search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோசடி"

    • பெண் 12 முறை கருச்சிதைவு அடைந்ததாகவும், பிரசவத்தின் மூலம் 5 குழந்தைகள் இருப்பதாகவும் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • மோசடிக்கு கூட்டாளி ஒருவரும் உதவி செய்துள்ளார்.

    இத்தாலியை சேர்ந்த பார்பரா ஐயோலே என்ற 50 வயதான பெண் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்ப நாடகமாடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல், இணையத்தில் பேசு பொருளாகி வருகிறது.

    பார்பரா மாநில அரசு வழங்கிய மகப்பேறு உதவித்தொகைகளை பெறுவதற்காகவும், வேலையில் இருந்து ஓய்வு பெறுவதற்காகவும் இதுபோன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்காக அவர் போலி மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். அவர் 12 முறை கருச்சிதைவு அடைந்ததாகவும், பிரசவத்தின் மூலம் 5 குழந்தைகள் இருப்பதாகவும் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது இந்த மோசடிக்கு கூட்டாளி ஒருவரும் உதவி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள்.
    • பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    ஈரோடு:

    தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு புதிய மோசடிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகிறது.

    இது குறித்து போலீசார் என்னதான் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினாலும் ஆங்காங்கே மோசடி சம்பவங்கள் நடைபெற்று தான் வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக செல்போன் மூலம் வங்கி அதிகாரி போல் பேசி மோசடியில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் செல்போன் எண்ணிற்கு வேறு மாநில காவல் அதிகாரிகள் பேசுவதாக கூறி வி.பி.எண்.+ 2222856817, 2244444121 போன்ற எண்களில் இருந்து செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது வாட்ஸ்-அப் கால், மெசஞ்சர் கால், ஸ்கைப் லிங்க் இதுபோன்ற ஆன்லைன் கால் மூலமாகவோ தொடர்பு கொண்டால் அதை நிராகரித்து விட வேண்டும்.

    தங்களுடைய ஆதார் அட்டை மூலம் செல்போன் எண் ஒன்று வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்த செல்போனில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்தால் அதை யாரும் நம்ப வேண்டாம். தங்களிடம் ரகசியமாக பேச வேண்டும் என்பதால் தனியறையில் அமர்ந்து பேசுமாறும் உடன் இருக்கக்கூடாது என்று கூறினால் அதையும் தவிர்க்க வேண்டும்.

    பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள். அதனால் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகியவற்றில் வரும் விளம்பரத்தில் பார்ட் டைம் ஜாப் தொடர்பான செய்திகளை நம்ப வேண்டாம்.

    பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். குற்றவாளிகள் தங்களது புகைப்படங்களை மார்பிங் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப் போவதாக மிரட்டி பணம் பறிக்கக்கூடும். கடந்த சில மாதங்களாக இது போன்ற மோசடி அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இது தொடர்பாக ஏதேனும் சந்தேகமாக இருந்தால் 1930 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது சைபர் கிரைம் போலீசாரின் இணையதள முகவரி www.CyberCrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது.
    • போலீசார் 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் மாயழகன். இவரது மனைவி நந்தினி தேவி. இவர் திண்டுக்கல் மதுரை-சாலை அண்ணாமலை மில்ஸ் ரோட்டில் எஸ்.ஆர். நகரில் உள்ள எர்த் டிரஸ்ட் என்ற நிறுவனத்தில் மகளிர் குழு லோனுக்காக கடந்த 8 வருடத்திற்கு முன்பு அணுகியுள்ளார்.

