search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water tank"

    • ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்திற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.
    • பூமி பூஜை விழாவுக்கு பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், நெல்கட்டும் செவல் ஊராட்சியில், மாவீரன் பூலித்தேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றிற்கு பூமி பூஜை செய்து பணி ஆரம்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வாசுதே வநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டி யன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திர மோகன், ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மகேந்திரன், முனியராஜ், கிளைச் செயலாளர் ஸ்டாலின், ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்ப சாமி, ஓவர்சீஸ் முத்துமாரி, அரசு ஒப்பந்த தாரர்கள் கார்த்தி, மாரித்துரை, பூசைத்துரை, உள்ளார் மணி கண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.
    • ஜே.சி.பி. மூலம் பழுதடைந்த மேல்நிலை தண்ணீர்தொட்டியை அகற்றும் போது தண்ணீர் தொட்டி ஜே.சி.பி. மேல் விழுந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொந்தம்புலி கிராமத்திற்கு 75 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் கிராம மக்கள் தவித்து வந்தனர். சித்திரங்குடி-பொந்தம் புலி கிராமத்திற்கு இடையில் 150 மீட்டர் தூரம் மட்டுமே அரசு புறம்போக்கு நிலம் தனிநபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனை அகற்ற முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பரமக்குடி சப்-கலெக்டர்அப்தாப் ரசூல் தலைமையில் தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் டி.எஸ்.பி. சின்ன கன்னு தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டது. கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏனாதி ஊராட்சி பொந்தம்புலி கிராமத்திற்கு முதுகுளத்தூர்-கமுதி நெடுஞ்சாலையில் இருந்து சித்திரங்குடி கிராமத்தில் 150 மீட்டர் தூரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜே.சி.பி. மூலம் பழுதடைந்த மேல்நிலை தண்ணீர்தொட்டியை அகற்றும் போது தண்ணீர் தொட்டி ஜே.சி.பி. மேல் விழுந்தது. இதில் அதன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 'புறம்போக்கில் இருந்த புளிய மரத்தை ஏலம்விட சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏனாதி கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், சித்திரங்குடி வி.ஏ.ஓ. பழனி உள்பட வருவாய்த்துறையினர் இருந்தனர்.

    • குடிநீர் தொட்டி அமைக்க கோரிக்கை
    • சிந்தாமணி 89-வது வார்டில் சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரையில் சிந்தாமணி நீர் மேலாண்மை சங்க தலைவர் முனியாண்டி, கிராம விவசாய சங்க தலைவர் மும்மூர்த்தி மற்றும் பலர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சிந்தாமணி 89-வது வார்டில் சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு தற்போது அம்ரூத் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக் கப்பட உள்ளது. இதனால் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது.

    இது எங்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும். இந்த இடத்தில் எந்த மடையும் கிடையாது. சிலர் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கும், அந்த இடத்துக்கும் சம்பந்தமும் கிடையாது. இந்த இடம் முழுமையாக அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது.

    மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு சிந்தாமணி கிராமத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் தேக்க தொட்டியை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வன விலங்குகளுக்காக 16 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இதற்காகவே 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலங்குகள், பறவைகள், மரங்கள் கணக்கெடுக்கப்படுகின்றன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் திலீப்குமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் மேகநாதரெட்டி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் வன விலங்குகளுக்காக 44 தேசிய பூங்கா, 247 வன விலங்கு சரணாலயங்கள் உள்ளன. வனப் பாதுகாப்புக்கு பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் காலநிலை மாற்றம், வேட்டையாடுதல், வறட்சி, பிளாஸ்டிக் பயன்பாடு, ஆக்கிரமிப்பு போன்றவற்றால் விலங்குகளுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    தமிழ்நாட்டில் களக்காடு, முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் புலிகள் காப்பகம் உள்ளது. விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 3 மாவட்டங்களை இணைத்து 5-வது புலிகள் காப்பகமாக விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இது இந்தியாவில் 51-வது புலிகள் காப்பகமாக உள்ளது.

    விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் 60 வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளனர். விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்வதற்காக 16 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரு வனம் ஆரோக்கியமாக இருப்பது, அங்கு உயிரினங்களின் பெருக்கத்தை பொறுத்து உள்ளது. இதற்காகவே 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலங்குகள், பறவைகள், மரங்கள் கணக்கெடுக்கப்ப டுகின்றன.

