search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன விலங்குகளுக்காக 16 இடங்களில் தண்ணீர் தொட்டிகள்
    X

    வன உயிரின வார விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி சான்றிதழ் வழங்கினார். அருகில் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் உள்ளார். 

    வன விலங்குகளுக்காக 16 இடங்களில் தண்ணீர் தொட்டிகள்

    • வன விலங்குகளுக்காக 16 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இதற்காகவே 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலங்குகள், பறவைகள், மரங்கள் கணக்கெடுக்கப்படுகின்றன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் திலீப்குமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் மேகநாதரெட்டி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் வன விலங்குகளுக்காக 44 தேசிய பூங்கா, 247 வன விலங்கு சரணாலயங்கள் உள்ளன. வனப் பாதுகாப்புக்கு பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் காலநிலை மாற்றம், வேட்டையாடுதல், வறட்சி, பிளாஸ்டிக் பயன்பாடு, ஆக்கிரமிப்பு போன்றவற்றால் விலங்குகளுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    தமிழ்நாட்டில் களக்காடு, முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் புலிகள் காப்பகம் உள்ளது. விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 3 மாவட்டங்களை இணைத்து 5-வது புலிகள் காப்பகமாக விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இது இந்தியாவில் 51-வது புலிகள் காப்பகமாக உள்ளது.

    விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் 60 வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளனர். விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்வதற்காக 16 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரு வனம் ஆரோக்கியமாக இருப்பது, அங்கு உயிரினங்களின் பெருக்கத்தை பொறுத்து உள்ளது. இதற்காகவே 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலங்குகள், பறவைகள், மரங்கள் கணக்கெடுக்கப்ப டுகின்றன.

    வனப் பரப்பை அதிகரிக்க பல்வேறு வகையான மரங்கள் நடப்பட்டு உள்ளது. காடுகள் இல்லையென்றால் மனித குலமே இல்லை என்று சொல்லலாம். காடுகள் என்பது அதில் வசிக்கும் விலங்குகளையும் சேர்த்துதான். சுற்றுச்சூழல் பாதுகாப்பு காடுகளை பாதுகாப்பதில் தான் இருக்கிறது. காடுகளையும் விலங்குகளையும் பாதுகாப்பதை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இயற்கையை பாதுகாத்தால் அது நம்மை வாழ வைக்கும். எனவே நாம் அனைவரும் நம்மால் இயன்ற வரை காடுகளையும், காடுகளில் வாழும் வன உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×