search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pollachi abuse case"

    பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #PollachiAbuseCase
    தேனி:

    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    தேனி - அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா தலைமையில் நிர்வாகிகள் ஞான திருப்பதி, அன்பழகன், உடையாளி, பாலமுருகன், கிருஷ்ணசாமி உள்பட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அனுமதி இல்லாமல் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வி.ஏ.ஓ. குமரேசன் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #PollachiAbuseCase
    தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை காவல்துறை உருவாக்கியுள்ளது. #CrimesAgainstWomen #TNPolice
    சென்னை:

    பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சமூக வலைத்தள பயன்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கும்.


    புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பிரிவில் ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட உள்ளனர். சிபிஐ, இன்டர்போலுடன் தொடர்பு கொண்டு பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தொகுப்பையும் இந்த அமைப்பு உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CrimesAgainstWomen #TNPolice

    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #PollachiAbuseCase
    மதுரை:

    மதுரை மேலமாசிவீதி- தெற்கு மாசிவீதி சந்திப்பில் இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் சசிகலா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பொன்னுத்தாய், முத்துராணி, மனோகரிதாஸ், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் உள்ளிட்ட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி கோ‌ஷம் எழுப்பினர்.

    பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை பாதுகாக்கும் கோவை போலீசாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து போராடி வரும் மாணவர்கள் மீதான அடக்கு முறையை கைவிட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

    அதேபோன்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் மண்டல ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  #PollachiAbuseCase
    பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த கும்பலை கைது செய்யக் கோரி கடலூரில் சி.ஐ.டி.யூ., வாலிபர் சங்கம், மாதர் சங்கம்-மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiCase
    கடலூர்:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த கும்பலை கைது செய்யக் கோரி கடலூரில் சி.ஐ.டி.யூ., வாலிபர் சங்கம், மாதர் சங்கம்-மாணவர் சங்கம், விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகர செயலாளர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார்.

    சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கருப்பையா, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் சுப்புராயன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தேன்மொழி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் அமர்நாத், அனைத்து குடியிருப்பு கூட்டமைப்பின் மாவட்ட பொதுசெயலாளர் மருதவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #PollachiCase
    இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் அரவிந்த்சாமியை எஸ்.பி. தாக்கியதை கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து நேற்று புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . கல்லூரி முன்பு நடந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் வந்தனர். அப்போது போராட்டத்தை தூண்டியதாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் அரவிந்த்சாமி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

    இதையடுத்து மாணவிகள் போலீஸ் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்திற்கு பிறகு 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனிடையே போராட்டத்தின் போது இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் அரவிந்த்சாமியை எஸ்.பி., செல்வராஜ் தாக்கினார். இதற்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும் இன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய மாணவர் சங்கம் , மாதர் சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடவும் சென்றனர். அப்போது 10 பேர் மட்டும் எஸ்.பி.யிடம் பேச்சுவார்த்தை நடத்த செல்லலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்ளிட்ட 10 பேர் மாவட்ட எஸ்.பி., செல்வராஜிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றனர். இந்த சம்பவத்தையொட்டி 200 க்கும் மேற்பட்ட போலீசார் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் ஆதி தமிழர் முன்னேற்ற கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் நல சங்கம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.
    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். #PollachiAbuseCase
    நாகப்பட்டினம்:

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

    நாகை வெளிப்பாளையம் பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் சுந்தர் (வயது23). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    சுந்தர் அந்த கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சுந்தருக்கும் ஆழியூரை சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் அவர்களை காதலர்களாக மாற்றி உள்ளது. இதையடுத்து இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் காதலன் சுந்தரின் நடவடிக்கையில் இளம்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் சுந்தரிடமிருந்து விலகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் இளம்பெண்ணை மீண்டும் தன்னுடன் பழக வைக்க ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.

    இதையடுத்து சுந்தர் மீண்டும் தனது காதலியான அந்த இளம்பெண்ணை சந்தித்து சாமர்த்தியமாக மயக்குவது போல் பேசி நட்பை நீட்டித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் அவரின் நம்பிக்கைக்கு உரியவராக நடித்துள்ளார்.

    இந்நிலையில் காதலியிடம் நாம் காரைக்கால் கோவிலுக்கு சென்று வருவோம் என்று கூறி அழைத்துள்ளார். காதலன் மேல் இருந்த நம்பிக்கையில் அந்த இளம்பெண்ணும் சுந்தருடன் வர சம்மதித்துள்ளார்.

