search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem DistrictNews"

    • ஊத்துமலை பகுதியில் சில வாலிபர்கள் வாக்கி டாக்கி மூலம் பேசிக் கொண்டிருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது.
    • அவர்களிடம் இருந்த வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை பகுதியில் சில வாலிபர்கள் வாக்கி டாக்கி மூலம் பேசிக் கொண்டிருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது.

    இதைத் தொடர்ந்து இன்று காலை சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் சேலம் தாதகாப்பட்டி சண்முக நகர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன்(35), அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வில்வேஸ்வரன் (22), தாதகாப்பட்டி ஸ்ரீரங்கம் தெருவை சேர்ந்த நாகராஜன் (20) என்பது தெரியவந்தது.

    இவர்கள் போலீசார் மற்றும் ஆட்கள் நடமாட்டத்தை நோட்டமிட்டு வாக்கி டாக்கி மூலம் தகவல்களை பரிமாறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வாலிபர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார்.

    சேலம்:

    தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார். இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான ஜெகதீசபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ராசா அம்மையப்பன், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ ரத்னா அல்லி முத்து, மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை, நாடாளுமன்ற பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், கொள்கை பரப்புச் செயலாளர் நல்லான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    அப்போது கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். வீரபாண்டி தொகுதி துணைத் தலைவர் எருமாபாளையம் சுரேஷ் மேற்கு தொகுதி செயலாளர் மணிகண்டன், தெற்கு தொகுதி செயலாளர் ஜனார்த்தனன், வடக்கு தொகுதி செயலாளர் பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • திருநங்கை நவ்யா (36), இவர் கடந்த 10 ஆண்டுகளாக அய்யா கவுண்டர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.
    • ஆத்திரம் அடைந்த நவ்யா கட்டையை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (34), சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    திருநங்கை

    அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்தவர் திருநங்கை நவ்யா (36), இவர் கடந்த 10 ஆண்டுகளாக அய்யா கவுண்டர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் சதீஷ்குமார் அடிக்கடி நவ்யாவின் வீட்டிற்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சதீஷ்குமார் தனது நண்பரான வாழப்பாடி பாட்டப்பன் கோவில் பகுதியை சேர்ந்த கவியரசன் (34) என்பவருடன் குடிபோதையில் நவ்யாவை தேடி அவரது வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் அவரை அழைத்து பேசி விட்டு சதீஷ்குமாரும், கவியரசனும் அங்கிருந்து சென்று விட்டனர். மீண்டும் திரும்பி வந்த சதீஷ்குமார் கதவை தட்டி நவ்யாவை வெளியே வரவழைத்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்தார். இதற்கு நவ்யா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    அடித்து கொலை

    இதில் ஆத்திரம் அடைந்த நவ்யா கட்டையை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் கதறி துடித்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு வாழப்பாடியில் முதலுதவி சிகிச்சை அளித்து சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்த சதீஷ்குமார் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    பரபரப்பு வாக்குமூலம்

    இதற்கிடையே நவ்யாைவ கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

    சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு எனது வீட்டிற்கு வந்து என்னை உல்லாசத்திற்கு அழைத்தார். அதற்கு நான்மறுத்ததால் தகாத வார்த்தையால் பேசினார். மேலும் கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கினேன். இதில் நிலைகுலைந்த அவர் தரையில் சாய்ந்தார். இதையடுத்து அங்கிருந்து நான் தப்பி ஓடினேன், ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மருத்துவ பரிசோதனை

    இதையடுத்து சேலம் அரசு மருத்துவ மனையில் அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்து தகுதி சான்றிதழ் பெற்று வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர் விடுமுறையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று மாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர்.

    ஏற்காடு:

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    தொடர் விடுமுறை

    இதேபோல் வருகிற 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்துடன் படையெடுத்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர் விடுமுறையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று மாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். அவர்கள் இங்குள்ள தங்கும் விடுதிகளில் முகாமிட்டு உள்ளனர். ஏற்காட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் முன்பதிவு செய்து அறை எடுத்து சுற்றுலா பயணிகள் தங்கி வருகின்றனர். இதனால் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகிறது.

    விடுதிகளில் இடம் இல்லை

    இதனிடையே சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் அறைகள் முழுவதும் நிரம்பியது. இதனால் நேற்று இரவு முன்பதிவு செய்யாத சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் அவதி அடைந்தனர். ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி அதில் உறங்கினர்.

    கடும் குளிர்

    தற்போது ஏற்காட்டில் லேசான சாரல் மழையுடன் பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. அறை கிடைக்காமல் இரவு முழுவதும் காரில் தூங்கியவர்கள் குளிர் தாங்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சில சுற்றுலா பயணிகள் திரும்பி ஊருக்கு சென்று விட்டனர்.

    3 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிய வாய்ப்புள்ளது.

    • வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.
    • அதனை தடுக்க கொசு ஒழிப்பு உள்பட பல்வேறு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.

    அதனை தடுக்க கொசு ஒழிப்பு உள்பட பல்வேறு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். மேலும் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வு துறை அறிவுறுத்தி உள்ளது.

