search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prisoner"

    • சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. அமர்வு நீதிமன்றத்தில் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
    • வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் ஆற்றோரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் எலும்பன் என்கிற துரைசாமி (வயது 2). இவர் மீது சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், அவர் பிணையில் வெளிவர இயலாதபடி பிணை ஆனை கோர்ட்டு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது மீதான குற்ற முறையீட்டுக்க பதில் அளிக்க வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அவர் தலைமறைவான 27.3.2003-ம் ஆண்டு முதல் போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடி வருகின்றனர். ஆனாலட போலீசாரின் கண்களில் படாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் எலும்பன் என்கிற துரைசாமி பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சேலம் டவுன் போலீஸ் நிலையம் வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிணையில் செல்ல இயலாதவர்களுக்கு சட்ட உதவி மையத்தின் மூலமாக வழக்கறிஞர் நியமிக்கப்படும்.
    • குற்ற செயல்கள் மீண்டும் செய்யாமல் இருக்க அறிவுரை கூறினார்.

    பாபநாசம்:

    பாபநாசம் கிளை சிறையில் சிறைச்சாலை நீதிமன்றம் நடைபெற்றது பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல் கனி சிறைச்சாலை நீதிமன்றத்தை நடத்தினார்.

    முன்னதாக சிறைச்சாலை பற்றியும், சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் பற்றியும் விசாரணை கைதிகளுக்கு விளக்கமாக கூறினார். மேலும் விசாரணை கைதிகள் ஒவ்வொரு இடமும் குற்றத்தின் தன்மைகள் பற்றி கேட்டறிந்தார்.

    வழக்கறிஞர் வைத்து பிணையில் செல்ல இயலாதவர்களுக்கு சட்ட உதவி மையத்தின் மூலமாக வழக்கறிஞர் நியமிக்கப்படும் என்று கூறினார்.

    மேலும் இது போன்ற குற்ற செயல்கள் மீண்டும் செய்யாமல் இருக்கவும் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக வாழவும் அறிவுரை கூறினார் இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்டப்பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

    • ஜெயிலில் போக்சோ கைதி சாவடைந்தார்.
    • இதுகுறித்து ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    கோவில்பாப்பாக்குடி, மல்லிகை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (59). இவர் சில மாதங்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் கைதானார். இதில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை மத்திய ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வந்தார்.

    ஆறுமுகத்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை ஜெயில் வளாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • மதுரை மத்திய ஜெயிலில் இட பற்றாக்குறை காரணமாக கைதிகள் தங்குவதில் சிரமமாக உள்ளது.
    • இடையப்பட்டிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.

    மதுரை

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்பட 9 நகரங்களில் மத்திய ஜெயில்கள் உள்ளன. இவற்றில் மதுரை மத்திய ஜெயில் குறிப்பிடத்தக்க ஒன்று. இது 31 ஏக்கர் பரப்பளவு உடையது. மதுரை கரிமேடு பகுதியில் கடந்த 1865-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. 157 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலையில் தென்மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் அடைக்கப்பட்டு வருகிறார்கள்.

    இங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சிறைச்சாலைகள் உள்ளன. தடுப்புக் காவல், விசாரணை, தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    மதுரை மத்திய ஜெயிலில் தினந்தோறும் 30 முதல் 50 கைதிகள் புதிதாக அடைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி வெளியே செல்வோரின் தினசரி எண்ணிக்கை 5-க்கும் கீழ் என்ற நிலையில் தான் உள்ளது.

    மதுரை மத்திய ஜெயிலில் அதிகபட்சமாக 1,252 பேரை அடைத்து வைக்க முடியும். ஆனால் இங்கு தற்போது 2000 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். எனவே மதுரை மத்திய ஜெயிலில் இடபற்றாக்குறை நிலவி வருகிறது. ஒரே அறையில் அதிகமானவர்கள் அடைத்து வைக்கப்படுகின்றனர். இதன் காரணமாக தொற்று நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மதுரை மத்திய ஜெயில் வளாகத்தில் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிறிய வகை நோய்கள் மற்றும் காயங்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். அதுவும் தவிர இங்கு மருந்து மாத்திரைகள் மற்றும் ஊழியர் பற்றாக்குறையும் உள்ளது.எனவே கடுமையான நோயால் பாதிக்கப்படும் கைதிகளில் பெரும்பாலானோருக்கு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மதுரை மத்திய ஜெயில் டி.ஐ.ஜி.யாக பழனி, போலீஸ் சூப்பிரண்டாக வசந்த கண்ணன் ஆகியோர் உள்ளனர்.