    இதையடுத்து தனது காதலியை காரைக்கால் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்ற சுந்தர் அங்கு ஒரு அறையில் தங்கியுள்ளனர். அப்போது குளிர்பானம் வாங்கி வந்த சுந்தர் அதை காதலியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த குளிர்பானத்தை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். தான் குளிர்பானத்தில் கலந்து கொடுத்த மயக்க மருந்தால் காதலி மயக்கமடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சுந்தர் அவரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.



    இந்நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தாயா எனக் கேட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது சுந்தர் தன் செல்போனில் பதிவு செய்த பதிவுகளை காட்டி மிரட்டியதோடு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த சம்பவத்தால் இளம்பெண் மீண்டும் சுந்தரிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம். ஆனால் தன் செல்போனில் தெரியாமல் எடுத்த படத்தை பற்றி இளம்பெண்ணிடம் கூறி அடிக்கடி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    கொலை மிரட்டலால் அதிர்ச்சியும், தன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளதை அறிந்து அவமானமும் அடைந்த இளம்பெண் உடனடியாக இதுபற்றி கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வாலிபர் சுந்தர் கூறியதாக தெரியவருகிறது. பல பெண்களிடம் காதலிப்பது போல் நடித்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி சம்பவத்தால் தமிழகமே கொந்தளித்து போய் உள்ள நிலையில் இளம்பெண்ணை ஆபாச படமெடுத்து வாலிபர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PollachiAbuseCase
    பொள்ளாச்சியில் நடந்த, இளம் பெண்கள் மீதான பாலியல் கொடுமையை கண்டித்து, மாதர் சங்கம் சார்பில் தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. #PollachiAbuseCase
    தருமபுரி:

    பொள்ளாச்சியில் நடந்த, இளம் பெண்கள் மீதான பாலியல் கொடுமையை கண்டித்து, மாதர் சங்கம் சார்பில் தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தெரசாமேரி தலைமை வகித்தார். தோழி கூட்டமைப்பின் அமைப்பாளர் சங்கர் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சியில் பெண்களை கொடுமைப்படுத்தியவர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளை மறைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷம் எழுப்பப்பட்டது. பல்வேறு பெண்கள் கூட்டமைப்பினர் திரளாக பங்கேற்றனர். #PollachiAbuseCase
    மதுரை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் விளக்கம் திருப்தியளிக்காத பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். #PollachiAbuseCase
    கோவை:

    பொள்ளாச்சியில் பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது பல்வேறு தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மாணவி பாலியல் வன்முறை விவகாரம் தொடர்பாக திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் புகார் அளித்த கல்லூரி மாணவி விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்.

    அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அதிகாரிகளின் இந்த செயல்பாட்டால் சம்பந்தப்பட்ட பெண்ணின் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும்.

    எனவே அவரை வெளிமாவட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்று மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.

    அது மட்டுமல்லாமல் அவருக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சத்தை வழங்க வேண்டும். அவருடைய பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக காரணமாக இருந்த போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    மதுரை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்படுவார்.

    பாண்டியராஜன் இதற்கு முன்பு திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியபோது சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்ணின் கன்னத்தில் சர்ச்சையில் சிக்கி இடம் மாற்றம் செய்யப்பட்டார். தற்போது பாலியல் விவகாரத்தில் மாணவியின் பெயர் வெளியிட்ட சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.  #PollachiAbuseCase
     
    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்களை பகிர்வதை தடுக்க வலியுறுத்தி பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


    இதற்கிடையே மதுரை ஐகோர்ட் இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர். #PollachiCase #CBCID
    பொள்ளாச்சி விவகாரத்தில் காவல்துறை சரியாக செயல்படாவிட்டால் மனித உரிமை ஆணையம் தலையிடும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறினார்.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் நெல்லையில் விசாரணை நடத்தியது.

    வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இந்த விசாரணையில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரும், நீதிபதியுமான ஜெயச்சந்திரன் பங்கேற்று விசாரணை மேற்கொண்டார்.

    இதில் 56 வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் நீதிபதி ஜெயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் மாணவிகள் மீதான பாலியல் கொடுமை விவகாரத்தில் புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், இருப்பினும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்டவரின் பெயரை குறிப்பிட்டு சொல்வது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல். மேலும் காவல்துறை சரியான முறையில் செயல்படுகிறார்களா? இல்லையா? என எங்களது ஆணையத்திற்கு பாதிக்கப்பட்ட நபரோ அல்லது சமூக ஆர்வலர்களோ புகார் அளித்தால் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

    தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டாலும் பல காரணங்கள் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடத்துவது நியாயமாக இருக்கும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். தமிழக அரசு இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கும் என ஆணையம் நம்புகிறது, அப்படி சரியான முறையில் காவல்துறை செயல்படாவிட்டால் ஆணையம் தலையிட்டு உரிய உத்தரவினை பிறப்பிக்கும்.