    தனி வார்டுகள்

    இது ேபால கொசு உற்பத்திக்கு வித்திடும் வகையில் தண்ணீரை அப்புறப்படுத்தாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.மேலும்டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் இந்த மாதத்தில் 610 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இது வரை 4 ஆயிரத்து 454 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதையடுத்து டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் உள்பட மர்ம காய்ச்சல்களை கட்டுப்படுத்தும வகையில், அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், சுழற்சி முறையில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடவும் , நாளை முதல் தமிழகம் முழுவதும் 1000-த்திற்கும் மேற்பட்ட காயச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தவும் அமைச்சர் மா. சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

    75 முகாம்கள்

    இதையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் சுகாதாரத்துறை சார்பில் 75 காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களை பள்ளிகூடங்கள் மற்றும் கிராமங்களில் அதிக அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை களை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மேலும் காய்ச்சல், இருமல், சளி தொல்லை உள்ளவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

    பொதுவாக கொசுக்கள் தண்ணீரில் அதிக அளவில் உற்பத்தியாவதால் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கா தவாறு பார்த்து கொள்ள வேண்டும், வீடுகளில் தேங்காய் சிரட்டைகள், குளிர் சாதன பெட்டியின் பின் பகுதிகள், ஆட்டு உரல், உரல் மற்றும் பாத்தி ரங்களில் நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது.
    • இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன் பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த கிடந்த ஆணின் வலது கையில் சுமன் என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு உள்ளது. அவர் பச்சை நிறத்தில் வெள்ளை நிற கட்டம் போட்ட முழு கை சட்டையும், அடர் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்துள்ளார். மேலும் இவர் இறந்து சுமார் 3 முதல் 5 வாரம் இருக்காலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாமரைச்செல்வன்(26), கூலித் தொழிலாளி. இவருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் 21-ந் தேதி, சங்ககிரி வட்ட மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
    • இது குறித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அருள்மொழி விசாரணை செய்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா, செலவடை, வென்னானப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல், பாப்பாத்தியின் மகன் தாமரைச்செல்வன்(26), கூலித் தொழிலாளி. இவருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் 21-ந் தேதி, சங்ககிரி வட்ட மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அருள்மொழி விசாரணை செய்தார். இதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் 17 வயது சிறுமியை திருமணம் செய்த தாமரைச்செல்வன் மற்றும் திருமணம் செய்து வைத்த பெரியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான விழிப்புணர்வு விழா பேளூரில் நடைபெற்றது.
    • இந்த விழாவிற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார்.

    சேலம்:

    வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான விழிப்புணர்வு விழா பேளூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி வரவேற்றார். பேளூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெற்றிவேல் மற்றும் செவிலியர்கள், புதுமணத் தம்பதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக கர்ப்பிணிகள், குழந்தை பிரசவித்த தாய்மார்கள், வளரிளம் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், இணை உணவுகள் குறித்தும் ஊட்டச்சத்து உணவு முறை குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் சாந்தி, பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், புதுமணத் தம்பதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • செல்வநாயகம் (வயது 85). இவர் அந்த பகுதியில் உள்ள சந்தை அருகில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மணியனூரை சேர்ந்தவர் செல்வநாயகம் (வயது 85). இவர் அந்த பகுதியில் உள்ள சந்தை அருகில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொன்னுசாமி விவசாயி இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
    • நேற்று காலை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த சிலர் பொன்னுசாமியின் வீட்டில் இருந்து ஆடுகளை திருட முயன்றனர். சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஊத்துக்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயி. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த சிலர் பொன்னுசாமியின் வீட்டில் இருந்து ஆடுகளை திருட முயன்றனர். சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    தொடர்ந்து அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து பிடிபட்ட நபரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஆடு திருட வந்தது வீராணம் தாதம்பட்டி அடுத்த நாகர்படையாச்சி காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தப்பிச் சென்ற அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

    • 1,330 திருக்குறட் பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு 2021-ம் ஆண்டு முதல் பரிசுத் தொகை ரூ.10,000-த்திலிருந்து ரு.15,000 ஆக உயர்த்தி பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப் பெறுகின்றனர்.
    • திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தெரிவு செய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப் பெறுகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 1,330 திருக்குறட் பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு 2021-ம் ஆண்டு முதல் பரிசுத் தொகை ரூ.10,000-த்திலிருந்து ரு.15,000 ஆக உயர்த்தி பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப் பெறுகின்றனர்.

    திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தெரிவு செய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப் பெறுகிறார்கள். திருக்குறள் முற்றோதல் திறனாய்வு சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை தெரிவுக் குழுவால் மேற்கொள்ளப்பெறும். தெரிவு செய்யப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.15,000-ம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்.

    திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு பெறுவதற்கு 1,330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராகவும், இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும்திறன் பெற்றவராகவும், திருக்குறளின் அடைமொழி கள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்கு றளின் சிறப்புகள் ஆகிய வற்றை அறிந்தவராகவும், சேலம் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

    அரசு, அரசு உதவிபெறும், தனியார் பதின்மப்பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரைபயிலும் மாண வர்கள் பங்குபெறலாம். தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசினை ஏற்கனவே பெற்ற வராக இருத்தல் கூடாது. திருக்குற ளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும். மாணவர்கள் தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப் பெற்ற விண்ணப்பங்களை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவ லக வளாகத்தில் 2-ம் தளத்தில் அமைந்துள்ள மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ 31.10.2023-க்குள் அளிக்கு மாறு கேட்டுக்கொள்ளப் பெறுகிறார்கள். இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

    • 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் ஏராளமானோர் விரதம் இருந்து வருகிறார்கள். இதனால் கறிக்கோழி தேவை குறைந்து வருவதால் அதன் விலை படிப்படியாக சரிந்து வருகிறது.

    10 நாட்களுக்கு முன்பு கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 114 ரூபாயாக இருந்த நிலையில் படிப்படியாக சரிந்து 5 நாட்களுக்கு முன்பு 106 ரூபாயாக குறைந்தது.

    இந்த நிலையில் பல்லடத்தில் இன்று நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கறிக்கோழி விலையை மேலும் கிலோவுக்கு 9 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 106 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 97 ரூபாயாக குறைந்தது.

    இனிவரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோழி பண்ணை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ×