என் மலர்
செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் - முத்தரசன்
சேலம்:
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்காமல் மத்திய அரசு கபட நாடகம் ஆடுகிறது. ஒரு பக்கம் மாநில அரசிடம் கொலையாளிகள் குறித்த விபரங்களை கேட்கிறது. மறுப்பக்கம் உள்துறை மூலம் விடுதலை செய்ய மறுப்பு தெரிவிக்கிறது.
ஆயுள் கைதி என்றால் ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பது அல்ல. காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை 13 ஆண்டுகளில் நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை அரசு விடுதலை செய்யாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

விசாரணை அதிகாரிகளே சிலரின் பெயரை தவறுதலாக சேர்த்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். சோனியா காந்தியும் இவர்களை மன்னித்து விட்டதாக கூறியுள்ளார். எனவே மத்திய, மாநில அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி வெளியிட்டுள்ள அரசாணை போதுமானது அல்ல என்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. இதனை மாநில அரசு கவனத்தில் கொள்ளாமல் தாங்கள் செய்ததே சரி சரி என திரும்ப கூறி வருகிறது. கடந்த சில தினங்களாக அமைதி திரும்பி உள்ள தூத்துக்குடியில் அடக்குமுறை மீண்டும் கையில் எடுத்து 100-க்கணக்கானவர்களை கைது செய்து வருவது கண்டனத்திற்குரியது. அடக்குமுறையை போலீசார் கைவிட வேண்டும்.
ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் 8 வழி பசுமை சாலைக்காக வனங்களையும், நிலங்களையும் அழிப்பது மக்கள் விரோத செயலாகும். வின் ஸ்டார் இந்தியா நிறுவனர் சிவகுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.4 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்துள்ளார்.
இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #RajivMurderCase #Mutharasan






