search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police inquiry"

    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூா்:

    திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் சிவ சண்முகம் ஓட்டி வந்தார்.

    இன்று காலை அந்த பஸ் கும்பகோணத்திற்கு வந்து சிறிது நேரம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி கொண்டிருந்தது. மீண்டும் அங்கிருந்து தஞ்சாவூருக்கு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    அப்போது தஞ்சாவூர் அருகே மானாங்கோரை என்ற இடத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த சிறிய பாலத்தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கவிழ்ந்தது. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.

    தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 26 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தஞ்சை கீழலாயத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி லட்சுமி (வயது 50) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மற்ற 25 பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ருத்ரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ருத்ரேஷ்(வயது28). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தை உள்ளது.

    பெயிண்டர் வேலை செய்து வந்த ருத்ரேஷ் சமீப காலமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த கவுதம் என்பவரும் கஞ்சா விற்று வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் கஞ்சா விற்பதில் தொழில் போட்டி இருந்து வந்தது.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இது தொடர்பாக இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கவுதமனை கத்தியால் ருத்ரேஷ் வெட்டினார். இதில் கவுதமனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தில் ருத்ரேஷ் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ருத்ரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

    இந்த பால்குட ஊர்வலத்தில் ருத்ரேசின் தாய் மற்றும் சகோதரியும் பங்கேற்றதால் அதனை காண ருத்ரேஷ் கோவில் எதிரே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் கவுதமன் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் வந்தனர். இதனை கண்டதும் ருத்ரேஷ் ஏதோ விபரீதம் நடக்கப்போவதை அறிந்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் சுற்றி வளைத்து ருத்ரேசை சரமாரியாக அரிவாளால் தலையில் வெட்டியது.

    இதில் ருத்ரேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் பைக்கில் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதனை பார்த்ததும் பால்குடம் ஏந்தி வந்த பெண்களும், அங்கிருந்த பொதுமக்களும் அலறி அடித்து ஓடினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ருத்ரேசை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ருத்ரேஷ் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் காரணமாக பெரியார் நகர் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக கருப்புச்சாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் கோமங்கலம் அடுத்துள்ள கூலநாய்க்கன்பட்டி.

    இந்தநிலையில் இன்று காலை கருப்புச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மன உளைச்சல் காரணமாக கருப்புச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜன்னல் வழியாக போலீசார் பார்த்தபோது பாலகுமார் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் பாலகுமார் (வயது 38). இவர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சனிக்கிழமை பாதுகாப்பு பணி முடிந்து கோவை கணபதி மாநகரில் உள்ள வீட்டிற்கு திரும்பினார்.

    இந்த நிலையில் அவரது பெற்றோர் பாலகுமாரை போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் பாலகுமார் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலகுமாரனின் பெற்றோர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் கணபதி மாநகரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக போலீசார் பார்த்தபோது பாலகுமார் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனே அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பாலகுமாருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கோவையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று லண்டனில் உள்ள ஓட்டலின் கிளைக்கு பணியாற்ற சென்று விட்டார்.

    பாலகுமார் 2 குழந்தைகளையும் தனது பெற்றோர் பராமரிப்பில் விட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெளிநாட்டில் உள்ள தனது மனைவியிடம் பாலகுமார் போனில் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மீண்டும் கணவர் பாலகுமாரை லண்டனில் இருந்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அவர் போனை எடுக்காததால் இதுகுறித்து பாலகுமாரின் பெற்றோருக்கு அவர் தகவல் தெரிவித்து வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார். அதன்பிறகே பாலகுமார் தற்கொலை செய்த விவரம் தெரியவந்தது.

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    • கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் (வயது 31).

    இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காலனி தயாரிக்கும் தொழிற்சாலையில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் ஒரு வயது குழந்தை உடன் மத்தூர் அருகே தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார்.

    இந்த நிலையில் பாலச்சந்தர், தனது மனைவி, குழந்தையுடன் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக சொந்த ஊரான உத்திரமேரூருக்கு சென்றுள்ளார். மேலும் சொந்த ஊரிலிருந்து நேற்று மத்தூருக்கு பாலச்சந்தர் மட்டும் வந்துள்ளார்.

