search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youngman"

    • மூர்த்தி குளித்துவிட்டு துணிகளை காய போடுவதற்காக வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக ஈரத்துணி அருகில் சென்று கொண்டிருந்த மின் வயரில் உரசியது.

    நெல்லை:

    பாளை சமாதானபுரம் மீன்கார காம்பவுண்டில் வசித்து வருபவர் நடராஜன். இவர் பாளை மண்டல அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாலமூர்த்தி (வயது 21). இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    இன்று காலை பால மூர்த்தி குளித்துவிட்டு துணிகளை காய போடுவதற்காக வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஈரத்துணி அருகில் சென்று கொண்டிருந்த மின் வயரில் உரசியது. இதில் பாலமூர்த்தி உடலில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பெரியசாமி காலனியை சேர்ந்தவர் முப்புடாதி(வயது 33). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பெரியசாமி காலனியை சேர்ந்தவர் முப்புடாதி(வயது 33). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், சமீபத்தில் அவரது மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் முப்புடாதி மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென காணாமல் போன நிலையில் நேற்று சொக்கலிங்கபுரம் ஊருக்கு அருகே உள்ள குறிப்பன்குளத்தில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் அங்கு விரைந்து சென்று முப்புடாதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவி பிரிந்த ஏக்கத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாங்குநேரியை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள மாயநேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் கண்ணன் (வயது 27).
    • பெருமாள்கண்ணன் தவணை முறையில் டிராக்டர் வாங்கியதாகவும், அதற்கான தவணையை கட்ட முடியாமல் தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    நெல்லை:

    நாங்குநேரியை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள மாயநேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் கண்ணன் (வயது 27).

    இவர் கடந்த 24-ந் தேதி விஷம் குடித்த நிலையில் அப்பகுதியில் மயங்கி கிடந்தார்.

    அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

    இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெருமாள்கண்ணன் தவணை முறையில் டிராக்டர் வாங்கியதாகவும், அதற்கான தவணையை கட்ட முடியாமல் தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி ஒரு வாலிபரை பிடித்தனர்.
    • மேலப்பாளையம் அருகே உள்ள சிவராஜபுரத்தை சேர்ந்த ராஜசெல்வம்(வயது 24) என்பதும், கைப்பையை திருடியது அவர் தான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    பாளை என்.ஜி.ஓ. ஏ காலனியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி டவுனில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று பஸ்சில் புதிய பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.

    கைப்பை திருட்டு

    அவரை அழைத்து செல்வதற்காக சங்கர் தனது காரில் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். காரை ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியை அழைத்து வருவதற்காக நடைமேடைக்கு சென்றுள்ளார்.

    சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. அதில் ரூ.3,500 ரொக்கபணம், ஏ.டி.எம். அட்டைகள், விலை உயர்ந்த வாட்ச் உள்ளிட்டவை இருந்தது.

    வாலிபர் கைது

    இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர், மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி ஒரு வாலிபரை பிடித்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் மேலப்பாளையம் அருகே உள்ள சிவராஜபுரத்தை சேர்ந்த ராஜசெல்வம்(வயது 24) என்பதும், கைப்பையை திருடியது அவர் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, கைப்பையை மீட்டனர்.

    • ஐஸ் வியாபாரி அந்தோணி செல்வராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகநயினாரை வெட்டியுள்ளார்.
    • முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து ஐஸ் வியாபாரி செல்வராஜை கைது செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் சுபாஷ் நகர் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் அய்யாச்சாமி,இவரது மகன் ஆறுமுகநயினார் (வயது 31) கூலித் தொழிலாளி.

    தகராறு

    அப்பா, மகன் இருவருக்கும் நேற்றிரவு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கைகலப்பு ஏற்பட்டு ஆறுமுகநயினார் தனது அப்பா அய்யாசாமியை அடிக்க கம்பை எடுத்துக்கொண்டு விரட்டியுள்ளார்.

    மகன் அடிக்க வருகிறான். காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டபடி ஓடிய அய்யாச்சாமி அருகில் இருந்த ஐஸ் வியாபாரி அந்தோணி செல்வராஜ்(62)வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து மகன் சென்றபின் அய்யாச்சாமி கதவை திறந்து கொண்டு வெளியே சென்று விட்டார்.

