search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை மோசடி"

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார்.
    • 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கொழும்பு செட்டியார் தெருவை சேர்நதவர் லட்சுமணன்(வயது 35). தி.மு.க. பிரமுகரான இவர் கிருஷ்ணாபுரத்தில் ஜெராக்ஸ் மற்றும் கணினி மூலம் ஜாப் ஒர்க் செய்து கொடுக்கும் கடை நடத்தி வருகிறார்.

    இவர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் ஆகியோரிடம் அரசு பணியில் வேலை பெற்று தருவதாக கூறி தலா ரூ.8 லட்சமும், சண்முகநாதன் மகள் சித்ரா என்பவரிடம் ரூ. 4 லட்சமும் வாங்கி கொண்டு அவர்கள் 3 பேருக்கும் தமிழக அரசு வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணையை லட்சுமணன் கொடுத்துள்ளார். ஆனால் அவ்வாறு கொடுக்கப்பட்ட ஆணைகள் போலியானது என்பது அவர்கள் வேலைக்கு சேர சென்ற இடங்களில் தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார். அவரிடம் வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது? அவர் வேறு யாரையெல்லாம் ஏமாற்றி பணம் பறித்துள்ளார்? என்பது குறித்து போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    அதில் கிருஷ்ணாபுரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அய்யனார்(57) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. லட்சுமணனுக்கு தி.மு.க.வில் பெரிய அளவில் பொறுப்புகள் ஏதும் இல்லை. ஆனாலும் அவ்வப்போது அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதனை தற்போது பாதிக்கப்பட்டவர்களிடம் காட்டி தன்னை இளைஞரணி நிர்வாகி என்று கூறி கொண்டுள்ளார்.

    பின்னர் தனக்கு பழக்கமான அய்யனார் மூலமாக அவரது உறவினர் பெண்ணான சித்ராவிடம் நைசாக பேசி நம்ப வைத்து முதலில் ரூ.25 ஆயிரம் வாங்கி உள்ளார். பின்னர் அவரிடம் ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு ரூ.1 லட்சம் வேண்டும் என்று கூறி பல்வேறு தவனைகளாக மொத்தம் ரூ.4 லட்சம் பெற்றுள்ளார். இதேபோல் மற்ற 2 பேர்களிடமும் இதேபோல் தலா 8 லட்சம் பெற்றுள்ளார் என்பதும், இவர்களை அய்யனார் தான் லட்சுமணனிடம் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கடற்படையில் தளபதியாக வேலை செய்து வருவதாக கூறி பலரிடம் அறிமுகம் செய்து கொண்டார்.
    • வேலையில்லா பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சூர்யா சலபதி ராவ். இவர் கடற்படையில் தளபதியாக வேலை செய்து வருவதாக கூறி பலரிடம் அறிமுகம் செய்து கொண்டார் .

    விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்தார்.

    மேலும் போலியான சான்றிதழ்கள் தயார் செய்து வழங்கினார்.

    இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கடற்படை வளாகத்தில் அக்னிபாத் திட்டத்தில் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யும் பணி கடந்த புதன்கிழமை தொடங்கியது.

    சூர்யா சலபதி ராவ் கொடுத்த போலி சான்றிதழ்களுடன் சிலர் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யும் முகாமில் கலந்து கொண்டனர் .அப்போது முகாமில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

    இதில் பல்வேறு பட்டதாரிகளின் சான்றிதழ்கள் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. போலி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டவர்களிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசாரணையின்போது சூர்யா சலபதி ராவ் சான்றிதழ் வழங்கியதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து ராணுவ அதிகாரிகள் சூர்யா சலபதிராவை பிடித்து விசாரணை நடத்தியதில் போலி சான்றிதழ்கள் தயார் செய்து வழங்கியது தெரியவந்தது. ராணுவ அதிகாரிகள் இது குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சூர்யா சலபதி ராவை கைது செய்து அவரிடமிருந்து கார், கடற்படை அதிகாரிகளுக்கான உடைகள், செல்போன், லேப்டாப், போலி அடையாள அட்டை, போலி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சூர்யா சலபதி ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • குடும்பம் வறுமையில் தவித்து வந்ததால் நர்சு வேலையை தனக்கு வாங்கி தருமாறு இளம் பெண் கேட்டார்.
    • பாபு மற்றும் அருண்குமார் மீது மோசடி, ஏமாற்றுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

    போரூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த நர்சிங் பட்டதாரியான இளம் பெண் ஒருவருக்கு தோழி ஒருவர் மூலம் சாலிகிராமத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் அலுவலகம் நடத்தி வரும் பாபு மற்றும் அருண்குமார் ஆகியோர் அறிமுகமானார்கள்.

