ.10½ கோடி நிதி ஒதுக்கீடு என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #MRVijayabaskar
    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை மற்றும் கடவூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பழைய காலனி வீடுகளை பழுது நீக்கி கொள்ளுவதற்கான நிதியுதவி மற்றும் வேலை உத்தரவு ஆணை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சாபநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயாபாஸ்கர் கலந்து கொண்டு பழைய காலனி வீடுகளை பழுது நீக்கி கொள்ளுவதற்கான நிதியுதவி மற்றும் வேலை உத்தரவுகளை வழங்கினர்.

    அப்போது இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவிக்கையில்,

    கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட காலனி வீடுகளை பழுது நீக்கித் தர அதிகளவில் கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பழைய வீடுகளை பழுது நீக்க சட்டமன்ற மேம்பாட்டு நிதியை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாடு முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சிறப்பு நிதி பெற்று ஒரு வீட்டிற்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது.

    கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் 350 வீடுகளும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 150 வீடுகளும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 130 வீடுகளும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 250 வீடுகளும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 314 வீடுகளும் என மொத்தம் 2094 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அதற்காக ரூ.10 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் 994 வீடுகளுக்கு ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்பிலான வேலை உத்தரவுகள் வழங்கப்படுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, வருவாய் கோட்டாட்சியர் லியாகத், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, மனோகரன், தவமணி, ராஜேந்திரன், வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.#MRVijayabaskar
    ஆட்சியை பிடிக்க நினைத்த சசிகலாவை ஜெயலலிதா ஆன்மா சிறையில் பிடித்து தள்ளிவிட்டது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார். #Jayalalithaa #Sasikala #MRVijayabaskar
    கரூர்:

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணையும் விழா தளவாபாளையத்தில் நடந்தது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அமாவாசைக்குள், அடுத்த அமாவாசைக்குள் அ.தி.மு.க. ஆட்சி கலைந்து விடும் என்றவர்களின் கனவை பொய்யாக்கி கடுமையான விமர்சனங்களையும் கடந்து இந்த ஆட்சி தொடர்கிறது.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாரிசு யாரும் இல்லை. அதனால் அவருக்கு சொத்து சேர்க்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஆனால் அவருடன் இருந்த மன்னார்குடி கும்பல் சொத்துக்களை வாரி சுருட்டியது. இதனால் ஜெயலலிதா சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.


    ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களை அவரது ஆன்மா சும்மா விடாது. அவர் இறந்த உடன் மும்பையில் இருந்து மேக்கப் கலைஞர்களை வரவழைத்து ஜெயலலிதா போல் கொண்டை போட்டு, கழுத்து வரை ஜாக்கெட் போட்டு சசிகலா ஆட்சியை பிடிக்க நினைத்தார்.

    ஆனால் ஜெயலலிதா ஆன்மா அவரை பிடித்து பெங்களூர் சிறையில் போட்டு விட்டது. எனவே ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் எந்த கட்சிக்கு சென்றாலும் அவர்களையும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #Sasikala #MRVijayabaskar
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப்பகுதியில் 90 சதவீத புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #GajaCyclone
    புதுக்கோட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து மரங்களை அப்புறப்படுத்துதல், மின் கம்பங்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளையும் துரிதப்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் கந்தர்வக்கோட்டை பகுதிகளில் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், டாக்டர். சி.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் கொட்டும் மழையிலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை அகற்றி ஜே.சி.பி. எந்திரங்களின் உதவியுடன் புதிய மின்கம்பங்களை நடும் பணிகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பணிகளில் எந்தவித தொய்வுமின்றி மிகவும் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருந்தை பார்வையிட்ட அமைச்சர்கள், மின்வாரிய ஊழியர்களை பாராட்டினர்.

    அப்போது அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் உத்தரவின்படி அமைச்சர்கள் தொடர்ந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    துணை முதல்வர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர், அடப்பங்கரை சத்திரம், கந்தவர்வக்கோட்டை, பந்தக்கோட்டை, மருதன்கோன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.

