search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perarivalan"

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். #RajivCaseConvicts
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

    தமிழக அரசே முடிவு செய்யலாம் என்பதுதான் கலைஞர் ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்த கழகத்தின் நிலைப்பாடாகும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும் என்றும்; 27 வருடங்களாக சிறையில் வாடிவதங்கிக் கொண்டிருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.


    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்திருக்கும் 161 விதியின் படி உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #RajivCaseConvicts #DMK #MKStalin
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. #RajivCaseConvicts #Perarivalan #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

    தமிழக விரைவு கோர்ட்டில் நடந்த விசாரணையில் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் நளினிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர்.

    ஆனால் அந்த மனு மீது எந்த ஜனாதிபதியும் முடிவு எடுத்து அறிவிக்கவில்லை. இதற்கிடையே கருணை மனு தாக்கல் செய்து நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது.

    அந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து இருப்பதால் தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் மத்திய அரசு ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தண்டனை பெற்ற 7 பேரும் விடுதலையாவதில் சிக்கல் நீடித்தப்படி இருந்தது.


    இந்த நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார். இதற்காக சட்டசபையில் அவர் தீர்மானமும் கொண்டு வந்தார்.

    அந்த தீர்மானத்தை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கேட்டார். ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கு பதில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால் அதில் தமிழக அரசு தலையிட எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த சட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள உரிமைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு விவரம் வருமாறு:-

    ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே 7 பேரை விடுதலை செய்வது குறித்து கவர்னர் இறுதி முடிவு எடுக்கலாம்.

    இது தொடர்பாக தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம். 2016-ம் ஆண்டு தமிழக அரசு கொடுத்துள்ள மனு மீதும் கவர்னரே முடிவு செய்யலாம்.

    எனவே மத்திய அரசு தொடுத்துள்ள இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.

    சுப்ரீம்கோர்ட்டின் இன்றைய பரபரப்பு தீர்ப்பு காரணமாக ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற 7 பேரும் விரைவில் விடுதலையாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக புதிதாக தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கவர்னர் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்பார். அதன் பிறகு இதில் இறுதி முடிவு எடுக்கப்படும். அநேகமாக 7 பேரை விடுவிக்க கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேரறிவாளன் வக்கீல் பாபு இதுகுறித்து கூறுகையில், “தமிழக அரசு கவர்னரை சந்தித்து பேசி 7 பேர் விடுதலைக்கு உதவ வேண்டும்” என்றார். 

    இதனை அடுத்து, 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

    7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #RajivCaseConvicts #Perarivalan #SupremeCourt
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து மூலம் பேரறிவாளன் குற்றமற்றவர் என நிரூபணமாகியுள்ளது என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறி உள்ளார். #Rahulgandhi #Arputhammal #Perarivalan
    வேலூர்:

    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, டைரக்டர் பா.ரஞ்சித் சந்தித்தார். அப்போது, பேரறிவாளன் விடுதலைக்கு உதவி செய்ய வேண்டுமென ராகுல் காந்தியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.



    அதற்கு ராகுல்காந்தி, பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்கு தனிப்பட்ட முறையில் நான் தடையாக இருக்க மாட்டேன். தன் தந்தை கொலை தொடர்பான சதித்திட்டங்கள் மற்றும் சட்ட சிக்கல்களுமே அவர்களின் விடுதலைக்கு தடையாக இருக்கும் என கருதுவதாக ராகுல் காந்தி கூறியதாக பா.ரஞ்சித் தெரிவித்தார்.

    ராகுல் காந்தியின் கருத்து தொடர்பாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தியே பேரறிவாளன் விடுதலைக்கு நான் தடையாக இருக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். இதன் மூலம் ராஜீவ்காந்தி கொலையில் பேரறிவாளன் சம்பந்தப்படவில்லை என்று வெளிப்பட்டுள்ளது.

    திசை மாறிபோன இந்த வழக்கை, சரியான திசை நோக்கி கொண்டு சென்றது பேரறிவாளன் தான். இந்த வழக்கில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கிறது. அது தற்போது ராகுல்காந்தி கருத்து மூலம் வெளிப்பட்டிருக்கிறது.