    அப்போது மகளிர் குழு லோன் மற்றும் வீடு கட்ட லோன் தருகிறோம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை முன்பணம் கட்ட வேண்டும் என டிரஸ்ட் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் சுமார் ரூ.40 லட்சம் வரை பொதுமக்களிடம் வசூல் செய்து அந்த நிறுவனத்தில் கட்டியுள்ளார். ஆனால் அவர்கள் 2 வருடமாக லோன் வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளனர். அவர்களுடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த நிறுவனத்திற்கு சென்ற போது நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மகளிர் குழு லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு திண்டுக்கல்,தேனி ஆகிய பகுதிகளில் எர்த் டிரஸ்ட் என்ற நிறுவனம் நடத்தியதும், இதே போல் பல பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஏ.டி.ஜி.பி.பாலநாகதேவி, ஐ.ஜி.சத்திய பிரியா, போலீஸ் சூப்பிரண்டு பி.சி.கல்யாண் ஆகியோரின் உத்தரவு படியும், டி.எஸ்.பி. குப்புசாமி மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் செல்போன் டவரை வைத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சென்னை குரோம்பேட்டை அருகே செல்வராஜ் பதுங்கி உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி கூறுகையில்,

    திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில் எர்த் ட்ரஸ்ட் என்ற நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்யலாம் என்றார்.

    • நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும்.

    சென்னை:

    நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர்களில் 40 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்ஸ் அப் செயலி வழியாக பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் செல்போன் திரையை அனுப்பி வைக்கும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் உள்ளது. இதனை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் கோடிக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பேசி வாட்ஸ் அப் பயனாளர்களை மயக்கும் இந்த கும்பல் குறுகிய காலத்தில் நீங்கள் பணக்காரர்கள் ஆகிவிடலாம், நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.

    இந்த நிலையில் மோசடி கும்பல் வாட்ஸ் அப் திரைககளையும் விட்டு வைக்கவில்லை. பொதுமக்களிடம் இருந்து வாட்ஸ் அப் திரைகளை அனுப்ப சொல்லி, அதில் உள்ள ரகசிய தகவல்களை மோசடி கும்பல் திருடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாட்ஸ் அப்பில் பேசி அரசு அதிகாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு உயர் பதவிகளில் இருப்பவர்கள் போல் பேசி இந்த மோசடி ஆசாமிகள் பணத்தை வாரி சுருட்டி உள்ளனர்.

    வியட்நாம், கென்யா, எத்தியோப்பியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து மோசடி ஆசாமிகள் நாடு முழுவதும் 10 ஆயிரம் கோடி அளவுக்கு பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் ரூ. 10 ஆயிரத்து 319 கோடி அளவுக்கு வாட்ஸ் அப் பயன்படுவோரிடம் இருந்து வெளிநாட்டு மோசடி கும்பல் பணத்தை சுருட்டி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாட்டு மையம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எனவே வாட்ஸ் அப்பயன்படுத்துவோர்கள் எந்த எந்த விஷயங்களை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும். அதன் பிறகு 84, 63, 24 என்பது போன்ற எண்களில் இருந்து மோசடி அழைப்புகள் வருகின்றன. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் பொது மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீண்ட நேரம் வாட்ஸ்- அப்பை பயன்படுத்துவோர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பூட்டர் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை இணைத்து பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டதும் தெரியவந்தது.
    • வங்கி லாக்கரில் 93 பவுன் நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன் (66). இவர் வணிக நோக்கில் பூட்டர் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி அந்த அலுவலகத்தையும் பல்கலைக்கழக வளாகத்திலேயே நடத்தி வந்தார்.

    இது தொடர்பாக பல்கலைக்கழக சட்ட ஆலோசகர் இளங்கோ என்பவர் கருப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜெகநாதன், பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ்குமார், ராம் கணேஷ் ஆகிய 4 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.

    இதில் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரியில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே பூட்டர் நிறுவனம் செயல்பாடு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில் பூட்டர் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை இணைத்து பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டதும் தெரியவந்தது.

    இதை ஒட்டி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இதழியல் துறை அலுவலகத்தில் உள்ள பூட்டர் நிறுவன அலுவலகத்தில் நேற்று 3 மணி நேரம் சோதனை நடத்தினர். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கனரா வங்கியில் பதிவாளர் தங்கவேல் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர்.

    குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சூர்யா தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீசார் தங்கவேலுவின் மனைவி வெண்ணிலா முன்னிலையில் அவரது வங்கி கணக்கையும் ஆய்வு செய்தனர். அப்போது வங்கி லாக்கரில் 93 பவுன் நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மேலும் தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் ராம் கணேஷ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் பிடிக்க உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் சென்னையில் கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை பிடிக்க சென்னையில் முகாமிட்டு தனிப்படை போலீசார் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்த நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென கோரி அரசு தரப்பில் வாதாடப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுவரை ஐகோர்ட்டில் அது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் அவரது ஜாமீனை ரத்து செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    • கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.
    • ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ஒருவர், தனது சகோதரி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நிதி நிறுவனம் நடத்தினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் கடந்த, 2021-ம் ஆண்டு முதல், 7 கிளைகளுடன், போச்சம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் நடத்தி உள்ளனர். இதில், கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.

    இதை நம்பி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள், ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட, ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.

    இது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தை முடித்து திரும்பிய அமைச்சர் சக்கரபாணியிடம் பொது மக்கள் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர்.

    அந்த நேரம் காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி உள்ளேன். உங்கள் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் சத்யா நகரில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் மாநகரப் பேருந்து பஸ் கண்டக்டராக கே.கே. நகர் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 24- ந் தேதி அசோக் நகர் பகுதியில் இருந்து கே.கே. நகர் பணிமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக அதே பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வரும் அலெக்சாண்டர் ராஜா என்பவர் ஏழுமலையின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி உள்ளார். அப்போது கே.கே. நகர் பணிமனையின் அருகில் ஏழுமலையின் இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானது.

    ஏழுமலைக்கு அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. கடந்த 13-ந் தேதி வங்கி கணக்கில் இருந்து 800 ரூபாய் எடுக்கப்பட்டது. அதற்கான குறுஞ்செய்தி தனது செல்போனுக்கு வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் விசாரித்தார்.

    அப்போது வேறு ஒரு நபர் ஆதார் எண் மற்றும் ஏ.டி.எம். கார்டை காண்பித்து தனது பாஸ்புக் காணவில்லை என்றும் இதனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து 800 ரூபாயை எடுத்து கொண்டு சென்றது தெரிய வந்தது. ஏழுமலையின் கை யெழுத்தை அலெக்சாண்டர் ராஜாவே போலியாக போட்டு பணம் கேட்டு உள்ளார். கையெழுத்தில் சந்தேகம் ஏற்படவே வங்கி அதிகாரிகள் அவரை விசாரித்துள்ளனர். நீண்ட காலமாக தனது கையெழுத்து மாறி உள்ளதாகவும் தற்போது தான் நேரடியாக வங்கிக்கு வந்து பணம் எடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஏழுமலை சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டார். அப்போதுதான் டிரைவர் அலெக்சாண்டர் ராஜா தனது பெயரில் போலியாக ஆதார் அட்டையில் புகைப் படத்தை மார்பிங் செய்து வங்கியில் கொடுத்ததும் அதேபோல் தனக்கு பாஸ்புக் இல்லை என்றும் புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதுமட்டுமின்றி ஏழுமலையின் வங்கிக் கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் தனக்கு கடன் வேண்டுமென இந்தியன் வங்கிக் கிளையில் கேட்டு அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுத்து உள்ளார்.

    நேற்று மீண்டும் ஏழுமலைக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இந்தியன் வங்கி மூலம் பத்து லட்ச ரூபாய் கடன் பெற்றுக் கொள்ளலாம் என வந்து உள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

    அதன் பிறகு ஏழுமலை நண்பர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக வங்கிக்கு வந்த அலெக்சாண்டர் ராஜாவை பிடித்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லிப்ட் கேட்டபோது கீழே விழுந்த ஏழுமலையின் மணிபர்சில் இருந்து ஆவணங்களை எடுத்து அலெக்சாண்டர் ராஜா கைவரிசை காட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    • வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    • மோசடியின் பின்னணியில் உள்ள பீகார் கும்பல் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகர், கீரைக்கார தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 47). இவர் பிரபல தனியார் துரித உணவகத்தின் கிளையை அரியலூரில் தொடங்குவதற்காக முடிவெடுத்தார். இதற்காக இணையதளம் ஒன்றில் பதிவு செய்தார். இதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அந்த இணையதளத்தில் பதிவு செய்தார்.

