search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறப்பு ரெயிலில் நிரம்பாத இருக்கைகள்- நாள் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் இழப்பு
    X

    சிறப்பு ரெயிலில் நிரம்பாத இருக்கைகள்- நாள் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் இழப்பு

    • வாராந்திர சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்காசி:

    நெல்லை-சென்னை எழும்பூர் இடையே (வண்டி எண்-06069) இயக்கப்படும் சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் சுற்றி செல்லும் வகையில் இயக்கப்படுவதால், இந்த ரெயிலில் உள்ள இருக்கைகள் பெரும்பாலும் காலியாகவே இருப்பதாக ரெயில் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    இந்த ரெயிலை நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த வழித்தடத்தில் இயக்கினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் பயணிகள் கூறுகின்றனர்.

    ஏற்கனவே தென்காசி, மதுரை வழியாக 5 மாதங்கள் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்ட நெல்லை-தாம்பரம் ரெயில் 17,303 பயணிகளுடன் ரூ.1.14 கோடி வருமானத்துடன் 108.84 சதவீதம் பயணிகள் பயன்பாட்டுடனும், தாம்பரம்-நெல்லை ரெயில் 16,214 பயணிகளுடன் ரூ.97.61 லட்சம் வருமானத்துடன் 101.72 சதவீத பயணிகள் பயன்பாட்டுடனும் இயங்கியது.

    5 மாதங்களில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்ட இந்த இரு வாராந்திர சிறப்பு ரெயில்களையும் சேர்த்து மொத்தம் 33,517 பயணிகளுடன் ரூ.2.14 கோடி வருமானம் கிடைத்தது.

    ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட வண்டி எண் 06069 சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு ரெயிலில் மொத்தம் உள்ள 1,364 இருக்கைகளில் 892 இருக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது. 35 சதவீத இருக்கைகள் காலியாக சென்றன. இந்த ரெயிலுக்கான மொத்த வருமானமாக வரவேண்டிய ரூ.11 லட்சத்து 44 ஆயிரத்து 483-க்கு பதிலாக ரூ.5 லட்சத்து 39 ஆயிரத்து 128 வருமானமாக கிடைத்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.6.05 லட்சம் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 53 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நெல்லையில் இருந்து வருமானம் கொழிக்கும் அம்பை, தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தின் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இதுகுறித்து தென்மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஜெகன் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து தென்மாவட்டத்திற்கு செல்லக்கூடிய இந்த சிறப்பு ரெயில் 50 சதவீதம் கூட நிரம்பாததுக்கு முக்கிய காரணம் திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது தான். ஆனால் நெல்லை-தாம்பரம் இடையே தென்காசி வழியாக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்கள் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

    ரெயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைத்தது. பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் ஆகியவை காத்திருப்போர் பட்டியலுடன் இயங்குவதால் பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தில் அனைத்து இருக்கைகளும் எளிதாக நிரம்பி விடும். எனவே நெல்லையில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை, திண்டுக்கல் வழியாக தாம்பரத்திற்கு இயங்கிய சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×