search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train"

    • வந்தே பாரத் ரெயில் 4 மணி நேரத்தில் சென்றடைகிறது.
    • புதிய பாதை அமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

    சென்னை:

    ரெயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரித்து பயண நேரத்தை குறைக்கும் முயற்சியில் ரெயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. தற்போது அதிவேகமாக இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்பவர்கள் குறைந்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்றடைகிறார்கள்.

    சென்னை-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தரம் உயர்த்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 200 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கு தண்டவாளங்களை தரம் உயர்த்தவும், சில வழித்தடங்களில் புதிய பாதை அமைக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.

    ரெயில்களை அதிவேகத்தில் இயக்குவதற்கு தண்டவாளம் கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும். அதனால் அதனை உறுதிப் படுத்தவும் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும் ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

    சென்னை-பெங்களூரு இடையேயான 360 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்திற்கும் குறைவாக பயணிக்க இந்த வேகம் உதவும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.


    தற்போது வந்தே பாரத் ரெயில் 4 மணி நேரத்தில் சென்றடைகிறது. அதைவிட பயண நேரம் குறையும் வகையில் 200 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதிவேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கான அடிப்படையான பணிகளை செய்வதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இது மார்ச் மாதத்தில் தயார் ஆகிவிடும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், "200 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க அறிமுகம் செய்வதற்கு முன்பாக ஏற்கனவே உள்ள தண்டவாளத்தில் செமி அதிவேக ரெயில்களை இயக்கி சோதனை செய்யப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே உள்ள வழித் தடத்தை குறைவாகவோ அல்லது கூடுதலாக நாங்கள் பயன்படுத்தலாம். சில வழித் தடங்களில் அல்லது ரெயில் நிலையங்களில் புதிய பாதை அமைக்கலாம். மற்றப்படி ஏற்கனவே உள்ள தண்டவாளங்களை மேம்படுத்தி ரெயில்களை இயக்க ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

    • வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் ஓட்டலுக்கு விரைந்து வந்தனர்.
    • ஓட்டலில் இருந்த ஊழியர்கள் மற்றும் உணவு சாப்பிட வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு சோதனையை நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த செகந்திராபாத் ரெயில் நிலைய வளாகத்தில் நட்சத்திர ஓட்டல் உள்ளது.

    வாலிபர் ஒருவர் அவசர எண் 100-க்கு போன் செய்து ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என மிரட்டல் விடுத்து விட்டு போனை துண்டித்தார்.

    வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் ஓட்டலுக்கு விரைந்து வந்தனர். ஓட்டலில் இருந்த ஊழியர்கள் மற்றும் உணவு சாப்பிட வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு சோதனையை நடத்தினர்.

    இதனால் செகந்தராபாத் ரெயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. நள்ளிரவு வரை சோதனை நடந்தது. இறுதியில் வதந்தி என தெரிய வந்தது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

    • தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர்:

    பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பியதால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    இதன் பின்னர் குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை எடுத்து விட்டு திருப்பூருக்கு திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை கொண்டாட தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

    இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டன. இந்நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் திறந்து செயல்பட தொடங்கின. இதனால் பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அரசு பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
    • ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பெருமழை வெள்ளத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரெயில் வழித் தடத்தில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் ஆகிய பகுதிகளில் தண்டவாளங்கள் அடித்துச்செல்லப்பட்டது. மண் அரிப்பும் ஏற்பட்டதால் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியது.

    இந்த பாதிப்பு காரணமாக அந்த வழித்தடத்தில் கடந்த 17-ந்தேதி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் திருச்செந்தூரில் இருந்து 800 பயணிகளுடன் புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அரிப்பு ஏற்பட்ட இடங்களில் தண்ட வாளங்களை சீரமைக்கும் பணி கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பணிகள் முடிவடைந்ததால் டீசல் என்ஜின் மூலம் சோதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து நேற்று முன்தினம் மதுரையில் இருந்து குழுவினர் வந்து மின்சார என்ஜினை இயக்கி பார்த்தனர். பின்னர் நேற்று இறுதியாக சென்னையில் இருந்து தென்னக ரெயில்வே தலைமை பொறியாளர் பென்னி தலைமையிலான குழுவினர் வந்து ஏ.சி. மின்சார என்ஜினில் சோதனை ஓட்டம் நடத்தி தண்டவாளத்தின் உறுதி தன்மை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து முடித்தனர்.

