search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theni"

    தேனி மாவட்டத்தில் மறுவாக்கு பதிவு நடைபெறும் இடங்களில் தண்டோரா மூலம் வாக்காளர்களுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019

    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கம்மவார் சரசுவதி நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி எண் 67 மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டி சங்கர நாராயணன் நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி எண் 167 ஆகிய 2 வாக்கு சாவடிகளிலும் வருகிற 19ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பாராளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் மறு வாக்கு பதிவு நடத்தப்பட உள்ளது.

    இந்த தேர்தல் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் அனைத்து வேட்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்த வாக்கு சாவடி பகுதிகளில் ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு தண்டோரா மூலம் அறிவிப்பு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மறுவாக்கு பதிவு நடப்பதை முன்னிட்டு ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் ஏற்கனவே பணியில் உள்ள பறக்கும் படை குழுக்களுடன், தலா 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 வாக்கு சாவடிகளிலும் மறுவாக்கு பதிவுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது.


    மறுவாக்கு பதிவு பகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணிலும், சி-விஜில் என்ற செல்போன் ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார். #LokSabhaElections2019

    தேனியில் உபயோகப்படுத்தாத 50 வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கொண்டு வந்து வைத்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக தேர்தல் கமிஷனில் திமுக புகார் அளித்துள்ளது. #DMK #LokSabhaElections2019 #TNElections2019

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து மனு கொடுத்தார்.

    பின்னர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனியில் உபயோகப்படுத்தாத 50 வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கொண்டு வந்து வைத்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. பதிவான வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற சதி நடப்பதாக சந்தேகிக்கிறோம்.

    இதுகுறித்து நேற்று அனைத்துக்கட்சியினரும் சேர்ந்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் விளக்கம் கேட்டனர். கலெக்டர் தந்த விளக்கம் தெளிவாக இல்லை. ஆகவே தி.மு.க. சார்பில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளோம். அவர் விளக்கம் தருவதாக கூறி இருக்கிறார்.


    தமிழ்நாட்டில் எப்போதுமே அமைதியான முறையில் தேர்தல் நடக்கும். வட மாநிலங்களைப் போல் வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் சம்பவம் நடைபெறாது. ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் பல வினோதங்கள், பல வேடிக்கைகள் நடைபெறுகிறது.

    கரூரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட் டிருந்த அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா சரியாக வேலை செய்யவில்லை. 2 மணி நேரம் வித்தியாசம் காட்டுகிறது.

    மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருந்த கட்டிடத்திற்குள் பெண் தாசில்தார் சென்று வந்துள்ளார். இந்த வி‌ஷயம் கோர்ட்டு வரை சென்று அதன் பிறகு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இப்போது தேனியிலும், ஈரோட்டிலும் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து வைக்கிறார்கள். இது ஏதோ சதி செய்வதற்காக திட்டமிடுவதாகவே கருதுகிறோம். எந்த சதி திட்டமானாலும் அதை திமு.க. முறியடிக்கும்.

    தேனியில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவை யாரும் கேட்கவில்லை. தேர்தல் நடந்து முடிந்து 20 நாட்களுக்கு பிறகு இப்போது திடீர் என உபயோகப்படுத்தாத வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து வைத்துள்ளனர்.


    தர்மபுரி-பூந்தமல்லி, கடலூரில் உள்ள 10 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு கேட்டு இருந்தோம். அதற்கு இதுவரை பதில் இல்லை. ஆனால் கேட்காத இடத்துக்கு மறுவாக்குப்பதிவுக்காக அதிகாரிகள் தன்னிச்சையாக வாக்குப்பதிவு எந்திரங்களுடன் வருகிறார்கள்.

    இதில் மிகப்பெரிய மர்மம் உள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுகிறது.

    கடந்த வாரம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்று பிரதமர் மோடியின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது மகனை வெற்றி பெற செய்ய வைக்க தேவையான உதவிகளை செய்யுங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன.

    இந்த சூழ்நிலையில் இப்போது தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளதால் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் புகார் செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #LokSabhaElections2019 #TNElections2019

    கோயம்புத்துரில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனி மாவட்டத்துக்கு மாற்றியதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேனி தாசில்தார் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaElections2019
    தேனி :

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து லாரியில் தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று மாலை வந்திறங்கின.

    இதையறிந்த தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தேனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டன.

