search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை-பெங்களூரு இடையே 200 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்க திட்டம்
    X

    சென்னை-பெங்களூரு இடையே 200 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்க திட்டம்

    • வந்தே பாரத் ரெயில் 4 மணி நேரத்தில் சென்றடைகிறது.
    • புதிய பாதை அமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

    சென்னை:

    ரெயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரித்து பயண நேரத்தை குறைக்கும் முயற்சியில் ரெயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. தற்போது அதிவேகமாக இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்பவர்கள் குறைந்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்றடைகிறார்கள்.

    சென்னை-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தரம் உயர்த்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 200 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கு தண்டவாளங்களை தரம் உயர்த்தவும், சில வழித்தடங்களில் புதிய பாதை அமைக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.

    ரெயில்களை அதிவேகத்தில் இயக்குவதற்கு தண்டவாளம் கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும். அதனால் அதனை உறுதிப் படுத்தவும் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும் ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

    சென்னை-பெங்களூரு இடையேயான 360 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்திற்கும் குறைவாக பயணிக்க இந்த வேகம் உதவும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.


    தற்போது வந்தே பாரத் ரெயில் 4 மணி நேரத்தில் சென்றடைகிறது. அதைவிட பயண நேரம் குறையும் வகையில் 200 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதிவேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கான அடிப்படையான பணிகளை செய்வதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இது மார்ச் மாதத்தில் தயார் ஆகிவிடும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், "200 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க அறிமுகம் செய்வதற்கு முன்பாக ஏற்கனவே உள்ள தண்டவாளத்தில் செமி அதிவேக ரெயில்களை இயக்கி சோதனை செய்யப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே உள்ள வழித் தடத்தை குறைவாகவோ அல்லது கூடுதலாக நாங்கள் பயன்படுத்தலாம். சில வழித் தடங்களில் அல்லது ரெயில் நிலையங்களில் புதிய பாதை அமைக்கலாம். மற்றப்படி ஏற்கனவே உள்ள தண்டவாளங்களை மேம்படுத்தி ரெயில்களை இயக்க ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

    Next Story
    ×