    ஏற்கனவே மகளிர் ஆணையம் தலையிட்டு அறிக்கை கேட்டு உள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரையில் பொது சேவையில் அஜாக்கிரதையாக செயல்பட்டால் தான் மனித உரிமை ஆணையம் தலையிட முடியும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.

    குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், சட்டம் தன் கடமையை செய்யும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருச்சியில் விவசாயிகள், பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #PollachiAbuseCase
    திருச்சி:

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருச்சியில் விவசாயிகள், பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகி கண்ணன் முன்னிலை வகித்தார்.

    இதில் சமூகநீதி பேரவையை சேர்ந்த ரவிகுமார், மக்கள் பாதுகாப்பு மைய வக்கீல் கென்னடி, தமிழ்தேசிய பேரியக்க நிர்வாகி கவித்துவன், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த செழியன், ராஜா, மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி ஜீவா, பெண்கள் முன்னேற்ற இயக்க நிர்வாகி அருள் ஆக்னஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, மாயமான சமூக ஆர்வலர் முகிலனை போலீசார் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் , பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் பின்னணியில் எந்த அரசியல் கட்சியினர் இருந்தாலும் அவர்களையும் போலீசார் கைது செய்திட வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டது. விவசாயிகள் சிலர் கருப்பு கொடியுடன் பங்கேற்றனர்.

    இதேபோல, திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு முற்போக்கு பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவி பானுமதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விஜயலட்சுமி, பிரியா, பாரதி, வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது, பாலியல் வன்கொடுமையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண் வக்கீல்கள் கோ‌ஷமிட்டனர்.

    அப்போது வக்கீல் சங்க தலைவி பானுமதி கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ.விசாரிக்க தேவையில்லை. ஏனென்றால், அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அமைப்பு. எனவே, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களிடம் புகார் பெறுதல், சாட்சிகள் விசாரணை, ஆவணங்களை கைப்பற்றுதல் குற்றவாளியின் பெயர் விவரங்கள் தவிர, ஏனைய விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

    புலன் விசாரணைக் குழுவில் திறமையான பெண் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் பாலியல் வன்கொடுமை காட்சிகள், ஆபாச வீடியோக்கள் வெளியாவதை தடை செய்ய வேண்டும். இச்சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் .

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #PollachiAbuseCase
    பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறிய மதுரை ஐகோர்ட்டு, அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
    மதுரை:

    பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    சமூக வலைத்தளங்களால் கல்வி, தகவல்தொடர்பு போன்ற பல்வேறு நன்மைகள் இருந்தும், தீமைகள் அதிக அளவில் உள்ளன. பாலியல் உள்பட பல்வேறு கொடூர குற்றங்கள் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பரப்பப்படுகிறது.

    பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களையும், அடையாளங்களையும் முதல் தகவல் அறிக்கை மற்றும் கோர்ட்டு ஆவணங்கள், ஊடகங்களில் வெளியிடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 228ஏ பிரிவின் கீழ் 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கலாம்.

    சமீபத்தில் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் புகார் அளித்த பெண்ணின்(கல்லூரி மாணவி) விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்.

    பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், பாலியல் வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு விசாரணை படை அமைக்கவும், பாலியல் வழக்கு விசாரணையில் சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்றவும், பொள்ளாச்சி பாலியல் சம்பவ வீடியோ, புகைப்படம், ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் என்.செந்தில்குமார், ஏ.கே.மாணிக்கம் ஆகியோர் வாதாடுகையில், “பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது என சட்டம் உள்ளது. இதை கடைபிடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும் உரிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால் பொள்ளாச்சி விவகாரத்தில் இது முறையாக கடைபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையிலும் கூட பாதிக்கப்பட்டவர் தொடர்பான அடையாளம் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது ஏற்புடையதல்ல” என்று கூறினார்கள்.

    இதையடுத்து நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட பெண்கள் பாதிக் கப்பட்டுள்ளது தெரியவருகிறது. துணிச்சலாக முன்வந்து புகார் அளித்த பெண்ணின் தனிப்பட்ட விவரத்தை வெளியிட்டது ஏன்? இனி இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க யார் முன்வருவார்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது மனுதாரர் வக்கீல்கள், “இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ‘பார்’ நாகராஜ் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் பரவி வருகின்றன. இதை பார்த்த உள்ளூர் மக்கள் அவருடைய பாருக்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். இதற்கிடையே பாலியல் விவகாரத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோவை கலெக்டரிடம் ‘பார்’ நாகராஜ் மனு கொடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன” என்றும் தெரிவித்தனர்.