    அப்போது வந்து பார்த்தபோது வீட்டின் இரும்பு கேட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டும், உள்ளே பீரோவில் இருந்து 8 பட்டு புடவைகள், ரூ.30ஆயிரம் மதிப்புள்ள டி.வி., 2ஜோடி வைர தோடுகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாலச்சந்தர் மத்தூர் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், பாலச்சந்தர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், வைர தோடு, புடவை, டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவ குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே ஒருவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்.பி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஏட்டு ராம்குமார் சேதுபதி மற்றும் போலீசார் போடி புதூர் ரெயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு மகன் கார்த்திக் (வயது 42) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    இதில் உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர் எதற்காக இதனை பதுக்கி வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயமடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • பஸ்சில் புகுந்து டிரைவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பஸ் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவாய்ப்பாடியை சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் கும்பகோணம் பாலக்கரை அருகே வந்து கொண்டிருந்த போது பஸ்சுக்கு முன்பு சிலர் தகராறில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது திடீரென பஸ்சை ஏன் நிறுத்தி இருக்கிறாய்? எனக்கூறி 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பஸ்சின் உள்ளே சென்று டிரைவர் ரமேஷை சரமாரியாக தாக்கினர். இதில் ரமேஷின் மூக்கு, கண், முகம் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு வெளியே ஓடினர்.

    அந்த கும்பல் டிரைவரை எட்டி உதைத்து கீழே தள்ளியதுடன், மேலும், 2 பேரையும் தாக்கினர். வலி தாங்காமல் டிரைவர் கூச்சலிடுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் டிரைவரை மீட்க சென்றனர். அப்போது 2 பேர் பொதுமக்களிடம் சிக்கினர்.

    தகவல் அறிந்து வந்த கும்பகோணம் நகர கிழக்கு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்த சுதர்சன், ஜனார்த்தனன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரின் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    காயமடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பஸ்சில் புகுந்து டிரைவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாலையம்பட்டி ஈ.பி. காலனியை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 45).

    இவர் நெல்லை சந்திப்பு பாபுஜி நகர் காட்டுப்பகுதியில் நேற்று மாலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா, சந்திப்பு உதவி கமிஷனர் வெங்கடேசன் உள்ளிட்டவர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிராஜை கொலை செய்த கும்பல் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்த இடத்தில் காளிராஜிக்கு சொந்தமான கார் நின்றது. அந்த காரை திறந்து பார்த்தபோது சில நில பத்திரங்கள், ஆதார் அட்டையின் நகல்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை இருந்தது. அதன் மூலம் நடத்திய விசாரணையில் அவரது மனைவி வளர்மதியின் தொடர்பு எண் கிடைத்தது.

    அதன் மூலமாக அவரிடம் செல்போனில் நடத்திய விசாரணையில், காளிராஜ் மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலங்களை வாங்கி விற்பனை செய்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் என்பதும், சம்பவத்தன்று நிலம் வாங்கி விற்பனை செய்வதற்காக நெல்லையில் ஒருவர் அழைத்ததாகவும் அதன் பேரில் அங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து காளிராஜை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? நிலம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களிலும் கொலை கும்பல் உருவங்கள் தெளிவாக தெரியவில்லை.

    இதனால் உதவி போலீஸ் கமிஷனர்கள் செந்தில் குமார், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு காளிராஜை கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட காளிராஜ் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரத்திற்கு ஒரு காரில் 3 பேர் இன்று காலை வந்து கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் மற்றொரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    இவ்விரு கார்களும் மொளச்சூர் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தைலாபுரம் செல்லும் காரில் வந்த ஒருவரும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த காரில் வந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த 4 பேரையும், அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். தொடர்ந்து மீதமிருந்த 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 4 வழிச்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்தது எப்படி? இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயமடைந்த அருண்ராஜ் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • கொலை சம்பவம் லால்குடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னி மங்கலம் மாதாகோயில் தெரு சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது 41). இவர் ஜல்லிக்கட்டு வீரர். இவருக்கு லாரன்ஸ் மேரி என்ற மனைவியும் 15 வயதுக்குட்பட்ட 2 மகன்களும் உள்ளனர். அருண்ராஜ் ஜல்லிக்கட்டு வீரர் என்பதால் ஜல்லிக்கட்டு காளை அடக்குவது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தயாளன் உள்ளிட்டோர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இது தொடர்பான முன் விரோதத்தில் கடந்த பிப்ரவரி மாதம் லால்குடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது அருண்ராஜை தயாளன் தரப்பினர் தாக்க முயன்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு அருண்ராஜ் வாக்கு செலுத்த சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள பாசன வாய்க்கால் கரையில் மது அருந்தி கொண்டிருந்த தயாளன், ஹானஸ்ட்ராஜ், பிரபு, சங்கர், அலெக்ஸ் உள்ளிட்டோர் அருண் ராஜை வழிமறித்து கட்டையால் தலையில் தாக்கினர்.