    அப்போது அவர்கள் துபாயில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சு வேலை உள்ளது என்றும் அங்கு சென்றால் மாதம்தோறும் ரூ.3 லட்சம் சம்பளம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினர்.

    தனது குடும்பம் வறுமையில் தவித்து வந்ததால் நர்சு வேலையை தனக்கு வாங்கி தருமாறு இளம் பெண் கேட்டார். இதற்கு கட்டணமாக ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் பணத்தை பாபு மற்றும் அருண்குமார் பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் ஒரு மாதம் கழித்து வேலை கிடைத்து விட்டதாக கூறி பணி நியமன ஆணை ஒன்றை இளம் பெண்ணிடம் கொடுத்தனர். இதையடுத்து துபாயில் உள்ள நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது அது போலியானது என்று தெரிந்து வேலை வாங்கி தருவதாக நூதனமான முறையில் பணத்தை சுருட்டியதும் தெரிந்தது.

    இதையடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பாபு மற்றும் அருண்குமார் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் இளம் பெண் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாபு மற்றும் அருண்குமார் மீது மோசடி, ஏமாற்றுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

    • வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த சிவகாசி பா.ஜ.க. நிர்வாகி முன்ஜாமீன் மனு செய்யப்பட்டது.
    • அதில் இந்த வழக்கிற்கும், தனக்கும் தொடர்பில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காகவே தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    விருதுநகர்

    சிவகாசி நகர பா.ஜ.க. செயலாளர் பாண்டியன் இவரின் மகனுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக சிவகாசி மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தலைவர் கலையரசன் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.11 லட்சம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

    அதன் பிறகு ரெயில் வேயில் வேலை கிடைக்க வில்லை. இதையடுத்து துறை முகத்தில் வேலை வாங்கி தருவதாக சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த வேலையும் கிடைக்கவில்லை.

    பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவில் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் கலையரசன் கைது செய்யப்பட்டார். சுரேஷ்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு சுரேஷ்குமார் சிவகாசி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    அதில் இந்த வழக்கிற்கும், தனக்கும் தொடர்பில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காகவே தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும், அதனால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    • சார், எங்களுக்கு டிக்கெட் பரிசோதகர் வேலை, கிளார்க் வேலை, போக்குவரத்து உதவியாளர் வேலைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • தினமும் 8 மணி நேரம் போகும் ரெயில்களையும், வரும் ரெயில்களையும் கணக்கெடுக்க சொல்லி இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

    ஒண்ணு... ரெண்டு... மூணு.... மொத்தம் 18 கோச். இதில் ஏ.சி. கோச் 3, முன்பதிவு செய்யப்படாதது 2 என்று டெல்லி ரெயில்வே ஸ்டேசன் பிளாட்பாரங்களில் நம்ம வடிவேலு மாதிரி ஓடி ஓடி சென்று புறப்படும் ரெயில்களையும், வந்த ரெயில்களையும் சில இளைஞர்கள் கணக்கெடுத்து கையில் இருந்த குறிப்பேட்டில் கவனமாக குறித்து கொண்டிருந்தார்கள்.

    பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை மெதுவாக சென்று திரும்பிய போதும் கணக்கெடுப்பாளர்கள் செல்லவில்லை. அங்கேயே நின்று கணக்கெடுப்பதில்தான் தீவிரமாக இருந்தார்கள்.

