search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனி"

    • குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை.
    • பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில் அரசரடி, பொம்முராஜபுரம், நொச்சியோடை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வரும் நிலையில் மின்சாரம், சாலைவசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்தனர்.

    இப்பகுதி வனத்துறைக்கு கட்டுப்பட்ட இடம் என கூறி எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தனர். வனத்தை சேர்ந்து வாழ்ந்து வந்த இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்களுக்கு உரம், பூச்சி மருந்து போன்றவற்றை வாங்கி செல்லக்கூட முடியவில்லை.

    மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. சேதம் அடைந்த தங்கள் வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் கூட வனத்துறையினர் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மலை கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பின்பு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தங்கள் கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராததால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தராததால் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு இங்கு வர வேண்டாம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து கருப்புக் கொடி ஏற்றப்பட்ட கிராமங்களுக்கு ஆண்டிபட்டி தாசில்தார் காதர் செரீப் தலைமையிலான அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை. ஓட்டு கேட்க மட்டும் ஊருக்கு வரும் கட்சியினர் அதன்பிறகு தங்களை கண்டுகொள்வதே இல்லை எனவும் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    • காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
    • உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில், மதுரை, தேனி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    எ.வ.வேலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், இன்று மதுரை, தேனி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

    • பவதாரிணியின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
    • திருவாசகம் பாடப்பட்டு பவதாரிணியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.

    இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் உயிரிழந்தார்.

    பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இவரது உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    பண்ணையபுரம், லோயர்கேம்ப் அருகே உள்ள இளையராஜாவின் குருகிருபா வேத பாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஊர் மக்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய நிலையில், தொடர்ந்து அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றன. திருவாசகம் பாடப்பட்டு பவதாரிணியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.

    அதனைத்தொடர்ந்து, பவதாரிணியின் உடல் அவரது தாயார் ஜீவா மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.


    • எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேரடி என்ற இடத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நின்ற நிலையில் உள்ள சிலை உள்ளது. இந்த சிலைக்கு காந்தி ஜெயந்தி, சுதந்திரதினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இந்த சிலையை சுற்றி தற்காலிக கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் காந்தியின் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

    கைத்தடி ஊன்றியது போல இருந்த சிலையின் பாகம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் அதில் சிலையை உடைத்த நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் சோதனை செய்து வருகின்றனர்.

    இதனிடையே காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிலையை சேதப்படுத்திய கும்பலை உடனடியாக கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்ததால் கம்பத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

    ×