    வேறு தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை இங்கு வைத்துள்ளதாக புகார் எழுந்ததால், அங்கு இறக்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களை திறந்து காண்பிக்க வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையறிந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக கூட்டணி கட்சியினரின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பேச்சுவார்த்தை நடத்தினார். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தாத 50 இயந்திரங்களை கோவையில் இருந்து தேனிக்கு மாற்றியுள்ளோம் என்று வருவாய் அலுவலர் விளக்கம் அளித்தார்.

    இதுகுறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு, தேவை கருதியே தேனிக்கும் ஈரோட்டிற்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது. இது வழக்கமான நடவடிக்கை. மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டால், பயன்படுத்துவதற்காக இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது என தெரிவித்தார். #LokSabhaElections2019
    தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்து காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, மானாவாரி பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

    தற்போது வறட்சி அதிகரித்து வருவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகின்றன. குறிப்பாக காட்டுப்பன்றி அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க தோட்ட காவலுக்கு சென்று வருகின்றனர். உத்தமபாளையம் அம்மாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குமரன் (வயது 43). இவர் சூரியன், கார்த்திக், ரவி ஆகியோருடன் தனியார் தென்னந்தோப்பில் காவல் பணிக்கு சென்றுள்ளார்.

    தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டு இருந்த போது காட்டுப்பன்றி ஆவேசமாக சீறிப் பாய்ந்து வந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த 4 பேரும் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓடினர். இருந்த போதும் காட்டுப்பன்றி அவர்களை விரட்டியது. இதில் குமரன் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். தண்ணீர் இல்லாததால் குமரனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே மற்றவர்கள் அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே குமரன் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணமான ஒரு வருடத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள காட்டு நாயக்கன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சக்திவடிவேல். இவரது மகள் சிவரஞ்சனி (வயது 23) எனபவருக்கும், கூடலூரைச் சேர்ந்த சுவாமிநாதன் (28) என்பவருக்கும் கடந்த 6.9.2018-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 18 பவுன் நகை, ரூ5 லட்சம் ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.

    திருமணமான சில மாதங்களிலேயே மனைவியின் சிறிது நகைகளை வாங்கி கணவர் வீட்டார் அடகு வைத்து விட்டனர். மேலும் கூடுதல் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி அவரை கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.

    இது குறித்து சிவரஞ்சனி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் சுவாமிநாதன், மாமனார் ஒண்டிவீரப்பன், மாமியார் சந்திரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமாக வெயில் சுட்டெரித்து வந்தது. கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வந்தனர். மேலும் நீர் நிலைகள் வறண்டு போகத் தொடங்கின.

    மேலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குடிநீருக்காக பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டங்களில் ஈடுபடும் அளவுக்கு வறட்சி தாண்டவம் ஆடியது. எனவே பொதுமக்கள் மழை எப்போது பெய்யும் என வானத்தை வெறித்து பார்த்த படி இருந்தனர்.

    தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை கொட்டத் தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதனால் முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி வராக நதி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. பெரியகுளம், தேனி, கம்பம், கூடலூர், தேவாரம், போடி, ஆண்டிப்பட்டி, தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது.

    நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 7 மணி முதல் சாரல் மழை பெய்தது. செம்பட்டி, சித்தையன்கோட்டை, ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 2 மாதமாக வறட்சி அதிகரித்ததால் பூ சாகுபடி குறைந்தது.

    இந்த நிலையில் தற்போது மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மழை காரணமாக செம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் வருவதும், தடைபடுவதும் என தொடர்ந்து இருந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

    இதே போல் மாவட்டத்தில் பழனி, கொடைக்கானல், நத்தம், வத்தலக்குண்டு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுட்டெரித்த கொடைக்கானலில் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். கள்ளழகர் வைகை ஆற்றியில் இறங்கிய முதல் நாளே மழை பெய்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கியதால் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேனியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வாரிசு மற்றும் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொண்டார். #PMModi #LoksabhaElections2019
    தேனி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கரிசல்பட்டி விலக்கில் அதிமுக-பாஜக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:

    நாடும் நமதே, நாற்பதும் நமதே. முதலில் ஜாலியன் வாலாபாக் 100வது ஆண்டு நினைவுதினமான இன்று, உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன். நாளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய இந்தியாவை நோக்கி நாம் சென்றுக் கொண்டிருக்கிறோம்.

    ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும், வளத்துடனும் வாழ்வதை உறுதி செய்யவே புதிய இந்தியா. காங்கிரசும் திமுகவும் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின்,  ராகுலை பிரதமர் என கூறுகிறார். மக்கள் யாரும் அதனால் மகிழ்ச்சி அடையவில்லை என்பதே உண்மை.  காங்கிரஸ்- திமுக கூட்டணியை  பொருத்தவரை சிறுபிள்ளை தனமாக செயல்படுகின்றனர்.



    ஆனால் உங்கள் காவலாளி உங்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறேன். நான் எந்த தீமைக்கும் வழி விடமாட்டேன். தமிழகத்தை வளமான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் திமுக , காங்கிரசுக்கு முடிவு கட்ட வேண்டும். வாரிசு, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு திமுக- காங்கிரஸ்  கூட்டணி பாதிப்பானது.

    வீரமான தேனி மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் என்னைப் பற்றி தெரியும். காங்கிரஸ் நாட்டை கொள்ளையடிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு  எதிராக  நடத்தப்பட்ட ராணுவத்தினரின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து  காங்கிரஸ் கட்சியினர் கேள்வி கேட்கிறார்கள். தேசத்தின் அனைத்து பயங்கரவாதிகளையும் ஒழிக்க தொடர்ந்து போராடுவேன்.

    கடந்த 60 ஆண்டுகாலமாக நம் தேசத்திற்கு அநியாயம் செய்தவர்கள் தான் காங்கிரஸ் ஆட்சி.  தலித் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு காங்கிரஸ் நீதி தருமா? காங்கிரஸ் ஆட்சியில் போபால் பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த மக்களுக்கு நியாயம் தருமா?

    இவ்வாறு அவர் பேசினார்.  #PMModi #LoksabhaElections2019

     
    தேனியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு ராகுல்காந்தி இன்று வருகிறார். இந்நிலையில், அவர் பிரசாரம் செய்ய அமைக்கப்பட்டு இருந்த பொதுக்கூட்ட மேடை சரிந்து விழுந்தது. இதில் 2 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். #LokSabhaElections2019 #RahulGandhi
    தேனி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக இன்று (வெள்ளிக்கிழமை) தேனி வருகிறார். அவர் கலந்து கொள்ளும் பிரசார பொதுக் கூட்டம் தேனி அன்னஞ்சி விலக்கு பகுதியில் நடக்கிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை, ஹெலிகாப்டர் இறங்குதளம் போன்றவை அமைக்கும் பணி நடந்தது.



    ராகுல்காந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் அமருவதற் காக 70 அடி நீளம், 30 அடி அகலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வந்தது. இதற்காக 20 அடி உயரத்தில் மேற்கூரை பந்தல் அமைக்கும் பணி நடந்தது.

    இந்த பணி நேற்று மாலையில் நடந்து கொண்டு இருந்தபோது, திடீரென மேடை சரிந்தது. மேலும் மேற்கூரைக்காக இரும்பு குழாய்கள் பொருத்தப்பட்டு இருந்த நிலையில் அவையும் சரிந்து விழுந்தன. அப்போது அங்கு தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். கம்பிகள் சரிந்து விழுந்தபோது மேடையின் மீது 2 தொழிலாளர்கள் நின்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த தொழிலாளர்கள் 2 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேடை சரிந்து விழுந்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் மத்திய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் அங்கு வந்து பார்வையிட்டனர்.

    இதையடுத்து மேடையின் நீளம், உயரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நீளத்தை 70 அடியில் இருந்து 40 அடியாக குறைக்கவும், உயரத்தை 20 அடியில் இருந்து 16 அடியாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. திட்டமிட்டபடி இன்று மாலையில் பிரசார பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதற்காக கூடுதல் தொழிலாளர்கள் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #RahulGandhi
    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நாளை பிரசாரம் செய்கிறார்.
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நாளை (12-ந் தேதி) பிரசாரம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணியளவில் பெங்களூரு வருகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக் கல்லூரியில் இறங்குகிறார். தேவராஜ மஹால் அருகே அமைக்கப்பட்டு பொதுக்கூட்ட மேடையில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார், ஓசூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சத்யா, தர்மபுரி தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வக்கீல் மணி, அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சேலம் ஹோலிகிராஸ் கல்லூரியில் வந்திறங்குகிறார். தொடர்ந்து காரில் சேலம் ஊத்துமலை அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.