    கடந்த 27 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்டோரை ஜெயிலில் அடைத்திருப்பது, இந்தியாவிலேயே வேறு எந்த வழக்குகளிலும் குற்றவாளிகள் இதுபோன்று தண்டிக்கப்படவில்லை.

    தடா வழக்கில் இருந்தவர்களை கூட மாநில அரசு விடுதலை செய்துள்ளது. அப்போது எதிர்க்காத மத்திய அரசும், ஜனாதிபதியும் தற்போது பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, ராஜீவ்காந்தி முன்னாள் பிரதமர் என்ற ஒரே ஒரு பதவி தான் காரணம்.

    எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் ராஜீவ்காந்தி முன்னாள் பிரதமர் தான். இன்னும் எத்தனை வருடம் இந்த காரணத்தை சொல்லி இந்த வழக்கை கொச்சைப்படுத்த போகிறார்கள். ராகுல் காந்திக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு விபரம் முழுமையாக தெரியும்.

    பேரறிவாளன் உள்பட அனைவரையும் பற்றி தெரிந்த பிறகே ராகுல்காந்தி விடுதலை சம்பந்தமான கருத்துகளை தெரிவித்திருக்கிறார். இன்னும் காலம் தாழ்த்தினால் உலக நாடுகளில் இந்த வழக்கு கேவலப்பட்டு நிற்கும்.

    எல்லா அரசியல்வாதிகளும் ஆதாயத்திற்காகவே பேசுகின்றனர். இந்த 27 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது அது தான். டைரக்டர் பா.ரஞ்சித்தை பற்றி தவறாகவே சொல்ல மாட்டேன். எப்பவும் எங்கள் மீது பாசமாக இருப்பார். நாங்கள் உயிர் வலி ஆவண படம் தயார் செய்யும் போது எங்களை வலுக்கட்டாயமாக அழைத்து பணம் உதவி செய்தவர் பா.ரஞ்சித்.

    பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை செயல் வடிவமாக மாற்றுவதற்கு மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் என் பிள்ளையை விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rahulgandhi #Arputhammal #Perarivalan



    ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அவர்கள் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதே வழியில் தற்போதைய அரசும் செயல்படுகிறது.

    இந்நிலையில் ராகுல் காந்தி, பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என கூறியதாக தெரிகிறது. இந்த கருத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறோம். அவ்வாறு மத்திய அரசு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமேயானால் தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #RajivGandhi #Perarivalan #TNMinister #KadamburRaju
    பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பேரறிவாளனும் ஒருவராவார்.

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த இவர் மீது சி.பி.ஐ. முக்கியமான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

    ராஜீவ்காந்தியை படுகொலை செய்வதற்கு, தற்கொலைப் படையினர் பயன்படுத்திய வெடிகுண்டை இயக்குவதற்கான 2 பேட்டரிகளை பேரறிவாளன்தான் வாங்கிக் கொடுத்தார் என்று கூறி போலீசார் அவரை 1991-ம் ஆண்டு ஜூன் 11-ந்தேதி கைது செய்திருந்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120(பி)ன் கீழ் குற்றவியல் சதி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. அவருடன் முருகன், சாந்தன், நளினி ஆகியோருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

    1998-ம் ஆண்டு தடா நீதிமன்றம் விதித்த இந்த தண்டனையை 1999-ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட்டும் உறுதி செய்தது.

    இந்த நிலையில் பேரறிவாளனை விடுவிக்க பல்வேறு அமைப்புகள் சட்ட போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தின. பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து தனது மகன் விடுதலைக்கு குரல் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு உரிய பலன் கிடைக்காத நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பேரறிவாளன் உள்பட 4 பேரையும் தூக்கில் போட உத்தரவிடப்பட்டது. ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க 10 ஆண்டுகள் தாமதம் ஆனதால் தூக்கிலிடக் கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர். அதோடு பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் பேரறிவாளன் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மத்திய அரசு அனுமதியின்றி பேரறிவாளனை விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார். ஆனால் சட்ட சிக்கல்கள் காரணமாக அவரது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    பேரறிவாளன் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அவர் 1991-ல் கொடுத்த வாக்கு மூலம் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதால்தான், அவருக்கு அது மரண தண்டனையை பெற்று கொடுத்து விட்டதாக ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. உயர் அதிகாரியே கூறினார்.