    இதில் அருண்ராஜ் பலத்த காயம் அடைந்தார். உடனே தயாளன் உள்ளிட்ட் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயமடைந்த அருண்ராஜ் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அருண்ராஜின் மனைவி லாரன்ஸ் மேரி கொடுத்த புகாரின்பேரில் தயாளன், ஹானஸ்ட்ராஜ், பிரபு, சங்கர், அலெக்ஸ், அலெக்சின் சகோதரர் ஆகிய 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

    இதனிடையே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அருண்ராஜ் உடல்நிலை இன்று காலை மோசமானது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அருண்ராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக லால்குடி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகி றார்கள்.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொலை சம்பவம் லால்குடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யூடியூப் சேனலை பகிர்ந்து கொண்டு அனைவரும் குழுவில் சேரும்படி கேட்டு கொண்டார்.
    • ரோஹித் குமார் கூறிய புகார்கள் உண்மையா என்றும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மெல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரோஹித் குமார். இவர் பிரதமர் மோடியை புகழ்ந்து ஒரு பாடலை இயற்றியுள்ளார். இந்த பாடலை தனது யூடியூப்பில் பகிர்ந்து உள்ளார். மேலும் அந்த யூடியூப் சேனலை பகிர்ந்து கொண்டு அனைவரும் குழுவில் சேரும்படி கேட்டு கொண்டார். அப்போது அவரை தொடர்பு கொண்ட ஒரு நபரிடம் பாடலை பகிரவும், யூடியூப் சேனல் குழுவில் சேரவும் கேட்டு கொண்டார்.

    ரோஹித் குமார் பாடிய பாடலை பாராட்டிய அந்த நபர் தனது நண்பர்களை சந்திக்கலாம் என்று கூறி அழைத்து சென்று உள்ளார். பின்னர் அங்கு ஒரு கும்பல் அறைக்குள் வைத்து ரோஹித் குமாரை சரமாரியமாக அடித்து உதைத்து உள்ளனர். பின்னர் அந்த நபர்கள் ரோஹித் குமார் மீது சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது.

    அவர்களிடம் இருந்து தப்பி வந்த ரோஹித் குமார் இது குறித்து மைசூரு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரோஹித் குமார் தாக்கப்பட்ட இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், ரோஹித் குமார் கூறிய புகார்கள் உண்மையா என்றும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மனைவி கோமதி (வயது 42). இவர்களது மகள் பவித்ரா(24) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பவித்ரா தனது கணவரை பிரிந்து விஸ்வநாதபுரத்தில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். மேலும் அவர் குத்துக்கல்வலசையில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று மாலை கோமதியும், பவித்ராவும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த 2 வாலிபர்கள் பவித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றனர். உடனே கோமதி அதனை பார்த்து அவர்களை தடுக்க முயன்றுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 2 வாலிபர்களும் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினர். அதனை தடுக்க வந்த பவித்ராவுக்கும் கழுத்து, தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். உடனே அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோமதி மற்றும் பவித்ரா ஆகியோரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பவித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ரா கடையில் வேலை பார்த்தபோது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பவித்ராவை பிடித்துள்ளது. உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பவித்ராவை அந்த வாலிபர் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும், ஆனால் பவித்ரா அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த வாலிபர் தனது நண்பரை அழைத்து வந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×