    அங்கு சேலம் தி.மு.க. வேட்பாளர் பார்த்திபன், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணி, விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானத்தில் மதுரைக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்லும் அவர் புதிய பஸ் நிலையம் அருகே அணைஞ்சி விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட பலருக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை செல்லும் அவர் திருப்பரங்குன்றம் மண்டேலாநகரில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பேசுகிறார்.

    இதில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர், நெல்லை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம், தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், ராமநாதபுரம் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி, சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திசிதம்பரம் உள்பட பலருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதையொட்டி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தேனியில் ராகுல் காந்தி பிரசார பொதுக்கூட்டத்துக்காக 3 ஹெலிபேடு, கேரவன், 4 இடங்களில் வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. #LokSabhaElections2019 #RahulGandhi
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந் தேதி தேனி அன்னஞ்சி விலக்கு புதிய பஸ்நிலைய சாலை பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த இடம் கரட்டு பகுதியில் உள்ள பயன்பாடற்ற பட்டா நிலமாகும். இதனால் அதனை சமதளபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    வாகனங்கள் நிறுத்த 3 வெவ்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேடைக்கு தென்புறம் 15 ஏக்கர் நிலம் இதற்காக சமப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி சாலைக்கு எதிரே மண்டப பகுதிக்கு அருகிலும் இடம் சரி செய்யப்பட்டு வருகிறது. அருகிலேயே வி.வி.ஐ.பி. வாகன நிறுத்தம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    12-ந் தேதி ராகுல்காந்தி தமிழகத்தின் 3 இடங்களில் பிரசாரத்தை முடித்து விட்டு கடைசியாக இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேடையின் கிழக்கு பகுதியில் 3 ஹெலிபேடுகள் அருகருகே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராகுல்காந்தி மற்றும் பாதுகாப்பு படையினரும் வருவதால் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் அருகில் ராகுல்காந்திக்கான சிறப்பு வாகன நிறுத்தம் அமைய உள்ளது.

    இங்கு நிறுத்தப்படும் கார் மூலம் மேடை அருகே அழைத்து செல்லப்படுவார். ராகுல் வசதிக்காக கேரவன் ஒன்றும் இங்கு நிறுத்தப்படுகிறது. சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் இங்கு கூடுவார்கள் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். இதற்காக ஆங்காங்கே பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள், தற்காலிக மொபைல் கழிப்பறை அமைக்கப்படுகிறது. கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் 300 மி.லி. குடிநீர் பாட்டில்களும் வழங்க ஏறபாடு செய்யப்பட்டு வருகிறது.

    பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், ஹெலிபேடு தளம் அமைய உள்ள இடம், பொதுமக்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான சஞ்சய்தத் பார்வையிட்டார். வரைபடங்களை பார்த்து ராகுல்காந்தி வரும் வழி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பொதுக்கூட்டத்துக்கு 2 நாட்களே உள்ளதால் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. #LokSabhaElections2019 #RahulGandhi
    தேனி அருகே வேலை வாங்கித்தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    போடியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44) மற்றும் அருண்குமார், செல்லமுத்து மற்றொரு விஜயகுமார், குமரவேல், பாலமுருகன் ஆகியோர் உள்பட 7 பேரிடம் வேலை வாங்கித் தருவதாக பெரியகுளத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சாம்சுல்ரகுமான் ஆகியோர் கூறியுள்ளனர்.

    மேலும் இதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் என கூறி 7 பேரிடமும் தலா ரூ.5 லட்சம் வசூல் செய்துள்ளனர். ஆனால் வேலை வாங்கித் தராமல் தாமதம் செய்து வந்துள்ளனர்.

    இதனால் 7 பேரும் அவர்களிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் சாம்சுல் ரகுமான் பணத்தை திருப்பி தர முடியாது. மீண்டும் வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

    இது குறித்து 7 பேரும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தனர். எஸ்.பி. உத்தரவின் பேரில் தென்கரை போலீசார் மணிகண்டன் மற்றும் சாம்சுல் ரகுமான் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே கார் டிரைவரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது54). தனியார் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று உத்தமபாளையம் வாகன காப்பகம் அருகே காரை நிறுத்தி இருந்தார்.

    அப்போது செல்வம் என்பவர் கருணாநிதி காரை மறித்து அவரது காரை நிறுத்தி சென்றுள்ளார். இதனால் கருணாநிதி செல்வத்திடம் காரை எடுக்க வேண்டும், ஏன் இப்படி மறித்து நிறுத்துகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கருணாநிதியை குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வத்தை தேடி வருகின்றனர்.

    ×