    வனப் பரப்பை அதிகரிக்க பல்வேறு வகையான மரங்கள் நடப்பட்டு உள்ளது. காடுகள் இல்லையென்றால் மனித குலமே இல்லை என்று சொல்லலாம். காடுகள் என்பது அதில் வசிக்கும் விலங்குகளையும் சேர்த்துதான். சுற்றுச்சூழல் பாதுகாப்பு காடுகளை பாதுகாப்பதில் தான் இருக்கிறது. காடுகளையும் விலங்குகளையும் பாதுகாப்பதை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இயற்கையை பாதுகாத்தால் அது நம்மை வாழ வைக்கும். எனவே நாம் அனைவரும் நம்மால் இயன்ற வரை காடுகளையும், காடுகளில் வாழும் வன உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கழுநீர்குளம் ஊரில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பயன்படுத்தும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
    • இந்த தொட்டியின் தூண்கள் அனைத்திலும் சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

    தென்காசி:

    கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கழுநீர்குளம் ஊரில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பயன்படுத்தும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

    தற்பொழுது இந்த தொட்டியின் தூண்கள் அனைத்திலும் சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரமும் கீழே இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது.

    எனவே இந்த தொட்டியின் அருகில் மாவட்ட கலெக்டரின் சிறப்பு நிதியில் உடனடியாக புதிய குடிநீர் தொட்டி கட்டி தரவும், ஏற்கனவே இருக்கும் பழைய குடிநீர் தொட்டியின் மூலம் ஏற்பட உள்ள ஆபத்தை தடுக்க வேண்டும் என்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் யூனியன் கவுன்சிலர் மகேஸ்வரி சத்யராஜ் மாவட்ட கலெக்டரிடம் நேரில் கோரிக்கை மனு வழங்கினார்.

    • பல்லடம் அருகே ரூ.8 லட்சம் மதிப்பில் நிலமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • இந்த விழாவில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார்

    பல்லடம் : 

    பல்லடம் அருகே, நிலமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பல்லடம் அருகே உள்ள பருவாய் ஊராட்சி ஆறாக்குளம் கிராமத்தில், மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் நிலமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் மனோன்மணி, அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், காங்கிரஸ் நிர்வாகி ரவி மற்றும் கோகுல், ஊராட்சி செயலாளர் சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பல்லடம் வடுகபாளையம், கணபதி பாளையம் ஊராட்சி மாதேஸ்வரன் நகர்,கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையம் ஆகிய இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகள் செய்யப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளை எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.,துவக்கி வைத்தார்.

    • தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
    • தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.

    வால்பாறை

    வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அவை அவ்வப்போது தேயிலை தோட்டம் மற்றும் ெதாழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    இந்த நிலையில் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் மேல் பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

    பின்னர் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள தண்ணீர் தொட்டியின் அருகே சென்றது. அங்கு தண்ணீர் குடிக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக காட்டெருமை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.

    இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோரின் உத்தரவின் பேரில் வால்பாறை வனசரகர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டெருமையை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து அந்த தொட்டியின் பக்கவாட்டு சுவரை உடைத்து காட்டெருமையை மீட்கும் பணி நடந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 8 மணியளவில் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் அதனை வனத்தில் விட்டனர்.

    • மனைவியிடம் குளிக்கச் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

     காங்கேயம் :

    காங்கேயம் நாட்டான்வலசு அருகே உள்ளது என். காஞ்சிபுரம். இந்த ஊரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது35) , விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை மனைவியிடம் குளிக்கச் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடிச்சென்ற போது நாட்டான்வலசு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 12 அடி தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தார். இது குறித்து ஊதியூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விவசாயி பிரகாஷ் குளிக்க வரும் போது குடிபோதையில் இருந்துள்ளார்.

    தண்ணீர் தொட்டி நிறைய தண்ணீர் நிரம்பி இருந்தது. அதில் குளிக்கும்போது மூச்சு திணறி உயிர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தண்ணீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கழனிவாசலில் அரசின் சார்பில் தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்தப்பணியில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள மேலப்பனையைச் சேர்ந்த செந்தில் (வயது 37) என்ற கட்டிடத் தொழிலாளி ஈடுபட்டு வருகிறார்.

    வழக்கமாக இரவு நேரங்களில் புழுக்கம் காரணமாக செந்தில் தண்ணீர் தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று தூங்குவது வழக்கம்.

    நேற்று இரவு செந்தில் தண்ணீர் தொட்டியின் மேலே சென்று தூங்கியுள்ளார். இன்று அதிகாலை எழுந்த அவர், தூக்க கலக்கத்தில் கீழே இறங்க முயன்றுள்ளார்.

    அப்போது நிலை தடுமாறி செந்தில் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பொள்ளாச்சி அருகே கடன் தொல்லைக்கு குடும்பமே பலியான சம்பவம் பொங்கலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பல்லடம்:

    பொள்ளாச்சியை அடுத்துள்ள நடுப்புளி அருகே உள்ள சித்தூரை சேர்ந்தவர் சதிஷ்குமார் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி தவமணி (30).

    இவர்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு மோனிகா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது.

    கடந்த மாதம் 1-ந் தேதி முதல் சதிஷ்குமார் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கவுண்டம் பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு குடி வந்தார்.