    இதன் மூலம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் அப்பாவி என்பது தெரிய வந்தது. என்றாலும் அதன் பிறகும் பேரறிவாளனை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வர இயலவில்லை. அவரது தாயார் அற்புதம்மாள் தன் மகன் விடுதலைக்காக போராட்டம் நடத்தி சோர்ந்து போய் விட்டார்.

    இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை விவகாரம் இன்று மீண்டும் எழுந்துள்ளது. கபாலி, காலா படங்களை இயக்கிய டைரக்டர் பா.ரஞ்சித் மூலம் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை டைரக்டர் பா.ரஞ்சித் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள ராகுல்காந்தியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது நடிகர் கலையரசனும் உடன் இருந்தார்.

    ராகுலும், பா.ரஞ்சித்தும் சுமார் 2 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சினிமா, அரசியல் உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து பேசினார்கள்.

    அந்த சமயத்தில் அவர்களது பேச்சு ராஜீவ் கொலையாளிகள் மீது திரும்பியது. அப்போது பேரறிவாளன் பற்றி ராகுலிடம் டைரக்டர் பா.ரஞ்சித் விளக்கி கூறினார். அதோடு பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, “ராஜீவ் கொலை குற்றவாளியான பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்வதில் தனக்கோ, தனது குடும்பத்தினருக்கோ எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்தார். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பா.ரஞ்சித், ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    இதுபற்றி ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் டைரக்டர் பா.ரஞ்சித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    டைரக்டர் பா.ரஞ்சித்தை சந்தித்தேன். தமிழில் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய பிளாக் பஸ்டர் படங்களை இயக்கியவர். அவருடன் நடிகர் கலையரசனையும் சந்தித்தேன்.


    நாங்கள் அரசியல், சினிமா மற்றும் சமுதாயம் பற்றி பேசினோம். இந்த சந்திப்பும், பேச்சும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற பேச்சுகள் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    பேரறிவாளனை விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று ராகுல் தெரிவித்துள்ள கருத்து, இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் உருவாக்கி உள்ளது. ராகுல் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    முன்பு சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதால்தான் ராஜீவ் கொலையாளிகளில் ஒருவரான நளினியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதே போன்று ராகுலின் வேண்டுகோளை ஏற்று பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர்.

    மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் பேரறிவாளனை விடுவிக்க தமிழக அரசும் தயாராக உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அவர்கள் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதே வழியில் தற்போதைய அரசும் செயல்படுகிறது.

    இந்நிலையில் ராகுல் காந்தி, பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என கூறியதாக தெரிகிறது. இந்த கருத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறோம். அவ்வாறு மத்திய அரசு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமேயானால் தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

    20 வயதில் கைதான பேரறிவாளனின் இளம் பருவம் முழுவதும் சிறையிலேயே கழிந்து விட்டது. சிறை வாழ்க்கை பற்றி அவர் தனி புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.

    சிறையில் இருந்தபடி பட்டப்படிப்பும் படித்துள்ளார். அதில் அவர் முதல் மாணவராக தேறி தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #PARanjithMeetsRahul #Perarivalan
    ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது ஆபத்தான முன்னுதாரணமாகி விடும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விளக்கம் அளித்துள்ளார். #RamNathKovind #RajivgandhiAssassinationcase

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

    இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையும், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பலர் விடுதலை செய்யப்பட்டனர்.

    பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் ஜெயிலில் 27 ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள். ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருந்தால் அவர்களை விடுவிப்பது வழக்கமானதாக இருக்கிறது.

    இவர்கள் 7 பேரும் 20 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருந்து விட்டதால் விடுதலை செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனுதாக்கல் செய்தது.

    இதனால் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு மத்திய உள்துறையின் விளக்கத்தை கேட்டு இருந்தது. பின்னர் மத்திய அரசு 7 பேரின் உடல்நிலை, குடும்ப சூழ்நிலை, பொருளாதார பின்னணி உள்ளிட்ட 8 விவரங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.


    அதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. மேலும் மத்திய உள்துறை 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியின் கருத்தையும் கேட்டது. தமிழக அரசின் பதில்களும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை பரிசீலித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

    இதுபற்றிய தகவல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி தனது உத்தரவில் என்ன கூறி இருக்கிறார்? என்ற விவரங்கள் இப்போது கிடைத்துள்ளன. அதில் ஜனாதிபதி கூறியிருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட வெளி நாட்டினர் 4 பேர் மற்றும் இந்த கொலையில் உடந்தையாக இருந்த இந்தியர்கள் 3 பேர் என 7 பேரையும் விடுவிப்பது என்பது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். மேலும் இது, சர்வதேச அளவிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்து ஈடு இணையற்ற தவறுகளை செய்திருக்கிறார்கள். சரித்திர கிரிமினல் குற்றத்தை இந்த நாட்டில் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் மிகவும் ஒழுக்கக் கேடானதாகும்.

    வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு மிகவும் திட்டமிட்டு ஒருங்கிணைத்து கொடூரமான இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. அதில், 9 போலீஸ் அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நாட்டின் ஜனநாயகத்தையே சீர்குலைத்து முடக்கி உள்ளனர். இந்த கொலையாளிகளுக்கு விசாரணை கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. பெண் மனித வெடிகுண்டை பயன்படுத்தி கொடூர சதித்திட்டத்தின் மூலம் ஏராளமானோருடைய உயிரை பறித்து இருக்கிறார்கள் என்பதால் இந்த தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 3 பேர் கொண்ட பெஞ்சும் இதில் உள்ள சதி திட்டங்களை உறுதி செய்து அவர்கள் மோசமான குற்றம் செய்ததை சுட்டிக்காட்டி அரிதிலும் அரிதான வழக்கு என்று கூறி இருக்கிறது.

    விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மூலம் இந்த கொலை திட்டம் நிறைவேற்றப்பட்டு இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். எனவே, அவர்களை விடுவிக்க முடியாது.

    இவ்வாறு ஜனாதிபதி தனது உத்தரவில் கூறி இருக்கிறார். #RamNathKovind #RajivgandhiAssassinationcase

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #RajivMurderCase #Jayakumar
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வேதனையை தமிழக அரசு உணர்ந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து வெற்றி காண்போம்

    தமிழகத்தில் வருங்காலத்தில் நிலத்தடி நீர் குறையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

    அப்போது  தகுதி நீக்க வழக்கு விவகாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலைச் சந்திப்போம் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியது குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போன்றது என கூறினார். #RajivMurderCase #Jayakumar
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #RajivMurderCase #Mutharasan

    சேலம்:

    சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்காமல் மத்திய அரசு கபட நாடகம் ஆடுகிறது. ஒரு பக்கம் மாநில அரசிடம் கொலையாளிகள் குறித்த விபரங்களை கேட்கிறது. மறுப்பக்கம் உள்துறை மூலம் விடுதலை செய்ய மறுப்பு தெரிவிக்கிறது.

    ஆயுள் கைதி என்றால் ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பது அல்ல. காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை 13 ஆண்டுகளில் நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை அரசு விடுதலை செய்யாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

     


    விசாரணை அதிகாரிகளே சிலரின் பெயரை தவறுதலாக சேர்த்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். சோனியா காந்தியும் இவர்களை மன்னித்து விட்டதாக கூறியுள்ளார். எனவே மத்திய, மாநில அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடி வெளியிட்டுள்ள அரசாணை போதுமானது அல்ல என்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. இதனை மாநில அரசு கவனத்தில் கொள்ளாமல் தாங்கள் செய்ததே சரி சரி என திரும்ப கூறி வருகிறது. கடந்த சில தினங்களாக அமைதி திரும்பி உள்ள தூத்துக்குடியில் அடக்குமுறை மீண்டும் கையில் எடுத்து 100-க்கணக்கானவர்களை கைது செய்து வருவது கண்டனத்திற்குரியது. அடக்குமுறையை போலீசார் கைவிட வேண்டும்.

    ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் 8 வழி பசுமை சாலைக்காக வனங்களையும், நிலங்களையும் அழிப்பது மக்கள் விரோத செயலாகும். வின் ஸ்டார் இந்தியா நிறுவனர் சிவகுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.4 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்துள்ளார்.

    இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajivMurderCase #Mutharasan

    சிறையில் இருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். #RajivMurderCase #Perarivalan #Arputhammal #MercyKill
    திருப்பத்தூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டன.

    இதற்கிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்தார்.