    இந்நிலையில் அவரை செல்போனில் தொடர்புகொண்ட சிலர் பல்வேறு காரணங்களை கூறி பணம் செலுத்த கூறியுள்ளனர். முன்தொகை மற்றும் தடையில்லா சான்று, பதிவுச்சான்றுக்கு என ரூ.66.20 லட்சத்தை பல்வேறு தவணைகளில் பெற்றனர்.

    ஆனால் துரித உணவகம் திறக்க எந்தவித அனுமதியும் கிடைக்கவில்லை. மேலும் அந்த இணையதளம் போலி என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கொளஞ்சிநாதன் இலவச இணைய குற்ற புகார் எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

    இதனைதொடர்ந்து திருச்சி மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின்பேரில், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில், அரியலூர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவநேசன்(தொழில்நுட்பம்), போலீசார் சுரேஷ்குமார், சுதாகர், ரஞ்சித்குமார், அரவிந்தசாமி, செல்வமாணிக்கம், வசந்தி ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து முதற்கட்டமாக குற்றம்புரிய பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்த ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்தை போலீசார் முடக்கினர். மேலும் குற்றவாளிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கடந்த 9-ந்தேதி பெங்களூருக்கு சென்று பிரபல தனியார் உணவகத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முகமது இத்ரீஸ் (39), தருண் (21) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பல்வேறு வங்கிகளில் மொத்தம் 15 வங்கி கணக்குகளை தொடங்கி, 10 சிம்கார்டுகள் உதவியுடன், பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் பீகாரில் உள்ள முக்கிய குற்றவாளிக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனைதொடர்ந்து, முகமது இத்ரீஸ், தருண் ஆகியோரிடம் இருந்து 2 செல்போன்கள், 4 சிம்கார்டுகள், 4 வங்கி கணக்கு புத்தகங்கள், 5 காசோலை புத்தகங்கள், 5 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்த கும்பல் தமிழகம் முழுவதும் பல்வேறு மோசடியில் ஈடுபட்டிருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    செல்போனில் ஓ.டி.பி. பெற்று மோசடி, ஆன்லைன் லோன் தருவதாக மோசடி, செல்போன் டவர் அமைக்க இருப்பதாக கூறி மோசடி என பல்வேறு நூதனை மோசடிகளை ஆன்லைன் மூலமாக அரங்கேற்றி உள்ளனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த மோசடியின் பின்னணியில் உள்ள பீகார் கும்பல் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் சிலர் பீகர் செல்ல உள்ளனர். பீகார் போலீசார் உதவியுடன் நூதன மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    • கிருஷ்ணகிரி அருகே ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 32 லட்சம் மோடி என புகார்.
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள கே.மோட்டூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 37). பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 5-ந் தேதி இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

    அதில் இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை என்றும், மேலும் பண முதலீட்டுக்கு அதிக லாபத்துடன் தருவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதை நம்பி கோவிந்தராஜ் அதில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு ரூ.12 லட்சத்து 45 ஆயிரத்து 641 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார்.

    அனால் சொன்னபடி கோவிந்தராஜிற்கு எந்த தொகையும் லாபத்துடன் வரவில்லை. இதையடுத்து அதில் குறிப்பட்டிருந்த எண்ணிற்கு அவர் தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோவிந்தராஜ் அது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    மற்றொரு சம்பவம்

    ஓசூர் அண்ணா நகரை சேர்ந்தவர் இளையராஜர் (32). இவரது செல்போன் வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 19-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் யூடியூப்பில் மதிப்புரை செய்யும் பகுதி நேர வேலை என்றும், மேலும் முதலீட்டிற்கு அதிக லாபத்துடன் தருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

    அதை நம்பி இளையராஜா ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 669 தொகையை வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். அந்த தொகையை பெற்ற பிறகு இளையராஜாவிற்கு எந்த பணமும் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த இளையராஜா அதில் குறிப்பட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேச முயன்ற போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்தை உணர்ந்த இளையராஜா அது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த 2 புகார்கள் குறித்தும் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.
    • இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் 32 வயது வாலிபர்். இவருக்கு பகுதி நேர வேலை ெதாடர்பாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வந்தது. அதில் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.

