search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirunelveli"

    நெல்லை மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட   வார்டுகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 50-வது வார்டிற்கு தேவையான   ஆரம்ப சுகாதார நிலையம், கழிவு நீர் ஓடை, அனைத்து தெருக்களிலும் சாலை அமைத்திட வேண்டும், கன்னிமார்குளம் கரையில் உள்ள கருவேல  மரங்களை அகற்றுதல்,

    குளத்தில் கலக்கும் கழிவுநீர் ஓடையை தனி கால்வாய் கட்டிவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வார்டு உறுப்பினர் மற்றும்  பல்வேறு தரப்பினர் எடுத்து கூறினர்.  

    அதற்கு கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றி தருவதாக எம்.எல்.ஏ., மேயர், துணை மேயர் ஆகியோர் வாக்குறுதி அளித்தனர்.

    பின்னர் பஜார் திடல் அருகே பள்ளிக்கு  செல்ல திண்ணையில் காத்திருந்த மாணவர்களிடம் சென்று அருகில் அமர்ந்து அவர்களிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர்.

    மேலப்பாளையம் ஹாமீம்புரம்  மாநகராட்சி ஆரம்பப் பள்ளிக்குச் சென்ற ஆய்வுக் குழுவினர் பள்ளிக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    தொடர்ந்து தனியார் கல்லூரி பகுதியில் தூய்மைப்பணி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். மேலும்  பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ரசூல் மைதீன், ரம்ஜான் அலி, ஆமினா பீவி,  மாநகர செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் அய்யப்பன், சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர்  அந்தோணி, மேலப்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளர் துபை சாகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின வாகன கையெழுத்து இயக்க பிரசாரம் தொடங்கப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின வாகன கையெழுத்து இயக்க பிரசாரம் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஹாஜி எம்.கே.எம். முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.  கையெழுத்து பிரசார நிகழ்ச்சியை போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    புற்றுநோய் மருத்துவர்கள் தெய்வநாயகம், முகம்மது இப்ராகிம் புகையிலை எதிர்ப்பு தின செய்தியை பற்றி கூறினர்.

    நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனையின் டாக்டர்கள் அகம்மது யூசுப்,  பாலா, ஸ்டேன்லி ஜேம்ஸ் மற்றும் செவிலியர்கள், ஷிபா பாராமெடிக்கல் கல்லூரியின் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஷிபா மருத்துவ மனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் முகம்மது அரபாத் நன்றி கூறினார்.
    வ.உ.சி. பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பஸ்சில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சி பஸ்சை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும், புகைப்படக் கண்காட்சி பேருந்து இன்று நெல்லை மாவட்டத்திற்கு வந்தது.

    அதனை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வை யிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    செய்தி மக்கள் தொடர்புத்துறையினர் சார்பில் குளிரூட்டப்பட்ட அரசு பஸ்சில் நகரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் செல்லும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்தானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் நேரடியாக சென்று ஏராளமான மாணவ - மாணவிகளால் பார்வையிடப்பட்டு வருகிறது.

    இந்த பேருந்தானது இன்று நமது மாவட்டத்திற்கு   வந்துள்ளது. இன்று முதல் வருகிற  3-ந் தேதி வரை நமது மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் வ.உ.சிதம்பரனார் வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை கண்டுகளித்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட நூலகர் மீனாட்சி சுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, நூலகர் (ஓய்வு) முத்துகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை பழையபேட்டையில் சிகரெட் கொடுக்க மறுத்த கடைக்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை பழைய பேட்டை புதுகிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜரத்தினம்(வயது 40). இவர் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் கடை வைத்துள்ளார்.

    நேற்று அவரது கடைக்கு பழையபேட்டை அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த நரேஷ்குமார்(27) என்பவர் வந்தார். மதுபோதையில் கடைக்கு வந்த அவர் சிகரெட் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    ஆனால் ராஜரத்தினம், தனது கடையில் சிகரெட் இல்லை என்று கூறி உள்ளார். அதனை கேட்காத நரேஷ்குமார், கடையில் அமர்ந்திருந்த ராஜரத்தினத்தை தாக்கி உள்ளார். பின்னர் அங்கிருந்த பேனாவை எடுத்து ராஜரத்தினம் மீது குத்தி உள்ளார்.

    உடனே பஜார் பகுதியில் நின்றிருந்தவர்கள் ஓடி வந்து நரேஷ்குமாரை தள்ளிவிட்டனர். இதுதொடர்பாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் நரேஷ்குமாரை கைது செய்தனர்.
    முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி போலீஸ் நிலையங்களில் 469 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
    நெல்லை:

     நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் 369 இருசக்கர வாகனங்கள், சேரன்மகாதேவி போலீஸ் நிலையத்தில் 100 இருசக்கர வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு அரசிற்கு ஆதாயம் பெறும் பொருட்டு யாரும் உரிமை கோராத நிலையில் உள்ள இரு சக்கர வாகனங்கள் அரசின் வழிமுறைகளுக்குட்பட்டு வருகிற 16-ந் தேதி முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைத்திலும், 17-ந் தேதி சேரன்மகாதேவி போலீஸ் நிலையத்திலும் பொது ஏலம் நடத்தி விற்பனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    களக்காடு குடில்தெருவில் மாமியாரை தாக்கிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
    களக்காடு:

    களக்காடு குடில்தெருவை சேர்ந்தவர் மதனகோபால் மனைவி பரமேஸ்வரி (வயது 53). இவரது மகள் சத்தியாவிற்கும், அதே ஊரை  சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த 3 ½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் ராஜ்குமாருக்கும், அவரது மனைவி சத்தியாவிற்கும் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் சத்தியாவை தாக்கினார். இதனைதொடர்ந்து சத்தியா அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
     
    சம்பவத்தன்று   ராஜ்குமார் தனது மாமியார் பரமேஸ்வரி வீட்டிற்கு வந்து அவரை அவதூறாக பேசினார். இதனை அவர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், பரமேஸ்வரியை கற்களை வீசி தாக்கினார்.

    இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்பை வட்டாரத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டாட்ட விழா நடைபெற்றது.
    நெல்லை:

    அம்பை வட்டார இல்லம் தேடிக்கல்வி திட்டம் 100 நாள் நிறைவு கொண்டாட்டம், கல்வி கண்காட்சியில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்கும் விழா, அடையாள அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பி.எல்.டபிள்யூ.ஏ. தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

    நெல்லை  மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவராஜ் முன்னிலை வகித்தார்.

    சேரன்மகாதேவி மாவட்டக்கல்வி அலுவலர் ரெஷினி, அம்பை வட்டாரக்கல்வி அலுவலர் ராணி,  வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆர்த்திசந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் பயிற்றுனர் ஜெயக்குமார் வரவேற்றார்.

    தன்னார்வலர்கள் சோமசுந்தரி, தீபா, உஷாராணி, பஷீரா பீவி ஆகியோர் என்னை கவர்ந்த இல்லம் தேடிக்கல்வி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.   மாணவர்களின் சிலம்பம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை அம்பை ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் பிலிப், ஆபேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் ஆசிரிய பயிற்றுநர்கள் மாதாங்கனி, திருவளர் செல்வி, பிரியதர்ஷினி, பள்ளி தலைமை ஆசிரியர் எத்தல் அந்தாதி லதா மற்றும் அம்பை ஒன்றிய தன்னார்வலர்கள் 234 பேர் கலந்து கொண்டனர்.
    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டலில் எலக்ட்ரீசியனுக்கு அடி-உதை விழுந்தது.
    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாதவன்(வயது 45). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

    அதே கிராமத்தில் போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசித்து வருபவர் கண்ணன் (40). இவரது மனைவியை மாதவன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் நேற்று அவரை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த மாதவன் கல்லிடைக்குறிச்சி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டவுன் ரத வீதிகளில் நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியின் நெல்லை மண்டல குழு கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு மண்டல தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் பைஜு முன்னிலை வகித்தார். 

    இதில் சர்தார்புரம் கீழத்தெருவில் கழிவு நீரோடையை சீர் செய்து அதன்மேல் கல்வெட்டு பாலம் அமைத்திட தீர்மானிக்கப்பட்டது. காந்திநகர் ரேஷன் கடை தெருவில் பொது அடிபம்பு பழுதடைந்துள்ளது. அதனை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. 

    15-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட நதிபுரம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறைகளை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. 

    18-வது வார்டுக்கு உட்பட்ட விசுவநாதன் நகர் பூங்கா அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கவும்,  23-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டவுன் கீழரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி வைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். 

    வாகையடி முனை பகுதியில் சேதமடைந்த பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலம் அமைக்கவும் கோரிக்கை வைத்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்தது. 2-வது அணு உலையில் உற்பத்தி இன்று தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டுவரும் அணு மின் நிலையத்தில் ஒன்று மற்றும் 2-வது அணு உலைகள் செயல்பட்டுவருகிறது. 

    இவற்றின் மூலமாக தலா ஆயிரம் மெகாவாட்டு க்கும் அதிகமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 3-வது மற்றும் 4-வது அணு உலைகளின் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

    இது தவிர 5 மற்றும் 6-வது அணுஉலைகள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது.

     அந்த பணி இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று காலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
    சங்கர்நகர் சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே உள்ள கொண்ட பையன் பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது:-

    எங்களது கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 4 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தால் உடனடியாக தீர்வு காணப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் ஒரு வாரத்தில் மீண்டும் பழைய நிலைமை ஏற்படுகிறது.எனவே சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அளித்த மனுவில், சங்கர்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

    கடந்த ஒரு வருடமாக எங்கள் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    ராமையன்பட்டி பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழு பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தனர்.

    அதில், எங்களது குழு தலைவி மூலமாக வங்கியில் இருந்து ரூ.3 லட்சம் கடனாக பெற்று அதனை நாங்கள் எங்கள் குழு மூலம் வங்கி மேலாளர் அறிவுரையின்படி அந்த வங்கியில் ஏஜென்டாக செயல்பட்டு வந்த ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டோம்.

    தற்போது வேறு ஒரு வங்கியில் கடன் பெறுவதற்காக எங்கள் குழு மூலம் அந்த வங்கியை அணுகியபோது ஏற்கனவே அவர்களுக்கு வேறு ஒரு வங்கியில் பணம் பாக்கி இருப்பதாக கூறி தர மறுத்துவிட்டனர்.  

    இதனை விசாரித்த பின்னரே ஏஜெண்டாக செயல்பட்ட அந்த பெண் பணத்தை முழுவதுமாக அபகரித்துக் கொண்டது தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
    நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 51). இவர் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே ஸ்ரீபுரம் சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு சென்றார்.

    இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.3 ஆயிரம் திருட்டு போயிருந்தது. 

    இதுதொடர்பாக தேவராஜ், சந்திப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
    ×