search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி விவகாரம்: காவல்துறை சரியாக செயல்படாவிட்டால் மனித உரிமை ஆணையம் தலையிடும் - நீதிபதி
    X

    பொள்ளாச்சி விவகாரம்: காவல்துறை சரியாக செயல்படாவிட்டால் மனித உரிமை ஆணையம் தலையிடும் - நீதிபதி

    பொள்ளாச்சி விவகாரத்தில் காவல்துறை சரியாக செயல்படாவிட்டால் மனித உரிமை ஆணையம் தலையிடும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறினார்.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் நெல்லையில் விசாரணை நடத்தியது.

    வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இந்த விசாரணையில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரும், நீதிபதியுமான ஜெயச்சந்திரன் பங்கேற்று விசாரணை மேற்கொண்டார்.

    இதில் 56 வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் நீதிபதி ஜெயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் மாணவிகள் மீதான பாலியல் கொடுமை விவகாரத்தில் புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், இருப்பினும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்டவரின் பெயரை குறிப்பிட்டு சொல்வது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல். மேலும் காவல்துறை சரியான முறையில் செயல்படுகிறார்களா? இல்லையா? என எங்களது ஆணையத்திற்கு பாதிக்கப்பட்ட நபரோ அல்லது சமூக ஆர்வலர்களோ புகார் அளித்தால் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

    தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டாலும் பல காரணங்கள் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடத்துவது நியாயமாக இருக்கும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். தமிழக அரசு இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கும் என ஆணையம் நம்புகிறது, அப்படி சரியான முறையில் காவல்துறை செயல்படாவிட்டால் ஆணையம் தலையிட்டு உரிய உத்தரவினை பிறப்பிக்கும்.

    ஏற்கனவே மகளிர் ஆணையம் தலையிட்டு அறிக்கை கேட்டு உள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரையில் பொது சேவையில் அஜாக்கிரதையாக செயல்பட்டால் தான் மனித உரிமை ஆணையம் தலையிட முடியும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.

    குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், சட்டம் தன் கடமையை செய்யும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×