search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman struggle"

    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #PollachiAbuseCase
    மதுரை:

    மதுரை மேலமாசிவீதி- தெற்கு மாசிவீதி சந்திப்பில் இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் சசிகலா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பொன்னுத்தாய், முத்துராணி, மனோகரிதாஸ், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் உள்ளிட்ட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி கோ‌ஷம் எழுப்பினர்.

    பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை பாதுகாக்கும் கோவை போலீசாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து போராடி வரும் மாணவர்கள் மீதான அடக்கு முறையை கைவிட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

    அதேபோன்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் மண்டல ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  #PollachiAbuseCase
    திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடையை செங்கலால் மூடி பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். #Tasmac

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ராமசாமி நகரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

    இந்த கடை திறக்கப்படுவதற்கு முன்பே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை இங்கு வரக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் டாஸ்மாக் கடை அங்கு திறக்கப்பட்டது.

    இதனை கண்டித்து கடந்த 7-ந் தேதி ராமசாமி நகர், கீழ்நாச்சிப்பட்டு, நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இருப்பினும் அந்த கடை தொடர்ந்து செயல்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ராமசாமி நகர், கீழ்நாச்சிப்பட்டு, நம்மியந்தல், வடஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் போராட்டம் நடத்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். போராட்டம் குறித்து ஏற்கனவே தகவல் அறிந்த டாஸ்மாக் கடை பணியாளர்கள் கடையை மூடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கடையின் அருகில் இருந்த செங்கற்களை கொண்டு மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையின் முன்பு அடுக்கினர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், நாங்கள் இந்த கடையை அகற்றக்கோரி இதுவரை 4 முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கடையினால் மதுபிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த கடையை இங்கிருந்து உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர், நீங்கள் வீணாக கடையை மூட வேண்டும் கூலிக்காக வந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளீர்கள் என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், நாங்களா, கூலிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் அருகில் பைபாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டு மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #Tasmac

    தண்டையார்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எண்ணூர் நெடுஞ்சாலை 3-வது பாலம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை ராஜிவ்காந்தி நகர், ராஜ சேகரன்நகர், தமிழன் நகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு மேலாக சரிவர குழாய்களில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

    சிலநேரங்களில் வரும் குடிநீரும் கழிவுநீர் கலந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்தும், குடிநீர் முறையாக சப்ளை செய்ய கோரியும் இன்று காலை அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எண்ணூர் நெடுஞ்சாலை 3-வது பாலம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஆர்.கே.நகர் போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டையில் மணல் குவாரியை மூடக்கோரி மறியலில் ஈடுபட்ட 55 பெண்களை போலீசார் கைது செய்னர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆறு ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    இந்த நிலையில் ஆரணி ஆற்றில் கடந்த 1-ந் தேதி அரசு மணல் குவாரி தொடங்கியது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    குவாரியை மூடக் கோரி கடந்த 1-ந் தேதி ஊத்துக்கோட்டையில் அனைத்து கடைகள் மூடப்பட்டன. அனைத்துக்கட்சி மனித சங்கிலி போராட்டமும் 2-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சாலை மறியலும் நடந்தது. எனினும் மணல் குவாரி தொடர்ந்து நடந்து வந்தது.

    இதனை கண்டித்தும், மணல் குவாரியை உடனடியாக மூட வலியுறுத்தியும் ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகில் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் பாலு தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்ட 55 பெண்களை கைது செய்னர். அவர்களை ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    ×