search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surgery"

    • சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
    • குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.

    காஞ்சிபுரம்:

    கர்ப்பப்பை பிரச்சினைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது செயற்கைமுறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தையை தத்தெடுத்தல் போன்ற ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்யும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

    நவீன மருத்துவத்தில் இதயம், கல்லீரம், சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளை போல் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்தும் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.

    பெரும்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தமிழகத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரும், ஆந்திராவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரும் கருவுற முடியாததால் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பிறவியிலேயே இருவருக்கும் கர்ப்பப்பை இல்லாமல் போனதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததை விளக்கி இருக்கிறார்கள்.

    வாடகைத்தாய் மூலம் முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். அதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் உறுப்புமாற்று சிகிச்சை முறையில் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ள விரும்பி இருக்கிறார்கள்.

    அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இல்லை. ஆனால் கருமுட்டைகள் உருவாகும் ஓவரி மற்றும் கருமுட்டைகளை கொண்டு செல்லும் குழாய் ஆகியவை நல்ல நிலையில் உள்ளன. இதையடுத்து கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பெண்ணுக்கு அவரது தாயும், மற்றொருவருக்கு அவரது அத்தையும் கர்ப்பப்பை தானம் கொடுக்க முன்வந்தனர்.

    அவர்கள் இருவரும் 54 மற்றும் 56 வயதுடையவர்கள் மாதவிடாய் நின்று போனவர்கள். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தனர். இதனால் அவர்கள் கர்ப்பப்பையை எடுக்க சோதனைகள் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆபரேசன் தேதி குறிக்கப்பட்டது. குறிப்பிடப்பட்ட நாளில் தானம் செய்யும் பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பை அகற்றப்பட்டு இரண்டு பெண்களுக்கும் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 16 மணிநேரம் நீடித்துள்ளது.

    இந்த சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

    இந்த மாதிரி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது சில நேரங்களில் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு உறுப்பை ஏற்றுக் கொள்ளாது. அதை தவிர்க்க விலை உயர்ந்த ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும்.

    அந்த வகையில் இந்த இரு பெண்களும் 3 மாதங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். வருகிற மே மாதம் செயற்கை கருவூட்டல் முறையில் கருமுட்டையை உருவாக்கி கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு குழந்தை வளர்ச்சி கண்காணிக்கப்படும். பின்னர் ஆபரேசன் மூலம் பிரசவம் செய்யப்படும்.

    இந்த மாதிரி கர்ப்பப்பை புதிதாக பொருத்தப்படுவது 5 வருடங்கள் வரை கருவுறும் தன்மை பெற்றிருக்கும். இந்த கால கட்டத்துக்குள் 2 அல்லது 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள முடியும்.

    தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.

    • ஊடுகதிர் வீச்சு எந்திர உதவியுடன் பிலேட் ஸ்குரு பொறுத்தும் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
    • மருத்துவமனை பணியாளர்கள் லட்சுமி, வைத்தியநாதன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அரசு தலைமை மருத்துவஅலுவலர் டாக்டர் சேபானந்தம் மேற்பார்வையில் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக, திட்டக்குடி அடுத்த கிழச்செருவாய்ள கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன்(வயது58), இவர் பைக்கிலிருந்து தானகவே தவறி விழுந்து வலது தோள்பட்டை எலும்பு 5 பாகமாக உடைந்ததை கணினி உதவியுடன் இயங்கும் ஊடுகதிர் வீச்சு எந்திர உதவியுடன் பிலேட் ஸ்குரு பொறுத்தும் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

    திட்டக்குடி அரசு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஆனந்த், தினேஷ், கார்த்திக், மயக்கமருந்து நிபுணர் டாக்டர் கிருத்திகா, அறுவை அரங்கு செவிலியர்கள் மகேஸ்வரி, மாலா, லட்சுமி, மருத்துவமனை பணியாளர்கள் லட்சுமி, வைத்தியநாதன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர்.திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக தோள்பட்டை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

    • தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும்.
    • அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் புதியதாக திருத்தி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    அறுவை சிகிச்சைகளின் போது பெரும்பாலும், ஒருமுறை பயன்படுத்தும் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும். தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும் என அரசு டாக்டர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர், மருத்துவக் குழுவினர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

    அதன் விபரம் வருமாறு:- அறுவை சிகிச்சைக்கு நோயாளி தகுதியானவரா என்பதை உறுதி செய்த பிறகே அது தொடர்பான நடவடிக்கைகளை துவங்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியின் ரத்த சர்க்கரை அளவு 200க்கும் குறைவாகவும், ரத்த அழுத்தம் குறைந்தபட்சம் 90. அதிகபட்சம், 150க்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். அறுவை சிகிச்சைக்கு முன், சிகிச்சையின் தன்மை உள்ளிட்ட பிற விபரங்களை நோயாளியிடம் அல்லது அவர்களது உறவினர் ஒருவரிடம் தெளிவாக எடுத்து கூறி, ஒப்புதல் பெற வேண்டும்.