    தற்போதுகூட கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை பிரதான சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் கேரள மாநிலத்தில் இருந்து மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் மோசஸ்ராஜ்குமார் தலைமையில் 26 பேர் அடங்கிய குழுவினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபோன்று மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப்பகுதிகளிலும் மின்கம்பங்கள் சீர்செய்து மின் விநியோகம் வழங்கும் பணியும், சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியும், பாதிக்கப்பட்ட பயிர்கள், வீடுகள் குறித்த சேத மதிப்பீடுகளை கணக்கெடுக்கும் பணியும், குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யும் பணியும், பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப்பகுதியில் 90 சதவீத புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. கிராமப்பகுதிகளில் சுமார் 45,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், அவற்றை சீர்செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஓரிரு தினங்களுக்குள் பெரும்பான்மையான பகுதிகளுக்கும் முழுமையாக மின் விநியோகம் செய்யும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ‌ஷம்பு கல்லோலிகர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். #GajaCyclone
    அரவக்குறிச்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. எங்கள் நிர்வாகிகள் முழுமூச்சாக வேலை செய்கிறார்கள் என்று அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministermrvijayabaskar #admk
    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது:-

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் யார்? என்று எனக்கு தெரியாது என ரஜினிகாந்த் கூறியுள்ளதாக சொல்கிறீர்கள். இந்த மாதிரி சப்ஜெக்ட்களுக்கு முதல்வர், துணை முதல்வர் பதில் அளிப்பார்கள். 

    அரவக்குறிச்சி தேர்தல் பணிகள் சூடு பிடிச்சுருக்கு. எங்கள் நிர்வாகிகள் முழுமூச்சாக வேலை செய்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. யார்? வேட்பாளர் என்பதை முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    மேலும் நீங்கள்(அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்) அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட தயாரா? என வி. செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளாரே என கேட்டதற்கு, ஆகிறதை பேச சொல்லுங்கள். அவர் அமைச்சராக இருந்தபோது ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தித்தாரா? தேர்தலில் யார் டெபாசிட் வாங்க போகிறார்கள் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும். 

    இவ்வாறு அவர் கூறினார்.  #ministermrvijayabaskar #admk 
    டி.டி.வி. தினகரனை நம்பி சென்ற 18 பேரும் தெருவில் நிற்கிறார்கள் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். #ADMK #MRVijayabaskar #ThambiDurai
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் வேலாயுதம்பாளையத்தில் அ.தி.மு.க. 47 ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர். காளியப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக ஆட்சியை ஊழல் ஆட்சி என ஸ்டாலின் கூறுகிறார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது தி.மு.க. என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த முறைகேட்டில் கருணாநிதி முதல்வராக இருக்கும்போதே அவரது மகள் கனிமொழியும் ராசாவும் திகார் ஜெயிலில் இருந்தார்கள்.

    இன்றைக்கு டி.டி.வி. தினகரனை நம்பி சென்ற 18 பேரும் (தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்) தெருவில் நிற்கிறார்கள். செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது ஜெயலலிதாவிடம் பொய் கூறி 35 ஆயிரம் ஊழியர்களை போக்குவரத்து கழகத்தில் நியமித்தார். இப்போது அவர்கள் நீதிமன்றத்துக்கு அலைகிறார்கள். இன்றைய போக்குவரத்து கழக நிலைமைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் காரணம். இன்னும் இரண்டரை ஆண்டு காலம் அ.தி.மு.க. அரசை யாராலும் அசைக்க முடியாது. அதன் பிறகும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது:- இந்தியா முழுவதும் 4 வழிச்சாலையைக் கொண்டு வந்தது வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த நான்தான். அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒவ்வொரு தொண்டனும் எம்.எல்.ஏ., எம்.பி.தான். மக்கள் பிரச்சனைகளை மக்களவையில் பேசுவதற்குதான் எம்.பி., உள்ளாட்சி தேர்தல் நடத்தவிடாமல் வழக்கு தொடர்ந்தது தி.மு.க.. திராவிட இயக்கம் உருவானது சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவே. ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற ராஜபட்சேவுக்கு மரியாதை செய்தது தி.மு.க.வும் காங்கிரசும்தான். எந்த தேர்தல் வந்தாலும் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், பேரூர் செயலாளர்கள் வக்கீல் சதாசிவம், சரவணன் மற்றும் பலர் உள்ளனர். #ADMK #MRVijayabaskar #ThambiDurai
    அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகத்தயார் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார். #ADMK #MRVijayabaskar #SenthilBalaji
    கரூர்:

    கரூர் க.பரமத்தியில் அ.தி.மு.க. ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்று பேசியதாவது:-

    1½கோடி பேரை உறுப்பினர்களாக கொண்ட அ.தி.மு.க. பல சோதனைகளை தாண்டி வந்துள்ளது. இந்த ஆட்சி எப்போது எத்தனை நாள் நீடிக்கும் என ஏங்கியவர்கள் நிலைமை இன்று தலைகீழாக மாறிவிட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் கொடுத்த 85 வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து ஒரு உண்ணாவிரத போராட்டத்தை செந்தில்பாலாஜி நடத்தியுள்ளார்.

    கடந்த 4½ ஆண்டுகள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதிக்கு என்ன செய்தார்? மாறாக இதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க செய்தது யார்?. கட்சியை அழிக்க நினைத்தவர்களுக்கு ஜெயலலிதா ஆன்மா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.



    அவர் பொறுப்பில் இருக்கும் போது அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல் தற்போது அரசியல் செய்வதற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். கடந்த 1991-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் 249 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வெளியிடப்பட்ட புத்தக வடிவிலான ஓட்டு சீட்டில் இரட்டை இலையினை தேடிப்பிடித்து மக்கள் ஓட்டு போட்டதால் அ.தி.மு.க. வேட்பாளர் மரியம் உல் ஆசியா வென்றார்.

    அப்படிப்பட்ட இந்த தொகுதியில் மீண்டும் செந்தில்பாலாஜி நின்று வெற்றிபெற்றால் நான் அரசியலை விட்டே விலகத் தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஜெயலலிதா ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்த துரோகிகளுக்கு சரியான பாடம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #ADMK #MRVijayaBaskar
    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதியரசர் வழங்கிய தீர்ப்பு அ.தி.மு.க. ஆட்சிக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. ஜெயலலிதா தனது உயிரை கொடுத்து உருவாக்கி தந்த இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்த துரோகிகளுக்கு இது சரியான பாடம்.

    ஜெயலலிதா வழியில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும். இந்த தீர்ப்பில் எங்களுக்கு பின்னடைவு இல்லை. இது ஒரு அனுபவம் என டி.டி.வி. தினகரன் சொன்னதாக சொல்கிறீர்கள். இதுவா? அனுபவம், அப்படியென்றால் நிறைய அனுபவம் அவருக்கு காத்திருக்கிறது.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தாங்களாகவே தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தால் இதுதொடர்பாக முதல்வர், துணை முதல்வர் முடிவெடுப்பார்கள்.

    நீதிமன்றம் 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று கூறியுள்ளது. மீண்டும் தேர்தல் நடந்தால் அனைத்து தொகுதியிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். ஜெயலலிதா சொன்னது போல் இன்னும் 100 ஆண்டுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்.

    கரூரில் ஒரு நபர் (முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி) இரண்டு அமாவாசைக்கு தான் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும் என அவ்வப்போது கூறி வருகிறார். மாதா மாதம் அமாவாசைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இன்னும் பல அமாவாசைகளை அவர் பார்க்க தான் போகிறார். எங்கள் இல்லத்திருமண விழாவில் தனியார் பள்ளி பேருந்துகளும் அரசு பஸ்சும் இயக்கப்பட்டதாக கூறுகின்றனர். அரசு விதியின்படி ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MRVijayaBaskar #18MLAsCaseVerdict
    தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்ச எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ministermrvijayabaskar #omnibus #diwalifestival

    கரூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனின் குற்றசாட்டு குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நலன் கருதி 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய மாநகராட்சி பகுதிகளில் காலதாமதம் இல்லாமல் பஸ்கள் கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    குறிப்பாக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் வகையில் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற் சங்கத்தினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பஸ் நிலையங்களில் இரு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை கால பயணத்தை மக்கள் சிரமமின்றி மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ்களில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிப்பது குறித்த அந்த சங்கத்தினருக்கு தெரிவித்து உள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தாண்டி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பஸ்களில் இதுபோன்ற செயல்கள் நடக்க வாய்ப்பில்லை. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #omnibus #diwalifestival 

    ×