    அங்கு தங்கி இருந்து விவசாய வேலைகளை கவனித்து வந்தார். இந்த விவசாய தோட்டத்தில் 11 அடி உயர தண்ணீர் தொட்டி உள்ளது. நேற்று மதியம் இந்த தண்ணீர் தொட்டிக்குள் சதிஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குதித்தார்.

    இதில் சதிஷ்குமாரும், குழந்தை மோனிகாவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தவமணி மட்டும் கை, கால்களை அசைத்தபடி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டார்.

    அப்போது தோட்டத்துக்கு வந்த டிராக்டர் டிரைவர் தவமணி தண்ணீர் தொட்டிக்குள் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தவமணியை மீட்டார். அப்போது அவருக்கு சுய நினைவு இருந்தது.

    இந்த நிலையில் கணவன்- மகள் தண்ணீரில் குதித்து இறந்த தகவல் கிடைத்ததும் தவமணி வேதனை அடைந்தார். அவர் கண்ணீர் விட்டு தரையில் புரண்டு கதறி அழுதார்.

    வீட்டிற்குள் ஓடி சென்ற தவமணி அங்கு தென்னை மரங்களுக்கு வைக்க பயன்படுத்தப்படும் வி‌ஷ மாத்திரையை தின்றார். இதில் அவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலைமை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 4 மணியளவில் தவமணி இறந்தார்.

    கடன் தொல்லையால் சதிஷ்குமார் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பொள்ளாச்சியில் சதிஷ்குமார் வசித்து வந்த போது சிலரிடம் கடன் வாங்கி உள்ளார்.

    அவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சதிஷ்குமார் குடும்பத்துடன் கவுண்டம் பாளையம் வந்து உள்ளார்.

    இங்கு வந்த பின்னரும் கடன் கொடுத்தவர்கள் சதிஷ்குமார் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளனர். நீங்கள் தங்கி உள்ள இடம் தெரிந்து விட்டது. நாங்கள் அங்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாமா என மிரட்டி உள்ளனர்.

    இதனை சதிஷ் குமார் தன்னுடன் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களிடம் கூறி வேதனை பட்டு உள்ளார். இந்த நிலையில் தான் அவர் குடும்பத்துடன் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லைக்கு குடும்பமே பலியான சம்பவம் பொங்கலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    முதுகுளத்தூர் அருகே தட்டானேந்தலில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியால், தண்ணீரை சேகரிக்க முடியாமல் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    முதுகுளத்தூர்:

    போக்குவரத்து வசதிகள் இல்லாத தட்டானேந்தலில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கிராம மக்களின் தண்ணீர் தேவைக்காக,  2011 ல், 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியுடன், தெருக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் வகையில் பைப்லைன் இணைப்புகள் அமைக்கபட்டது. 

    தரமின்றி அமைக்கபட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2014 ல், மராமத்து செய்யபட்டது. இடிந்து விழும் நிலையிலுள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் மராமத்து பணிகள் மேற்கொள்ள முடியாததால், இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் சில மாதங்களாக தொட்டியில் தண்ணீர் சேகரிக்க முடியாமல், தண்ணீர் சப்ளை நிறுத்தபட்டுள்ளது. மராமத்து பணிகள் மேற்கொண்டு, 4  ஆண்டுகளுக்குள் மேல் நிலைநீர்த்தேக்க தொட்டியிலுள்ள கான்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுகிறது. 
    மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அருகே உள்ள குளியல் தொட்டியில் சேகரிக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தும் கிராம மக்கள், இடிந்து விழும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அருகே செல்ல அச்சம் கொண்டுள்ளனர். இதனால் கிராம மக்கள், குளியல் தொட்டி அருகே செல்ல முடியாமல், புழக்கத்திற்கான தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்கும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காட்டுமன்னார்கோவில் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கொத்தனார். இவரது மனைவி சிலம்பரசி. இவர்களுக்கு தனபிரபு(7), அரிகரன்(5) என்ற 2 மகன்கள் உள்ளனர். தனபிரபு அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் காலை மணிகண்டன் அதே பகுதியில் நடந்த கட்டிட வேலைக்கு சென்றார். இதற்கிடையே மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் தனபிரபுவும் கட்டிட வேலை நடந்த இடத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் வேலை முடிந்ததும் மணிகண்டன், தனபிரபுவை தேடி பார்த்தார். அப்போது அவன் அங்கு இல்லாததால், மகன் வீட்டுக்கு சென்று இருப்பான் என நினைத்து அவர் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் வீட்டிலும் தனபிரபு இல்லை. இதனால் மணிகண்டனும், அவரது உறவினர்களும் கட்டிட வேலை நடந்த இடத்துக்கு சென்று மகனை தேடி பார்த்தனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் தனபிரபு கிடந்தான்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் தனபிரபுவை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் தனபிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மணிகண்டன், காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×