என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் பத்மேசுவரன் தப்பி செல்லும் வீடியோ காட்சி.
அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பிய காட்சி
- மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆட்டோவில் கைதி தப்பிய காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மதுரை
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த முத்துமாரியப்பன் மகன் பத்மேசுவரன் (வயது 24). இவர் கடந்த மார்ச் மாதம் மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த 21 வயது இளம்பெண்ணை, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.
இதற்காக அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பத்மேசுவரன் போலீஸ் பாதுகாப்புடன், மதுரை அரசு ஆஸ்பத்திரி புதிய மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது பத்மேசுவரன் கழிவ றைக்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டு, வெளியே சென்றார். நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த போலீசார் ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப் பார்த்தனர். அப்போதுதான் பத்மேசுவரன் போலீசாரை ஏமாற்றி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
தப்பி ஓடிய கைதியை பிடிப்பதற்காக, தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் பத்மேசுவரன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் பச்சை கலர் சட்டை, கட்டம் போட்ட லுங்கி அணிந்து வெளியே வருகிறார். அங்கு வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, சர்வ சாதாரணமாக தப்பி செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மதுரை கோரிப்பா ளையம் வரை ஆட்டோவில் சென்ற பத்மேசுவரன், அங்கிருந்து நண்பர்களின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரிய வந்துள்ளது.
மதுரையில் கீரைத்துறை, தெப்பக்குளம் பகுதிகளில் பத்மேசுவரனுக்கு நெருங்கிய உறவினர்கள் உள்ளனர். அவர்களின் வீட்டில் பத்மேசுவரன் பதுங்கி உள்ளாரா? என்பது தொடர்பாக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பத்மேசுவரன் தப்பியது தொடர்பாக ராமநாதபுரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கமுதி போலீ சார் பத்மேசுவரன் வீடு, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடியிருப்பு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் இருந்து பத்மேசுவரன் உள்பட 5 கைதிகளை, 4 பேர் அடங்கிய போலீஸ் படையினர் அழைத்து வந்துள்ளனர். அவர்களை கண்காணிக்கும் வகையில், போதிய போலீஸ்காரர்கள் அனுப்பப்படவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக பத்மேசுவரன் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்று உள்ளார்.
மதுரை மாநகர ஆயுதப்படையில் கைதிகளின் பாதுகாப்புக்காக எத்தனை போலீசார் அனுப்பப்பட்டனர்? அவர்களில் எத்தனை பேர் பணிக்கு வரவில்லை? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.






