search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளிக்கு 22 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்
    X

    தீபாவளிக்கு 22 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்புபவர்களுக்காக 22 ஆயிரம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNMinister #MRVijayabaskar
    சென்னை:

    ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை கே.கே.நகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் தொழில் துறையில் முன்னணியில் இருப்பதால் இந்திய அளவில் வாகன எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதனால் விபத்துக்களை குறைப்பதற்கு போக்குவரத்து துறை முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

    தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் நடத்த இன்னும் நேரம் உள்ளது. ஏற்கனவே தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி பொது மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம். அது வழக்கமான வேலைதான்.

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று திரும்புபவர்களுக்காக 22 ஆயிரம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


    சாலை விபத்தில் வருடத்துக்கு 17 ஆயிரம் பேர் இறப்பதாக புள்ளி விவரம் இருக்கின்றது. சாலை விதிகளை அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும். காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்கும், மின்சார வாகனங்களை கொண்டு வருவதற்காகவும் நான் அமெரிக்கா மற்றும் லண்டனுக்கு சென்றிருந்தேன். அங்கு சாலை விதிகளை ஒவ்வொருவரும் கடைபிடிப்பதை பார்த்தால் நமது நாட்டில் மிக மிக குறைவு.

    அந்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு வர வேண்டும். எனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாடத்திட்டத்தில் அது சேர்க்கப்பட்டுள்ளது.

    சாலைகள் நல்ல சாலைகளாக இருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்துகள் நடக்கின்றன. விபத்துக்களை குறைக்க இனிவரும் காலங்களில் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும்.

    அடுத்த வாரம் 475 புதிய பேருந்துகளை முதல்- அமைச்சர் தொடங்கி வைக்கிறார். 100 மின்சார பஸ்களை வாங்க நாங்கள் லண்டன் சென்றிருந்தோம். அதில் 80 பஸ்களை சென்னையிலும், 20 பஸ்களை கோவையிலும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மின்சார பஸ்கள் சென்னையில் இயக்கப்படும்.

    பஸ் கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்த அரசு தயாராக இல்லை. டீசல் விலை உயர்வு அரசு போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்ட பிறகு சென்னையில் கூடுதலாக 300 பஸ்களை விட்டுள்ளோம்.

    இது மக்களின் பயணத்துக்கு போதுமாக இருக்கும் என்று கருதகிறோம். தேவைப்பட்டால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

    விரைவில் போக்குவரத் துறையையும், மெட்ரோ ரெயில் சேவையையும் இணைத்து கார்டு சிஸ்டம் கொண்டு வர உள்ளோம். அது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள பஸ்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பஸ் எப்போது வரும் என்பதை ‘ஆப்’ மூலம் தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம். போக்குவரத்து துறையில் உள்ள காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #MRVijayabaskar
    Next Story
    ×