    இதனை நம்பிய அவர் 7 தவணைகளாக ரூ.6 லட்சத்து 71 ஆயித்து 241 - ஐ அவர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஆனால் அவர் கூறிய படி கமிஷன் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார்.
    • 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கொழும்பு செட்டியார் தெருவை சேர்நதவர் லட்சுமணன்(வயது 35). தி.மு.க. பிரமுகரான இவர் கிருஷ்ணாபுரத்தில் ஜெராக்ஸ் மற்றும் கணினி மூலம் ஜாப் ஒர்க் செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார்.

    இவர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் ஆகியோரிடம் அரசு பணியில் வேலை பெற்று தருவதாக கூறி தலா ரூ.8 லட்சமும், சண்முகநாதன் மகள் சித்ரா என்பவரிடம் ரூ. 4 லட்சமும் வாங்கி கொண்டு அவர்கள் 3 பேருக்கும் தமிழக அரசு வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணையை லட்சுமணன் கொடுத்துள்ளார். ஆனால் அவ்வாறு கொடுக்கப்பட்ட ஆணைகள் போலியானது என்பது அவர்கள் வேலைக்கு சேர சென்ற இடங்களில் தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார். அவரிடம் வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது? அவர் வேறு யாரையெல்லாம் ஏமாற்றி பணம் பறித்துள்ளார்? என்பது குறித்து போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    அதில் கிருஷ்ணாபுரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அய்யனார்(57) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. லட்சுமணனுக்கு தி.மு.க.வில் பெரிய அளவில் பொறுப்புகள் ஏதும் இல்லை. ஆனாலும் அவ்வப்போது அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதனை தற்போது பாதிக்கப்பட்டவர்களிடம் காட்டி தன்னை இளைஞரணி நிர்வாகி என்று கூறி கொண்டுள்ளார்.

    பின்னர் தனக்கு பழக்கமான அய்யனார் மூலமாக அவரது உறவினர் பெண்ணான சித்ராவிடம் நைசாக பேசி நம்ப வைத்து முதலில் ரூ.25 ஆயிரம் வாங்கி உள்ளார். பின்னர் அவரிடம் ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு ரூ.1 லட்சம் வேண்டும் என்று கூறி பல்வேறு தவனைகளாக மொத்தம் ரூ.4 லட்சம் பெற்றுள்ளார். இதேபோல் மற்ற 2 பேர்களிடமும் இதேபோல் தலா 8 லட்சம் பெற்றுள்ளார் என்பதும், இவர்களை அய்யனார் தான் லட்சுமணனிடம் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கரூர் அருகே உள்ள தாந்தோணிமலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • . அப்போது சரவணன் போலியான நகைகளை வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கரூர்,நவ

    கரூர் அருகே உள்ள தாந்தோணிமலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் வெங்கமேட்டை சேர்ந்த சரவணன் (வயது 42), அவரது மனைவி செல்வி (45) ஆகியோர் பெரம்பலூர் மெயின் ரோட்டை சேர்ந்த மணி (71), திருச்சியை சேர்ந்த சந்திரசேகரன் (68) ஆகியோரின் உதவியுடன் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.16 லட்சத்து 80 ஆயிரத்து 900-ஐ பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சரவணன் போலியான நகைகளை வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து தனியார் நிதி நிறுவன மேலாளர் தம்மாநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கவுதமன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கரூர் ஜவகர் பஜாரில் காரில் வந்த சரவணனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், 3 போலி தங்க காயின், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மணி, சந்திரசேகரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள செல்வியை தேடி வருகின்றனர்.

    கைதான 3 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபப்ட்டனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    ×