    நெல்லையில் இருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் திருச்செந்தூர் சென்று திரும்பினர்.

    தண்டவாளங்கள் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருப்பதாக அதிகாரிகள் குழு தெரிவித்த நிலையில் 19 நாட்களுக்குப்பிறகு நேற்று இரவு 8.25 மணியளவில் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அதில் ஏற்கனவே முன்பதிவு செய்த 300 பயணிகள் மற்றும் முன்பதிவு செய்யாத 150 பயணிகள் பயணம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று காலை முதல் வழக்கம்போல் அனைத்து ரெயில்களும் ஓடத்தொடங்கின. நெல்லை-திருச்செந்தூர் வழித் தடத்தில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து 7.25 மணிக்கு திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது.

    தொடர்ந்து காலை 10.10 மணிக்கு வழக்கம்போல் 2-வது முறையாக பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. சுமார் 20 நாட்களுக்கு பிறகு வழக்கம்போல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ரெயில் குமாரமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
    • திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டு பிறகு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக சில விரைவு ரெயில் சேவையில் மாற்றம் மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி மன்னார்குடி-பகத்கீ கோதி அதிவிரைவு ரெயில் (வண்டி எண்-22674) நாளை (திங்கட்கிழமை) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

    இதேபோல் பகத்கீ கோதி-மன்னார்குடி அதிவிரைவு ரெயில் (வண்டி எண்-22673) வரும் 11-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

    மேல்மருவத்தூர்-விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரெயில் (06725) முண்டியம்பாக்கம்-விழுப்புரம் இடையேயும், விழுப்புரம்-மேல்மருவத்தூர் முன்பதிவில்லா மெமு ரெயில் (06726) விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையேயும் நாளை மற்றும் 13,20,22,27,29 ஆகிய தேதிகளில் என 6 நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

    இதேபோல் காரைக்குடி-திருச்சி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06888) 9, 23 ஆகிய தேதிகளில் குமாரமங்கலம்-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் குமாரமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    ஈரோடு-திருச்சி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06810) 9, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டு பிறகு புறப்படும்.

    திருச்சி-ஸ்ரீ கங்காப்பூர் விரைவு ரெயில் (22498) 12-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு ஹூப்ளி கோட்டத்தில் நிறுத்தப்பட்டு அதன் பிறகு இயக்கப்படும்.

    பெரோஸ்பூர்-மண்டபம் ஹம்ஸபர் விரைவு ரெயில் (20973) 13-ந் தேதியும், மண்டபம்-பெரோஸ்பூர் விரைவு ரெயில் (20974) 16-ந் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

    மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பெரிய சேதம் ஏதும் நிகழும் முன் தீ உடனடியாக அணைக்கப்பட்டது.
    • ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சந்தன் (23) மற்றும் தேவேந்திரா (25) என இளைஞர்கள் இருவர் கைது.

    அசாமில் இருந்து டெல்லி செல்லும் ரெயிலில் குளிர் தாங்க முடியாததால் வரட்டியை தீமூட்டி குளிர்காய்ந்த அரியானாவைச் சேர்ந்த இருவரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

    டெல்லி செல்லும் சம்பார்க் கிராந்தி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதாக கேட்மேன் அதிகாரிகளை எச்சரித்தார். இதையடுத்து, ஓடும் ரெயிலில் நெருப்பை பற்றவைத்த இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பேரழிவு தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து அலிகரில் உள்ள ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி கூறுகையில், "ஜனவரி 3 ஆம் தேதி இரவு, பர்ஹான் ரெயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரெயில்வே கிராசிங்கில் கேட்மேன், வந்து கொண்டிருந்த ரெயிலின் பெட்டியிலிருந்து தீ மற்றும் புகை வெளியேறியதை கண்டு உடனடியாக பர்ஹான் ரயில் நிலையத்தில் உள்ள தனது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பிறகு ஆர்பிஎஃப் குழு ரெயிலை அடுத்த ஸ்டேஷன் சாம்ரௌலாவில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதே நேரத்தில், ஓடும் ரெயிலின் வழியாகச் சென்று பாதுகாப்பு படை பார்த்தபோது, கடும் குளிரில் இருந்து விடுபடுவதற்காக, ரெயில் பெட்டி ஒன்றில் சிலர் வரட்டியில் தீ மூட்டி இருப்பதைக் கண்டறிந்தனர்.

