search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனிக்கு 12ந் தேதி வருகை - ராகுல் பொதுக்கூட்டத்துக்காக 3 ஹெலிபேட் அமைக்கும் பணி தீவிரம்
    X

    தேனிக்கு 12ந் தேதி வருகை - ராகுல் பொதுக்கூட்டத்துக்காக 3 ஹெலிபேட் அமைக்கும் பணி தீவிரம்

    தேனியில் ராகுல் காந்தி பிரசார பொதுக்கூட்டத்துக்காக 3 ஹெலிபேடு, கேரவன், 4 இடங்களில் வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. #LokSabhaElections2019 #RahulGandhi
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந் தேதி தேனி அன்னஞ்சி விலக்கு புதிய பஸ்நிலைய சாலை பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த இடம் கரட்டு பகுதியில் உள்ள பயன்பாடற்ற பட்டா நிலமாகும். இதனால் அதனை சமதளபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    வாகனங்கள் நிறுத்த 3 வெவ்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேடைக்கு தென்புறம் 15 ஏக்கர் நிலம் இதற்காக சமப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி சாலைக்கு எதிரே மண்டப பகுதிக்கு அருகிலும் இடம் சரி செய்யப்பட்டு வருகிறது. அருகிலேயே வி.வி.ஐ.பி. வாகன நிறுத்தம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    12-ந் தேதி ராகுல்காந்தி தமிழகத்தின் 3 இடங்களில் பிரசாரத்தை முடித்து விட்டு கடைசியாக இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேடையின் கிழக்கு பகுதியில் 3 ஹெலிபேடுகள் அருகருகே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராகுல்காந்தி மற்றும் பாதுகாப்பு படையினரும் வருவதால் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் அருகில் ராகுல்காந்திக்கான சிறப்பு வாகன நிறுத்தம் அமைய உள்ளது.

    இங்கு நிறுத்தப்படும் கார் மூலம் மேடை அருகே அழைத்து செல்லப்படுவார். ராகுல் வசதிக்காக கேரவன் ஒன்றும் இங்கு நிறுத்தப்படுகிறது. சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் இங்கு கூடுவார்கள் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். இதற்காக ஆங்காங்கே பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள், தற்காலிக மொபைல் கழிப்பறை அமைக்கப்படுகிறது. கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் 300 மி.லி. குடிநீர் பாட்டில்களும் வழங்க ஏறபாடு செய்யப்பட்டு வருகிறது.

    பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், ஹெலிபேடு தளம் அமைய உள்ள இடம், பொதுமக்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான சஞ்சய்தத் பார்வையிட்டார். வரைபடங்களை பார்த்து ராகுல்காந்தி வரும் வழி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பொதுக்கூட்டத்துக்கு 2 நாட்களே உள்ளதால் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. #LokSabhaElections2019 #RahulGandhi
    Next Story
    ×