    அறுவை சிகிச்சை அரங்கு கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒன்றுக்கு இருமுறை வழிகாட்டுதல்களை சரிபார்த்து அதனடிப்படையில் சிகிச்சைகளை துவங்க வேண்டும். அறுவை சிகிச்சைகளின் போது பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும். தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் அடைந்ததையடுத்து, அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் புதியதாக திருத்தி வழங்கப்பட்டுள்ளது.அவை குறித்து அரசு டாக்டர்கள், அறுவைசிகிச்சை பிரிவில் பணியாற்றுவோருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • குடும்பநல அறுவைசிகிச்சை ஏற்கும் ஆண்களுக்கு ரூ.3,100 அன்பளிப்பு வழங்கப்படும்.
    • குடும்பநலச்செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை ரதம் .

    திருப்பூர் : 

    மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்ட குடும்பநல செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தினை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது:- திருப்பூர் மாவட்ட குடும்பநலச்செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரதம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நகர்வலம் வரும். இதுகுறித்த விளம்பர கையேடுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் விளக்க கையேடு, முகாம் நடைபெறும் தேதிகள் அடங்கிய கைபிரதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த இருவார விழாவினை முன்னிட்டு ஆண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சை முகாம்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன. குடும்பநல அறுவைசிகிச்சை ஏற்கும் ஆண்களுக்கு ரூ.3,100 அன்பளிப்பு வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) கனகராணி, துணை இயக்குநர் (குடும்பநலம்) கௌரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் அருகே கிருஷ்ண புரத்தைச் சேர்ந்தவர் சிவனா பிள்ளை. இவர் கீழக்கரையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது39).

    இவர் 8 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு சிரமம் அடைந்து வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

    இதையடுத்து காளீஸ்வரி கீழக்கரை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்தார். தலைமை டாக்டர் ஜவாஹிர் ஹூசைன், எலும்பு சிகிச்சை டாக்டர் பிரகாஷ் ஆகியோர் இவரை பரிசோதனை செய்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு பலத்த சேதமடைந்து இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காளீஸ்வரிக்கு செயற்கை எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. டாக்டர் பிரகாஷ் தலைமையில் கமுதி அரசு மருத்துவமனை டாக்டர் பிரபாகரன், மயக்கவியல் மருத்துவர் உமா சங்கரி, செவிலியர் ஆனந்தி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சுமார் 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

    அறுவை சிகிச்சை செய்து கொண்ட காளீஸ்வரி கூறுகையில், தனியார் மருத்துவ மனைக்கு இணையாக அரசுமருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை நடத்த முடியும் என்பதை கீழக்கரையில் டாக்டர்கள் நிரூபித்து விட்டனர்.

    இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு செல்ல உள்ளேன். ஒரு ரூபாய் கூட எனக்கு செலவில்லாமல் முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் செயற்கை மாற்று எலும்பு அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்த டாக்டர்களை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    • கண் அறுவை சிகிச்சை பிரிவு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு கண் நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • கண் தானம் செய்தால் மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கலாம். 35 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் இன்று உலக கண்ணொ தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு இளங்கலை மாணவர்க ளால் உருவா க்கப்பட்ட கண்ணொளி பற்றிய கண்காட்சிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

    இந்த கண்காட்சியை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருது துரை, நிலைய மருத்துவ அலுவலர் உஷா தேவி மற்றும் டாக்டர்கள் பார்வையிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கண்ணொளி பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேசும்போது, தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு ஆஸ்பத்திரியில் கண் அறுவை சிகிச்சை பிரிவு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு கண் நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மாதாந்திர கண்புரை அறுவை சிகிச்சையில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கண் தானம் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். கண் தானம் செய்தால் மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கலாம். 35 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் துறை பேராசிரியரும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளருமான ஞான செல்வன் தலைமையில் செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் இணை பேராசிரியர் அன்புசெல்வி நன்றி கூறினார்.

