search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது பெண் குழந்தை பெற்ற பெண்ணுக்கு ரூ.10 லட்சம் கேட்டு வழக்கு- தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு
    X

    3-வது பெண் குழந்தை பெற்ற பெண்ணுக்கு ரூ.10 லட்சம் கேட்டு வழக்கு- தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

    அறுவை சிகிச்சை செய்ததில் டாக்டர்களின் கவனக்குறைவால் 3-வது பெண் குழந்தை பெற்ற பெண் ரூ.10 லட்சம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு ஐக்கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ChennaiHighcourt
    சென்னை:

    சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் தனம் (30). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு நாகர்கோவில், ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டேன். இதற்கான சான்றிதழை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் வழங்கியது.

    இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றேன். என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள், நான் கருவுற்றுள்ளதாக கூறினார்கள்.

    இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், கவனக்குறைவாக செய்த குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையினால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எனக்கு 3-வது பெண் குழந்தை கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தது.

    இதையடுத்து எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்படி கன்னியாகுமரி மாவட்ட குடும்பநல மையத்தின் துணை இயக்குனர், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பினேன். என்னை பரிசோதனைக்கு அழைத்தனர்.

    நானும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி, கடந்த மே 7-ந்தேதி, ஜூன் 18-ந்தேதி பரிசோதனைக்கு சென்றேன். என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள், இதுவரை இழப்பீடு வழங்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்யாமல், காலம் கடத்துகின்றனர். எனவே, எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சுடலையாண்டி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி, சுகாதாரம் மற்றும் குடும்பலநலத்துறை செயலாளர், மருத்துவ கல்வி மற்றும் குடும்பநலத்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHighcourt
    Next Story
    ×