    இந்த நிலையில் மதுரை மத்திய ஜெயில் இடப்பற்றாக்குறை தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது;-

    மதுரை மத்திய ஜெயிலில் இடப்பற்றாக்குறை இருப்பது உண்மை தான். அதே வேளையில் கைதிகளை ஒழுங்குபடுத்தி அவர்களின் தூங்குமிடம் உள்பட அடிப்படை வசதிகளை குறைவின்றி செய்து வருகிறோம். இங்குள்ள ஆஸ்பத்திரியில் மருந்து மாத்திரைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது. ஊழியர்கள் தேவைக்கேற்ப உள்ளனர்.

    மதுரை மத்திய ஜெயிலில் கைதிகளின் உடல் நலன் மட்டு மின்றி மனநலமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக்கும் வகையில், தொழில் பயிற்சிகள் தரப்படுகின்றன. மதுரை மத்திய ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே செல்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான்.

    ஏனென்றால் மதுரை மாவட்டத்தை பொருத்தவரை சிறிய வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுவோருக்கு, ஒரு வாரத்தில் ஜாமீன் கிடைத்து விடும். ஆனால் மதுரையை பொருத்தவரை கஞ்சா போன்ற குற்ற வழக்குகளின் ஈடுபடுபவரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுவும் தவிர ஒரு சில கைதிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். அடுத்தபடியாக கூலிப்படை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் பெயில் கிடைப்பது இல்லை. இதன் காரணமாக மதுரை மத்திய ஜெயிலில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் மதுரை புதிய மத்திய ஜெயில் கட்டப்பட உள்ளது. இதற்காக அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், அங்கு கட்டுமான பணிகள் மிக விரைவில் தொடங்கும். இடையப்பட்டி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜெயில் அமைய உள்ளதால், அங்கு புழல் ஜெயிலுக்கு இணையாக பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது. இங்கு 3000-க்கும் மேற்பட்ட கைதிகளை அடைத்து வைக்க முடியும்" என்று தெரிவித்து உள்ளனர்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆட்டோவில் கைதி தப்பிய காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த முத்துமாரியப்பன் மகன் பத்மேசுவரன் (வயது 24). இவர் கடந்த மார்ச் மாதம் மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த 21 வயது இளம்பெண்ணை, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.

    இதற்காக அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பத்மேசுவரன் போலீஸ் பாதுகாப்புடன், மதுரை அரசு ஆஸ்பத்திரி புதிய மருத்துவமனைக்கு வந்தார்.

    அப்போது பத்மேசுவரன் கழிவ றைக்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டு, வெளியே சென்றார். நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த போலீசார் ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப் பார்த்தனர். அப்போதுதான் பத்மேசுவரன் போலீசாரை ஏமாற்றி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    தப்பி ஓடிய கைதியை பிடிப்பதற்காக, தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் பத்மேசுவரன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் பச்சை கலர் சட்டை, கட்டம் போட்ட லுங்கி அணிந்து வெளியே வருகிறார். அங்கு வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, சர்வ சாதாரணமாக தப்பி செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    மதுரை கோரிப்பா ளையம் வரை ஆட்டோவில் சென்ற பத்மேசுவரன், அங்கிருந்து நண்பர்களின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரிய வந்துள்ளது.

    மதுரையில் கீரைத்துறை, தெப்பக்குளம் பகுதிகளில் பத்மேசுவரனுக்கு நெருங்கிய உறவினர்கள் உள்ளனர். அவர்களின் வீட்டில் பத்மேசுவரன் பதுங்கி உள்ளாரா? என்பது தொடர்பாக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    பத்மேசுவரன் தப்பியது தொடர்பாக ராமநாதபுரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கமுதி போலீ சார் பத்மேசுவரன் வீடு, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடியிருப்பு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் இருந்து பத்மேசுவரன் உள்பட 5 கைதிகளை, 4 பேர் அடங்கிய போலீஸ் படையினர் அழைத்து வந்துள்ளனர். அவர்களை கண்காணிக்கும் வகையில், போதிய போலீஸ்காரர்கள் அனுப்பப்படவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக பத்மேசுவரன் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்று உள்ளார்.