    அதற்கு நீதிபதிகள், இது எப்படி சாத்தியமாகும்? என்று கேள்வி எழுப்பினர்.

    விசாரணையின் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஒருவனை நம்பிச் சென்ற பெண்ணை சில விரோதிகள் சூழ்ந்து துன்புறுத்தும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் சமூக வலைத்தளங்களில் பார்த்து உள்ளனர். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இதுபோல நடப்பதற்கு தூண்டுவதாக அமையும் என்று மனநல டாக்டர் ஷாலினி தெரிவித்து உள்ளார்.

    எனவே பொள்ளாச்சி சம்பவ வீடியோக்களை பொதுநலன் கருதி சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக மத்திய அரசையும், இணையதள சேவை வழங்குபவர்கள் சங்கத்தின் செயலாளரையும் எதிர்மனுதாரராக இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து சேர்க்கிறது.

    பாலியல் சம்பவ வீடியோக்கள் அடங்கிய செல்போன்களுடன் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது சகோதரரும் போலீசில் புகார் செய்து, செல்போன்களையும் ஒப்படைத்து உள்ளனர். செல்போன்களில் இருந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவாமல் போலீசார் தடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

    பொள்ளாச்சி சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. அவர்களை மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

    அவர்களில் ஒரே ஒரு பெண் மட்டும் தைரியமாக, மனிதாபிமானமற்றவர்களின் அட்டூழியங்கள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் போலீசில் புகார் செய்து உள்ளார். ஆனால் அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களை ரகசியமாக வைக்க போலீசார் தவறிவிட்டனர். இந்த வழக்கின் தொடக்கத்திலேயே பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை போலீசார் வெளியிட்டது கண்டிக்கத்தக்கது.

    இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கூடாது என்ற சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும், பொள்ளாச்சி விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் பின்பற்றவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் எடுக்கப்பட்டு உள்ளன. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய தனிப்பட்டவரின் விவரங்களை போலீசார் வெளிப்படுத்தி உள்ளனர்.

    அதிகாரிகளின் இந்த செயல்பாட்டால் சம்பந்தப்பட்ட பெண்ணின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே அவரை வெளிமாவட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று மனநல ஆலோசனை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அவருக்கு இழப்பீடாக ரூ.25 லட்சத்தை வழங்க வேண்டும். அவருடைய பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக காரணமாக இருந்த போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

    பலாத்கார வழக்குகளை கையாள ஒரு தனி மையத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி அந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகின்றனவா? என்பதை அடுத்த விசாரணையில் தெளிவுபடுத்த வேண்டும்.

    இணையதளத்தின் நன்மை, தீமைகளை அனைவரும் அறியும் வகையில், குறிப்பாக குழந்தைகள் தெரிந்து கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நம் நாட்டில் நூறு கோடி பேரின் கைகளில் செல்போன்கள் உள்ளன. தினமும் செல்போன் இல்லாமல் சிறிது நேரத்தை கூட நம்மால் கழிக்க முடியாது என்ற நிலையில் உள்ளோம். ஒரு சிலர் செல்போன்களுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளை மத்திய, மாநில அரசுகள் சினிமா, குறும்படம், துண்டு பிரசுரங்கள் மூலம் எச்சரிப்பதுடன், அனைவருக்கும் விழிப்புணர்வு செய்து தெரியப்படுத்த வேண்டும்.

    அதுமட்டுமல்லாமல் இணையதளம், செல்போனின் நன்மை, தீமைகளை பள்ளி, கல்லூரி பாடங்களிலும் சேர்க்க வேண்டும். பெற்றோரின் அரவணைப்பு இல்லாததன் காரணமாக பெண் குழந்தைகள் பாதை மாறிச் செல்கின்றனர். இதை தவிர்க்க, நாள்தோறும் தங்களது குழந்தைகளிடம் குறிப்பிட்ட நேரத்தை பெற்றோர் செலவிடுவது அவசியம். தேவையான அன்பை செலுத்தினால் குழந்தைகள் பாதை மாறி செல்வது தடுக்கப்படும்.

    பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை திரும்பப்பெற்று, பாதிக்கப்பட்டவரின் தகவல்களை நீக்கி, புதிதாக அரசாணை வெளியிட வேண்டும்.



    இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வீடியோக்கள், புகைப்படங்களை வைத்திருப்பதும், பகிர்வதும் குற்றம். இதுதொடர்பாக தமிழக அரசு விரிவாக விளம்பரம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

    அத்துடன் இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்பதால், இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும் அப்போது நீதிபதிகள் கூறினார்கள். #PollachiAbuseCase #MaduraiHighCourt
    ×