    இதை கவனித்த இந்தி போலீஸ்காரர்கள் மற்ற பிளாட்பாரங்களில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களுடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

    அப்போது 'பையன்களை பார்த்தால் தமிழ்நாட்டுகாரர்கள், நல்ல படித்தவர்கள் போல் இருக்கிறார்கள் என்று விபரத்தை சொல்லவும் மற்றொரு போலீஸ்காரர் 'டேய், நீ என்ன சொன்ன... இதே போல் 5-வது பிளாட்பாரத்திலும் சிலரை பார்த்தேன். 6-வது பிளாட்பாரத்திலும் சிலரை பார்த்தேன் என்று ஒவ்வொரு போலீஸ்காரரும் சொல்லவே சம்பந்தப்பட்ட இளைஞர்களில் சிலரை அழைத்து கேட்டிருக்கிறார்கள்.

    உடனே அவர்கள் மிகுந்த ஆர்வத்தில் 'சார், எங்களுக்கு டிக்கெட் பரிசோதகர் வேலை, கிளார்க் வேலை, போக்குவரத்து உதவியாளர் வேலைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்காக தினமும் 8 மணி நேரம் போகும் ரெயில்களையும், வரும் ரெயில்களையும் கணக்கெடுக்க சொல்லி இருக்கிறார்கள்' என்று கூறியிருக்கிறார்கள்.

    அதை கேட்டதும், "இவுங்க தலையில் எவனோ மிளகாய் அரைச்சிட்டாண்டா' என்று போலீசார் உஷாராகி விசாரித்த போது தான் பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

    விருதுநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுப்புசாமி (78). இவர் அந்த பகுதியில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்க உதவிகள் செய்துள்ளார்.

    கோவையைச் சேர்ந்த சிவராமன் என்பவரது அறிமுகம் சுப்புசாமிக்கு கிடைத்துள்ளது. சிவராமன் டெல்லியில் எம்.பி.க்கள் குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் அறிமுகம் கிடைத்தால் 'டெல்லியில் என்ன காரியம் ஆக வேண்டுமென்றாலும் பார்த்து கொள்ளலாம் என்று அளந்து விடுவாராம்.

    அவ்வாறு அவர் அளந்து விட்டதைத்தான் சுப்புசாமியும் நம்பி இருக்கிறார். அதாவது ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் முதல் பல வேலைகள் இருக்கிறது. எனக்கு தெரிந்த விகாஸ் ராணா (25) என்பவர் வடக்கு ரெயில்வேயில் உயர் அதிகாரியாக இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.

    அதை நம்பிய சுப்புசாமியும் உள்ளூரில் படித்த சில இளைஞர்களிடம் தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவல்கள் பலருக்கும் தெரியவரவே 28 பேர் வேலை கேட்டு அணுகி இருக்கிறார்கள். அனைவருமே பி.இ., எம்.இ. படித்தவர்கள். ரூ.2 லட்சம் முதல் 24 லட்சம் வரை அவர்களிடம் வசூலித்து மொத்தம் 2½ கோடி ரூபாயை விகாஸ் ராணாவிடம் கொடுத்து இருக்கிறார்கள்.

    அதை பெற்றுக்கொண்ட ராணா பணி ஆணை வாங்குவதற்கு முன்பு உங்களுக்கு பயிற்சி தேவை என்று ஒரு இடத்தில் தங்க வைத்து சில பயிற்சி புத்தகங்களை படிக்க கொடுத்துள்ளார்.

    அந்த பயிற்சிகளில் ஒன்றுதான் இந்த ரெயில்கள் கணக்கெடுப்பும். இந்த பயிற்சிகள் முடிந்ததும் கன்னாட்பிளேசில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வர வேண்டும். ரெயில்வே அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என்று கூறி இருக்கிறார்.

    ஆனால் எல்லோரையும் வெளியே நிற்க சொல்லி விட்டு சான்றிதழ்களுடன் ராணாவும் அவரது கூட்டாளி துபே என்பவரும் உள்ளே சென்றிருக்கிறார்கள். நீண்ட நேரத்துக்கு பிறகு வெளியே வந்தவர்கள் சில உத்தரவு கடிதங்களையும் வழங்கி இருக்கிறார்கள்.

    ஆனால் அவை அனைத்தும் போலி என்பதும் அவர்கள் ஏமாற்றப்பட்டதும் தெரிய வந்தது. இதுபற்றி டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

    ஏமாந்த தமிழக வாலிபர்கள் இன்னும் எத்தனை பேரோ, போக போகத்தான் தெரிய வரும்.

    ×