search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Debt troubles"

    புதுவையில் கடன் தொல்லையால் மன உளைச்சலில் மில் தொழிலாளி வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை உருளையன் பேட்டை சுப்பையா நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 51). ரோடியர் மில் தொழிலாளி. இவருக்கு பாரதிதேவி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    மில் மூடப்பட்டு சம்பளம் வழங்கப்படாததால் குடும்ப செலவுக்கு கிருஷ்ணராஜ் பலரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார்.

    ஆனால், அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் கிருஷ்ணராஜ் திண்டாடி வந்தார். மேலும் பணம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நச்சரித்து வந்தனர். இதனால் கிருஷ்ணராஜ் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ணராஜ் மனைவி பாரதிதேவி சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதையடுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கிருஷ்ணராஜ் நேற்று இரவு தனக்குத்தானே வி‌ஷ ஊசி போட்டு கொண்டார்.

    மேலும் ஒரு உருக்கமான கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார். அதில், கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்ததால் இந்த முடிவை தேடி கொள்வதாக அதில் எழுதி இருந்தார்.

    இன்று காலை அவரது மகன் மற்றும் மகள் எழுந்து பார்த்த போது தந்தை வி‌ஷ ஊசி போட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி அருகே கடன் தொல்லைக்கு குடும்பமே பலியான சம்பவம் பொங்கலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பல்லடம்:

    பொள்ளாச்சியை அடுத்துள்ள நடுப்புளி அருகே உள்ள சித்தூரை சேர்ந்தவர் சதிஷ்குமார் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி தவமணி (30).

    இவர்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு மோனிகா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது.

    கடந்த மாதம் 1-ந் தேதி முதல் சதிஷ்குமார் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கவுண்டம் பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு குடி வந்தார்.

    அங்கு தங்கி இருந்து விவசாய வேலைகளை கவனித்து வந்தார். இந்த விவசாய தோட்டத்தில் 11 அடி உயர தண்ணீர் தொட்டி உள்ளது. நேற்று மதியம் இந்த தண்ணீர் தொட்டிக்குள் சதிஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குதித்தார்.

    இதில் சதிஷ்குமாரும், குழந்தை மோனிகாவும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தவமணி மட்டும் கை, கால்களை அசைத்தபடி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டார்.

    அப்போது தோட்டத்துக்கு வந்த டிராக்டர் டிரைவர் தவமணி தண்ணீர் தொட்டிக்குள் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தவமணியை மீட்டார். அப்போது அவருக்கு சுய நினைவு இருந்தது.

    இந்த நிலையில் கணவன்- மகள் தண்ணீரில் குதித்து இறந்த தகவல் கிடைத்ததும் தவமணி வேதனை அடைந்தார். அவர் கண்ணீர் விட்டு தரையில் புரண்டு கதறி அழுதார்.

    வீட்டிற்குள் ஓடி சென்ற தவமணி அங்கு தென்னை மரங்களுக்கு வைக்க பயன்படுத்தப்படும் வி‌ஷ மாத்திரையை தின்றார். இதில் அவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலைமை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 4 மணியளவில் தவமணி இறந்தார்.

    கடன் தொல்லையால் சதிஷ்குமார் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பொள்ளாச்சியில் சதிஷ்குமார் வசித்து வந்த போது சிலரிடம் கடன் வாங்கி உள்ளார்.

    அவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சதிஷ்குமார் குடும்பத்துடன் கவுண்டம் பாளையம் வந்து உள்ளார்.

    இங்கு வந்த பின்னரும் கடன் கொடுத்தவர்கள் சதிஷ்குமார் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளனர். நீங்கள் தங்கி உள்ள இடம் தெரிந்து விட்டது. நாங்கள் அங்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாமா என மிரட்டி உள்ளனர்.

    இதனை சதிஷ் குமார் தன்னுடன் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களிடம் கூறி வேதனை பட்டு உள்ளார். இந்த நிலையில் தான் அவர் குடும்பத்துடன் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லைக்கு குடும்பமே பலியான சம்பவம் பொங்கலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    பாவூர்சத்திரம் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த வியாபாரியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது35). வியாபாரியான ராஜ் பல்வேறு தொழில்கள் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதில் அவர் ஏராளமான இடங்களில் கடன் வாங்கியுள்ளார். 

    கடன் தொல்லையால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மகேஸ்வரி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி நேற்று அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஒகேனக்கல் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்துள்ள கூத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். கூலி தொழிலாளியான இவரது மனைவி காயத்ரி (வயது20). 

    திருமணத்திற்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். இதனால் மனமுடைந்த காயத்ரி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

    இது குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயத்ரி இறந்த சம்பவம் குறித்து தருமபுரி உதவி கலெக்டர் சிவனருள் விசாரணை நடத்தி வருகிறார்.
    திருச்சி அருகே கடன் தொல்லையால் தந்தை சமாதி அருகே டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தா.பேட்டை:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஜம்புநாதபுரம் வாழவந்திகிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 58), ஹோமியோபதி டாக்டர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.குழந்தைகள் கிடையாது.

    இதனிடையே சம்பத் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். நீண்ட நாட்களாகியும் அவரால் கடனை அடைக்க முடியவில்லை. இதன் காரணமாகவும், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாலும் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்தநிலையில் இன்று காலை சம்பத் , ஜம்புநாதபுரம் சுடுகாட்டில் அவரது தந்தை சமாதி அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்த தகவல் அறிந்ததும் ஜம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடன் தொல்லை காரணமாக சம்பத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு ஏதேனும் காரணமா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கடன் பிரச்சினை காரணமாக பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குடவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள சேங்கனூரைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி (வயது 35). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் மகன்கள்-மகளை படிக்க வைப்பதில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் குடும்ப வறுமை காரணமாக லட்சுமி சென்னைக்கு சென்று வீட்டு வேலை பார்த்து வருகிறார். தற்போது அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் வேலை பார்க்கும் இடத்தில் நன்னிலம் அருகே உள்ள அச்சுத மங்கலத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (30) என்பவரும் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    அப்போது ராஜீவ்காந்தியுடன் பழக்கம் ஏற்பட்டதால் லட்சுமி அவரிடம் பணம் கடனாக பெற்றுள்ளார்.

    இந்தநிலையில் ராஜீவ் காந்தி தனது மனைவி ஆனந்தியிடம் லட்சுமி பணம் வாங்கி விட்டு தராமல் இருப்பதாக கூறியுள்ளார்.

    இதுபற்றி ஆனந்தி அவரது உறவினர்களிடம் கூறியதின் பேரில் அவர்கள் லட்சுமியிடம் பணம் கேட்டு அவரை அடித்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தால் மனமுடைந்த லட்சுமி இன்று காலை 7 மணியளவில் அப்பகுதியில் உள்ள மொட்டையாறு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் லட்சுமியை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் பற்றிய புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குடவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×