    வெட்டு

    இந்நிலையில் அங்கு வந்த ஆறுமுகநயினார், அந்தோணி செல்வராஜை அவதூறாக பேசி,எப்படி எங்க அப்பாவுக்கு நீ அடைக்கலம் கொடுக்கலாம் என்று கேட்டு,அந்தோணி செல்வராஜின் வீட்டு கதவை எட்டி உதைத்து உடைத்துள்ளார். மேலும் அவரையும் அடிப்பதற்காக கம்பால் தாக்கியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி செல்வராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகநயினாரை வெட்டியுள்ளார்.

    இதனை எதிர்பார்க்காத ஆறுமுகநயினார் கையால் தடுத்துள்ளார்கள். இதனால் கையில் வெட்டுப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

    கைது

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆறுமுகநயினார் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து ஐஸ் வியாபாரி செல்வராஜை கைது செய்தார்.

    • ஊத்துமலை பகுதிகளில் இரவு நேரத்தில் கடை, வீடு உடைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த முகமது நசீர் என்பவர் ஈடுபட்டார்.
    • 300 வருட பழமையான ஐம்பொன் சிலை மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளும் இருந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.

    தென்காசி:

    ஆலங்குளம் உட்கோட்ட போலீஸ் நிலையங்களான ஆலங்குளம், கடையம், பாவூர்சத்திரம் மற்றும் ஊத்துமலை பகுதிகளில் இரவு நேரத்தில் கடை, வீடு உடைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த முகமது நசீர்(வயது 30) என்பவர் ஈடுபட்டார்.

    மேலும் அவர் மீது 300 வருட பழமையான ஐம்பொன் சிலை மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளும் இருந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் அவர்மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடையம் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தியதால், மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில் முகமது நசீரை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இசக்கிதுரை சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி முப்புடாதி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜர். இவரது மகன் இசக்கிதுரை(வயது 19). நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இசக்கிதுரை சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களாக இசக்கிதுரை தனது தந்தையிடம் ஸ்மார்ட் போன் வாங்கிதருமாறு கேட்டு வந்துள்ளார். ஆனால் அவரது தந்தை காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • எரிக்கப்பட்ட வாலிபரை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்கள் வரை மாயமானவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • கடைகள், வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் பகுதியில் ஒரு குளத்தின் அருகே நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது.

    எரித்துக்கொலை

    இதுதொடர்பாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த இடத்தில் பெட்ரோல் வாசனை அடித்தது. மேலும் ஒரு பெட்ரோல் கேனும் கிடந்தது.

    இதனால் பெட்ரோல் ஊற்றி உடல் எரிக்கப்பட்டு இருப்பதை அறிந்த போலீசார் அந்த வாலிபர் யார்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாயமானவர்கள் பட்டியல்

    கொலை செய்து எரிக்கப்பட்ட அந்த வாலிபரை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்கள் வரை மாயமானவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சுமார் 35 வயதுக்கு உட்பட்ட வாலிபர்கள் மாயமானது குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் ஆராய்ந்து அவர்களின் உறவினர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விசாரணை

    இதற்கிடையே சம்பவம் நடந்த நாளில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏதேனும் நபர்கள் சுற்றி திரிந்தார்களா? அல்லது வாகனங்கள் சென்று வந்தனவா என்பது குறித்தும் அந்த பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.சி.டி.வி.யில் வாலிபர் ஒருவர் சாதாரணமாக வந்து மொபட்டை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
    • பணகுடி பகுதியில் இதேபோல் 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளது

    பணகுடி:

    பணகுடியை சேர்ந்தவர் ராஜன். இவர் பணகுடி மெயின் ரோட்டில் மாதா கோவில் அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று கடை முன்பு தனது மொபட்டை நிறுத்திவிட்டு அவர் கடைக்குள் சென்றார்.

    திருட்டு

    சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது மொபட்டை காணவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். அதில் வாலிபர் ஒருவர் சாதாரணமாக வந்து மொபட்டை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

    அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பணகுடி பகுதியில் இதேபோல் 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளது.