    மதுரை மாநகர ஆயுதப்படையில் கைதிகளின் பாதுகாப்புக்காக எத்தனை போலீசார் அனுப்பப்பட்டனர்? அவர்களில் எத்தனை பேர் பணிக்கு வரவில்லை? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

    • காங்கேயம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
    • பழனிசாமியை மீட்டு ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). இவர் காங்கேயம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் திருப்பூர் விரைவு மகளிர் நீதிமன்ற காவலில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.கடந்த 13-ந் காலையில் பழனிசாமி திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக கைதிகள் இது குறித்து ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர்கள் விரைந்து சென்று பழனிசாமியை மீட்டு ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகள் வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெயில் அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை சுரேஷுக்கு பரோல் விடுப்பு வழங்கப்பட்டது.
    • தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி சுரேஷ் என்கின்ற சத்யராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கின்ற சத்யராஜ் வயது 34. இவர் கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் மாயனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடைபெற்ற விசாரணையில் நீதிமன்றம் சுரேஷ் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நிலையில் சுரேஷ் கடந்த 17.4.2014 ஆம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை சுரேஷுக்கு பரோல் விடுப்பு வழங்கப்பட்டு மூன்று ஆயுதப்படை காவலர்கள் வழி காவலாக நியமிக்கப்பட்டு பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்த சுரேஷ் தப்பி ஓடிவிட்டார்.

    இதை அடுத்து வழி காவலர்களாக வந்த அந்த மூன்று ஆயுதப்படை காவலர்களும் இது பற்றி மதுக்கூர் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். இதை அடுத்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி சுரேஷ் என்கின்ற சத்யராஜை போலீசார் தேடி வருகின்றனர். ஆயுள் தண்டனை கைதி தப்பித்து ஓடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மருத்துவரின் அலட்சியப்போக்கால் கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாமல் காவலர்கள் தவித்து வருகின்றனர்.
    • விரைவாக மருத்துவ சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவச் சான்று வாங்க போலீசார் சென்றனர்.

    ஆனால் இதுவரை மருத்துவ சான்று வழங்கப்படவில்லை. மருத்துவரின் அலட்சியப்போக்கால் கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாமல் காவலர்கள் தவித்து வருகின்றனர். ஒரு கைதியை நீதிமன்றத்தில் 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த வேண்டும்.ஆனால் மருத்துவமனையில் மருத்துவ சான்று வழங்குவதில் காலதாமதம் ஆவதால் ஆஜர்படுத்த முடியாமல் தவித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    எனவே விரைவாக மருத்துவ சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி உள்ளனர். 

    அந்தியூரில் சிறுமியை திருமணம் செய்து கர்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பவானி:

    அந்தியூர் காளியப்பா வீதியை சேர்ந்தவர் சிவசக்தி (24). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு சிவசக்தி தன்னுடைய மனைவியை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அப்போது அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர் 17 வயது சிறுமி என தெரிய வந்தது.

    இதை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர், தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் விசாரணை நடத்தி பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் சிவசக்தி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்ற போது சிவசக்தி தலைமறைவாகி விட்டார்.

    இதை தொடர்ந்து தலை மறைவான சிவசக்தியை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

    இநத நிலையில் சிவசக்தி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று சிவசக்தியை போக்சோ சட்ட த்தின் கீழ் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரை ஈரோடு மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்
    • ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார் என தகவல்

    சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்துள்ளார்.

    குற்ற வழக்குகளில் தொடர்புடையே ராஜசேகரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கைது ராஜசேகர் மரணம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே தலைமை செயலக காலனி காவல்நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    ராஜசேகர் மீது ஏற்கனவே 27 குற்ற வழக்குகள் உள்ளன. விசாரணையின் போது ராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார்.

    ராஜசேகரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவது காவல்துறையினரின் கடமை. ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்

    கோவை,

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 63). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அங்கு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முதலில் சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.பின்னர் கனகராஜ் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் அவர் நீரிழிவு, வலிப்பு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு அவர் சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிறையில் இருந்த அவர் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

    இதனை கண்ட சிறை அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளுக்கான வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக மேல் அருங்குணத்தை சேர்ந்த நரி என்ற சிவபிரதாபன் (வயது 22), விமல் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதியாக வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் போலீஸ் காரர் பார்த்திபன் மட்டும் பணியில் இருந்தார். மற்ற போலீசார் ரோந்து சென்று விட்டனர். விசாரணை கைதியாக இருந்த சிவபிரதாபன் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்று வருவதாக பணியில் இருந்த போலீஸ்காரர் பார்த்திபனிடம் தெரிவித்தார்.

    அதற்கு அவர் ரோந்து சென்ற போலீசார் திரும்பி வந்தவுடன் உன்னை அனுப்புகிறேன் என்று கூறினார். அப்போது சிவபிரதாபன் பணியில் இருந்த போலீஸ்காரர் பார்த்திபனை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓடினார். உடனே போலீஸ்காரர் பார்த்திபன் விரட்டிசென்று சிவபிரதாபனை பிடிக்க முயன்றார். ஆனால் சிவபிரதாபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து ரோந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய சிவபிரதாபனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    ×