    முன்னதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

    இந்த ஒரு மாத அளவில் கண் புரை அறுவை சிகிச்சையில் டாக்டர்களின் பங்களிப்பில் ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரி மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. கண் தானம் செய்வதை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். கண் தானம் செய்வது மிகவும் எளிது. உடல் தானம் செய்பவர்கள் கூட கண் தானம் செய்யலாம்.

    ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போவதாக புகார்கள் வந்துள்ளன. அதனை தடுக்க 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • விளையாட்டு பொருட்களில் பொருத்தப்பட்டு இருந்த சிறிய அளவிலான எல்.இ.டி. பல்பு குழந்தை கையில் வைத்திருந்த நிலையில் திடீரென வாயில் வைத்து விழுங்கியது.
    • குழந்தை விழுங்கிய பல்பு உணவுக்குழாய்க்குள் செல்லாமல் மூச்சுக்குழாய்குள் சென்று விட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் சங்கர். இவர் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சபீதாபாரதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    2-வது மகன் தமிழ்முகிலன். பிறந்து 10 மாதம் ஆகிறது.

    இந்த நிலையில் வீட்டில் தமிழ்முகிலனுடன் அவனது சகோதரன் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது விளையாட்டு பொருட்களின் பொருத்தப்பட்டு இருந்த சிறிய அளவிலான எல்.இ.டி. பல்பு குழந்தை கையில் வைத்திருந்த நிலையில் திடீரென வாயில் வைத்து விழுங்கியது.

    இதனை பார்த்த சிறுவன் தனது தந்தையிடம் கூறி உள்ளார். உடனடியாக பெற்றோர் குழந்தையை அரியலூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று காண்பித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில்தஞ்சையில் உள்ள எம்.ஆர். மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

    அங்கு குழந்தைக்கு பரிசோதனை செய்த நிலையில் 2 சிறிய கம்பிகள் நீட்டிக்கொண்டிருந்த நிலையில் எல்.இ.டி. பல்பு சிறுவன் விழுங்கியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவனுக்கு 1 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பல்பை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.

    குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் மைக்கேல் தலைமையில் பொது மற்றும் புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜீவ் மைக்கேல், குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மேத்யூ மைக்கேல், மயக்க மருந்து நிபுணர் குளாளன் ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். தற்போது குழந்தை நல்ல நிலையில் உள்ளது.

    இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், குழந்தை விழுங்கிய பல்பு உணவுக்குழாய்க்குள் செல்லாமல் மூச்சுக்குழாய்குள் சென்று விட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்பு வெளியே எடுக்கப்பட்ட பின்னர் குழந்தை நன்றாக மூச்சு விடுகிறது என்றனர்.

    குழந்தையின் தந்தை சங்கர் கூறுகையில், மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட நிலையில் எனது குழந்தையை இங்கு கொண்டு வந்து சேர்த்தோம். டாக்டர்கள் உரிய சிகிசை அளித்ததால் எனது குழந்தையின் உயிர் திரும்ப கிடைத்துள்ளது என்றார்.

    • சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவனுக்கு உதவி செய்தனர்.
    • வெளியான தேர்வு முடிவில் அசாருதீன் தேர்ச்சி பெற்றுள்ளான்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த அக்கிம் என்பவரது மகன் அசாருதீன். அதே பகுதியில் இயங்கிவரும் காமராஜ் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் அசாருதீன் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த நிலையில் கடந்த 15- ந் தேதி மாணவன் அசாருதீன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

    நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மீதம் இரண்டு தேர்வுகள் எழுதயிருந்ததால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் மனம் தளராமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் ஆம்புலன்சில் ஸ்ட்ரக்சருடன் சென்றபடி 17-ம் தேதி நடைபெற்ற தேர்வில் மாணவன் அசாருதீன் கலந்து கொண்டார். தொடர்ந்து 20-ம் தேதி நடைபெற்ற கடைசி தேர்விலும் அசாருதீன் கலந்து கொண்டார்.

    சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவனுக்கு உதவி செய்தனர். இந்த நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் அசாருதீன் தேர்ச்சி பெற்றுள்ளான். விபத்தில் சிக்கிய போதும் தன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வு என்பதால் அசாரூதின் தேர்வில் கலந்து கொண்டதுடன் கடினமான சூழலில் வெற்றி பெற்றிருப்பது சக மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு சிறுநீரக கற்களை அகற்றும் ஆபரேசன் செய்யப்பட உள்ளது. #Pele
    பிரேசில் கால்பந்து ஜாம்பவானான 78 வயது பீலே, பிரான்ஸ் நாட்டில் நடந்த கால்பந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கடந்த 2-ந் தேதி அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து தனது சொந்த நாடான பிரேசிலுக்கு நேற்று முன்தினம் திரும்பினார்.