    • மோட்டார் சைக்கிள் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுபாஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது 23).

    பிறந்தநாள்

    இவர் மார்த்தாண்டத்தில் டைல்ஸ் கட்டிங் செய்யும் வேலை செய்து வந்தார். தற்போது இவரது பெற்றோர் மதுரையில் வசித்து வருகின்றனர்.

    இன்று சுபாசுக்கு பிறந்தநாள் என்பதால் மார்த்தாண்டத்தில் வேலையை முடித்துவிட்டு நேற்றிரவு சம்பளத்தை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

    தடுப்புச்சுவரில் மோதல்

    இன்று அதிகாலை ரெட்டியார்பட்டி மலை அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுபாஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் விசாரணை

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நெல்லை மாநகர போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தகராறு முற்றியதில் கணேஷ் கைலாஷ் அங்கிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சுரேஷ் தலையில் போட்டு கொலை செய்தார்.
    • சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த சுரேஷ், அங்கிருந்த எனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அரிவாளின் பின்பகுதியால் அடித்து துன்புறுத்தி உள்ளார்.

    நெல்லை:

    பாளை கோட்டூர் ரோடு திருஞானசம்பந்தர் நாயனார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சுப்புலட்சுமி.

    உடல்நிலை பாதிப்பு

    இவர்களுக்கு சுரேஷ்(வயது 35) என்ற மகன், உமா என்ற மகள் உள்ளனர். மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த சண்முகம் மகன் கணேஷ் கைலாஷ் என்பவருடன் உமாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணேஷ் கைலாஷ் தனியார் தண்ணீர் கேன் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.கடந்த சில நாட்களாக சுப்புலட்சுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், உமா தனது தாய் வீட்டுக்கு சென்று கவனித்து வந்துள்ளார்.

    கொலை

    இந்நிலையில் சுரேஷ் குடித்துவிட்டு வந்து நேற்று இரவு வீட்டில் தகராறு செய்துள்ளார். தகவல் அறிந்த கணேஷ் கைலாஷ் அங்கு சென்று சமாதானம் பேசி உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு முற்றியதில் கணேஷ் கைலாஷ் அங்கிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து சுரேஷ் தலையில் போட்டு கொலை செய்தார்.

    இதுதொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் வழக்குப்பதிவு செய்து கணேஷ் கைலாசை கைது செய்தார். அவர் போலீசில் வாக்குமூலமாக கூறியதாவது:-

    அடித்து துன்புறுத்தினார்

    சுரேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்து வந்தார். அவர் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் சுரேசின் தொந்தரவால் அவரது மனைவி குழந்தையுடன் கோவில்பட்டிக்கு சென்றுவிட்டார்.

    எனது மாமனார் இறந்துவிட்டதால் அவருக்கு வந்த ஓய்வூதிய தொகையை குடும்பத்திற்கு செலவிடாமல் குடித்துவிட்டு தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த சுரேஷ், அங்கிருந்த எனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அரிவாளின் பின்பகுதியால் அடித்து துன்புறுத்தி உள்ளார்.

    இதனை எனக்கு போன் செய்து எனது குழந்தைகள் அழுது கொண்டே தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கு சென்று அவரை சத்தம்போட்டேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில் கொலை செய்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    • நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கொங்கந்தான்பாறையை சேர்ந்தவர் காயத்ரி(வயது 22).
    • காயத்ரி நேற்று இரவு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆம்னி பஸ் நிலையம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்து நின்றார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கொங்கந்தான்பாறையை சேர்ந்தவர் காயத்ரி(வயது 22). இவர் ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆம்னி பஸ் நிலையம் பகுதியில் அவர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்து நின்றார்.

    அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் காயத்ரியின் கம்மல் உள்ளிட்ட நகைகளை பறிக்க முயன்றார். உடனே காயத்ரி கத்தி கூச்சலிட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்ற ஆட்டோ டிரைவர்கள் மற்றும பொதுமக்கள் ஓடி வந்து வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து பெருமாள்புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள ஊத்து பகுதியை சேர்ந்த அஜீஸ்(31) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுமக்கள் தாக்கியதில் அஜீஸ் காயம் அடைந்தார். இதனால் அவரை போலீசார் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

    ×