search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மத்திய ஜெயிலில் இட பற்றாக்குறை; கைதிகள் தங்குவதில் சிரமம்
    X

    மதுரை மத்திய ஜெயிலில் இட பற்றாக்குறை; கைதிகள் தங்குவதில் சிரமம்

    • மதுரை மத்திய ஜெயிலில் இட பற்றாக்குறை காரணமாக கைதிகள் தங்குவதில் சிரமமாக உள்ளது.
    • இடையப்பட்டிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.

    மதுரை

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்பட 9 நகரங்களில் மத்திய ஜெயில்கள் உள்ளன. இவற்றில் மதுரை மத்திய ஜெயில் குறிப்பிடத்தக்க ஒன்று. இது 31 ஏக்கர் பரப்பளவு உடையது. மதுரை கரிமேடு பகுதியில் கடந்த 1865-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. 157 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலையில் தென்மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் அடைக்கப்பட்டு வருகிறார்கள்.

    இங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சிறைச்சாலைகள் உள்ளன. தடுப்புக் காவல், விசாரணை, தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    மதுரை மத்திய ஜெயிலில் தினந்தோறும் 30 முதல் 50 கைதிகள் புதிதாக அடைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி வெளியே செல்வோரின் தினசரி எண்ணிக்கை 5-க்கும் கீழ் என்ற நிலையில் தான் உள்ளது.

    மதுரை மத்திய ஜெயிலில் அதிகபட்சமாக 1,252 பேரை அடைத்து வைக்க முடியும். ஆனால் இங்கு தற்போது 2000 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். எனவே மதுரை மத்திய ஜெயிலில் இடபற்றாக்குறை நிலவி வருகிறது. ஒரே அறையில் அதிகமானவர்கள் அடைத்து வைக்கப்படுகின்றனர். இதன் காரணமாக தொற்று நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மதுரை மத்திய ஜெயில் வளாகத்தில் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிறிய வகை நோய்கள் மற்றும் காயங்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். அதுவும் தவிர இங்கு மருந்து மாத்திரைகள் மற்றும் ஊழியர் பற்றாக்குறையும் உள்ளது.எனவே கடுமையான நோயால் பாதிக்கப்படும் கைதிகளில் பெரும்பாலானோருக்கு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மதுரை மத்திய ஜெயில் டி.ஐ.ஜி.யாக பழனி, போலீஸ் சூப்பிரண்டாக வசந்த கண்ணன் ஆகியோர் உள்ளனர்.

    இந்த நிலையில் மதுரை மத்திய ஜெயில் இடப்பற்றாக்குறை தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது;-

    மதுரை மத்திய ஜெயிலில் இடப்பற்றாக்குறை இருப்பது உண்மை தான். அதே வேளையில் கைதிகளை ஒழுங்குபடுத்தி அவர்களின் தூங்குமிடம் உள்பட அடிப்படை வசதிகளை குறைவின்றி செய்து வருகிறோம். இங்குள்ள ஆஸ்பத்திரியில் மருந்து மாத்திரைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது. ஊழியர்கள் தேவைக்கேற்ப உள்ளனர்.

    மதுரை மத்திய ஜெயிலில் கைதிகளின் உடல் நலன் மட்டு மின்றி மனநலமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக்கும் வகையில், தொழில் பயிற்சிகள் தரப்படுகின்றன. மதுரை மத்திய ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே செல்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான்.

    ஏனென்றால் மதுரை மாவட்டத்தை பொருத்தவரை சிறிய வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுவோருக்கு, ஒரு வாரத்தில் ஜாமீன் கிடைத்து விடும். ஆனால் மதுரையை பொருத்தவரை கஞ்சா போன்ற குற்ற வழக்குகளின் ஈடுபடுபவரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுவும் தவிர ஒரு சில கைதிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். அடுத்தபடியாக கூலிப்படை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் பெயில் கிடைப்பது இல்லை. இதன் காரணமாக மதுரை மத்திய ஜெயிலில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் மதுரை புதிய மத்திய ஜெயில் கட்டப்பட உள்ளது. இதற்காக அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், அங்கு கட்டுமான பணிகள் மிக விரைவில் தொடங்கும். இடையப்பட்டி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய ஜெயில் அமைய உள்ளதால், அங்கு புழல் ஜெயிலுக்கு இணையாக பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது. இங்கு 3000-க்கும் மேற்பட்ட கைதிகளை அடைத்து வைக்க முடியும்" என்று தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×