    பெரிய சேதம் ஏதும் நிகழும் முன் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. பின்னர் ரெயில் அலிகார் சந்திப்பிற்குச் சென்றது. அங்கு இதுதொடர்பாக 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

    மேலும், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சந்தன் (23) மற்றும் தேவேந்திரா (25) என இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பின்னர் அவர்களுடன் இணைந்த மற்ற 14 சக பயணிகளும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்" என்றார்.

    • வாராந்திர சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்காசி:

    நெல்லை-சென்னை எழும்பூர் இடையே (வண்டி எண்-06069) இயக்கப்படும் சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் சுற்றி செல்லும் வகையில் இயக்கப்படுவதால், இந்த ரெயிலில் உள்ள இருக்கைகள் பெரும்பாலும் காலியாகவே இருப்பதாக ரெயில் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    இந்த ரெயிலை நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த வழித்தடத்தில் இயக்கினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் பயணிகள் கூறுகின்றனர்.

    ஏற்கனவே தென்காசி, மதுரை வழியாக 5 மாதங்கள் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்ட நெல்லை-தாம்பரம் ரெயில் 17,303 பயணிகளுடன் ரூ.1.14 கோடி வருமானத்துடன் 108.84 சதவீதம் பயணிகள் பயன்பாட்டுடனும், தாம்பரம்-நெல்லை ரெயில் 16,214 பயணிகளுடன் ரூ.97.61 லட்சம் வருமானத்துடன் 101.72 சதவீத பயணிகள் பயன்பாட்டுடனும் இயங்கியது.

    5 மாதங்களில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்ட இந்த இரு வாராந்திர சிறப்பு ரெயில்களையும் சேர்த்து மொத்தம் 33,517 பயணிகளுடன் ரூ.2.14 கோடி வருமானம் கிடைத்தது.

    ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட வண்டி எண் 06069 சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு ரெயிலில் மொத்தம் உள்ள 1,364 இருக்கைகளில் 892 இருக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது. 35 சதவீத இருக்கைகள் காலியாக சென்றன. இந்த ரெயிலுக்கான மொத்த வருமானமாக வரவேண்டிய ரூ.11 லட்சத்து 44 ஆயிரத்து 483-க்கு பதிலாக ரூ.5 லட்சத்து 39 ஆயிரத்து 128 வருமானமாக கிடைத்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.6.05 லட்சம் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 53 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நெல்லையில் இருந்து வருமானம் கொழிக்கும் அம்பை, தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தின் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இதுகுறித்து தென்மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஜெகன் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து தென்மாவட்டத்திற்கு செல்லக்கூடிய இந்த சிறப்பு ரெயில் 50 சதவீதம் கூட நிரம்பாததுக்கு முக்கிய காரணம் திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது தான். ஆனால் நெல்லை-தாம்பரம் இடையே தென்காசி வழியாக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்கள் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

    ரெயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைத்தது. பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் ஆகியவை காத்திருப்போர் பட்டியலுடன் இயங்குவதால் பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தில் அனைத்து இருக்கைகளும் எளிதாக நிரம்பி விடும். எனவே நெல்லையில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை, திண்டுக்கல் வழியாக தாம்பரத்திற்கு இயங்கிய சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.
    • மலர் வேந்தன், வேல் குமார், சிவராம், கலையரசன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    வடசென்னை கிழக்கு மாவட்ட மாதவரம் சட்டமன்ற தொகுதி புழல் ஒன்றியத்தில் உள்ள விளாங்காடுப்பாக்கம் ஊராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பத்தினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன் ஏற்பாட்டில் நிவாரண உதவியாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் புழல் பெ.சரவணன் தலைமையில் நடந்த இந்த விழாவில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. நிவாரண உதவிகளை வழங்கினார்.

    ஒன்றிய தலைவர் செல்வ மணி, துணைத் தலைவர் சாந்தி பாஸ்கரன், தங்கராஜன், காமராஜ், மல்லி ராஜா, பரிமளச் செல்வம், எழிலன், கபிலன், அருண், ராமு, திருநாவுக்கரசு, அப்போஸ், டில்லி பாபு, கோவிந்தராஜ், சதிஷ், நாகராஜ், வெங்கடேசன், அஜித்குமார், ராஜேஷ், சீனிவாசன், சீனு, இளைஞர் அணி தனுஷ் சரவணன், ரோகேஷ், சரவணன், செல்வகுமார், விமல், பிரேம்குமார், வார்டு உறுப்பினர் சத்யசீலன், ரதி சீனிவாசன், நிலவழகி இனியன், அருணாதேவி, சீனு, ஆனந்தி நாகராஜன், தர்மிரவி, நாம தேவன், அசோக், அப்பன் ராஜ், மலர் வேந்தன், வேல் குமார், சிவராம், கலையரசன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் அதன் பின்னால் வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    • ரெயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சென்னை புறப்பட்டு சென்றன.

    ஜோலார்பேட்டை:

    கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை சேலம் அடுத்த தின்னப்பட்டி ரெயில் நிலையம் அருகே வந்தது.

    அப்போது திடீரென ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு பழுதாகி நடுவழியில் நின்றது.

    இதனால் அந்த ரெயிலில் வந்த பயணிகள் வேறு ரெயில்களை பிடிக்க முடியாமலும், குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிற்கு செல்ல முடியாமலும் கடும் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக சேலம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் சேலம் ரெயில் நிலைய அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி என்ஜின் கோளாறை சரி செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது.

    திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் அதன் பின்னால் வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சென்னை புறப்பட்டு சென்றன.

    • தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • ரெயில் விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பணிமனைக்கு சென்ற ரெயில் தடம் புரண்டது. ரெயில் பெட்டியின் நான்கு சக்கரங்களும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.

    பணிமனைக்கு சென்ற ரெயில் என்பதாலும் பயணிகள் யாரும் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரெயில் விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
    • ரெயில் நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மொத்தம் 8 பிளாட்பாரம் உள்ளன. இதில் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்நிலையில் நேற்று 5-வது பிளாட்பாரத்திற்கு அரக்கோணம் அரசு ஐ.டி.ஐ. சீருடையில் 2 மாணவர்கள் வந்தனர். அவர்கள் திடீரென தண்டவாளத்தில் குதித்து கட்டி பிடித்து புரண்டனர். ஒரு மாணவன் கஞ்சா போதையில் தண்டவாளத்தில் விழ இன்னொரு மாணவன் அவனை தாங்கிப் பிடித்தான்.

    அப்போது அந்த மாணவனும் போதையில் கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் எந்த ரெயில்களும் வரவில்லை. இது ஏதோ சினிமா சூட்டிங் நடப்பது போல் அரங்கேறியது.

    இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் மாணவர்களை விரட்டியடித்தனர்.

    இந்தக் காட்சி தற்பொழுது அரக்கோணம் மக்களிடையே வீடியோவாக பரவிவருகிறது.

    கஞ்சா போதையில் மாணவர்கள் ரெயில் தண்டவாளத்தில் கட்டி புரண்ட சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரக்கோணம் பகுதியில் பள்ளி கல்லூரிகள் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்கும் நபர்களையும் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.
    • பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை.

    அரூர்:

    தருமபுரி மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அரூரில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் தமிழரசன் அரூருக்கு வருகை தந்தார்.

    முன்னதாக செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதில் கடந்த 10 நாட்களுக்கு மேல் சென்னை மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளிலும் கடலூர் தொகுதிகளிலும் எதிர்பாராத அளவிற்கு கடும் மழை புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    வீடுகளில் தண்ணீர் புகுந்து, பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.


    பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை. எனவே, நிவாரண பணிகளை உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒவ்வொரு ரேசன் கார்டு தாரர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சி வலியுறுத்துகிறது.

    இனிவரும் காலங்களிலே இப்படிப்பட்ட அவலங்கள் ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வுகளை காண நல்லத்திட்டங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    திருமாவளவன் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு வழக்கறிஞர் பணிக்கு உள்இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்றதால் தள்ளுபடி செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து இப்போது இருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசிலும் இது நடக்கவில்லை. கேட்டால் இதற்கு சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள். இப்போது மாநில அரசு வழங்குகிற இட ஒதுக்கீடு 18 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் 1 சதவீதம் பழங்குடியின மக்களுக்கு 1969 முதல் வழங்கப்படுகிறது.

    தற்போது அரை நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில் மக்கள் தொகை கூடிவிட்டது, ஆகையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 19சதவீதமும், குறைந்தபட்சம் 22 சதவீதமும், மலைவாழ் மக்களுக்கு 1 சதவீதம் குறைந்தபட்சம் 2சதவீதம் ஆக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.

    தி.மு.க. அரசுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான உண்மையான சமூக கல்வி பொருளாதார இந்த வளர்ச்சியில் அக்கறை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×