என் மலர்
செய்திகள்

திருவாரூர் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும்- அமைச்சர் பேட்டி
கரூர்:
கரூர் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். பினனர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்க ரூ.2ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். வருகிற 8,9-ந்தேதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற் சங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிக்காமல் வேலைக்கு வருவார்கள். அவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படும்.
பொங்கல்பண்டிகையையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மொபைல் டாய்லெட், தண்ணீர் வசதி, மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ்-பாஸ் இன்னும் 2, 3 நாட்களில் வழங்கப்பட்டு விடும். அப்படி வழங்கப்படாத பட்சத்தில் மாணவர்கள் சீருடை அணிந்து பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். ஆர்.கே.நகர் தேர்தல் போன்று 20ரூபாய் நோட்டு இத்தேர்தலில் எடுபடாது. நாளை ரெட் பஸ் மற்றும் 550 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது கீதா எம்.எல்.ஏ., மற்றும் பலர் உடனிருந்தனர். #ministermrvijayabaskar #Thiruvarurelection #admk