    சாவோ பாவ்லோ விமான நிலையம் வந்தடைந்த பீலே உடனடியாக அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் பீலேவுக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், அதனை அகற்ற ஆபரேஷன் செய்யப்பட இருப்பதாகவும் மருத்துவமனை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், எப்போது ஆபரேசன் செய்யப்படும் என்ற தகவலை வெளியிடவில்லை. #Pele
    தெலுங்கானா மாநிலத்தில் ஆபரேஷன் செய்ய வந்த பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் கத்தரிக்கோலை வைத்து தைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #NIMS #scissorsinabdomen
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தின் மங்கலஹாட் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி சவுத்ரி (32), குடலிறக்க நோயால் கடும் பாதிப்பு அடைந்தார்.

    இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நிஜாமாபாத் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (NIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அவருக்கு ஆபரேஷன் செய்ய முடிவானது.

    கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டாக்டர்கள் அவருக்கு ஆபரேஷன் செய்தனர். உடல்நலம் தேறி வந்தவருக்கு மீண்டும் கடும் வயிற்று வலி ஏற்பட்டது.



    இதைத்தொடர்ந்து, ஆபரேஷன் செய்த மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். வயிற்றில் நீளமான கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில், ஏற்கனவே நிம்ஸ் மருத்துவமனையில் நடந்த ஆபரேஷனில் தவறுதலாக கத்தரிக்கோலை வயிற்றுக்குள் வைத்துள்ளது தெரிய வந்தது. நிம்ஸ் மருத்துவமனையில் நடந்த இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இதுதொடர்பாக, மகேஸ்வரியின் கணவர் மருத்துவமனை மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். #NIMS #scissorsinabdomen
    அறுவை சிகிச்சை செய்ததில் டாக்டர்களின் கவனக்குறைவால் 3-வது பெண் குழந்தை பெற்ற பெண் ரூ.10 லட்சம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு ஐக்கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ChennaiHighcourt
    சென்னை:

    சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் தனம் (30). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு நாகர்கோவில், ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டேன். இதற்கான சான்றிதழை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் வழங்கியது.

    இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றேன். என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள், நான் கருவுற்றுள்ளதாக கூறினார்கள்.

    இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், கவனக்குறைவாக செய்த குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையினால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எனக்கு 3-வது பெண் குழந்தை கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தது.

    இதையடுத்து எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்படி கன்னியாகுமரி மாவட்ட குடும்பநல மையத்தின் துணை இயக்குனர், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பினேன். என்னை பரிசோதனைக்கு அழைத்தனர்.

    நானும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி, கடந்த மே 7-ந்தேதி, ஜூன் 18-ந்தேதி பரிசோதனைக்கு சென்றேன். என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள், இதுவரை இழப்பீடு வழங்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்யாமல், காலம் கடத்துகின்றனர். எனவே, எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சுடலையாண்டி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி, சுகாதாரம் மற்றும் குடும்பலநலத்துறை செயலாளர், மருத்துவ கல்வி மற்றும் குடும்பநலத்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHighcourt
    மேற்கு வங்காளத்தில் தொழிலாளி வயிற்றில் குத்திய இரும்புக் கம்பிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அவரது உயிரை டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர். #Surgery
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்தவர் உதய் சர்க்கார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று பரூபுர் பகுதியில் சென்ற சர்க்கார் அவரது அறையில் தொங்கி கொண்டிருந்த வயரை தொட்டார். அப்போது மேற்கூரையில் இருந்து அவருடைய வயிற்றின் மீது மூன்று இரும்புக் கம்பிகள் குத்தின.

    அதில் அலறி துடித்த சர்க்கார், அருகிலுள்ள சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்து இரும்பு கம்பிகளை பத்திரமாக அகற்றினர்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இரும்புக் கம்பிகள் வயிற்றில் குத்திய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 
    மருத்துவமனைக்கு சர்க்கார் அழைத்து வரப்பட்டார். அவருக்கு 5 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்ய முடிவானது.

    சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையால் சர்க்கார் வயிற்றில் இருந்த இரும்புக் கம்பிகள் அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சையின் போது நிறைய ரத்தம் சேதமானது. ஆனாலும் ரத்தத்தை இருப்பு வைத்திருந்ததால் நாங்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நடத்தி முடித்தோம். சர்க்கார் தொடர்ந்து டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் என தெரிவித்தார்.
    ×