    இந்நிலையில், சிறையில் இருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எனது மகனை வெளியில் கொண்டு வர பல்வேறு போராட்டங்கள் நடத்தி விட்டேன். ஆனாலும் எந்த பலனும் இல்லை.

    அவனை சிறையில் இருந்து விடுவிக்க முடியாவிட்டால் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று வலியுறுத்த உள்ளேன் என தெரிவித்துள்ளார். #RajivMurderCase #Perarivalan #Arputhammal #MercyKill
    தமிழக அரசு ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிப்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். #RajivMurderCase #TNMinister #CVeShanmugam
    சென்னை:

    ராஜீவ் கொலையாளிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் நீண்ட நாட்களாக ஜெயில் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இதனால் இவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

    பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது மகனின் விடுதலைக்காக போராடி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் 7 பேரின் விடுதலையும் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே செல்கிறது.

    இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் மத்திய அரசு விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக 2 நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.

    இது தொடர்பாக மத்திய உள்துறை, தமிழக அரசிடம் தகவல்களையும் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்று ஜனாதிபதி மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன. இது 7 பேரின் விடுதலை விவகாரத்தில் புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


    இந்தநிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சென்னையில் இன்று இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    ராஜீவ் கொலையாளிகள் விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் தமிழக அரசு அவர்களை விடுவிப்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அதுபற்றி உரிய விளக்கத்தை அளிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.#RajivMurderCase  #TNMinister #CVeShanmugam
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #RajivMurderCase
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    20 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து மத்திய அரசின் அனுமதி கேட்டது.

    இதை ஏற்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு மறுத்ததுடன் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்ததுடன் வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனுதாக்கல் செய்தது. இதற்கிடையே நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரும் தாங்கள் 20 ஆண்டுக்கு மேல் தண்டனை அனுபவித்து விட்டதால் விடுதலை செய்யக்கோரி தமிழக அரசிடம் மனு கொடுத்தனர். இதேபோல் சென்னை ஐகோர்ட்டில் நளினி ஒரு மனுதாக்கல் செய்தார்.

    அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு 7 பேரும் 24 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மீண்டும் 2 கடிதங்கள் எழுதியது. அதற்கு மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை.

    இந்த நிலையில் தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு 3 மாதத்துக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ந்தேதி கெடு விதித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 7 பேரின் உடல்நிலை, குடும்ப சூழல், பொருளாதார பின்னணி உள்ளிட்ட விவரங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு தமிழக அரசு உரிய பதில் அளித்தது.

    இந்த வி‌ஷயத்தில் ஜனாதிபதியின் கருத்தையும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கேட்டு இருந்தது. இதற்காக தமிழக அரசு அனுப்பிய 7 குற்றவாளிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. வழக்கு விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை பரிசீலித்த ஜனாதிபதி 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இந்த தகவலை அவர் தமிழக அரசுக்கும் முறைப்படி தெரியப்படுத்தி உள்ளார்.


    இந்த விவகாரம் தொடர்பான மத்திய மந்திரிகளின் ஆலோசனையை ஏற்று ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

    தமிழக அரசு விடுவிக்க கோரிய 7 பேர் மீதான வழக்கு சி.பி.ஐ. சம்பந்தப்பட்டதாகும். இது மாநில அரசின் வரம்புக்குள் வராது என்றும் தீவிரவாதம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு முன்பு வாதாடியது.

    சாதாரண கைதிகளுக்கும் முன்னாள் பிரதமர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதற்கும் வேறுபாடு உள்ளது. சாதாரண கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்பே விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இல்லை. ஆனால் சி.பி.ஐ. வழக்கு தொடர்பான கைதிகளை விடுவிக்க இயலாது என்றும் மத்திய அரசு வாதாடியது.

    இந்த காரணங்களை வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 7 கைதிகளையும் விடுவிக்க முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

    சில நாட்களுக்கு முன்பு வரை 7 பேரும் விடுதலையாக கூடிய சாதகமான வாய்ப்புகள் இருந்தது. தற்போது ஜனாதிபதியே திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் 7 பேர் விடுதலையாவதில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

    ஜனாதிபதி உத்தரவை மீறி சுப்ரீம் கோர்ட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாத நிலை இருப்பதாகவும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். #RajivMurderCase
    ×